Sunday, March 11, 2018

04.15 - குடவாயில் (குடவாசல்) - பாலற்கொலை செய்யப்படு

04.15 - குடவாயில் (குடவாசல்) - பாலற்கொலை செய்யப்படு

2013-10-07

குடவாயில் (இக்கால வழக்கில் - குடவாசல்)

---------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.12.1 - "மத்தாவரை நிறுவிக்கடல்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

பாலற்கொலை செய்யப்படு வேகத்தொடு பாய்ந்த

காலற்கொரு கூற்றாகிய காலன்கரி காடன்

பாலைத்துறை நல்லூர்அணி பட்டீச்சரம் மேயான்

கோலப்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.


பாலன் கொலைசெய்யப் படு வேகத்தொடு பாய்ந்த காலற்கு ஒரு கூற்று ஆகிய காலன் - மார்க்கண்டேயரைக் கொல்வதற்காக மிகுந்த கோபத்தோடு மிக விரைந்து அவர்மேல் பாய்ந்த காலனுக்கே ஒரு காலன் ஆகிய காலினை (திருவடியை) உடையவன்; (இலக்கணக் குறிப்பு : பாலற்கொலைசெய்ய - பாலனைக் கொலைசெய்ய; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் முதற்சொல்லின் ஈற்றில் உள்ள "ன்" ஒற்று "ற்" என்று திரியும்);

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;

பாலைத்துறை, நல்லூர், அணி பட்டீச்சரம் மேயான் - திருப்பாலைத்துறை, திருநல்லூர், அழகிய பட்டீஸ்வரம் என்ற தலங்களில் உறைபவன்;

கோலப் பொழில் சூழும் குடவாயில் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்குடவாயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். (அப்பெருமானைத் தொழுவோம்);


2)

எயிலாரழல் சேரக்கணை எய்தானெரு தேறி

அயிலார்திரி சூலன்புனல் ஆருஞ்சடை அண்ணல்

மயிலாருமை மங்கைக்கொரு பங்கைத்தர வல்லான்

குயிலார்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.


எயில் ஆரழல் சேரக் கணை எய்தான் - முப்புரங்கள் தீப்புகக் கணையை எய்தவன்;

எருதேறி - இடபவாகனன்;

அயில் ஆர் திரிசூலன் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன்;

புனல் ஆரும் சடை அண்ணல் - கங்கையைச் சடையில் உடைய தலைவன்;

மயில் ஆர் உமை மங்கைக்கு ஒரு பங்கைத் தர வல்லான் - மயில் போன்ற உமைக்கு இடப்பக்கத்தைத் தந்தவன்; (ஆர்தல் - ஒத்தல்);

குயில் ஆர் பொழில் சூழும் குடவாயிற் பெருமானே - குயில்கள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்; (ஆர்த்தல் - ஒலித்தல்);


3)

பார்த்தன்படை வேண்டிப்பணி பாந்தட்சடை அண்ணல்

ஓத்தின்பொருள் ஆனானொரு நால்வர்க்குரை பட்டன்

தீர்த்தன்திரு நீற்றன்சிவ லோகன்முடி வில்லாக்

கூத்தன்குளிர் சோலைக்குட வாயிற்பெரு மானே.


பார்த்தன் படை வேண்டிப் பணி பாந்தட்சடை அண்ணல் - அருச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி வழிபாடு செய்த, சடையில் பாம்பை உடைய தலைவன்; (பாந்தள் - பாம்பு);

ஓத்தின் பொருள் ஆனான் - வேதத்தின் பொருள் ஆனவன்; (ஓத்து - வேதம்);

ஒரு நால்வர்க்கு உரை பட்டன் - சனகாதியர்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (பட்டன் - வேதத்தில் வல்லவன்; ஆசாரியன்);

தீர்த்தன், திருநீற்றன், சிவலோகன் - தூயன், திருநீற்றைப் பூசியவன், சிவலோகத்தில் இருப்பவன்;

முடிவு இல்லாக் கூத்தன் - என்றும் திருக்கூத்துச் செய்பவன்;

குளிர்-சோலைக் குடவாயில் பெருமானே - குளிர்ந்த சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


4)

தளமோங்கிய பூமாலைகள் சாத்தித்தொழு வார்க்கு

வளமோங்கிட வாரித்தரும் வள்ளல்கடல் நஞ்சைக்

களமாங்கொரு காரார்மணி செய்தான்கரு வண்டார்

குளிர்பூம்பொழில் சூழுங்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

தளம் ஓங்கிய பூமாலைகள் சாத்தித் தொழுவார்க்கு

வளம் ஓங்கிட வாரித் தரும் வள்ளல்; கடல் நஞ்சைக்

களம் ஆங்கு ஒரு கார் ஆர் மணி செய்தான்; கரு வண்டு ஆர்

குளிர் பூம் பொழில் சூழும் குடவாயிற் பெருமானே.


தளம் ஓங்கிய பூமாலைகள் சாத்தித் தொழுவார்க்கு வளம் ஓங்கிட வாரித் தரும் வள்ளல் - இலைகளும் (வில்வம், வன்னி) உயர்ந்த பூக்களும் தொடுக்கப்பெற்ற மாலைகள் அணிவித்து வணங்கும் பக்தர்களுக்கு வளம் பெருக வரங்களை அள்ளித் தரும் வள்ளல்; (தளம் - இலை; பூவிதழ்); (தளம் ஓங்கிய பூமாலைகள் - சிறந்த இதழ்களையுடைய பூக்களால் தொடுத்த மாலைகள் - என்றும் பொருள்கொள்ளலாம்); (சம்பந்தர் தேவாரம் - 2.98.2 - "அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம் தொடுத்துடன் சடைப்பெய்தாய்"); (சாத்துதல் - அணிதல்; அலங்கரித்தல்);

களம் ஆங்கு ஒரு கார் ஆர் மணி செய்தான் - கண்டத்தில் ஒரு கரிய மணி வைத்தவன்; (களம் - கண்டம்); (ஆங்கு - அவ்விடம்; ஏழனுருபு);

கரு வண்டு ஆர் குளிர் பூம் பொழில் சூழும் குடவாயில் பெருமானே - கருவண்டுகள் ரீங்காரம் செய்யும் குளிர்ந்த அழகிய சோலை சூழ்ந்த குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


5)

நஞ்சத்தினை உண்ணத்தரு வஞ்சச்சமண் ஆதர்

அஞ்சத்தமிழ் பாடிப்பணி அப்பர்க்கருள் அண்ணல்

வஞ்சிக்கொரு பங்கைத்தரும் மைந்தன்மழு வாளன்

குஞ்சிப்பிறை கொண்டான்குட வாயிற்பெரு மானே.


நஞ்சத்தினை உண்ணத் தரு வஞ்சச் சமண் ஆதர் அஞ்சத், தமிழ் பாடிப் பணி அப்பர்க்கு அருள் அண்ணல் - விடத்தை உண்பித்த வஞ்சகம் மிக்க சமணர்கள் அஞ்சும்படி தேவாரம் பாடி வணங்கிய திருநாவுக்கரசருக்கு அருளிய தலைவன்;; (ஆதர் - குருடர்; அறிவிலிகள்); ( தமிழ் - தேவாரம்); (அப்பர் - திருநாவுக்கரசர்);

வஞ்சிக்கு ஒரு பங்கைத் தரும் மைந்தன் - உமைபங்கன்; (வஞ்சி - பெண்); (மைந்தன் - கணவன்; இளைஞன்; வீரன்);

மழுவாளன் - மழு ஏந்தியவன்;

குஞ்சிப் பிறை கொண்டான் - சென்னியில் பிறையை அணிந்தவன்; (குஞ்சி - தலை); (இலக்கணக் குறிப்பு : ஏழாம்வேற்றுமைத்தொகையில் வரும் வலி மிகும்);

குடவாயில் பெருமானே - குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


6)

பாரார்தொழும் ஈசன்பணி பத்தர்க்கிடர் தீர்ப்பான்

ஏரார்மணி கண்டந்திகழ் எம்மானிள நாகம்

நீரார்சடை மேலேநில வொன்றுந்நிலை செய்தான்

கூரார்மழு வாளன்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

பாரார் தொழும் ஈசன்; பணி பத்தர்க்கு இடர் தீர்ப்பான்;

ஏர் ஆர் மணி கண்டம் திகழ் எம்மான்; இள நாகம்,

நீர் ஆர் சடை மேலே நிலவு ஒன்றும் நிலை செய்தான்;

கூர் ஆர் மழுவாளன்; குடவாயிற் பெருமானே.


பாரார் - உலகத்தார்; (அப்பர் தேவாரம் - 6.22.1 - "பாரார் பரவும் பழனத்தானைப்"); ஏர் - அழகு; ஒன்றுந்நிலை - ஒன்றும் நிலை - ஓசை கருதி நகர ஒற்று விரித்தல் விகாரம்; இள நாகம், நீர் ஆர் சடை மேலே நிலவு ஒன்றும் நிலை செய்தான் - கங்கை பொருந்திய சடைமேல் பாம்பும் சந்திரனும் சேர்ந்து இருக்குமாறு செய்தவன்;


7)

வேதத்தினன் வெண்ணூலணி மார்பன்விடை யேறி

போதைக்கழல் இட்டுப்புகழ் வார்க்குப்புகல் ஆகி

வாதைக்கிடம் ஆம்பூமிசை வாராநிலை வைத்தான்

கோதைக்கிடம் ஈந்தான்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

வேதத்தினன்; வெண்ணூல் அணி மார்பன்; விடையேறி;

போதைக் கழல் இட்டுப் புகழ்வார்க்குப் புகல் ஆகி,

வாதைக்கு இடம் ஆம் பூமிசை வாரா நிலை வைத்தான்;

கோதைக்கு இடம் ஈந்தான்; குடவாயிற் பெருமானே.


விடையேறி - இடபவாகனன்; போது - பூ; மலர்; புகல் ஆகி - பற்றுக்கோடு ஆகி; வாதை - துன்பம்; பூமிசை வாரா நிலை - பூமியின்மேல் பிறவாத நன்னிலை; கோதை - பெண்;


8)

அமரொன்றிலன் மலைபேர்புயம் ஐந்நான்கிற ஊன்றிக்

கமைகொண்டொரு வாளும்தரும் ஈசன்கழ லாலே

நமனெஞ்சினில் அன்றெற்றிய நம்பன்மிக நல்லன்

குமைநஞ்சினை உண்டான்குட வாயிற்பெரு மானே.


அமர் ஒன்று இலன் மலை பேர்-புயம் ஐந்நான்கு இஊன்றிக், கமைகொண்டு ஒரு வாளும் தரும் ஈசன் - தன்னை எவரும் எதிர்த்துப் போர் செய்யாத பெரும் வலிமை உடையவனும், சிறிதும் அன்பு இல்லாதவனுமான இராவணன் கயிலையைப் பெயர்த்தபொழுது அவனது இருபது புஜங்களும் நசுங்குமடி திருப்பாத விரலை ஊன்றி நசுக்கிப், பின் அவன் இறைஞ்ச இரங்கி, அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாலையும் அருளிய ஈசன்; (அமர் - யுத்தம்; சண்டை; விருப்பம்); (ஒன்று - ஒன்றும்; உம் தொக்கது); (கமை - அருள்);(சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே");

கழலாலே நமன் நெஞ்சினில் அன்று எற்றிய நம்பன் - கழல் அணிந்த திருவடியால் இயம மார்பில் உதைத்தவன்; (எற்றுதல் - உதைத்தல்); (நம்பன் - விரும்பத்தக்கவன்);

மிக நல்லன் - மிகவும் நல்லவன்;

குமை நஞ்சினை உண்டான் - கொல்லும் விடத்தை உண்டவன்; (குமைத்தல் - கொல்லுதல்);

குடவாயில் பெருமானே - குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


9)

இடிபோலொலி ஏற்றின்மிசை ஏறும்பர மேட்டி

துடிபோலிடை மாதோர்புடை ஏற்றான்துணை இல்லான்

அடிமாலலர் மேலான்முடி காணாவழல் ஆனான்

கொடிமேல்விடை கொண்டான்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

இடிபோல் ஒலி ஏற்றின்மிசை ஏறும் பரமேட்டி;

துடிபோல் இடை மாது ஓர் புடை ஏற்றான்; துணை இல்லான்;

அடி மால், அலர் மேலான் முடி காணா அழல் ஆனான்;

கொடிமேல் விடை கொண்டான்; குடவாயிற் பெருமானே.


பரமேட்டி - பரம்பொருள் - சிவன்; துடி - உடுக்கை; புடை - பக்கம்; துணை - ஒப்பு; அடி மால், அலர் மேலான் முடி காணா அழல் - திருமாலால் அடியும், பூமேல் இருக்கும் பிரமனால் முடியும் காண இயலாதபடி உயர்ந்த ஜோதி;


10)

ஈனத்தினை என்றுந்தவம் என்றேபுரி எத்தர்

வானத்தினை நண்ணாரவர் வாக்கிற்பொருள் இல்லை

தேனொத்தவன் அன்பர்க்கருள் தேவன்சடை மீது

கூனற்பிறை கொண்டான்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

ஈனத்தினை என்றும் தவம் என்றே புரி எத்தர்,

வானத்தினை நண்ணார், அவர் வாக்கில் பொருள் இல்லை;

தேன் ஒத்தவன் அன்பர்க்கு அருள் தேவன்; சடை-மீது

கூனல்-பிறை கொண்டான்; குடவாயில் பெருமானே.


எத்தர் - வஞ்சகர்; நண்ணார் - அடையமாட்டார்; கூனல்-பிறை - வளைந்த பிறைச்சந்திரன்; (கூனல் - வளைவு);


11)

ஏற்றைக்கொடி மேலேற்றிய எம்மான்அலை ஆர்ந்த

ஆற்றைப்பனி வெண்டிங்களை அஞ்செஞ்சடை ஏற்றான்

நீற்றைப்புனை நெற்றிப்பரன் நேயர்க்கரண் ஆகிக்

கூற்றைக்குமை காலன்குட வாயிற்பெரு மானே.


பதம் பிரித்து:

ஏற்றைக் கொடிமேல் ஏற்றிய எம்மான்; அலை ஆர்ந்த

ஆற்றைப், பனி வெண் திங்களை, அம் செஞ்சடை ஏற்றான்;

நீற்றைப் புனை நெற்றிப் பரன்; நேயர்க்கு அரண் ஆகிக்,

கூற்றைக் குமை காலன்; குடவாயிற் பெருமானே.


ஏற்றைக் கொடிமேல் ஏற்றிய எம்மான் - இடபக்கொடி உடைய எம் சுவாமி;

அலை ஆர்ந்த ஆற்றை, பனி வெண் திங்களை அம் செஞ்சடை ஏற்றான் - அலை மிக்க கங்கைநதியையும், குளிர்ந்த வெண்பிறைச்சந்திரனையும் அழகிய சிவந்த சடையில் சூடினான்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (அம் - அழகு);

நேயர்க்கு அரண் ஆகிக், கூற்றைக் குமை காலன் - மார்க்கண்டேயர்க்குக் காவல் ஆகி, இயமனை அழித்த காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);

குடவாயில் பெருமானே - குடவாயிலில் உறையும் சிவபெருமான்;


பிற்குறிப்பு : * இறைவனைப் படர்க்கையில் பரவும் பாடல்கள். "அவனைத் தொழுவோம்" என்பது குறிப்பு.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment