Sunday, April 8, 2018

03.05.028 – பொது - மலரடியை நான் நினைத்து - (வண்ணம்)

03.05.028 – பொது - மலரடியை நான் நினைத்து - (வண்ணம்)

2007-03-30

3.5.28 - மலரடியை நான் நினைத்து (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தத்த

தனதனன தான தத்த

தனதனன தான தத்த .. தனதான )

(சரணகம லாலயத்தை - திருப்புகழ் - சுவாமிமலை)


மலரடியை நானி னைத்து மனமுருகி டாது கெட்ட

..... வழிகளில வாமி குத்து .. மதனாலே

... மதிமறைய மோக முற்று மிகவுமிடர் நேர எய்த்து

..... மலவிருளி னாலி ழுக்கில் .. உழல்வேனும்

மலைமகளொர் பாலி ருக்க நதியவளை மேலி ருத்தி

..... மழவிடைய தேறு மத்த .. தமிழாலே

... மணமலியு(ம்) மாலை கட்டி உனதுபய தாளி லிட்டு

..... வலியவினை தான றுக்க .. அருளாயே

அலரவனு(ம்) மாவு ருக்கொ ளரியவனு(ம்) நேடி நிற்க

..... அரியதழ லாய்மி குத்த .. பெரியோனே

... அடிபரவி னார்த மக்கு மிகவெளிய னாய்வ ரத்தை

..... அருளுமிறை யேநி ருத்த .. மிடுவோனே

அலைநடுவி லேபொ ருப்பை நடுசுரர்கள் வாட உற்ற

..... அனலுமிழு(ம்) மாவி டத்தை .. ஒளிவீசும்

... அழகுமணி யாமி டற்றில் அணியவல தேவ நித்த

..... அரவவரை நாண சைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மலரடியை நான் நினைத்து மனம் உருகிடாது, கெட்ட

..... வழிகளில் அவா மிகுத்து மதனாலே

... மதி மறைய மோகம் உற்று, மிகவும் இடர் நேர எய்த்து,

..... மல-இருளினால் இழுக்கில் உழல்வேனும்,

மலைமகள் ஒர் பால் இருக்க, நதியவளை மேல் இருத்தி,

..... மழ-விடையது ஏறும் அத்த, தமிழாலே

... மணம் மலியும் மாலை கட்டி, உனது உபய தாளில் இட்டு

..... வலிய வினைதான் அறுக்க அருளாயே;

அலரவனும் மா உருக்கொள் அரியவனும் நேடி நிற்க,

..... அரிய தழலாய் மிகுத்த பெரியோனே;

... அடி பரவினார்-தமக்கு மிக எளியனாய், வரத்தை

..... அருளும் இறையே; நிருத்தம் இடுவோனே;

அலை நடுவிலே பொருப்பை நடு சுரர்கள் வாட உற்ற,

..... அனல் உமிழும் மா விடத்தை ஒளி வீசும்

... அழகு மணியா மிடற்றில் அணிய வல தேவ; நித்த;

..... அரவ அரைநாண் அசைத்த பெருமானே.


மலரடியை நான் நினைத்து மனம் உருகிடாது, கெட்ட வழிகளில் அவா மிகுத்து மதனாலே மதி மறைய மோகம் உற்று, மிகவும் இடர் நேர எய்த்து - மலர் போன்ற உன் திருவடியை எண்ணி மனம் உருகாமல், தீய வழிகளில் விருப்பம் கொண்டு, ஆணவத்தாலும் மன்மதனாலும் அறிவு மறைய மோகம் எய்தி, அதனால் மிகவும் துன்பம் விளைந்ததால் வருந்தி;

மல இருளினால் இழுக்கில் உழல்வேனும் - மும்மலக்கட்டால் கீழ்மையிலேயே உழல்கின்ற நானும்;

மலைமகள் ஒர் பால் இருக்க, நதியவளை மேல் இருத்தி, மழ-விடையது ஏறும் அத்த - உமாதேவி ஒரு பங்காக இடப்பக்கம் இருக்கக், கங்கையைச் சடையில் வைத்து, இள எருதினை வாகனமாக உடைய தந்தையே; (அத்தன் - தந்தை);

தமிழாலே மணம் மலியும் மாலை கட்டி, உனது உபய தாளில் இட்டு, வலிய வினைதான் அறுக்க அருளாயே - மணம் வீசும் தமிழ்ப்பாமாலைகள் தொடுத்து, உன் இரு திருவடிகளில் இட்டு, என் வலிய வினையை அறுப்பதற்கு அருள்வாயாக; (உபயம் - இரண்டு);

அலரவனும் மா உருக்கொள் அரியவனும் நேடி நிற்க, அரிய தழலாய் மிகுத்த பெரியோனே - மலர்மேல் உறையும் பிரமனும், பன்றி உருவை ஏற்ற திருமாலும் தேடி வாடி நிற்கும்படி, அவர்களுக்கு அரிய சோதியாகி உயர்ந்த பெருமானே;

அடி பரவினார்-தமக்கு மிக எளியனாய், வரத்தை அருளும் இறையே - உன் திருவடியைப் போற்றும் அடியவர்களால் எளிதில் அடையப்படுவனாகி, அவர்களுக்கு வரங்கள் அருளும் இறைவனே;

நிருத்தம் இடுவோனே - நடராஜனே; (நிருத்தம் - நடனம்);

அலை நடுவிலே பொருப்பை நடு சுரர்கள் வாட உற்ற, அனல் உமிழும் மா விடத்தை ஒளி வீசும் அழகு மணியா மிடற்றில் அணிய வல தேவ; நித்த - கடல் நடுவே மந்தர மலையை மத்தாக நட்ட தேவர்கள் வாடுமாறு எழுந்த, தகிக்கின்ற ஆலகால நஞ்சை, ஒளி திகழும் நீலமணியாகக் கண்டத்தில் அணியவல்ல தேவனே; அழிவற்றவனே; (பொருப்பு - மலை);

அரவ அரைநாண் அசைத்த பெருமானே - பாம்பை அரைநாணாகக் கட்டிய பெருமானே; (அசைத்தல் - கட்டுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment: