Monday, April 16, 2018

04.27 – வல்லம் (திருவலம்)


04.27 – வல்லம் (திருவலம்)



2013-11-29
வல்லம் (திருவல்லம் - இக்கால வழக்கில் 'திருவலம்')
------------------
(கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு")



1)
வெண்டலை ஏந்தி வெள்விடை ஏறி விடநாகம்
வண்டிரை கொன்றை மலரணி ஈசன் மகிழ்கின்ற
தெண்டிரை வந்து திருவடி போற்று திருவல்லம்
கண்டலர் தூவிக் கைதொழு தல்லல் களைவோமே.



வெண் தலை ஏந்தி - வெள்ளிய மண்டையோட்டை ஏந்தியவன்;
வெள் விடை ஏறி - வெண்ணிற இடபத்தின்மேல் ஏறியவன்;
விடநாகம் வண்திரை (/வண்டு இரை) கொன்றை மலர் அணி ஈசன் மகிழ்கின்ற - விடம் உடைய நாகப்பாம்பையும், கங்கையையும், வண்டுகள் ஆரவாரிக்கின்ற கொன்றைமலரையும் முடிமேல் அணிகின்ற ஈசன் விரும்பி உறைகின்ற; (வண்டிரை - வண்+திரை (=கங்கை) / வண்டு+இரை (வண்டு ஒலிக்கின்ற));
(சம்பந்தர் தேவாரம் - 2.29.2 - "வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்");
(சம்பந்தர் தேவாரம் - 3.76.2 - ".... குழகன்றனிடமாம் வண்டிரை நிழற்பொழிலின்..." - வண்டு இரை - வண்டுகள் ஆரவாரிக்கின்ற);
தெண் திரை வந்து திருவடி போற்று திருவல்லம் கண்டு - தெளிந்த ஆற்றின் அலைகள் வந்து திருவடியை வணங்கும் திருவல்லத்தைத் தரிசித்து;
அலர் தூவிக் கைதொழுது அல்லல் களைவோமே - பூக்கள் தூவிக் கைகளால் தொழுது நம் துன்பத்தைத் தீர்ப்போம்.



2)
பூணுர கங்கள் பொலிதிரு மேனிப் புகழாளன்
வாணுத லாளை வாமமு கந்தான் மகிழ்கின்ற
சேணுயர் கின்ற திண்மதில் சூழ்ந்த திருவல்லம்
பேணுதல் செய்து பேரிடர் தன்னைப் பிரிவோமே.



பூண் உரகங்கள் - பூணுகின்ற பாம்புகள்;
வாள் நுதலாள் - ஒளிபொருந்திய நெற்றியை உடையவள் - உமையம்மை; (வாணுதலாள் = வாள் நுதலாள்);
வாமம் உகந்தான் - இடப்பக்கம் விரும்பியவன்;
சேண் - ஆகாயம்;
திண் மதில் - வலிமை மிகுந்த மதிற்சுவர்;
பேணுதல் - போற்றுதல்;
பேர் இடர் - பெரிய துன்பம்;



3)
நித்தியன் நெற்றி நேத்திரன் நாகம் நிலவாறு
மத்தம ணிந்த வார்சடை அண்ணல் மகிழ்கின்ற
தெத்தென வென்று தேன்முரல் கின்ற திருவல்லம்
பத்தியொ டுற்றுப் பாதமி ரண்டைப் பணிவோமே.



நித்தியன் - அழிவற்றவன்;
நெற்றி நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;
நாகம் நிலவு ஆறு மத்தம் அணிந்த - பாம்பையும் சந்திரனையும் கங்கையையும் ஊமத்த மலரையும் சூடிய;
தேன் முரல்கின்ற - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற;
பத்தியொடு உற்று - பக்தியோடு சென்றடைந்து; (உறுதல் - அடைதல்);



4)
பூவது கொண்டு பொன்னடி போற்றல் புரியாமல்
ஏவது ஆக்கும் காமனை அங்கம் இலனாக்கி
சேவது வாயில் பார்க்கிற கோயில் திருவல்லம்
நாவது கொண்டு நற்றமிழ் பாட நலமாமே.



* இத்தலத்தில் இடபம் சுவாமியை நோக்கி இராமல் அவருக்கு எதிர்ப்புறமாகக் கிழக்கு நோக்கியுள்ளது.


பூ அது கொண்டு பொன்னடி போற்றல் புரியாமல் - பூவால் பொன்னடியைப் போற்றாமல்;
ஏ அது ஆக்கும் காமனை – பூவினை அம்பு ஆக்கும் மன்மதனை;
அங்கம் இலன் ஆக்கி - உடலற்றவனாகச் செய்தவன்; (ஆக்கி - ஆக்கியவன்);
சே அது வாயில் பார்க்கிற கோயில் திருவல்லம் - இடபம் உள்ளே ஈசனை நோக்காமல் வாயிலை நோக்கியபடி இருக்கும் கோயிலான திருவல்லத்தில்;
நா அது கொண்டு நற்றமிழ் பாட நலம் ஆமே - நாவினால் தேவாரம் முதலியன பாடினால் நன்மை விளையும்;
இலக்கணக் குறிப்பு : ஏ அது ஆக்கும் = "ஏவதுவாக்கும்" என்றும் புணரும். உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 1.112.6 - "மாறெதிர் வருதிரி புரமெரித்து நீறது வாக்கிய நிமலனகர்";



5)
வான்மிக வாழ்த்த வல்விடம் உண்ட மணிகண்டன்
மான்மறி ஏந்தி மாதொரு பங்கன் மகிழ்கின்ற
தேன்மலர் நாடிச் சிறையளி ஆர்க்கும் திருவல்லம்
வான்மலர் தூவி வந்தனை செய்தல் வழியாமே.



வான் - 1) தேவர்கள்; 2) அழகிய; சிறந்த;
மான்மறி - மான் கன்று;
சிறை அளி ஆர்க்கும் - சிறகுடைய வண்டு ஒலிக்கும்;
வான்மலர் தூவி வந்தனை செய்தல் வழி ஆமே - அழகிய பூக்களைத் தூவி வழிபடுவது உய்யும் வழி ஆகும்;



6)
கொம்பன மங்கை கூறமர் எந்தை குளிர்திங்கள்
வம்பவிழ் கொன்றை மலரணி ஈசன் வடவாற்கீழ்ச்
செம்பொருள் சொன்ன சிவனுறை கின்ற திருவல்லம்
நம்பிய டைந்து நாம்தொழு தேத்த நலமாமே.



கொம்பு அன மங்கை கூறு அமர் எந்தை - பூங்கொம்பு போன்ற உமையம்மையை ஒரு கூறாக விரும்பிய எம் தந்தை;
குளிர் திங்கள் வம்பு அவிழ் கொன்றை மலர் அணி ஈசன் - குளிர்ந்த திங்களையும் வாசம் கமழும் கொன்றைமலரையும் சூடிய ஈசன்;
வட ஆல் கீழ்ச் செம்பொருள் சொன்ன சிவன் உறைகின்ற திருவல்லம் - கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருளை விளக்கிய சிவபெருமான் உறைகின்ற திருவல்லத்தை; (வடவால் - கல்லார மரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");
நம்பி அடைந்து நாம் தொழுது ஏத்த நலம் ஆமே - விரும்பி அடைந்து நாம் தொழுது போற்றினால் நன்மை உண்டாகும்.



7)
கந்தனை ஈன்ற கண்ணுதல் எந்தை கழல்போற்று
சந்திர னுக்குத் தண்ணருள் செய்து தலையேற்றான்
செந்தழல் மேனிச் சிவனுறை கின்ற திருவல்லம்
வந்தனை செய்தல் வல்வினை தீரும் வழியாமே.



கந்தனை ஈன்ற கண்ணுதல் எந்தை - முருகனை பெற்ற நெற்றிக்கண்ணனான எம் தந்தை;



8)
வரையசைத் தானை வாடநெ ரித்து வரமீந்தான்
சிரைதலை ஏந்திச் சில்பலி தேரும் சிவன்மேவும்
திரைபுனல் எற்றும் கரையினில் உள்ள திருவல்லம்
கரைமனத் தோடு கைதொழு தல்லல் களைவோமே.



வரை அசைத்தானை வாட நெரித்து வரம் ஈந்தான் - கயிலைமலையை அசைத்த இராவணனை வாடுமாறு நசுக்கிப் பின் அவனுக்கு வரம் கொடுத்தவன்;
சிரைதலை ஏந்திச் சில்பலி தேரும் சிவன் மேவும் - மயிரற்ற மண்டையோட்டை ஏந்திச் சிறு அளவில் இடும் பிச்சை ஏற்கும் சிவன் உறைகின்ற; (சிரைதலை - சிரைத்த தலை - மயிரற்ற மண்டையோடு); (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி");
திரைபுனல் எற்றும் கரையினில் உள்ள திருவல்லம் - அலைக்கின்ற ஆற்றுநீர் மோதுகின்ற கரையில் உள்ள திருவல்லத்தை; (திரைதல் - அலையெழுதல்); (எற்றுதல் - மோதுதல்; அடித்தல்);
கரை மனத்தோடு கைதொழுது அல்லல் களைவோமே - கரைகின்ற மனத்தோடு கைகளால் தொழுது நம் அல்லகளைத் தீர்ப்போம்.



9)
பங்கய னோடு பாற்கட லானும் பதமேத்த
அங்கள வில்லா ஆரழல் ஆனான் அமர்கின்ற
செங்கயல் பாயும் செய்புடை சூழ்ந்த திருவல்லம்
கொங்கலர் தூவிக் கும்பிட அல்லல் குறுகாவே.



பங்கயன் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்;
பாற்கடலான் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால்;
அங்கு அளவு இல்லா ஆரழல் ஆனான் - அங்கே அளவற்ற சோதி ஆனவன்;
செம் கயல் பாயும் செய் புடை சூழ்ந்த திருவல்லம் - சிவந்த கயல்மீன்கள் பாயும் வயல்கள் சூழ்ந்த திருவல்லம்;
கொங்கு அலர் - வாச மலர்;
குறுகா - அணுகா; அடையா; (குறுகுதல் - அணுகுதல்);



10)
வலையினை வீசும் வஞ்சகர் வார்த்தை மதியாதீர்
அலைமலி கங்கை அஞ்சடை ஏற்ற அருளாளன்
சிலையினை ஏந்தித் திரிபுரம் எய்தான் திருவல்லம்
நிலையினன் நற்றாள் நினைவது வான்சேர் நெறிதானே.



மதியாதீர் - மதியேன்மின் - நீங்கள் மதிக்க வேண்டா;
அம் சடை - அழகிய சடை;
சிலை - மலை; வில்; (மேருமலை என்ற வில்);
திரிபுரம் எய்தான் - திரிந்த முப்புரங்களை எய்தவன்;
திருவல்லம் நிலையினன் - திருவல்லத்தில் நிலைத்து உறைகின்ற சிவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான்");
வான் சேர் நெறி - வானுலகம் சேரும் வழி ஆகும்;



11)
இகழ்தரு தக்கன் வேள்வித கர்த்த எரிவண்ணன்
உகள்தரு மானை ஒருகரம் ஏந்தி உரகத்தார்
திகழ்தரு மார்பன் திருவலம் மேய சிவனெம்மான்
புகழ்தனை ஓதப் புரிவினை எல்லாம் பொடியாமே.






தருதல் - ஒரு துணைவினைச்சொல்;
இலக்கணக் குறிப்பு : புணர்ச்சி விதி : ழ்+= ; ள்+= ;
(இகடரு, உகடரு, திகடரு, புகடனை = (இகழ்தரு, உகள்தரு, திகழ்தரு, புகழ்தனை));
உகள்தல் - பாய்தல்; (சம்பந்தர் தேவாரம் - 2.109.4 - "குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே");
("மான் உகளும்" பிரயோக உதாரணம் - சங்க இலக்கியத்தில் - குறுந்தொகை - "பிணையொடு மார்ந்த மானே றுகளுங் கானம்" = பிணையொடும் ஆர்ந்த - பெண் மானோடு வயிறு நிரம்ப உண்ட; மான் ஏறு உகளும் - ஆண் மான் துள்ளுகின்ற; கானம் - காடு);
உரகத் தார் - பாம்பு மாலை;
புரிவினை - செய்வினை;
பொடி ஆம் - சாம்பல் ஆகும்; அழியும்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்;
தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்;



2) சம்பந்தர் தேவாரம் - 1.98.1 -
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ன்றுடையானை மையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே.



3) திருவல்லம் (திருவலம்) - (இத்தலம் வேலூர் - காட்பாடி அருகே உள்ளது) - வில்வநாதேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=119
-------------- --------------

No comments:

Post a Comment