Saturday, April 7, 2018

03.05.024 – கடவூர் - படைபோல் வளைக்கும் அஞ்சு - (வண்ணம்)

03.05.024 – கடவூர் - படைபோல் வளைக்கும் அஞ்சு - (வண்ணம்)

2007-03-26

3.5.24 - படைபோல் வளைக்கும் அஞ்சு (கடவூர் - திருக்கடவூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தத்த தந்த .. தனதான தத்த தந்த

தனதான தத்த தந்த .. தனதான)

(தனனா தனத்த தந்த .. தனனா தனத்த தந்த

.. தனனா தனத்த தந்த .. தனதான) - என்றும் கருதலாம்;

(கடிமா மலர்க்கு ளின்ப - திருப்புகழ் - சுவாமிமலை)


படைபோல்வ ளைக்கும் அஞ்சு .. புலனாலி ழுக்கில் நின்று

.. .. பழியேபெ ருக்கி வஞ்ச .. மொழிபேசிப்

.. பதரேநி கர்த்த லைந்து .. கழியாது னக்கு வம்பு

.. .. பறையாத சொற்ச ரங்கள் .. இடுவேனோ


விடையேறும் அத்த என்பும் .. அணியான முத்த உம்பர்

.. .. வெருவார உற்ற நஞ்சு .. தனைமேவி

.. மிளிர்நீலம் உற்ற கண்ட .. மலையேவ ளைத்து முன்பு

.. .. விரவார்த(ம்) முப்பு ரங்கள் .. சுடுவோனே


சடைமேலெ ருக்கு கொன்றை .. குரவோட ரப்பு னைந்த

.. .. தனிநாத வெற்பி டந்த .. மதியீனன்

.. தனையோல மிட்ட னுங்க .. விரலால டர்த்த பண்ப

.. .. தவநால்வ ருக்க றங்கள் .. விரிபோதா


கடனாக ணைத்து யின்ற .. கரியான்வ ழுத்த அன்று

.. .. கருதாழி யைப்பு ரந்த .. அருளாளா

.. கடுமாசி னத்த அந்தன் .. விழவேயு தைத்து கந்து

.. .. கடவூரி ருக்கும் எந்தை .. பெருமானே.


பதம் பிரித்து:

படைபோல் வளைக்கும் அஞ்சு புலனால் இழுக்கில் நின்று,

.. .. பழியே பெருக்கி, வஞ்ச மொழி பேசிப்,

.. பதரே நிகர்த்து அலைந்து கழியாது, உனக்கு வம்பு

.. .. பறையாத சொற்சரங்கள் இடுவேனோ?


விடை ஏறும் அத்த; என்பும் அணி ஆன முத்த; உம்பர்

.. .. வெருவு ஆர உற்ற நஞ்சுதனை மேவி,

.. மிளிர்-நீலம் உற்ற கண்ட; மலையே வளைத்து முன்பு

.. .. விரவார்தம் முப்புரங்கள் சுடுவோனே;


சடைமேல் எருக்கு கொன்றை குரவோடு அரப் புனைந்த

.. .. தனி நாத; வெற்பு இடந்த மதியீனன்

.. தனை ஓலமிட்டு அனுங்க விரலால் அடர்த்த பண்ப;

.. .. தவ-நால்வருக்கு அறங்கள் விரி-போதா;


கடல் நாகணைத் துயின்ற கரியான் வழுத்த அன்று

.. .. கருது ஆழியைப் புரந்த அருளாளா;

.. கடு மா சினத்த அந்தன் விழவே உதைத்து, உகந்து

.. .. கடவூர் இருக்கும் எந்தை பெருமானே.


படைபோல் வளைக்கும்ஞ்சு புலனால் இழுக்கில் நின்று பழியே பெருக்கி வஞ்ச மொழி பேசிப் பதரே நிகர்த்து அலைந்து கழியாது - படைபோல் சூழ்ந்து தாக்கும் ஐம்புலன்களால் எப்பொழுதும் இழிவையே புரிந்து பழியையே பெருக்கி, உண்மையற்ற சொல் பேசிப் பதர்போல் பயனின்றி அலைந்து அழியாமல்; (வளைத்தல் - சூழ்தல்); (பதர் - உள்ளீடற்ற நெல்; பயனற்றவன்);

னக்கு வம்பு பறையாத சொற்சரங்கள் இடுவேனோ - உனக்கு மணம் அழியாத சொல்மாலைகளை இட்டு வணங்க அருள்வாயாக; (வம்பு - வாசனை; புதுமை); (பறைதல் - அழிதல்); (சரம் - மாலை);


விடைறும் த்த - இடபவாகனத்தின்மேல் ஏறும் தந்தையே; (அத்தன் - தந்தை);

ன்பும் ணி முத்த - எலும்பும் ஆபரணம் ஆன முத்தனே; (என்பு - எலும்பு); (முத்தன் - முத்திநிலையில் இருப்பவன்);

உம்பர் வெருவு ஆர உற்ற நஞ்சுதனை மேவி மிளிர் நீலம் உற்ற கண்ட - தேவர்கள் மிக அஞ்ச எழுந்த ஆலகால விடத்தை விரும்பி உண்டு ஒளி திகழும் கருமை அடைந்த கண்டத்தை உடையவனே; (உம்பர் - தேவர்); (வெருவு - அச்சம்); (ஆர்தல் - மிகுதல்; அனுபவித்தல்); (உறுதல் - சம்பவித்தல்; மிகுதல்; தங்குதல்);

மலையே வளைத்து முன்பு விரவார்தம் முப்புரங்கள் சுடுவோனே - முன்பு மேருமலையையே வில்லாக வளைத்து, பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே; (விரவார் - பகைவர்);


சடைமேல் எருக்கு கொன்றை குரவோடு அரப் புனைந்த தனி நாத - சடைமீது எருக்கமலர், கொன்றைமலர், குரவமலர், பாம்பு இவற்றையெல்லாம் அணிந்த ஒப்பற்ற தலைவனே; (குரவு - குராமலர்); (அர - பாம்பு); (தனி - ஒப்பின்மை);

வெற்பு இடந்த மதியீனன்தனை லமிட்டு னுங்க விரலால் அடர்த்த பண்ப - கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணன் ஓலமிட்டு வருந்தும்படி அவனை விரலால் நசுக்கிய பண்பனே; (வெற்பு - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (அனுங்குதல் - வருந்துதல்; வாடுதல்);

தவ நால்வருக்கு அறங்கள் விரி போதா - தவமுனிவர்கள் நால்வருக்கு மறைப்பொருளை விளக்கிய ஞானவடிவினனே; (விரித்தல் - விளக்கியுரைத்தல்); (போதன் - ஞானி);


கடல் நாகணைத் துயின்ற கரியான் வழுத்த அன்று கருது ஆழியைப் புரந்த அருளாளா - கடலில் ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயிலும் திருமால் துதித்து வணங்க, இரங்கித் திருமால் விரும்பிய சக்கராயுதத்தை நல்கிய அருளாளனே; (நாகணை - நாக அணை - பாம்புப் படுக்கை); (கரியான் - திருமால்); (கருதுதல் - விரும்புதல்); (ஆழி - சக்கரம்); (புரத்தல் - கொடுத்தல்; அனுக்கிரகித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.31.9 - "நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்");

கடு மா சினத்த அந்தன் விழவேதைத்துகந்து கடவூர் இருக்கும் எந்தை பெருமானே - கொடிய பெருங்கோபம் உடைய காலன் விழுந்து இறக்குமாறு அவனை உதைத்தருளித், திருக்கடவூரில் உறைகின்ற பெருமானே; (சினத்த - சினம் உடைய); (அந்தன் - யமன்); (விழுதல் - கீழே விழுதல்; சாதல்); (எந்தை பெருமான் - என் தந்தைக்கும் பெருமான்); (அப்பர் தேவாரம் - 6.59.8 - "வெஞ்சினத்த வேழமது உரிசெய்தாரும்" - மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும்); (சுந்தரர் தேவாரம் - 7.52.6 - "எண்ணார் தங்கள் எயில்எய்த எந்தாய் எந்தை பெருமானே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment