04.24 - பழனம் - இயல்களாலும் இசைகளாலும்
2013-11-22
பழனம் (திருப்பழனம்)
----------------------------------
(எழுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா மா மா மா மா புளிமாங்காய் - வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.41.1 - "முதுவாய் ஓரி கதற")
1)
இயல்க ளாலும் இசைக ளாலும் .. ஏத்திப் பாதம் பணிவார்கள்
மயல்கள் தீர்ந்து மகிழும் வண்ணம் .. வரங்கள் நல்கும் மணிகண்டன்
அயில்கொள் சூலம் ஏந்து கின்ற .. ஐயன் உறையும் பதியென்பர்
கயல்கள் பாயும் வயல்கள் சூழும் .. கவினார் பழன நகர்தானே.
இயல்கள், இசைகள் - இயற்றமிழ், இசைத்தமிழ்ப் பாடல்கள்; (சுந்தரர் தேவாரம் - 7.52.6 - "பண்ணார் இசைக ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் அண்ணா");
மயல்கள் - மயக்கங்கள்;
அயில் - கூர்மை;
கயல்கள் - கயல் மீன்கள்;
கவின் ஆர் - அழகிய;
2)
வெளியும் உள்ளும் வெண்மை தாங்கும் .. மேன்மை யோடு புகழ்பாடி
அளியும் அன்பர்க் கன்ப னாகி .. அவர்தம் அகங்கள் உறைகின்ற
தளிகள் ஆக மகிழும் தலைவன் .. தனிவெள் விடையன் பதியென்பர்
அளிகள் ளுண்டு களிகொள் சோலை .. ஆரும் பழன நகர்தானே.
வெளியும் உள்ளும் வெண்மை தாங்கும் மேன்மை - அகத்திலும் புறத்திலும் தூய்மை உடைய மேன்மை; உள்ளத்தில் கள்ளமின்றித் தூய்மையையும் உடலில் திருநீற்றையும் தாங்கும் மேன்மை;
அளிதல் - குழைதல்; அறக் கனிதல்;
அகம் - மனம்;
தளி - கோயில்;
தனி - ஒப்பற்ற;
அளிகள்ளுண்டு - 1. அளிகள் + உண்டு; (ளகர ஒற்று விரித்தல்) / 2. அளி + கள்ளுண்டு;
(அளி - வண்டு); (கள் - தேன்); (களி - மகிழ்ச்சி);
3)
பறைகள் முழக்கிப் பாரி டங்கள் .. பலவும் சூழ நடமாடும்
கறைகொள் கண்டன் கயிலை மலையன் .. காதல் மங்கை ஒருபங்கன்
குறைவெண் திங்கள் கொன்றை சூடும் .. கோலச் சடையன் பதியென்பர்
சிறைவண் டார்த்து நறையுண் சோலை .. திகழும் பழன நகர்தானே.
பாரிடங்கள் - பூதகணங்கள்;
நடமாடுதல் - கூத்தாடுதல்;
சிறைவண்டு ஆர்த்து நறை உண் சோலை - சிறகுடைய வண்டுகள் ரீங்காரம் செய்து தேன் உண்ணும் பொழில்;
4)
காடு தன்னில் நட்டம் ஆடும் .. கடவுள் ஏன மருப்பாமை
ஓடு நீறு திகழும் மார்பன் .. ஒருபால் கொடிபோல் உமைமங்கை
கூடும் குழகன் குரையார் கழலன் .. கூனற் பிறையன் பதியென்பர்
பாடும் வண்டு நாடும் சோலை .. பரவும் பழன நகர்தானே.
காடு - சுடுகாடு;
நட்டம் - கூத்து;
ஏன மருப்பு - பன்றிக்கொம்பு;
ஆமை ஓடு - ஆமையின் ஓடு; (சம்பந்தர் தேவாரம் - 2.85.2 - "என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க");
நீறு - திருநீறு;
குழகன் - இளைஞன்;
குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியினன்;
கூனல் பிறையன் - வளைந்த திங்களை அணிந்தவன்;
5)
வேழ முகத்தன் வேலன் தாதை .. விண்ணோர் அமுதம் பெறவேண்டி
ஆழக் கடலை அன்று கடைய .. அதனில் எழுந்த விடமுண்டான்
ஏழை பங்கன் ஈரச் சடையன் .. ஏற்றுக் கொடியன் பதியென்பர்
வாழை யோடு தாழை மலியும் .. வளமார் பழன நகர்தானே.
வேழ முகத்தன் வேலன் தாதை - யானைமுகத்துக் கணபதிக்கும் முருகனுக்கும் தந்தை;
ஏழை - பெண்;
ஏற்றுக் கொடியன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;
தாழை - தென்னை;
6)
எங்கும் இருக்கும் எங்கள் பெருமான் .. இமவான் பெற்ற மடவாளைப்
பங்கில் உடையான் பரவு வார்தம் .. பாவ நாசன் மழவெள்ளைச்
செங்கண் விடையான் சூலப் படையான் .. செம்பொற் சடையான் பதியென்பர்
கொங்குண் வண்டு தங்குஞ் சோலைக் .. கோலப் பழன நகர்தானே.
இமவான் பெற்ற மடவாளைப் பங்கில் உடையான் - மலைமகளை ஒரு பங்கில் உடையவன்; (மடவாள் - பெண்);
பரவுதல் - புகழ்தல்; துதித்தல்;
மழவெள்ளைச் செங்கண் விடையான் - இளமை பொருந்திய, வெண்ணிறம் உடைய, சிவந்த கண்களை உடைய இடப-ஊர்தியை உடையவன்;
கொங்கு உண் வண்டு தங்கும் சோலை - தேன் உண்ணும் வண்டுகள் தங்குகின்ற பொழில்;
கோலம் - அழகு;
7)
உழையும் மழுவும் உடைய கையன் .. உவம னில்லி ஒருதோடும்
குழையும் காட்டும் கோலம் உடையான் .. கும்பிட் டேத்தில் பரிவோடெப்
பிழையும் பொறுத்துப் பேர ருள்செய் .. பித்தன் உறையும் பதியென்பர்
மழையும் வந்து நுழையும் பொழில்கள் .. மலியும் பழன நகர்தானே.
உழை - மான்;
உவமனில்லி - உவமன் இல்லி - தனக்கு உவமை இல்லாதவன்; (அப்பர் தேவாரம் - 6.97.10 - "ஓருவமனில்லி");
ஒரு தோடும் குழையும் காட்டும் கோலம் உடையான் - அர்த்தநாரீஸ்வரன்;
கும்பிட்டு ஏத்தில் பரிவோடு எப்பிழையும் பொறுத்துப் பேரருள்செய் பித்தன் - வணங்கிப் போற்றினால் இரங்கி எல்லாக் குற்றங்களையும் மன்னித்துப் பெரிதும் அருள்செய்யும் பேரருளாளன்;
மழை - மேகம்;
மழையும் வந்து நுழையும் பொழில் - மழையும் என்றதில் உம் - 1. எச்சவும்மை (வண்டுகள், பறவைகள் இவையும் நுழையும் பொழில்); 2. அசை என்றும் கொள்ளலாம்;
8)
உரங்கொள் புயங்கள் உன்னி ஓடி .. உயர்வெற் பிடந்த மதியில்லான்
சிரங்கள் பத்தும் சிதற விரலைச் .. சிறிதே ஊன்றி இசைகேட்டார்
இரங்கி வாளும் நாளும் ஈந்த .. ஏந்தல் உறையும் பதியென்பர்
வரங்கள் விழைவார் கரங்கள் கூப்பி .. மகிழும் பழன நகர்தானே.
உரம்கொள் புயங்கள் உன்னி - வலிமையுடைய புஜங்களை எண்ணி; (உன்னுதல் - நினைத்தல்);
உயர் வெற்பு இடந்த = கயிலைமலையைப் பேர்த்த;
ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்;
9)
அன்னம் ஏனம் ஆகி இருவர் .. அடியும் முடியும் மிகநேட
முன்னம் எரியாய் முளைத்த முதல்வன் .. மூவா முக்கட் பரமேட்டி
சென்னி மீது திங்கள் கங்கை .. திகழும் பெருமான் பதியென்பர்
பொன்னிக் கரையில் துன்னிப் பொழில்கள் .. புடைசூழ் பழன நகர்தானே.
ஏனம் - பன்றி;
நேட - தேட;
எரி - சோதி;
முவா - மூப்பு இல்லாத;
முக்கட் பரமேட்டி - மூன்று கண்கள் உடைய பரம்பொருள்;
பொன்னிக் கரையில் துன்னிப் பொழில்கள் புடை சூழ் - காவிரிக்கரையில் சோலைகள் அடர்ந்து சூழ்கின்ற; (துன்னுதல் - செறிதல்);
10)
பாவி என்றும் பலரோ என்றும் .. பலபொய்ம் மொழிகள் தெருவோரம்
கூவி நிற்பார் கூற்றை விடுமின் .. கூற்றை உதைசெய் தடியாரின்
ஆவிக் கரணாய் நின்று காத்த .. அம்மை யப்பன் பதியென்பர்
காவில் குயில்கள் கூவி மகிழும் .. கவினார் பழன நகர்தானே.
பல பொய்ம்மொழிகள் - பற்பல பொய்களை;
தெருவோரம் கூவி நிற்பார் கூற்றை விடுமின் - தெருவில் நின்று கூவுகின்றவர்களது பேச்சை மதிக்கவேண்டா;
கூற்றை உதைசெய்து அடியாரின் ஆவிக்கு அரணாய் நின்று காத்த அம்மையப்பன் - எமனை உதைத்து மார்க்கண்டேயரது உயிருக்குக் கவசம்போல் நின்று காத்தருளியவனும் அம்மையப்பனும் ஆன சிவபெருமான்; (அரண் - கவசம்; கோட்டை);
கா - சோலை;
கவின் ஆர் - அழகிய;
11)
துள்ளிப் பாயும் மானும் மழுவும் .. சூலப் படையும் தரியீசன்
வெள்ளி மலைபோல் விடையொன் றேறி .. வீந்தார் என்பே அணியாகக்
கொள்ளி ஏந்தி ஆடு கின்ற .. கூத்தன் உறையும் பதியென்பர்
புள்ளி னங்கள் உள்ளி சைக்கும் .. பொழில்சூழ் பழன நகர்தானே.
துள்ளிப் பாயும் - ஒருபொருட்பன்மொழியாகக் கொள்ளலாம். (துள்ளுதல் - குதித்தல்; தாவிச் செல்லுதல்); (பாய்தல் - தாவுதல்; விரைந்தோடுதல்);
சூலப்படை - சூலாயுதம்;
தரித்தல் - தாங்குதல்;
வெள்ளிமலைபோல் விடை ஒன்று ஏறி - வெண்ணிறம் உடைய மலை போன்ற ஒரு பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;
வீந்தார் என்பே அணியாக - இறந்தவர் எலும்பை அணிகின்ற கங்காளன்; (வீதல் - சாதல்);
கொள்ளி - தீ;
புள்ளினங்கள் உள் இசைக்கும் பொழில் - பறவைகள் உள்ளே இசை செய்யும் சோலை; (இசைத்தல் - ஒலித்தல்; பாடுதல்);
பிற்குறிப்பு :
யாப்புக்குறிப்பு :
எழுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா மா மா மா மா புளிமாங்காய் - என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை. பாடல்தோறும் ஈற்றடியில் 1-3 சீர்களில் எதுகையும் உண்டு.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment