Sunday, April 8, 2018

03.05.027 – பொது - வந்தித் திடுமறை யவன்மிக - (வண்ணம்)

03.05.027 – பொது - வந்தித் திடுமறை யவன்மிக - (வண்ணம்)

2007-03-30

3.5.27 - வந்தித்திடு மறையவன் - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தத் தனதன தனதன தனதன

தந்தத் தனதன தனதன தனதன

தந்தத் தனதன தனதன தனதன .. தனதான )

(எந்தத் திகையினு மலையினு - திருப்புகழ் - சுவாமிமலை)


வந்தித் திடுமறை யவன்மிக வெருவுற

... வந்தக் கயிறெறி சின(ம்)மிகு மறலியை

... வங்கக் கடலணி நில(ம்)மிசை விழவுதை .. அடிபேணும்

வந்திக் கெனவுழை திருவனை அடர்சடை

... மஞ்சிற் றிகழ்மினல் அனவொளி விடமணி

... மன்றிற் றிருநட மிடுமொரு வனைமணி .. மிடறானை

அந்திப் பிறையணி முடிதனில் நதியனை

... அஞ்சொற் கிளிமொழி உமையவள் உடலிடம்

... அங்குற் றிடவிடை மிசைவரும் இமையவர் .. பெருமானைச்

சந்தத் தமிழ்மறை கொடுதுதி அடியவர்

... தங்கட் கொருதுயர் இடரிலை குறைவறு

... சம்பத் தொடுசுர ருலகினும் உயர்நிலை .. அருள்வானே.


பதம் பிரித்து:

வந்தித்திடு மறையவன் மிக வெருவுற

... வந்து அக்-கயிறு எறி சின(ம்) மிகு மறலியை

... வங்கக்-கடல் அணி நில(ம்)மிசை விழ உதை அடி பேணும்

வந்திக்கு என உழை- திருவனை, அடர்-சடை

... மஞ்சில் திகழ் மினல் அன ஒளி விட, மணி

... மன்றில் திருநடம் இடும் ஒருவனை, மணி மிடறானை,

அந்திப் பிறை அணி முடிதனில் நதியனை,

... அஞ்சொல் கிளிமொழி உமையவள் உடல்-இடம்

... அங்கு உற்றிட, விடைமிசை வரும் இமையவர் பெருமானைச்

சந்தத்-தமிழ் மறைகொடு துதி அடியவர்

... தங்கட்கு ஒரு துயர் இடர் இலை; குறைவு அறு

... சம்பத்தொடு சுரர் உலகினும் உயர்நிலை அருள்வானே.


வந்தித்திடு மறையவன் மிக வெருவுற வந்து அக்-கயிறு எறி சினம் மிகு மறலியை வங்கக் கடல் அணி நிலம் மிசை விழ உதை அடி பேணும் - ஈசனை வழிபட்ட மார்க்கண்டேயர் மிகவும் அஞ்சும்படி வந்து பாசத்தை வீசிய கோபம் மிக்க நமனைக், அலையுடைய (/கப்பல் செல்லும்) கடல் சூழ்ந்த நிலத்தின்மேல் விழும்படி உதைத்த திருவடியைப் போற்றிய; (வங்கம் - அலை; கப்பல்);

வந்திக்கு என உழை திருவனை - வந்தி என்ற மூதாட்டிக்காகக் கூலியாளாக உழைத்த செல்வனை; (திருவிளையாடற் புராணம் - பிட்டுக்கு மண் சுமந்த படலம் காண்க);

அடர்-சடை மஞ்சில் திகழ் மினல் அன ஒளி விட, மணி மன்றில் திருநடம் இடும் ஒருவனை - அடர்ந்த சடையானது மேகத்தில் விளங்கும் மின்னல் போல ஒளிவீச, அழகிய சபையில் திருநடம் செய்யும் ஒப்பற்றவனை;

மணி மிடறானை - நீலகண்டனை; (மிடற்றான் - சந்தம் கருதி மிடறான் என்று வந்தது);

அந்திப் பிறை அணி முடிதனில் நதியனை - பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியில் கங்கையை அடைத்தவனை;

அஞ்சொல் கிளிமொழி உமையவள் உடல் இடம் அங்கு உற்றிட விடைமிசை வரும் இமையவர் பெருமானைச் - கிளி போன்ற இனிய மொழி பேசும் உமாதேவி தன் உடலில் இடப்பாகம் ஆக, இடபத்தின்மேல் வரும் தேவதேவனை;

சந்தத்தமிழ் மறைகொடு துதி அடியவர் தங்கட்கு ஒரு துயர் இடர் இலை - சந்தம் மிக்க தமிழ்வேதமாகிய தேவாரப் பாமாலைகளால் துதிக்கும் பக்தர்களுக்கு எவ்விதத் துயரமும் கஷ்டமும் இல்லை;

குறைவு அறு சம்பத்தொடு சுரர் உலகினும் உயர்நிலை அருள்வானே - சிவபெருமான் அவர்களுக்குக் குறைவற்ற செல்வத்தையும் தேவலோகத்தினும் உயர்ந்த சிவலோக வாழ்வையும் அருள்வான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment