Sunday, March 11, 2018

04.17 – மூவலூர்


04.17மூவலூர்



2013-10-09
மூவலூர் (மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)
----------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தான தான தான தான தானனா" என்ற சந்தம்).
(சம்பந்தர் தேவாரம் - 2.101.5 - "சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்")



1)
ஏல நாறும் ஓதி மங்கை என்று மொன்றி டத்தினான்
சீல மாணி அஞ்சு மாறு சீறி வந்த கூற்றுதை
காலன் நஞ்சை உண்ட நீல கண்டன் எந்தை கட்டிலான்
மூல மாகி ஈறும் ஆன மூவ லூரில் மூர்த்தியே.



ஏலம் நாறும் ஓதி மங்கை - மயிர்ச்சாந்து வாசனை கமழும் கூந்தல் உடைய உமாதேவி;
என்றும் ஒன்று இடத்தினான் - எப்பொழுதும் பிரியாமல் இணைந்தே இருக்கும் இடப்பக்கம் உடையவன்;
சீல மாணி அஞ்சுமாறு சீறி வந்த கூற்று உதை காலன் - மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரிடம் சினந்து வந்த எமனை உதைத்த காலன்;
கட்டிலான் - கட்டு இலான் - பந்தம் அற்றவன் - மும்மலக்கட்டு இல்லாதவன்; (கட்டு - பாசம்);
மூலம் - ஆதி; ஈறு - அந்தம்; மூர்த்தி - கடவுள்; தலைவன்;
குறிப்பு: "மூல மாகி ஈறும் ஆன மூவ லூரில் மூர்த்தியே" - 'மூலமாகி ஈறும் ஆன மூர்த்தி, மூவலூரில் மூர்த்தி' என்று தனித்தனி இயைக்க. இவ்வாறே மற்ற சில பாடல்களிலும் ஈற்றடியை இயைக்க.



2)
துன்னு கின்ற வன்னி கொன்றை தூய கங்கை நீரொடு
சென்னி மீது திங்க ளோடு சீறு பாம்பு சேர்த்தவன்
பன்னு பாடல் கொண்டு போற்று பத்தர் பாவம் மாய்ப்பவன்
முன்னும் ஆகி முற்றும் ஆய மூவ லூரில் மூர்த்தியே.



துன்னுதல் - செறிதல்; பொருந்துதல்; சென்னி - தலை; திங்க ளோடு சீறு பாம்பு - சந்திரனோடு சீறும் பாம்பு; ("ஓடு - மண்டையோடு" என்று பொருள்கொண்டால், சந்திரன், மண்டையோடு, சீறும் பாம்பு என்றும் பொருள்கொள்ளலாம்); பன்னுதல் - பாடுதல்; முற்று - முடிவு;
தூய கங்கைப் புனலோடு வன்னியும் கொன்றையும் செறிந்திருக்கும் திருமுடிமேல் சந்திரனோடு சீறும் பாம்பையும் சேர்த்து வைத்தவன்; பாடுகின்ற பாடல்களால் போற்றுகின்ற பக்தர்கள்தம் பாவத்தை அழிப்பவன்; எல்லாவற்றிற்கும் முன்னும் ஆகி முடிவும் ஆனவன்; மூவலூரில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியான சிவபெருமான்.



3)
பூப்பி ணைந்த மாலை கொண்டு போற்றி செய்து காதலால்
நாப்பி ணைந்த அஞ்செ ழுத்தை நாளும் ஓதி அங்கைகள்
கூப்பி நிற்கும் அன்பர் நெஞ்சு கோயி லாம கிழ்ந்தவன்
மூப்பி றப்பு நோயி லாத மூவ லூரில் மூர்த்தியே.



பிணைதல் - சேர்தல்; செறிதல்; கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு; போற்றிசெய்தல் - துதித்தல்; கோயிலா - கோயிலாக; மூப்பு இறப்பு நோய் இலாத - முதுமை, சாவு, நோய் இவையெல்லாம் இல்லாத;



4)
இளைய காலம் இன்பம் நாடி எந்தை தாளை ஏத்திடார்
களையி ழந்து கோலை ஊன்று காலம் வந்தும் உள்ளிடார்
உளைவர் மண்ணில் ஓய்த லின்றி ஓதி உய்யெ னெஞ்சமே
முளைநி லாச்ச டைக்க ணிந்த மூவ லூரில் மூர்த்தியே.



களை - அழகு; உள்ளிடார் - 1) உள்ளுதல் செய்யார் - எண்ண மாட்டார்; 2) உள் இடார் - உள்ளத்தில் வைக்கமாட்டார்; உளைதல் - மனம் வருந்துதல்; ஓய்தல் இன்றி - ஓயாமல்; முடிவின்றி; ( குறிப்பு : ஓய்தலின்றி - இச்சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக, "உளைவர் மண்ணில் ஓய்தலின்றி" என்றும் "ஓய்தலின்றி ஓதி உய் என் நெஞ்சமே" என்றும் இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);
ஓதி உய்யெனெஞ்சமே - (அவர்களைப் போல் இராமல், ஈசனை) ஓதி உய் என் நெஞ்சமே; (சந்தம் கருதி னகர ஒற்று தொகுத்தல்);



5)
ஞானி மார்கள் நாடு கின்ற நாதன் நால்வர் இன்தமிழ்த்
தேனி சைத்து வாழ்த்து கின்ற சீலர் உள்ம கிழ்ந்தவன்
வானி லுள்ள தேவர் ஏத்த வல்வி டத்தை உண்டவன்
மோனி யாயு ரைத்த ஆலன் மூவ லூரில் மூர்த்தியே.



ஞானிமார்கள் - ஞானியர்; (மார், கள் - பன்மை விகுதி);
நால்வர் இன் தமிழ்த் தேன் இசைத்து - சமயக் குரவர்கள் நால்வர் பாடியருளிய தேவார திருவாசகம் முதலிய இனிய தமிழ்த்தேனைப் பாடி;
வாழ்த்துகின்ற சீலர் உள் மகிழ்ந்தவன் - வணங்கும் சீலம் உடையவர்கள் உள்ளத்தில் மகிழ்ந்து உறைபவன்;
மோனி ஆய் உரைத்த ஆலன் - கல்லாலின்கீழ்ச் சனகாதியருக்கு மௌனமாகவே வேதப்பொருளை விரித்துரைத்தவன்; (மோனி - மௌனி); (ஆலன் - கல்லாலின் புடையமர்ந்தவன்). (அப்பர் தேவாரம் - 4.88.1 - "...ஆலனை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.");



6)
பெற்றம் ஒன்றில் ஏறி வந்து பிச்சை கொள்ளும் எம்பிரான்
கற்றை வேணி யிற்ப ரந்த கங்கை யைக்க ரந்தவன்
பற்றி லார்க ளாய்த்தி ருந்து பாதம் ஏத்து வார்துணை
முற்ற லாமை ஓடு பூண்ட மூவ லூரில் மூர்த்தியே.



பெற்றம் - இடபம்; எருது; எம்பிரான் - எம் தலைவன்; வேணி - சடை; கரத்தல் - ஒளித்தல்; திருந்து பாதம் - திருந்தடி - அழகிய திருவடி; (திருந்துதல் - அழகு பெறுதல் - To be beautiful, elegant); (அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்");
பற்று இலார்கள் ஆய்த் திருந்து பாதம் ஏத்துவார் துணை - வேறு பற்றுகள் எதுவும் இன்றி அழகிய திருவடியைத் துதிப்பவர்களுக்குத் துணை ஆனவன்;
முற்றல் ஆமை ஓடு பூண்ட - முதிர்ந்த ஆமையின் ஓட்டினை அணிந்த; (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு" - வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும் .... அணிந்து);



7)
சிறுவ ராயுள் இற்றை யோடு தீர்ந்த தென்று கொன்றிடக்
கறுவி வந்த கூற்றை அன்று காலி னாலு தைத்தவன்
மறுவி லான்தொ ழும்பர் உள்ளன் வான வர்க்கி ரங்கியோர்
முறுவ லாற்பு ரங்கள் அட்ட மூவ லூரில் மூர்த்தியே.



சிறுவர் ஆயுள் - மார்க்கண்டேயரது வாழ்நாள்; இற்றையோடு - இன்றோடு; (இற்றை - இன்று); கறுவுதல் - சினக் குறிப்புக்காட்டுதல் (To exhibit signs of displeasure, frown, look sternly); கூற்றை - காலனை; மறுவிலான் - மறு இலான் - குற்றம் அற்றவன்; தொழும்பர் உள்ளன் - அடியவர் உள்ளத்தில் இருப்பவன்; (தொழும்பர் - அடியவர்); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.10 - "ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்" - தொண்டர் உளன் - அடியவர் உள்ளத்திலிருப்பவன்");
வானவர்க்கு இரங்கி ஓர் முறுவலால் புரங்கள் அட்ட - தேவர்களுக்கு இரங்கி ஒரு சிரிப்பால் முப்புரங்களையும் அழித்த; (அடுதல் - அழித்தல்);
(சம்பந்தர் தேவாரம் - 1.24.1 - "மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்");
(சம்பந்தர் தேவாரம் - 1.124.6 - "அன்றின ரரியென வருபவ ரரிதினில் ஒன்றிய திரிபுர மொருநொடி யினிலெரி சென்று கொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற நின்றவன் மிழலையை நினையவ லவரே. - .... முப்புரங்களை ஒருநொடிப் பொழுதில் எரி உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து புகழ்பெற்றவன் .... - சிறுமுறுவல் - புன்னகை)



8)
தீது செய்ய எண்ணி வந்த தென்னி லங்கை மன்னழப்
போது போன்ற பாதம் ஊன்று பொற்பி னான்அ ருட்கடல்
யாது மாகி எங்கும் உள்ள ஐயன் ஆர்ப்ப ரித்தலை
மோது கின்ற வேணி அண்ணல் மூவ லூரில் மூர்த்தியே.



தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; தென் இலங்கை மன் - அழகிய இலங்கைக்கு அரசன் - இராவணன்; போது போன்ற பாதம் ஊன்று - பூப் போன்ற பாதத்தின் விரலை ஊன்றிய;
பொற்பு - குணம்; தன்மை; அருட்கடல் - கருணைக்கடல்; யாதும் - எதுவும்;
ஆர்ப்பரித்து அலை மோதுகின்ற வேணி அண்ணல் - கங்கையின் அலைகள் மோதுகின்ற சடையை உடைய பெருமான்; ( ஆர்ப்பரித்தல் - ஆரவாரித்தல்; வேணி - சடை; )



9)
விண்டு கேழல் வேதன் அன்ன வேடம் ஏற்று நேடவே
பண்டு நின்ற தீப்பி ழம்பு பாடு வார்க்க ருள்பவன்
வண்டு நாடும் அம்பை ஏவு மன்ம தன்ற னைச்செறு
முண்ட நாட்டம் உள்ள எந்தை மூவ லூரில் மூர்த்தியே.



விண்டு கேழல் வேதன் அன்ன வேடம் ஏற்று நேடவே - விஷ்ணு பன்றி உருவும் பிரமன் அன்னப்பறவை உருவும் கொண்டு தேடும்படி; (விண்டு - விஷ்ணு; கேழல் - பன்றி; வேதன் - பிரமன்; வேடம் - வடிவம்; கோலம்; நேட - தேட);
பண்டு நின்ற தீப்பிழம்பு - முன்னொரு காலத்தில் ஓங்கி நின்ற சோதி;
பாடுவார்க்கு அருள்பவன் - பாடிப் போற்றும் பக்தர்களுக்கு அருள்புரிபவன்;
வண்டு நாடும் அம்பை ஏவு மன்மதன் தனைச் செறு - வண்டுகள் விரும்பும் மலர்களை அம்பாக ஏவும் காமனை அழித்த; (செறுதல் - அழித்தல்);
முண்ட நாட்டம் உள்ள எந்தை - நெற்றிக்கண் உடைய எம் தந்தை; (முண்டம் - நெற்றி; நாட்டம் - கண்);
மூவலூரில் மூர்த்தியே - மூவலூரில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தியான சிவபெருமான்;



10)
பொய்த்த வங்கள் ஓம்பு கின்ற புல்லர் வார்த்தை போற்றிடேல்
எய்த்தல் இன்றி இன்பம் ஆக எண்ணி னீர்கள் ஏத்துமின்
கைத்த நஞ்சை உண்டொ ளித்த கண்டன் நீல வண்டினம்
மொய்த்த லம்பு சோலை சூழ்ந்த மூவ லூரில் மூர்த்தியே.



பொய்த்தவங்கள் ஓம்புகின்ற புல்லர் வார்த்தை போற்றிடேல் - பொய்யான தவங்களைப் பேணுகின்ற கீழோர் சொல்லும் சொற்களை மதிக்கவேண்டா;
எய்த்தல் - இளைத்தல்; மெய்வருந்துதல்;
எண்ணினீர்கள் - எண்ணினீர்கள் (எண்ணிய நீங்கள்) / எண்ணில் நீர்கள் (எண்ணினால் நீங்கள்);
ஏத்துமின் - நீங்கள் ஏத்துவீர்; (முன்னிலைப் பன்மை ஏவல்);
கைத்த நஞ்சை உண்டு ஒளித்த கண்டன் - கசக்கும் விடத்தை உண்டு கண்டத்தில் ஒளித்து அருளியவன்;
நீல வண்டினம் மொய்த்து அலம்பு சோலை சூழ்ந்த - கருவண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற (முரல்கின்ற) பொழில்கள் சூழ்ந்த; (அலம்புதல் - ஒலித்தல்);



11)
கனியும் நெஞ்சர் கூப்பு கையர் காத லோடு போற்றிடும்
இனியன் நாளும் இன்பம் நல்கும் எங்கள் ஈசன் ஏறமர்
தனியன் நாரி பங்கன் ஆறு தாங்கி ஆல தன்புடை
முனிவ ருக்க றங்க ளோது மூவ லூரில் மூர்த்தியே.



கனியும் நெஞ்சர் கூப்பு கையர் காதலோடு போற்றிடும் இனியன் - கனிந்த உள்ளமும் கூப்பும் கைகளும் உடைய பக்தர்கள் அன்போடு போற்றும் இனியவன்;
நாளும் இன்பம் நல்கும் எங்கள் ஈசன் - அவர்களுக்கு எப்போதும் இன்பமே அருளும் எம்பெருமான்;
ஏறமர் தனியன் - இடபவாகனன், ஒப்பற்றவன்; (தனியன் - ஒப்பற்றவன்; தனித்து இருப்பவன்);
நாரி பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;
ஆறு தாங்கி - ஆற்றினைத் தாங்கியவன் - கங்காதரன்;
ஆல் அதன் புடை முனிவருக்கு அறங்கள் ஓது - கல்லா மரத்தின்கீழ்ச் சனகாதியர் முனிவர்களுக்கு மறைப்பொருளை ஓதிய;
மூவலூரில் மூர்த்தியே - மூவலூரில் உறைகின்ற பெருமான்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தான தான தான தான தானனா" என்ற சந்தம்.
முதற்சீரில் தான என்பது தனன என்றும் சில பாடல்களில் வரலாம்.



2)
சம்பந்தர் தேவாரம் - 2.101.5 -
சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றவெங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறு மந்தணாரூ ரென்பதே.)



3) மூவலூர் - மார்க்கசகாயேஸ்வரர் கோயில் : http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm



4) இத்தலத்தில் (மூவலூரில்) சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். ஆனால் அப்பதிகம் கிடைத்திலது. (பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் 437-ஆம் பாடல் காண்க: "மூவ லூருறை முதல்வரைப் பரவிய மொழியால்...");
5) (இப்பதிகத்தின் 11-ஆம் பாடலில் "தனியன் நாரி பங்கன்" என்ற சொற்றொடரைப் பற்றி அன்பர் ஒருவர் எழுப்பிய ஒரு வினாவை ஒட்டித் தேடியபோது கண்ட ஒரு பாடல்:
பட்டினத்து அடிகள் அருளிய திருஏகம்பமுடையார் திருவந்தாதி - 11.29.48 -
இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத்
தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டியன்புக்
கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே. )
----------- --------------

No comments:

Post a Comment