04.14 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - பூத்திரள் கொண்டுனை
2013-10-05
கற்குடி (திருச்சிராப்பள்ளி அருகே உள்ள உய்யக்கொண்டான்மலை)
----------------------------------
(கட்டளைக் கலித்துறை. திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம் என்ற அமைப்பு )
(அப்பர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய்")
1)
பூத்திரள் கொண்டுனைப் போற்றிமை யோரைப் புரந்தருளிக்
கார்த்த விடத்தைக் கரந்தருள் செய்த கருமிடற்றாய்
தீத்திரள் போல்திகழ் செஞ்சடை யாய்துதி செய்யுமெனைக்
காத்தரு ளாய்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
பூத்திரள் கொண்டு உனைப் போற்று இமையோரைப் புரந்தருளிக் - மிகுந்த பூக்களால் உன்னை வழிபட்ட தேவர்களைக் காத்தருளி;
கார்த்த விடத்தைக் கரந்தருள் செய்த கருமிடற்றாய் - கரிய கைக்கின்ற நஞ்சை ஒளித்து அருள்செய்த நீலகண்டனே; (கார்த்தல் - கறுப்பாதல்; உறைத்தல்); (கரத்தல் - மறைத்தல்);
தீத்திரள் போல் திகழ் செஞ்சடையாய் - தீயின் தொகுதி போன்று விளங்கும் செஞ்சடையை உடையவனே;
துதி செய்யும் எனைக் காத்தருளாய் - போற்றும் என்னைக் காத்தருள்வாயாக;
திருக்-கற்குடி மன்னிய கண்ணுதலே - திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணனே; (மன்னுதல் - நிலைபெறுதல்; தங்குதல்);
2)
நெய்தயிர் பாலொடு நீர்மகிழ்ந் தாடிடும் நின்மலனே
பொய்தவிர் நெஞ்சினர் போற்றிப் பணிந்திடும் புண்ணியனே
மைதழு வும்கயி லைக்கிறை யேவுன் மலரடியைக்
கைதொழு வேற்கருள் கற்குடி மன்னிய கண்ணுதலே.
நெய் தயிர் பாலொடு நீர் மகிழ்ந்து ஆடிடும் நின்மலனே - நெய், தயிர், பால், நீர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் தூயவனே;
பொய் தவிர் நெஞ்சினர் - பொய்யை நீங்கிய நன்மனம் உடைய அன்பர்கள்;
மை தழுவும் கயிலைக்கு இறையே - கருமேகம் சூழ்ந்த கயிலைக்கு இறைவனே;
கைதொழுவேற்கு அருள் - கைகூப்பி வணங்கும் எனக்கு அருள்வாயாக ;
3)
பறக்கின்ற நெஞ்சம், பலபல எண்ணும், பதைபதைக்கும்;
மறக்கின்ற நெஞ்சம் இறக்கின்ற போதுனை எண்ணிடுமோ?
மறைக்கின்ற மாய வலையற இங்கு வரமருளாய்,
கறைக்கண்ட னேதிருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
பறத்தல் - மிக விரைதல்; அமைதியற்று வருந்துதல்; இங்கு - இப்பொழுது;
4)
பாரிடம் சூழ்ந்திசை பாட நடம்பயில் பாசுபதா
ஊரிடு பிச்சை உகந்துழல் வாய்விடை ஊர்தியினாய்
ஆரிடர் செய்யும் அருவினை தீர அருள்புரியாய்
காரடை கண்டத்த கற்குடி மன்னிய கண்ணுதலே.
பாரிடம் - பூதகணங்கள்; நடம் பயில் - ஆடுதலைச் செய்யும்; பாசுபதன் - சிவபெருமான்; (சுந்தரர் தேவாரம் - 7.20.5 - "வெண்டலையிற் பலி கொண்டுழல் பாசுபதா"); கார் அடை கண்டத்த - கருமை அடைந்த கண்டத்தை உடையவனே;
5)
வாருல வும்முலை மங்கை மணாள வளர்மதியம்
நீருல வும்புன் சடையின னேதிரு நீறணிந்தாய்
சீருல வும்பெயர் சிந்தைவைத் தேன்வினை தீர்த்தருளாய்
காருல வும்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
வாருலவும்முலை - வார் உலவும் முலை - மகர ஒற்று விரித்தல் விகாரம்; மணாள - மணாளனே; மதியம் - திங்கள்; நீர் - கங்கை; புன்சடை - புகர் நிறம் உடைய சடை - செஞ்சடை; சீர் - நன்மை; புகழ்; பெயர் சிந்தை வைத்தேன் - உன் திருநாமத்தை என் மனத்தில் வைத்தேன்; கார் - கருமேகம்;
6)
ஒருமுகில் வண்ணம் ஒளிர்மணி கண்டம் உடையவனே
திருமயில் அன்ன தெரிவையொர் பங்கு திகழ்பரனே
தருமுகி லேவுன தாள்பணிந் தேற்குத் தயைபுரியாய்
கருமுகி லார்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
ஒரு - ஒப்பற்ற; திரு - அழகு; தெய்வத்தன்மை; செல்வம்; தெரிவை - பெண்; ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; தருமுகில் - (உலகு வாழ மழையைத்) தருகின்ற மேகம் போல் வரம் அருளும் சிவபெருமான்; உன - உன் + அ = உன்னுடைய; ('அ' - ஆறாம் வேற்றுமை உருபு);
7)
அமிழ்தினை வேண்டி அமரர் கடைந்த அலைகடலன்(று)
உமிழ்விடம் கண்(டு)அவர் ஓலம் எனவெடுத் துண்டவனே
தமிழினைப் பாடியுன் தாள்பணிந் தேற்குத் தயைபுரியாய்
கமழ்சடை யாய்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
ஓலம் என எடுத்து உண்டவனே - ஓலம் என்று உன்னைச் சரண்புகவும், அந்த நஞ்சை எடுத்து உண்டவனே; தமிழினைப் பாடி - தேவாரம் முதலியன பாடி; உன் தாள் பணிந்தேற்கு - உன் திருவடியைப் பணிந்த எனக்கு;
8)
ஆர்க்கின்ற வாயன் அரக்கர்தம் கோன்சென் றருவரையைப்
பேர்க்கின்ற போது பெருவிர லாலடர் பெற்றியனே
நாக்கொண்டுன் நாமம் நவிற்றுகின் றேற்கு நலமருளாய்
கார்க்கண்ட னேதிருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
ஆர்க்கின்ற வாயன் அரக்கர்தம் கோன் சென்று அருவரையைப் பேர்க்கின்ற போது - பழித்துப் பேசிக் கத்துகின்ற வாயை உடையவனும் அரக்கர் தலைவனும் ஆன இராவணன் போய்க் கயிலைமலையைப் பெயர்க்க முயன்றபொழுது; (ஆர்த்தல் - கத்துதல்; அலர்தூற்றுதல்); (அருவரை - அரிய மலை - கயிலைமலை);
பெருவிரலால் அடர் பெற்றியனே - திருப்பாதத்தின் பெருவிரலை ஊன்றி நசுக்கியவனே; (பெற்றி - தன்மை; பெருமை); (அப்பர் தேவாரம் - 4.75.10 - "பெருவிரல் இறைதான் ஊன்ற .. .. அரக்கனன் றலறி வீழ்ந்தான்");
நாக்கொண்டு உன் நாமம் நவிற்றுகின்றேற்கு நலம் அருளாய் - நாவால் உன் திருநாமத்தையும் திருப்புகழையும் சொல்லும் அடியேனுக்கு நன்மை அருள்க; (நவிற்றுதல் - சொல்லுதல்);
கார்க்கண்டனே - கரிய கண்டனே;
திருக்-கற்குடி மன்னிய கண்ணுதலே - திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணனே;
9)
அரியும் அயனும் அடியும் முடியும் அறியவொணா
எரியின் உருவில் எழுந்தவ னேபுனல் ஏற்றசடைப்
பெரியவ னேவெண் பிறையணிந் தாயென் பிழைபொறுப்பாய்
கரியுரி யாய்திருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
புனல் ஏற்ற சடைப் பெரியவனே - கங்கையைத் தாங்கிய சடையை உடைய மகாதேவனே; என் பிழைபொறுப்பாய் - என் குற்றங்களைப் பொறுத்து அருள்வாயாக; கரியுரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே;
10)
தத்துவம் தானறி யாது தருக்கும் சமயிகள்தம்
எத்தினை விள்ளுமின் ஈசன் எருதமர் எம்பெருமான்
பத்திசெய் அன்பர் பழவினை பாறப் பரிந்தருள்வான்
கைத்தநஞ் சுண்டவன் கற்குடி மன்னிய கண்ணுதலே.
தத்துவம் தான் அறியாது தருக்கும் சமயிகள்தம் எத்தினை விள்ளுமின் - மெய்ப்பொருளை அறியாது ஆணவத்தோடு பேசும் புறச்சமயிகளது வஞ்சகத்தை நீங்குங்கள்; (தருக்குதல் - செருக்குக்கொள்ளுதல்); (சமயி - மதஸ்தன்); (எத்து - வஞ்சகம்); (விள்ளுமின் - நீங்குங்கள்); சொல்லுங்கள்;
(விள்ளுமின்) ஈசன், எருது அமர் எம்பெருமான் - ஈசனும் இடபவாகனுமான எம்பெருமான் நாமத்தைச் சொல்லுங்கள்; (விள்ளுமின் - சொல்லுங்கள்); ("விள்ளுமின்" - இச்சொல்லை இப்படி இடைநிலைத் தீவகமாக இருமூறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);
பத்திசெய் அன்பர் பழவினை பாறப் பரிந்தருள்வான் - பக்திசெய்யும் அடியார் பழவினை அழிய இரங்கி அருள்பவன்; (பாறுதல் - அழிதல்);
கைத்த நஞ்சு உண்டவன் - கசக்கும் நஞ்சை உண்டவன்; (கைத்தல் - கசத்தல்);
கற்குடி மன்னிய கண்ணுதலே - திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன்; (ஏ - ஈற்றசை);
11)
நற்பதம் தன்னில் நறுமலர் தூவி நரைவிடையாய்
மற்புயம் எட்டுடை யாயெனும் மார்க்கண்டர் வாழவைத்தாய்
பற்பல வாறுனைப் பாடுகின் றேற்குப் பரிந்தருளாய்
கற்பக மேதிருக் கற்குடி மன்னிய கண்ணுதலே.
நன்மைமிகும் உன் திருவடியில் வாசமலர்களைத் தூவி, "வெள்ளை ஏற்றை ஊர்தியாக உடையவனே! வலிமைமிகும் எட்டுத் தோள்களை உடையவனே!" என்று போற்றிய மார்க்கண்டேயர் என்றும் இறப்பின்றி வாழ அருள்புரிந்தவனே! கற்பகமே! திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணனே! பலவாறு உன்னைப் போற்றிப் பாடும் எனக்கு இரங்கி அருள்புரிவாயாக!
நரைவிடை - வெள்ளேறு; மற்புயம் எட்டு உடையாய் - வலிமைமிக்க எட்டுத் தோள்கள் உடையவனே; (திருவாசகம் - குழைத்த பத்து - 8.33.7 - "எண்தோள் முக்கண் எம்மானே");
* திருக்கற்குடித் தலச்சிறப்பு : மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சுவாமி "உஜ்ஜீவநாதர்" எனப்படுகின்றார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் "கற்பகநாதர்" என்றும் இவருக்குப் பெயர் உண்டு.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment