04.16 - அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - சுண்ண நீற்றன்
2013-10-09
அரதைப் பெரும்பாழி (இக்காலத்தில் - அரித்துவாரமங்கலம்)
----------------------------------
(கலிவிருத்தம் - மா தேமா புளிமா புளிமாங்காய் - வாய்பாடு);
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைகள் அவைபோக")
1)
சுண்ண நீற்றன் சுடலை தனிலாடி
கண்ணில் தீயன் கடலின் விடமுண்ட
அண்ணல் மேவும் அரதைப் பெரும்பாழி
நண்ணு வாரை நலியா வினைதானே.
சுண்ண நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்;
சுடலைதனில் ஆடி - இடுகாட்டில் ஆடுபவன்;
கண்ணில் தீயன் - கண்ணில் நெருப்பை உடையவன்;
கடலின் விடம் உண்ட அண்ணல் - ஆலகாலத்தை உண்ட பெருமான்;
மேவும் அரதைப் பெரும்பாழி நண்ணுவாரை நலியா வினைதானே - அப்பெருமான் உறையும் அரதைப்பெரும்பாழியை (அரித்துவாரமங்கலத்தை) அடைந்து தொழும் பக்தர்களை வினைகள் வருத்தமாட்டா;
2)
தையல் பங்கன் சலம்வெண் மதியோடு
பைகொள் பாம்பைப் படர்செஞ் சடைவைத்த
ஐயன் மேவும் அரதைப் பெரும்பாழி
கைகள் கூப்பித் தொழுவார் கவலாரே.
தையல் பங்கன் - உமைபங்கன்;
சலம் வெண் மதியோடு பைகொள் பாம்பைப் படர் செஞ்சடை வைத்த ஐயன் - கங்கை, வெண்திங்கள் இவற்றோடு படம் உடைய பாம்பையும் படரும் சடைமேல் சூடிய தலைவன்;
மேவும் அரதைப் பெரும்பாழி கைகள் கூப்பித் தொழுவார் கவலார் - அப்பெருமான் உறையும் அரதைப்பெரும்பாழியை (அரித்துவாரமங்கலத்தை) அடைந்து கைகூப்பித் தொழும் பக்தர்கள் மனம் வருந்தமாட்டார்கள் (= கவலை தீரும்); (கவல்தல் - மனம்வருந்துதல்);
3)
நீறு பூசி நிழலார் மழுவாளன்
ஏற தேறும் இறைவன் இருங்கங்கை
ஆறு சூடி அரதைப் பெரும்பாழி
கூறு வார்க்குக் குறையில் நிலைதானே.
நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்;
நிழல் ஆர் மழுவாளன் - ஒளி வீசும் மழுவை ஏந்தியவன்;
ஏறுஅது ஏறும் இறைவன் - இடபவாகனன்;
இரும்-கங்கை ஆறு சூடி - பெரிய கங்கையாற்றைச் சூடியவன்;
அரதைப் பெரும்பாழி கூறுவார்க்குக் குறை இல் நிலைதானே - அரதைப்பெரும்பாழியை (அரித்துவாரமங்கலத்தை) ஏத்தும் பக்தர்களது குறைகள் தீரும்;
4)
மஞ்சு லாவும் மலையான் மகள்பங்கன்
அஞ்சி வந்த அமரர்க்(கு) அருள்கண்டன்
அஞ்சு ரும்பார் அரதைப் பெரும்பாழி
நெஞ்சில் வைத்தார்க்(கு) இடரில் நிலைதானே
மஞ்சு உலாவும் மலையான் மகள் பங்கன் - மேகம் உலவும் இமயமலைக்கு மன்னன் மகளான பார்வதியை ஒரு பங்கில் உடையவன்;
அஞ்சி வந்த அமரர்க்கு அருள் கண்டன் - தேவர்களுக்கு அபயம் அளித்த நீலகண்டன்;
அஞ்சுரும்பார் - அம் சுரும்பு ஆர் - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற;
இடர் இல் நிலை - துன்பம் இல்லாத நிலை;
5)
குரவம் கொன்றை குளிர்வெண் பிறைசூடும்
குரவன் ஏற்றுக் கொடியன் அரைநாணா
அரவம் ஆர்த்தான் அரதைப் பெரும்பாழி
பரவ வீடும் பழைய வினைதானே.
குரவம் - குராமலர்; குரவன் - குரு; ஆசிரியன்; தலைவன்; ஏற்றுக் கொடியன் - இடபக்கொடி உடையவன்; அரைநாணா அரவம் ஆர்த்தான் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவன்; பரவுதல் - புகழ்தல்; வீடும் - அழியும்;
6)
காலன் மாளக் கழலால் உதைபெம்மான்
சூல பாணி தொழுத சுரருக்கா
ஆலம் உண்டான் அரதைப் பெரும்பாழிச்
சீலன் நாமம் தினமும் நினைநெஞ்சே.
சுரருக்கா ஆலம் உண்டான் - தேவர்களுக்காக ஆலகாலத்தை உண்டவன்;
7)
கத்து கின்ற கடலின் விடமுண்ட
பித்தன் அத்தி பிளிற உரிசெய்த
அத்தன் மேவும் அரதைப் பெரும்பாழி
பத்தி யோடு பரவத் திருவாமே.
அத்தி பிளிற உரிசெய்த அத்தன் - யானை பிளிற அதன் தோலை உரித்தவன், நம் தந்தை;
8)
பன்றிக் கொம்பை அணியும் பரமேட்டி
குன்றி டந்தான் குலையார் முடிபத்தும்
அன்ற டர்த்தார் அரதைப் பெரும்பாழிச்
சென்று போற்றச் சிதையும் வினைதானே.
பன்றிக் கொம்பை அணியும் பரமேட்டி - திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அணிந்தவன். (* இதனை இத்தலவரலாற்றில் காண்க). (சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "கேழல்-வெண்கொம்பு அணிந்த பெம்மான்"); (பரமேட்டி - பரம்பொருள்);
குன்று இடந்தான் குலை ஆர் முடி பத்தும் அன்று அடர்த்தார் - கயிலையைப் பெயர்த்த இராவணனின் குலை போல் இருக்கும் பத்துத் தலைகளையும் அன்று நெரித்தவர்;
அரதைப் பெரும்பாழிச் சென்று போற்ற - அரதைப் பெரும்பாழியிற் சென்று வழிபட்டால்; (இலக்கணக் குறிப்பு: ஏழாம் வேற்றுமைத்தொகையில் பொதுவாக வலி மிகும்);
சிதையும் வினைதானே - வினைகள் அழியும்; (சிதைதல் - அழிதல்);
9)
கொண்டல் வண்ணன் குளிர்தா மரைமேலான்
பண்டு தேடிப் பரவு சுடரானை
அண்டர் கோனை அரதைப் பெரும்பாழிக்
கண்டு போற்றக் கழலும் வினைதானே.
கொண்டல் வண்ணன் - மேகவண்ணன் - திருமாலும்;
குளிர் தாமரை மேலான் - குளிர்ந்த தாமரைமேல் இருப்பவன் - பிரமனும்;
பண்டு தேடிப் பரவு சுடரானை - முன்பு அடிமுடி தேடிக் காணாராய்த் துதித்த ஜோதியை; (பரவுதல் - துதித்தல்; புகழ்தல்);
அண்டர் கோனை - தேவர்கள் தலைவனை;
அரதைப் பெரும்பாழிக் கண்டு போற்ற - அரதைப் பெரும்பாழியிற் கண்டு தொழ;
கழலும் வினைதானே - வினைகள் நீங்கும்; (கழல்தல் - நீங்குதல்);
10)
கட்டு ரைக்கும் கயவர் அவர்சொல்லை
விட்டு வம்மின் மிகவும் நலமாமே
அட்ட மூர்த்தி அரதைப் பெரும்பாழி
நட்டன் நாமம் நவிலும் அடியார்க்கே.
கட்டுரைக்கும் கயவர் அவர்சொல்லை விட்டு வம்மின் - பொய்யுரை பேசும் கீழோர் பேச்சை மதியாது நீங்கி வாருங்கள்; (கட்டு - பொய்யுரை); (சம்பந்தர் தேவாரம் - 2.119.10 - "உறிதூக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழிகொள்ளலும்");
மிகவும் நலம் ஆமே - இச்சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம். ("....விட்டு வம்மின் மிகவும் நலமாமே"; "மிகவும் நலமாமே .... நாமம் நவிலும் அடியார்க்கே");
அட்டமுர்த்தி - அஷ்டமூர்த்தம் உடையவன்; நட்டன் - நடம் செய்பவன்; நவில்தல் - சொல்லுதல்;
11)
மாவி டத்தை மணியா அணியீசன்
ஏவி டுத்தவ் வெயில்கள் எரிசெய்தான்
ஆவி ருப்பன் அரதைப் பெரும்பாழிச்
சேவிப் பார்க்குத் திருவார் நிலைதானே.
மா விடத்தை மணியா அணி ஈசன் - பெரிய நஞ்சை நீலமணியாகக் கண்டத்தில் அணியும் இறைவன்;
ஏ விடுத்து அவ்-எயில்கள் எரிசெய்தான் - அம்பைச் செலுத்தி அந்த முப்புரங்களை எரித்தவன்; (ஏ – அம்பு); (விடுத்தல் - பிரயோகித்தல்); (எயில் - கோட்டை);
ஆவிருப்பன் - இடபத்தை ஊர்தியாக விரும்பியவன் (ஆ விருப்பன்); இடபத்தின்மேல் வீற்றிருப்பவன் (ஆ இருப்பன்); (ஆ - இடபம்; பசு); (இருத்தல் - வீற்றிருத்தல்);
அரதைப் பெரும்பாழிச் சேவிப்பார்க்குத் திரு ஆர் நிலைதானே - அரதைப் பெரும்பாழியில் வணங்குபவர்க்குச் செல்வம் (/நன்மை) நிறையும் நிலை ஆகும். (சேவித்தல் - வணங்குதல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);
பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம் - மா தேமா புளிமா புளிமாங்காய் - என்ற வாய்பாடு;
இந்த வாய்பாட்டு அமைப்பால், 2-3-4 சீர்களிடையே வெண்டளை அமையும். கட்டளை அடிகளும் அமையும்.
இவ்வமைப்புச் சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைகள் அவைபோக" - என்று தொடங்கும் திருப்புன்கூர்ப் பதிகப் பாடல்களின் அமைப்பை ஒத்தது.
(அப்பர் தேவாரத்தில் உள்ள திருக்குறுந்தொகைப் பாடல்களில் 2-3-4 சீர்களிடையே வெண்டளையும் கட்டளை அடிகளும் அமையுமாயினும் அவற்றில் 2-3-4 சீர்கள் வேறு அமைப்புகளிலும் அமையக் காணலாம்).
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment