Saturday, April 7, 2018

03.05.025 – குடந்தை (கும்பகோணம்) - கனவுகள் அனந்த கோடி - (வண்ணம்)

03.05.025 – குடந்தை (கும்பகோணம்) - கனவுகள் அனந்த கோடி - (வண்ணம்)

2007-03-26

3.5.25 - கனவுகள் அனந்த கோடி (குடந்தை - கும்பகோணம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனந்த தான

தனதன தனந்த தான

தனதன தனந்த தான .. தனதான )

(இருவினை புனைந்து ஞான - திருப்புகழ் - சுவாமிமலை)


கனவுகள் அனந்த கோடி .. கவலையும் அனந்த கோடி

.. .. கடிமலி சரங்கள் ஏவு .. மதனாலே

.. கயலன கருங்கண் மாதர் .. மயலினில் அமிழ்ந்து வாடு

.. .. கதிதனை அடைந்து பூமி .. தனில்நாளும்


சினமது மிகுந்து கேடு .. தனைஅறி விழந்து நாடு

.. .. சிறுமைகள் நிறைந்து மூடும் .. அடியேனும்

.. தினமுனை வணங்கு நேயர் .. அவருடன் இணைந்து தூய

.. .. திருவடி நினைந்து பாட .. அருளாயே


முனமிக இறைஞ்சு தேவர் .. அவர்படும் இடும்பை தீர

.. .. முரணிய புரங்கள் வேவ .. நகுவீரா

.. முடிமிசை விளங்கு மாறு .. முளைமதி அணிந்து கானில்

.. .. முழவுகள் முழங்க ஆடு .. கணநாதா


சினவிடை மகிழ்ந்த தேவ .. கலனென விரிஞ்சி ஓடு

.. .. திகழ்தர உணங்கல் நாடி .. உழல்வோனே

.. செழுமலர் செறிந்த கோதை .. அணிகுழல் மடந்தை நாத

.. .. திருமலி குடந்தை மேய .. பெருமானே.


தம் பிரித்து:

கனவுகள் அனந்த கோடி; கவலையும் அனந்த கோடி;

.. .. கடி மலி சரங்கள் ஏவு மதனாலே

.. கயல் அன கருங்கண் மாதர் மயலினில் அமிழ்ந்து வாடு

.. .. கதிதனை அடைந்து பூமிதனில் நாளும்


சினமது மிகுந்து, கேடுதனை அறிவு இழந்து நாடு,

.. .. சிறுமைகள் நிறைந்து மூடும் அடியேனும்,

.. தினம் உனை வணங்கு நேயர் அவருடன் இணைந்து, தூய

.. .. திருவடி நினைந்து பாட அருளாயே;


முனம் மிக இறைஞ்சு தேவர் அவர் படும் இடும்பை தீர,

.. .. முரணிய புரங்கள் வேவ நகு-வீரா;

.. முடிமிசை விளங்குமாறு முளை-மதி அணிந்து, கானில்

.. .. முழவுகள் முழங்க ஆடு கணநாதா;


சினவிடை மகிழ்ந்த தேவ; கலன் என விரிஞ்சி-ஓடு

.. .. திகழ்தர, உணங்கல் நாடி உழல்வோனே;

.. செழுமலர் செறிந்த கோதை அணி-குழல் மடந்தை நாத;

.. .. திரு மலி குடந்தை மேய பெருமானே.


கனவுகள் அனந்த கோடி கவலையும் அனந்த கோடி - ஆசைகளும் கவலைகளும் கணக்கில் அடங்கா;

கடி மலி சரங்கள் ஏவு மதனாலே - வாசனை மிகுந்த அம்புகளை ஏவும் மன்மதனால்;

கயல் அன கருங்கண் மாதர் மயலினில் அமிழ்ந்து வாடு கதிதனை அடைந்து பூமிதனில் நாளும் - கயல்மீன் போன்ற கரிய கண்களையுடைய பெண்கள் மயக்கத்தில் முழ்கி வாடும் நிலையை அடைந்து பூமியில் தினமும்;


சினம்அது மிகுந்து, கேடுதனை அறிவு இழந்து நாடு, சிறுமைகள் நிறைந்து மூடும் டியேனும் - கோபம் மிகுந்து, அறிவற்றுக் கேட்டினை நாடுகின்ற, சிறுமைகள் மூடி மறைக்கின்ற நானும்;

தினம் உனை வணங்கு நேயர் அவருடன் இணைந்து தூய திருவடி நினைந்து பாட அருளாயே - தினமும் உன்னை வணங்கும் பக்தர்களுடன் சேர்ந்து, உன் தூய திருவடியை எண்ணிப் பாடி வழிபட அருள்வாயாக;


முனம் மிக றைஞ்சு தேவர் அவர் படும் இடும்பை தீர, முரணிய புரங்கள் வேவ நகு வீரா - முன்பு மிகவும் இறைஞ்சிய தேவர்கள் பட்ட துன்பம் தீருமாறு, பகைத்த முப்புரங்களும் வெந்து அழியச் சிரித்த வீரனே; (முரணுதல் - மாறுபடுதல்);

முடிமிசை விளங்குமாறு முளைமதி அணிந்து, கானில் முழவுகள் முழங்க ஆடு கணநாதா - திருமுடிமேல் பிறைச்சந்திரனை ஒளிவீசுமாறு அணிந்து, சுடுகாட்டில் முழவுகள் ஒலிக்க ஆடுகின்ற பூதகணத் தலைவனே; (கான் - காடு - இங்கே, சுடுகாடு);


சின விடை மகிழ்ந்த தேவ - சினம் மிக்க இடபத்தை ஊர்தியாக விரும்பிய தேவனே;

கலன் என விரிஞ்சி ஓடு திகழ்தர உணங்கல் நாடி உழல்வோனே - உண்கலன் என்று பிரமன் மண்டையோடு திகழ, உணவை நாடித் திரிபவனே; (விரிஞ்சி - பிரமன்); (ஓடு - மண்டையோடு); (தருதல் - ஒரு துணைவினை); (உணங்கல் - உணவு);

செழு மலர் செறிந்த கோதை அணி குழல் மடந்தை நாத - செழுத்த மலர்கள் நிறைந்த மாலையை அணிந்த கூந்தலையுடைய உமைக்கு நாதனே; (கோதை - மாலை);

திரு மலி குடந்தை மேய பெருமானே - திரு மிக்க கும்பகோணத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment:

  1. மிக அருமையான பாடல். படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete