Sunday, March 11, 2018

04.19 – கஞ்சனூர்


04.19கஞ்சனூர்



2013-11-02
கஞ்சனூர்
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. அந்தாதியாக அமைந்தது;
பாடல்தோறும் ஈற்றடியின் மூன்றாம்சீர் அடுத்த பாடலின் முதற்சீரோடு அந்தாதித்தொடை அமைய மண்டலித்து வரும் 11 பாடல்கள். முதற் பாடல் 'வாராரும்' என்று தொடங்கிப் 11-ஆம் பாடல் 'வார்சடையாய் அடிபோற்றி' என்று நிறைவுறுகின்றது. )
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்")



1)
வாராரும் வனமுலையாள் மலைமங்கை ஒருபங்கா
காராரும் பொழில்சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே
ஓராதார்க் கரியானே ஒளித்தூணே அடியார்தம்
தீராத வினைதீர்க்கும் சிவனேநின் அடிபோற்றி.



வார் - முலைக்கச்சு; ஆர்தல் - பொருந்துதல்; வனமுலை - அழகிய முலை; (அப்பர் தேவாரம் - 6.81.5 - "வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்");
கார் ஆரும் பொழில் சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த கஞ்சனூரில் உறைகின்ற கற்பகமரம் போன்றவனே;
ஓராதார்க்கு அரியானே - எண்ணாதவர்களுக்கு அரியவனே; (ஓர்தல் - தியானித்தல்);
ஒளித்தூண் - எல்லையின்றி நீண்ட சோதி; தாணு;



2)
சிவனேநின் மலனேவெண் திங்களணி செஞ்சடையாய்
கவினாரும் பொழில்சூழ்ந்த கஞ்சனூர்க் கற்பகமே
பவனேமுன் நான்முகனும் பாம்பணைமேல் துயின்றானும்
உவனாரென் றறியாத ஒளித்தூணே அடிபோற்றி.



நின்மலன் - மலமற்றவன்; கவின் - அழகு; பவன் - என்றும் இருப்பவன்; சிவன்; பாம்பணைமேல் துயின்றான் - ஆதிசேஷனாகிய படுக்கையின்மேல் துயிலும் திருமால்; உவன் - முன்நிற்பவன் (He who is yonder); ஆர் - யார்;
(11.39.1 - நம்பியாண்டார் நம்பிகள் - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை -
"காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு ஊழி முதல்வன் உவன் என்று காட்டவலான்"
-- ஊழி முதல்வன் - சிவபெருமான். 'அவன் சுட்டிக் காட்ட ஒண்ணாதவனாயினும் சுட்டிக்காட்ட வல்லவன்' என்க.)



3)
ஒளித்தூணே விரைந்திழிந்த உயர்கங்கை தனைச்சடையில்
ஒளித்தானே ஓர்தலையில் ஊரார்பெய் பலிகொண்டு
களித்தானே கவின்பொழில்சூழ் கஞ்சனூர்க் கற்பகமே
அளித்தானே அமுதுவிடம் ஆர்ந்தானே அடிபோற்றி.



ஒளித்தான், களித்தான், அளித்தான் - ஒளித்தவன், களித்தவன், அளித்தவன்;
பெய்தல் - கலம் முதலியவற்றில் இடுதல்; பலி - பிச்சை;
அளித்தானே அமுது விடம் ஆர்ந்தானே - அமுது அளித்தவனே, விடம் உண்டவனே; (ஆர்தல் - உண்ணுதல்);



4)
ஆர்ந்தவனே அருநஞ்சை அரியயன்நே டொளித்தூணே
சார்ந்தவருக் கன்புடையாய் தலைமீது பாந்தள்வெண்
காந்தளணி கின்றவனே கஞ்சனூர்க் கற்பகமே
சாந்தமென நீறணியும் சங்கரனே அடிபோற்றி.



ஆர்ந்தவனே அருநஞ்சை - அரிய விடத்தை உண்டவனே;
அரியன் நேடு ஒளித்தூணே - திருமாலும் பிரமனும் தேடிய சோதியே; (நேடுதல் - தேடுதல்);
சார்ந்தவருக்கு அன்புடையாய் - அடி அடைந்தவர்களுக்கு அன்பு உடையவனே;
தலைமீது பாந்தள் வெண்காந்தள் அணிகின்றவனே - முடிமேல் பம்பையும் வெண்காந்தள் மலரையும் அணிந்தவனே; (பாந்தள் - பாம்பு ); (வெண் காந்தள் - கோடல்); (ஸம்பந்தர் தேவாரம் - 2.29.9 - "கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல் ஆடரவம் வைத்தருளு மப்பன்" - கோடல் - வெண்காந்தள்;)
கஞ்சனூர்க் கற்பகமே - கஞ்சனூரில் உறைகின்ற கற்பகமே;
சாந்தம் என நீறு அணியும் சங்கரனே - சந்தனம்போல் திருநீற்றைத் தரிக்கும் சங்கரனே;



5)
சங்கரனே சதாசிவனே தடவரைபோல் வந்துபொரு
வெங்கரியை உரிசெய்த வித்தகனே விண்ணிழிந்த
கங்கையடை செஞ்சடையாய் கஞ்சனூர்க் கற்பகமே
பொங்கியெழும் ஒளித்தூணே போதாநின் அடிபோற்றி.



தட வரைபோல் வந்து பொரு வெங்கரியை உரி செய்த - பெரிய மலைபோல் வந்து போர்செய்த கொடிய யானையின் தோலை உரித்த; (உரிசெய்தல் - தோலை உரித்தல்);
வித்தகன் - வல்லவன்; விண்ழிந்த கங்கைடை செஞ்சடையாய் - வானிலிருந்தி கீழே பாய்ந்த கங்கையைச் செஞ்சடையில் அடைத்தவனே; போதன் - ஞானன்;



6)
போதாரும் சடையானே புகழ்பாடு சுந்தரர்க்காத்
தூதேகும் தோழாமால் தொழுதேத்தும் ஒளித்தூணே
காதோர்வெண் குழையானே கஞ்சனூர்க் கற்பகமே
யாதோரொப் பில்லாத அற்புதனே அடிபோற்றி.



போது ஆரும் சடையானே - மலர்களைச் சடையில் அணிந்தவனே; புகழ்பாடு சுந்தரர்க்காத் தூது ஏகும் தோழா - பாமாலைகள் பாடிய சுந்தரருக்காகத் (திருவாரூரில் பரவை மனைக்குத்) தூது செல்லும் தோழனே; மால் தொழுதேத்தும் ஒளித்தூணே - திருமால் வணங்கிய சோதியே; காது ஓர் வெண் குழையானே - ஒரு காதில் வெண்குழையை அணிந்தவனே; (அர்தநாரீஸ்வரன்); யாது ஓர் ஒப்பு இல்லாத - எவ்வித ஒப்பும் இல்லாத;



7)
அற்புதனே அயன்மாலும் அறியாத ஒளித்தூணே
வெற்புதனை வில்லாக்கி வியனரணம் எய்தவனே
கற்பனையைக் கடந்துநிற்கும் கஞ்சனூர்க் கற்பகமே
மற்புயமெட் டுடையானே மணிகண்டா அடிபோற்றி.



வெற்புதனை - மலையை; வியன் அரணம் - பெரிய மதில்கள் - முப்புரங்கள்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.5.1 - "... வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி ...");
கற்பனை - அறிவு; (பெரிய புராணம் - தில்லைவாழந்தணர் புராணம் - "கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி"); மற்புயம் எட்டு - வலிமை மிக்க எட்டுப் புயங்கள்; (மல் - வலிமை; புயம் - தோள்); மணிகண்டன் - நீலகண்டன்;



8)
மணிகண்டா மலரவன்மால் வணங்கநின்ற ஒளித்தூணே
அணிகுன்றின் அடியரக்கன் அழநெரித்தாய் வெண்திங்கட்
கணியொன்று புனைவோனே கஞ்சனூர்க் கற்பகமே
பணிகண்டு பார்த்தற்குப் படையீந்தாய் அடிபோற்றி.



மலரவன் - பூமேல் உறையும் பிரமன்; அணி குன்று - அழகிய மலை - கயிலைமலை;
கணி - கண்ணி என்பதன் இடைக்குறை விகாரம்; கண்ணி - தலையில் அணியும் மாலைவகை; (சம்பந்தர் தேவாரம் - 2.18.5 - "... கணிநீலவண்டார் குழலாள் இவள்தன் ..." - "this lady on whose tresses of hair black bees hum in the chaplets" - கணி -- கண்ணி : chaplet worn on the head - Translation: V.M.Subramanya Ayyar);
பணி கண்டு பார்த்தற்குப் படை ஈந்தாய் - அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்குப் பாசுபதாஸ்திரம் அளித்தவனே; (அப்பர் தேவாரம் - 6.19.11 - "... பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப் ...");



9)
படைப்பவனே முடிவிலெலாம் துடைப்பவனே மாலயனார்
இடைப்பெருகும் ஒளித்தூணே இடுமினென் றேந்திழையார்
கடைப்பலிக்கு நடப்பவனே கஞ்சனூர்க் கற்பகமே
சடைப்புனித கங்கையெனும் சலமுடையாய் அடிபோற்றி.



துடைத்தல் - ஒடுக்குதல்; பெருகுதல் - வளர்தல் (To grow); அளவுமிகுதல்;
இடுமின் என்று ஏந்திழையார் கடைப் பலிக்கு நடப்பவனே - 'இடுங்கள்' என்று பெண்களிடம் பிச்சை ஏற்க நடப்பவனே; (கடை - வாயில்; ஏழாம் வேற்றுமை உருபு) ;('இடுங்கள்' என்று பெண்கள் இருக்கும் இல்லங்களின் வாயிலுக்கு நடப்பவனே - என்றும் பொருள்கொள்ளலாம்);
சடைப் புனித கங்கையெனும் சலமுடையாய் - சடையில் தூய கங்கை என்ற ஆற்றை உடையவனே; ("சடையை உடைய புனிதனே; கங்கையென்ற நதியை அணிந்தவனே;" என்றும் பொருள்கொள்ளலாம்);
சலம் - ஜலம் - நீர்;



10)
சலமுடைய சொல்லுரைத்தல் தவமாக்கொள் சழக்கருக்கு
நலமிலனே நான்முகன்மால் நடுவெழுந்த ஒளித்தூணே
கலமுடையார் தலையுடையாய் கஞ்சனூர்க் கற்பகமே
வலமுடையாய் மாதுதிகழ் வாமத்தாய் அடிபோற்றி.



சலம் - வஞ்சனை; பொய்ம்மை; தவமாக்கொள் - தவமாகக் கொள்கின்ற; சழக்கருக்கு - தீயவர்களுக்கு; நலம் இலனே - நலம் இல்லாதவனே - நன்மையைக் கொடாதவனே; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலமிலன்...");
கலம் முடை ஆர் தலை உடையாய் - பிச்சைப்)பாத்திரமாகப் புலால் நாறும் மண்டையோட்டை உடையவனே; வலம் - வெற்றி; வலிமை; வலப்பக்கம்; மாது திகழ் வாமத்தாய் - உமையம்மையை இடப்பக்கத்தில் உடையவனே; (வாமம் - இடப்பக்கம்);



11)
வாமத்துக் காலெடுத்த மாநடனே கடல்கடைய
ஓர்மத்தைத் தாங்கியவன் அயனறியா ஒளித்தூணே
காமுத்தா எனிலருளும் கஞ்சனூர்க் கற்பகமே
மாமத்த மலரணிந்த வார்சடையாய் அடிபோற்றி.



வாமத்துக் கால் எடுத்த மாநடனே - இடது காலை உயர்த்தி ஆடும் நடராஜனே; (வாமம் - இடது பக்கம்); (எடுத்தல் - உயர்த்துதல்); (நடன் - கூத்தன்);
கடல் கடைய ஓர் மத்தைத் தாங்கியவன் அயன் அறியா ஒளித்தூணே - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலில் மந்தரமலையை மத்தாக நட்டுக் கடைந்தபோது, அந்த மத்தை ஆமை வடிவில் சென்று தாங்கிய திருமாலும் பிரமனும் அறியாத ஒளித்தூணாக நினறவனே;
"கா முத்தா" எனில் அருளும் கஞ்சனூர்க் கற்பகமே - "காக்கின்ற முக்தனே / காத்தருளாய் முக்தனே" என்று வேண்டினால் அருள்கின்றவனே, கஞ்சனூரில் உறைகின்ற, கற்பகமரம் ஒத்தவனே; (முத்தன் - [இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்] சிவபிரான்);
மா மத்த மலர் அணிந்த வார்சடையாய் அடிபோற்றி - அழகிய ஊமத்த மலரை அணிந்த, நீண்ட சடை உடையவனே, உன் திருவடிகளுக்கு வணக்கம்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=907



----------- --------------

No comments:

Post a Comment