Saturday, April 7, 2018

03.05.026 – குடந்தை (கும்பகோணம்) - மாதரை மிகுந்த காசினை - (வண்ணம்)

03.05.026 – குடந்தை (கும்பகோணம்) - மாதரை மிகுந்த காசினை - (வண்ணம்)

2007-03-27

3.5.26 - மாதரை மிகுந்த காசினை (குடந்தை - (கும்பகோணம்) )

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானன தனந்த தானன

தானன தனந்த தானன

தானன தனந்த தானன .. தனதான )

(ஆனன முகந்து தோளொடு - திருப்புகழ் - சுவாமிமலை)


மாதரை மிகுந்த காசினை .. நாடொறு(ம்) நினைந்து தீவினை

.. .. வாரிதி விழுந்து பேரிடர் .. உறலாமோ

.. வாதைகள் அகன்று நானில(ம்) .. மீதினி மகிழ்ந்து நானுயர்

.. .. வாழ்வுற இரங்கி நீயருள் .. புரியாயே


மாதவர் விரும்பி நீரொடு .. வாசனை மலிந்த பூவொடு

.. .. வார்கழல் வணங்கு நாயக .. மறையோதீ

.. மாதவன் அகழ்ந்து நேடவு(ம்) .. நான்முகன் உயர்ந்து நேடவும்

.. .. வானது கடந்து நீடிய .. ஒருசோதீ


தாதவிழ் செருந்தி கூவிளம் .. ஆர்தொடை புனைந்த சேவக

.. .. தாரென உகந்து வாளர .. வணிவோனே

.. தாளிணை பணிந்த மாணியை .. நாடிய நமன்ற னாருயிர்

.. .. தானற முனிந்த காவல .. முடிமீது


சீதள(ம்) நிறைந்த வானதி .. நீரலை முழங்கு வேணிய

.. .. தீயென விளங்கு மேனிய .. மிகுதூயா

.. சேணுற எழுந்த கோபுர(ம்) .. மாமதில் இலங்க ஏரொடு

.. .. சீர்மலி குடந்தை மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

மாதரை மிகுந்த காசினை நாடொறும் நினைந்து, தீவினை

.. .. வாரிதி விழுந்து பேரிடர் உறலாமோ;

.. வாதைகள் அகன்று, நானிலம் மீது இனி மகிழ்ந்து, நான் உயர்

.. .. வாழ்வுற, இரங்கி நீ அருள் புரியாயே;


மாதவர் விரும்பி நீரொடு, வாசனை மலிந்த பூவொடு,

.. .. வார்-கழல் வணங்கு நாயக; மறையோதீ;

.. மாதவன் அகழ்ந்து நேடவும், நான்முகன் உயர்ந்து நேடவும்,

.. .. வானது கடந்து நீடிய ஒரு சோதீ;


தாது-அவிழ் செருந்தி கூவிளம் ஆர் தொடை புனைந்த சேவக;

.. .. தார் என உகந்து வாளரவு அணிவோனே;

.. தாளிணை பணிந்த மாணியை நாடிய நமன்றன் ஆருயிர்-

.. .. தான் அற முனிந்த காவல; முடிமீது


சீதளம் நிறைந்த வானதி நீர்-அலை முழங்கு வேணிய;

.. .. தீ என விளங்கு மேனிய; மிகு-தூயா;

.. சேண்-உற எழுந்த கோபுரம் மாமதில் இலங்க, ஏரொடு

.. .. சீர் மலி குடந்தை மேவிய பெருமானே.


மாதரை மிகுந்த காசினை நாடொறும் நினைந்து, தீவினை வாரிதி விழுந்து பேரிடர் உறலாமோ - இந்தப் பெரிய பூமியில் பெண்களையும் பெரும் பொருளையும் தினமும் எண்ணித், தீவினைக்கடலில் விழுந்து பெருந்துன்பம் அடையலாமா?; (மாதரை - பெண்களை; பெரிய பூமியில்); (வாரிதி - கடல்);

வாதைகள் அகன்று, நானிலம் மீது இனி மகிழ்ந்து, நான் உயர் வாழ்வுற, இரங்கி நீ ருள் புரியாயே - துன்பங்கள் தீர்ந்து பூமியில் இன்புற்று, நான் நற்கதி அடைய, நீ இரங்கி அருள்வாயாக; (வாதை - துன்பம்); (நானிலம் - பூமி); (இனி இனிமேல்);


மாதவர் விரும்பி நீரொடு, வாசனை மலிந்த பூவொடு, வார்-கழல் வணங்கு நாயக - பெரும் தவசியர்கள் நீராலும் மணம் மிக்க பூக்களாலும், உன் நீண்ட கழல் அணிந்த திருவடியை விரும்பி வணங்கும் தலைவனே; (மாதவர் - பெரும் தவம் உடையவர்); (வார்தல் - நீள்தல்);

மறையோதீ - வேதங்களை ஓதி அருளியவனே; (ஓதீ - ஓதியவனே);

மாதவன் அகழ்ந்து நேடவும், நான்முகன் உயர்ந்து நேடவும், வானது கடந்து நீடிய ஒரு சோதீ - திருமால் நிலத்தை அகழ்ந்து தேடுமாறும், பிரமன் மேலே பறந்து சென்று தேடுமாறும், வானைக் கடந்து நீண்ட ஒப்பற்ற சோதியே; (மாதவன் - திருமால்); (நேடுதல் - தேடுதல்); (நீடுதல் - நீள்தல்); (ஒரு - ஒப்பற்ற);


தாது-விழ் செருந்தி கூவிளம் ஆர் தொடை புனைந்த சேவக - பூந்தாது விரியும் செருந்தி மலரும் வில்வமும் பொருந்திய மாலைகளை அணிந்த வீரனே; (தாது - மகரந்தம்); (கூவிளம் - வில்வம்); (சேவகன் - வீரன்);

தார் என உகந்து வாளரவு அணிவோனே - கொடிய பாம்பை மார்பில் மாலையாக விரும்பி அணிந்தவனே; (தார் - மாலை); (வாள் - கொடிய);

தாளிணை பணிந்த மாணியை நாடிய நமன்றன் ஆருயிர்-தான் அற முனிந்த காவல – இரு திருவடிகளை வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய கூற்றுவனது அரிய உயிரே அழியும்படி அவனைக் கோபித்து உதைத்த காவலனே; (மாணி - மார்க்கண்டேயர்); (முனிதல் - கோபித்தல்);


முடிமீது சீதளம் நிறைந்த வானதி நீர்-லை முழங்கு வேணிய – திருமுடிமேல் குளிர்ச்சி பொருந்திய கங்கைநீரின் அலைகள் ஒலிக்கின்ற சடையை உடையவனே; (சீதளம் - குளிர்ச்சி); (வானதி - கங்கை); (வேணி - சடை);

தீ என விளங்கு மேனிய – தீப்போல் விளங்கும் செம்மேனியனே;

மிகு-தூயா - பரிசுத்தனே;

சேண்-உற எழுந்த கோபுரம் மாமதில் இலங்க, ஏரொடு சீர் மலி குடந்தை மேவிய பெருமானே - வானுற ஓங்கிய கோபுரமும் பெரிய மதிலும் விளங்க, அழகும் புகழும் நன்மையும் மிக்க குடந்தையில் (கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில்) எழுந்தருளிய பெருமானே; (சேண் - ஆகாயம்); (இலங்குதல் - விளங்குதல்); (ஏர் - அழகு); (சீர் - பெருமை; புகழ்; நன்மை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment