Sunday, March 11, 2018

04.13 – கற்குடி - (உய்யக்கொண்டான்மலை)


04.13ற்குடி - (உய்யக்கொண்டான்மலை)



2013-10-05
கற்குடி (இக்காலத்தில் 'உய்யக்கொண்டான்மலை').
----------------------------------
(வஞ்சித்துறை - 'மா கூவிளம்' - என்ற வாய்பாடு. திருவிருக்குக்குறள் அமைப்பு )
(சம்பந்தர் தேவாரம் - திருவிருக்குக்குறள் - 1.96.1 - "மன்னி யூரிறை சென்னி யார்பிறை")



1)
நகர்மூன் றட்டவன்
முகிலார் கற்குடி
அகலான் தாளிணை
புகழ்வார்க் கின்பமே.



நகர் மூன்று அட்டவன் - முப்புரங்களை அழித்தவன்; (அடுதல் - அழித்தல்;)
முகில் ஆர் கற்குடி அகலான் - மேகம் பொருந்தும் கற்குடி மலையில் நீங்காது உறைகின்றவன்;
தாளிணை புகழ்வார்க்கு இன்பமே - அப்பெருமான் இணையடியைப் புகழும் பக்தர்களுக்கு என்றும் இன்பமே.



2)
மத்தம் சூடிய
பித்தன் கற்குடி
அத்தன் தாள்தொழும்
பத்தர்க் கின்பமே.



மத்தம் - ஊமத்த மலர்;
பித்தன் - பேரருளாளன்; சிவன் திருநாமங்களுள் ஒன்று;
அத்தன் - தந்தை;



3)
பெண்ணும் ஆயமுக்
கண்ணன் கற்குடி
அண்ணல் தாள்தொழ
நண்ணும் இன்பமே.



பெண்ணும் ஆய முக்கண்ணன் - பெண்ணும் ஆகியவன், நெற்றிக்கண்ணன்;
தாள்தொழ நண்ணும் இன்பமே - 1) தாளைத் தொழுதால் இன்பம் நம்மை நண்ணும்; 2) தாளைத் தொழ நீங்கள் நண்ணுங்கள், இன்பமே விளையும்; (நண்ணும் - அடையும்; கிட்டும்; பொருந்தும்);



4)
ஐயன் ஆரழற்
கையன் கற்குடி
மெய்யன் தாள்தொழ
உய்யல் ஆகுமே.



ஆர் அழற் கையன் - கையில் தீயை ஏந்தியவன்;
மெய்யன் - பெய்ப்பொருள் ஆனவன்;
உய்யல் ஆகும் - உய்தி அடையலாம்; கடைத்தேறலாம்;



5)
அண்டன் நஞ்சணி
கண்டன் கற்குடி
கண்டு கைதொழ
மண்டும் இன்பமே.



அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்;
மண்டுதல் - மிகுதல்;



6)
கால னைச்செறு
காலன் கற்குடிச்
சூலன் தாள்தொழல்
சீலர் செய்கையே.



காலனைச் செறு காலன் - காலகாலன்; (செறுதல் - அழித்தல்);
(அப்பர் தேவாரம் - 4.71.6 - ".... காலற் காய்ந்த காலனை ...." - காலனைச் சினந்து உதைத்த காலனை);



7)
மங்கை பங்கினன்
தங்கு கற்குடி
தங்கை யாற்றொழப்
பொங்கும் இன்பமே.



தம் கையால் தொழ - தங்கள் கைகளால் தொழும் பக்தர்களுக்கு;



8)
மடவ ரக்கனைப்
படவ டர்த்தருள்
கடவுள் கற்குடி
அடைய இன்பமே.



அறிவற்ற இராவணன் துன்பப்படும்படி அவனை (மலைக்கீழ்) நசுக்கி அருளிய கடவுள் உறையும் திருக்கற்குடியை அடைந்து தொழுவார்க்கு இன்பமே.



9)
அயன்மால் நேடெரி
கயமார் வேணியன்
புயலார் கற்குடி
துயர்நோய் தீர்க்குமே.



அயன் மால் நேடு எரி - பிரமனும் திருமாலும் தேடிய சோதி;
கயம் ஆர் வேணியன் - கங்கை பொருந்திய சடையினன்; (கயம் - நீர்நிலை); (சுந்தரர் தேவாரம் - 7.28.9 - "...கயமாரும் சடையாய்...");
புயல் ஆர் கற்குடி - மேகம் பொருந்தும் கற்குடி;
துயர் நோய் தீர்க்கும் - துயரையும் நோயையும் தீர்க்கும்;



10)
பிட்டர் சொல்விடும்
நட்டன் கற்குடி
இட்ட மாய்த்தொழக்
கட்டம் இல்லையே.



பிட்டர் சொல் விடும் - கீழோர் சொற்களை நீர் மதிக்கவேண்டா; (பிட்டர் - பிரஷ்டர்; பிரஷ்டம் - இழிவு);
நட்டன் - கூத்தன்;
இட்டம் - அன்பு;
கட்டம் - கஷ்டம்;



11)
அணியன் ஊட்டியில்
மணியன் கற்குடி
பணிய வல்லவர்
பிணிகள் தீர்வரே.



அணியன் - அருகே இருப்பவன்;
ஊட்டியில் மணியன் - நீலகண்டன்; (ஊட்டி - மிடறு; கண்டம்; மணி - நீலமணி);
(ஊட்டி என்ற சொற்பிரயோகத்தைப் பெரியபுராணத்தில் அரிவாட்டாய நாயனார் புராணத்திற் காணலாம். - "....கழுத்தி னோடே ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவார் ஒத்தார்");
பிணி - பந்தம்; நோய்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) கற்குடி - திருக்கற்குடி - இக்காலத்தில் 'உய்யக்கொண்டான்மலை ' என்ற பெயரில் வழங்குகின்றது. இத்தலம் திருச்சிராப்பள்ளி அருகே உள்ளது - உஜ்ஜீவநாதர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=154



----------- --------------

No comments:

Post a Comment