Monday, April 16, 2018

04.28 – அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்)


04.28 – அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்)



2013-11-30
அரிசிற்கரைப் புத்தூர் (இக்கால வழக்கில் - 'அழகாபுத்தூர்')
---------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்....");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா ");



1)
பெருவற்கடம் அதிலும்பணி பிழையாதவர் நாளும்
ஒருபொன்பெற அருள்செய்தவன் உலராச்சடை உடையான்
கருவண்டினம் இசையார்த்தடை கவினார்பொழில் சூழ்ந்த
பொருவண்டிரை அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



* புகழ்த்துணை நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.
(சம்பந்தர் தேவாரம் - 2.63.7 - ".... அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே." - வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.)


பெரு வற்கடம் அதிலும் பணி பிழையாதவர் நாளும் ஒரு பொன் பெற அருள்செய்தவன் - பெரிய பஞ்சகாலத்திலும் தொண்டிற் சிறந்து நின்ற புகழ்த்துணை நாயனார்க்குத் தினமும் ஒரு காசு அருளிப் புரந்தவன்; (வற்கடம் - பஞ்சம்);
உலராச் சடை உடையான் - சடையில் எப்பொழுதும் ஈரம் உடையவன்; (ஈரம் மிக்கவன் = தயை / இரக்கம் உள்ளவன். அப்பெருமான் சடையிலும் ஈரம்!);
கரு வண்டினம் இசை ஆர்த்து அடை கவின் ஆர் பொழில் சூழ்ந்த - கரிய வண்டுகள் இசைபாடி அடையும் அழகிய சோலை சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்);
பொரு வண் திரை அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - வளப்பமான அலை மோதுகின்ற அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன். (பொருதல் - மோதுதல்; தாக்குதல்); (வண்மை - வலிமை; வளப்பம்); (திரை - அலை);
(சுந்தார் தேவாரம் - 7.48.9 - "சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் எம்பொன் மாமணீ என்று" - "எமக்குப் புகலிடமானவன் ; எம் தந்தை ; எம் தலைவன் ; எம் தந்தைக்கும் தலைவன் ; எங்கள் பொன் ; எங்கள் மணி" என்று சொல்லி);



2)
சேதித்தவன் அயனார்சிரம் தினமுந்திரு நாமம்
ஓதித்தவம் செய்ம்மாணியின் உயிர்காத்தருள் செய்தான்
ஆதித்தவன் வடவாலதன் அடியில்மறை நான்கைப்
போதித்தவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



சேதித்தவன் அயனார் சிரம் - பிரமன் தலையில் ஒன்றை வெட்டியவன்; (சேதித்தல் - வெட்டுதல்); (அப்பர் தேவாரம் - 6.20.1 - "ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால் சேதித்த திருவடியை" - வாள் என்றது, நகத்தை. சேதித்த - அறுத்த);
தினமும் திருநாமம் ஓதித் தவம் செய்ம் மாணியின் உயிர் காத்தருள் செய்தான் - அஞ்செழுத்து ஓதித் தவம் செய்த மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவன்; (மாணி - இங்கே மார்க்கண்டேயர்);
ஆதித்தவன் - ஆதி + தவன் - ஆதியாக இருப்பவன்; தவவடிவினன்; (எதுகைநோக்கி 'த்' மிக்கு வந்தது);
வட ஆல் - கல்லால மரம்;



3)
ஆரேத்தினும் அருளும்சிவன் அணியாமிட றதனில்
காரேற்றவன் சடைமீதொரு கலையார்மதி கங்கை
நீரேற்றவன் நீற்றைப்புனை நிமலன்மழ வெள்ளைப்
போரேற்றினன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



ஆர் ஏத்தினும் அருளும் சிவன் - தொழுபவர் எத்தகையவரே ஆயினும் அவர்களுக்கு அருள்புரியும் சிவபெருமான்;
அணியா மிடறு அதனில் கார் ஏற்றவன் - கண்டத்தில் அணியாகக் கருமையை ஏற்றவன்;
சடைமீது ஒரு கலை ஆர் மதி, கங்கை நீர் ஏற்றவன் - சாபத்தால் தேய்ந்து தேய்ந்து ஒருகலை மட்டுமே இருந்த பிறைச்சந்திரனையும், கங்கை ஆற்றையும் சடைமேல் ஏற்றவன்;
நீற்றைப் புனை நிமலன் - திருநீறு பூசிய நிர்மலன்;
மழ வெள்ளைப் போர் ஏற்றினன் - இளமை உடைய, வெண்ணிறம் உடைய, போர் செய்ய வல்ல, இடபத்தை ஊர்தியாக உடையவன்;
அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன்.



4)
பனையுற்றகை வேழத்துரி போர்க்கும்பரன் பணிவார்
வினையற்றிட அருள்செய்பவன் வேதன்சிரம் ஏந்தி
மனையுற்றிடு பலிதேர்பவன் மடவாளொரு பங்கன்
புனலெற்றிடும் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



உறுதல் - ஒத்தல் (To resemble); அடைதல் ( To approach, gain access to, reach);






பனை உற்ற கை வேழத்து உரி போர்க்கும் பரன் - பனை போன்ற துதிக்கை உடைய யானையின் தோலைப் போர்வையாகக் கொண்ட பரமன்; (உறுதல் - ஒத்தல்);
பணிவார் வினை அற்றிட அருள்செய்பவன் - அடியவர்களை வினையை அழிப்பவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);
வேதன்சிரம் ஏந்தி மனை உற்று இடு பலி தேர்பவன் - பிரமன் மண்டையோட்டை ஏந்தி இல்லங்களை அடைந்து அவர்கள் இடும் பிச்சை ஏற்பவன்; (உறுதல் - அடைதல்);
புனல் எற்றிடும் - அலை மோதுகின்ற; (எற்றுதல் - மோதுதல்; அடித்தல்);



5)
அணையாரெயில் ஒருமூன்றையும் அரிகாலெரி சேர்ந்த
கணையாலொரு நொடியிற்சுடு கயிலைக்கிறை நாளும்
துணைநீயென மணமாமலர் தூவித்தொழு வார்க்குப்
புணையானவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



அணையார் எயில் ஒரு மூன்றையும் - பகைவர்களது முப்புரங்களையும்; (அணையார் - பகைவர்); (எயில் - கோட்டை);
அரி கால் எரி = திருமால், வாயு, அக்னி;
கயிலைக்கு இறை - கயிலாய நாதன்;
புணை - தெப்பம்; (பிறவிக்கடலைக் கடக்கத் தெப்பமாக உள்ளவன்);



6)
எழிலார்கழல் இணையில்மலர் இட்டுத்தொழு பத்தர்
சுழலாவணம் வினைதீர்த்துயர் சுகமேஅருள் கின்ற
தொழிலானவன் நறையுண்டளி சுரமேழ்முரல் கின்ற
பொழில்சூழ்கிற அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



எழில் ஆர் கழல்இணையில் மலர் இட்டுத் தொழு பத்தர் சுழலாவணம் - அழகிய இரு திருவடிகளில் பூக்களைஉத் தூவி வழிபடும் பக்தர்கள் வருந்தாதபடி; (சுழலுதல் - சஞ்சலப்படுதல்; சோர்தல்);
வினை தீர்த்து உயர் சுகமே அருள்கின்ற தொழில் ஆனவன் - வினைகளை அழித்து பேரின்பத்தையே அருளும் தொழிலை உடையவன்; (உயர் சுகம் - பேரின்பம்); (தொழில் - செயல்; வேலை); (சுகமே அருள்கின்ற தொழிலானவன் - சம்பு என்ற பெயரை உடையவன் என்பதைச் சுட்டியது. (சம்பு - Šiva, as bestowing happiness; [சுகத்தைத் தருபவன்] சிவன்) );
(சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே...");
நறை உண்டு அளி சுரம் ஏழ் முரல்கின்ற - தேனை உண்டு வண்டுகள் ஏழு சுரங்களை ரீங்காரம் செய்கின்ற;



7)
திரியும்புரம் நல்குந்துயர் தீரக்கணை ஒன்றால்
எரியும்படி எய்தான்மழ ஏற்றன்மத யானை
உரியும்புனை ஒருவன்பெயர் ஓதின்மிக நன்மை
புரியும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



மழ ஏற்றன் - இளைய விடையை ஊர்தியாக உடையவன்; (மழ - இளமை); (ஏறு - எருது);
மதயானை உரியும் புனை ஒருவன் - (திங்கள், அரவு, கங்கை, எனப் பலவற்றோடு) ஆண்யானையின் தோலையும் அணிகின்ற ஒப்பற்றவன்;
பெயர் ஓதின் மிக நன்மை புரியும் பரன் - அவன் திருநாமத்தை ஓதினால் மிகவும் நன்மை செய்யும் மேலானவன்;



8)
கறைமிக்கவன் முடிபத்திறக் கயிலைக்கிரி மீது
நறைமிக்கமென் பாதத்தொரு விரலிட்டவர் நதியைச்
சிறையிட்டவர் அன்பால்புகழ் செப்பிப்பணி வார்க்குப்
பொறைமிக்கவர் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



கறை மிக்கவன் முடி பத்து இறக் கயிலைக்கிரி மீது - கரிய நிறம் மிக்கவனும் குற்றம் மிக்கவனும் ஆன இராவணனுடைய பத்துத்தலைகளும் நெரியும்படி கயிலைமலையின்மேல்; (கறை - குற்றம்; கறுப்பு நிறம்); (இறுதல் - முறிதல்; நெரிதல்);
நறை மிக்க மென் பாதத்து ஒரு விரல் இட்டவர் - வாசனை மிகுந்த திருப்பாதத்தின் ஒரு விரலை ஊன்றியவர்; (நறை - வாசனை);
நதியைச் சிறை இட்டவர் - கங்கையைச் சடையுள் அடைத்தவர்; (சிறை - அணை (Dam, bank)); (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 8.22.5 - "சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே");
அன்பால் புகழ் செப்பிப் பணிவார்க்குப் பொறை மிக்கவர் - பக்தியோடு ஈசன் புகழைப் பாடிப் பணியும் அன்பர்களுக்கு மிகுந்த தயை உடையவர்; (பொறை - தயை; பொறுமை); (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.2 - "வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே");
அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவர்.



9)
கடிபங்கய மலரானொடு கடல்மேல்துயில் மாலும்
முடியுங்கழல் அறியாவணம் முடிவில்சுடர் ஆனான்
வெடிசெய்துடி ஏந்துங்கரன் விரையார்சர வேளைப்
பொடிசெய்தவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



கடிபங்கய மலரானொடு கடல்மேல் துயில் மாலும் - வாசத் தாமரைமேல் இருக்கும் பிரமனும் கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும்; (கடி - வாசனை); (பங்கயம் - பங்கஜம் - தாமரை);
முடியும் கழல் அறியாவணம் - தன் திருமுடியையும் திருவடியையும் அறிய ஒண்ணாதபடி;
முடிவு இல் சுடர் ஆனான் - எல்லை இல்லாத சோதி ஆனவன்;
வெடி செய் துடி ஏந்தும் கரன் - வெடி போல் ஒலிக்கும் உடுக்கையைக் கையில் ஏந்தியவன்; (அப்பர் தேவாரம் - 4.73.6 - "விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல" - வெடிபடு தமருகம் - வெடி போன்ற ஒலியை உண்டாக்கும் உடுக்கை.)
விரை ஆர் சர வேளைப் பொடிசெய்தவன் - மணம் பொருந்திய அம்புகளை (மலர்க்கணை) உடைய காமனைச் சாம்பல் ஆக்கியவன்; (விரை - வாசனை); (சரம் - அம்பு ); (வேள் - மன்மதன்);



10)
மாற்றும்வழி என்றேநிதம் வாயில்வரை வந்து
தூற்றும்மொழி சொல்லித்திரி துரிசர்க்கரு ளாதான்
தோற்றம்முடி வில்லாவரன் தொழுவார்துணை உம்பர்
போற்றும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



மாற்றும் வழி - (உம்) நெறியை மாற்றுங்கள்;
துரிசர்க்கு அருளாதான் - குற்றம் உடையவர்களுக்கு அருள் இல்லாதவன்; (துரிசு - குற்றம்);
தோற்றம் முடிவு இல்லா அரன் - ஆதியும் அந்தமும் இல்லாத ஹரன்;
தொழுவார் துணை - துழுகின்ற அன்பர்களுக்குத் துணைவன்;
உம்பர் போற்றும் பரன் - தேவர்களெல்லாம் வணங்குகின்ற பரமன்;



11)
ஊணும்பலி பெண்ணாணலி உடையும்புலி அதளே
நாணும்பட நாகம்மென நாளும்புகழ் வாரைப்
பேணும்பதி பிறைவெண்மதி சூடாமணி யாகப்
பூணும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



ஊணும் பலி, பெண் ஆண் அலி, உடையும் புலி அதளே, நாணும் பட நாகம் என - "உணவும் பிச்சை; ஆண் பெண் அலி; உடை ஆவதும் புலித்தோல்; அரைநாண் படம் உடைய நாகப்பாம்பு" என்று சிவபெருமான் சிறப்புகளைப் பேசி;
நாளும் புகழ்வாரைப் பேணும் பதி - தினந்தோறும் துதிக்கும் பக்தர்களைக் காக்கும் தலைவன்;
பிறைவெண்மதி சூடாமணியாகப் பூணும் பரன் - வெண்பிறைச்சந்திரனைத் தலையில் சூடாமணி போல அணிகின்ற மேலானவன்;
அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்) - இத்தலம் கும்பகோணம்- நாச்சியார் கோவில் வழியில் உள்ளது.
2) அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்) - படிக்காசு நாதர் (சொர்ணபுரீஸ்வரர்) கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=346
3) இலக்கணக் குறிப்புகள் :
செய்ம்மாணி - செய் + மாணி; - வினைத்தொகை;
புணர்ச்சி விதி : கை, பை, செய், நெய் போன்ற சொற்களை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தால் அம்மெல்லினம் ஒற்று மிகும்.
உதாரணம் - திருநாவுக்கரசர் தேவாரம் - 4.80.5 -
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
-------------- --------------

No comments:

Post a Comment