Sunday, March 11, 2018

04.18 - திரிபுவனம் (திருபுவனம்) - இன்னா நல்கும் இருவினைகள்

04.18 - திரிபுவனம் (திருபுவனம்) - இன்னா நல்கும் இருவினைகள்

2013-10-26

திரிபுவனம் (இக்கால வழக்கில் - திருபுவனம்)

(கும்பகோணம் - திருவிடைமருதூர் இடையே உள்ள தலம்)

----------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(சுந்தரர் தேவாரம் - 7.52.1 - "முத்தா முத்தி தரவல்ல")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")


1)

"இன்னா நல்கும் இருவினைகள் .. எல்லாம் தீர்த்தின் னருள்புரியாய்;

உன்னால் செய்ய இயலாத .. ஒன்றும் உண்டோ" என்றென்று

பன்னாள் பரவிப் பணிசெய்யும் .. பத்தர்க் கென்றும் துணையாவான்

நன்னீர் வயல்சூழ் திரிபுவன .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


"இன்னா நல்கும் இருவினைகள் எல்லாம் தீர்த்து இன்னருள்புரியாய் - "துன்பம் தரும் இருவினையை நீக்கி இனிய அருளைச் செய்வாயாக;

உன்னால் செய்ய இயலாத ஒன்றும் உண்டோ" - எல்லாம் செய்ய வல்லவன் நீ";

என்றென்று பன்னாள் பரவிப் பணிசெய்யும் - என்று பன்முறை கூறிப் பல நாளும் போற்றி வழிபடும்;

நன்னீர் வயல்சூழ் திரிபுவன - நல்ல நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த திரிபுவனம் (திருபுவனம்) என்ற தலத்தில் உறைகின்ற;

நடுக்கம் தீர்க்கும் பெருமான் - திரிபுவனத்து ஈசன் திருநாமம் - கம்பஹரேஸ்வரர் (कम्पः - Shaking; + हर - removing; + ईश्वरः - Lord);

(குறிப்பு : இப்பாடல் படர்க்கையில் அமைந்தது. முதல் ஈரடிகள் - அடிதொழும் பக்தரின் கூற்று.

அப்படி அடிதொழும் பக்தர்களுக்கு அவன் துணை ஆவான். அவன் திரிபுவனத்தில் எழுந்தருளியுள்ள நடுக்கம் தீர்க்கும் பெருமான்)


2)

"என்செய் வேன்நீ அருளாயேல்; .. இல்லேன் மற்றுப் பற்றிங்கே;

உன்செய் யாரும் அடியல்லால் .. உள்கேன்" என்று தொழுவார்க்கு

முன்செய் வினைகள் என்றகடல் .. முற்றும் வற்ற அருள்புரிவான்

நன்செய் புடைசூழ் திரிபுவன .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


"என் செய்வேன் நீ அருளாயேல் - "நீ அருள்புரியாவிடில் நான் என்ன செய்வேன்?

இல்லேன் மற்றுப் பற்று இங்கே - இங்கு வேறு பற்றுக்கோடு (துணை) எனக்கு இல்லை; (சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்");

உன் செய் ஆரும் அடி அல்லால் உள்கேன்" என்று தொழுவார்க்கு - உன் சேவடி (செம்மை பொருந்தும் பாதம்) தவிர வேறு எதுவும் நான் நினைக்கமாட்டேன்" என்று துதிப்பவர்களுக்கு; (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 17 - "செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ"); (உள்குதல் - எண்ணுதல்); (அப்பர் தேவாரம் - 6.31.7 - "உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்");

முன் செய் வினைகள் என்ற கடல் முற்றும் வற்ற அருள்புரிவான் - முன்பு செய்த வினை (பழவினை) என்ற கடல் அடியோடு வற்றும்படி அருள்செய்வான்; (முற்றும் - முழுதும்);

நன்செய் புடைசூழ் திரிபுவன நடுக்கம் தீர்க்கும் பெருமானே - வளவயல் சூழ்ந்த திரிபுவனத்தில் எழுந்தருளியுள்ள நடுக்கம் தீர்க்கும் பெருமான்.


3)

"செம்பொன் ஒத்த சடையானே; .. திரண்ட நஞ்சைக் கண்டஞ்சி

உம்பர் ஓடி வந்திறைஞ்ச .. உண்டு கண்டத் திட்டவனே;

சிம்புள் உருவும் கொண்டவனே; .. சிவனே;" என்பார்க் கருள்புரிவான்

நம்பு கின்ற அடியார்தம் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


உம்பர் - தேவர்; சிம்புள் - சரபம்; சிவபெருமானின் மூர்த்தங்களுள் ஒன்று; (* திரிபுவனத்தில் சரபேஸ்வரர் பிரசித்தி); நம்புதல் - விரும்புதல்; (நம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - 11.32.36 - "மாநரசிங்கனைச் சிம்புளதாய் நரல இடுக்கிய பாதன்");


4)

"பாலும் தயிரும் கொண்டாட்டிப் .. பரவு மார்க்கண் டேயரிடம்

காலன் சினந்து வந்தக்கால் .. காலால் உதைத்துக் காத்தவனே;

நீலம் ஆரும் கண்டத்தாய்; .. நெற்றிக் கண்ணா" என்றென்று

ஞாலம் வந்து பணிந்தேத்தும் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


ஆட்டுதல் - அபிஷேகம் செய்தல்; வந்தக்கால் - வந்தபோது; ஞாலம் - உலகம் - உலகத்தவர்;

"உன்னை வணங்குகின்றேன்" என்பது குறிப்பு; "நடுக்கம் தீர்க்கும் பெருமானை உலகம் வந்து பணியும்" என்றும் பொருள்கொள்ளலாம்; (சம்பந்தர் தேவாரம் - 2.7.2 - "திருவாஞ்சியம் ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே"); (சம்பந்தர் தேவாரம் - 1.3.3 - "வையம் வந்து பணியப் பிணிதீர்த்துயர்கின்ற வலிதாயம்");


5)

"உச்சி மீது பிறைசூடீ; .. ஓத நஞ்சை உண்டவனே;

அச்சு றுத்தும் நாகத்தை .. அரையில் ஆர்த்த அற்புதனே;

பிச்சைக் குழல்வாய்" என்றென்று .. பெருமை எல்லாம் மிகப்பேசி

நச்சு கின்ற அடியார்தம் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


உச்சி மீது - தலைமேல்; ஓத நஞ்சு - கடலில் தோன்றிய விடம்; (ஓதம் - கடல்);

அச்சுறுத்தும் நாகத்தை அரையில் ஆர்த்த அற்புதனே - பிறரைப் பயமுறுத்தும் நாகப்பாம்பை அரையில் கச்சாகக் கட்டிய அற்புதனே; (ஆர்த்தல் - கட்டுதல்); (சுந்தரர் தேவாரம் - 7.2.4 - "உங்கை நாகமதற் கஞ்சுண்டு படம் அது போகவிடீர் அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமே"); பிச்சைக்கு உழல்வாய் - பலிக்குத் திரிபவனே; நச்சுதல் - விரும்புதல்; (அடியார்களது நடுக்கத்தைத் தீர்க்கும் பெருமானே! "உன்னை வணங்குகின்றேன்" என்பது குறிப்பு; "தீர்க்கும்" என்பதைச் "செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று" ஆகக் கொண்டு, "அப்படி வணங்கும் அடியார்தம் நடுக்கத்தைப் பெருமான் தீர்ப்பான்" என்றும் பொருள்கொள்ளலாம்);


6)

வானுள் ளோரும் மலர்தூவி .. வணங்கு கின்ற மாதேவன்,

தேனுள் சுவையாய்த் திகழீசன், .. செம்பொற் சடையன், கையினிலோர்

மானுள் ளான்தன் மெய்யன்பர் .. வாடா வண்ணம் தேடிவந்து

நானுள் ளேனென் றருள்செய்து .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


தன் மெய்யன்பர் வாடா வண்ணம் தேடிவந்து "நான் உள்ளேன்" ன்று அருள்செய்து நடுக்கம் தீர்க்கும் பெருமான் - தன் மெய்ப்பக்தர்கள் வருந்தாதபடி அவர்களைத் தேடிவந்து, "நாம் உள்ளோம்" என்று அபயம் தந்து, நடுக்கத்தைத் தீர்க்கின்ற பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.40.6 - "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான்");


7)

விண்ணில் திரியும் முப்புரங்கள் .. வேவ மேரு வில்லேந்தும்

அண்ணல், அரிக்குச் சலந்தரனை .. அழித்த ஆழி அருள்செய்தான்,

பண்ணும் சொல்லும் இயைந்துவரும் .. பாடல் கொண்டு பதம்போற்றி

நண்ணு கின்ற அடியார்தம் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


அரிக்குச் சலந்தரனை அழித்த ஆழி அருள்செய்தான் - முன்னம் சலந்தராசுரனை அழித்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருள்புரிந்தவன்; (திருவாசகம் - திருச்சாழல் - 18 - "சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ");

நடுக்கம் தீர்க்கும் பெருமான் - நடுக்கத்தைத் தீர்க்கின்ற பெருமான்;


8)

கோளும் அஞ்சிப் பணிசெய்யும் .. கொடிய அரக்கன் நாலஞ்சு

தோளும் நெரிய விரலூன்றித் .. தோத்தி ரங்கள் கேட்டிரங்கி

நாளும் வாளும் நல்கியவன், .. நரைவெள் ளேற்றன், புகழ்பாடி

நாளும் போற்றும் அடியார்தம் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


கோள் - நவக்கிரகங்கள்; நாலஞ்சு தோள் - இருபது புயங்கள்; இரங்கி - கருணைசெய்து; நாளும் வாளும் - நீண்ட ஆயுளும் சந்திரஹாஸம் என்ற வாளும்; நாளும் போற்றும் - தினமும் துதிக்கும்;

நடுக்கம் தீர்க்கும் பெருமான் - நடுக்கத்தைத் தீர்க்கின்ற பெருமான்;

(* நவக்கிரகங்களும் இராவணனுக்கு அஞ்சி அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தன. - (அப்பர் தேவாரம் - 5.21.10 - "சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்துடையான்றனைக் கனிய ஊன்றிய காரணம் என்கொலோ");


9)

தேடு பன்றி அன்ன(ம்)மிகத் .. திகைக்க ஓங்கு தீயானான்,

பாடு கின்ற பொருளெல்லாம் .. பாம்பை அரையில் ஆர்த்துநடம்

ஆடு கின்ற பரம்பொருளே .. ஆகக் கூடும் அன்போடு

நாடு கின்ற அடியார்தம் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


தேடு பன்றி அன்னம் மிகத் திகைக்க ஓங்கு தீ ஆனான் - தேடிய பன்றியும் அன்னப்பறவையும் (விஷ்ணுவும் பிரமனும்) அடிமுடி காணாது மிகவும் திகைக்கும்படி எல்லையின்றி உயர்ந்த சோதி ஆனவன்; (திகைத்தல் - மயங்குதல்);

பாடுகின்ற பொருள் எல்லாம் பாம்பை அரையில் ஆர்த்து நடம் ஆடுகின்ற பரம்பொருளே ஆகக் - அரைநாணாகப் பாம்பினைக் கட்டிய சிவனையே என்றும் பாடுகின்ற; (ஆர்த்தல் - கட்டுதல்); (* சுந்தரர் தேவாரம் - 7.39.7 - "பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்");

கூடும் அன்போடு நாடுகின்ற அடியார்தம் நடுக்கம் தீர்க்கும் பெருமானே - மிகும் அன்போடு விரும்பி வழிபடும் பக்தர்களது அச்சத்தைத் தீர்க்கும் பெருமான்;


10)

ஓவா தென்றும் பொய்களையே .. உரைத்துத் திரிவார் உமைகோனை

மேவா மிண்டர் வெற்றுரையை .. விட்டு வம்மின் அருள்வானே

காவார் மலர்கள் கழலிட்டுக் .. கண்கள் கசியத் தமிழ்பாடி

நாவால் ஏத்தும் அடியார்தம் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


ஓவாது - ஓயாமல்; மேவா - விரும்பாத; மிண்டர் - கல் நெஞ்சர்; வெற்றுரை - பொருளற்ற சொற்கள்; வம்மின் - வாருங்கள்; கா ஆர் மலர் - சோலையில் இருக்கும் பூக்கள்; தமிழ்பாடி நாவால் ஏத்தும் - நாவால் தமிழ்பாடி ஏத்தும்;

எப்போதும் பொய்களையே பேசித் திரிபவர்களும் சிவபெருமானை விரும்பி வழிபடாத கல்நெஞ்சர்களுமான அவர்கள் சொல்லும் பொருளற்ற பேச்சை மதியாது நீங்கி வாருங்கள்; சோலைகளில் பூத்த பூக்களைத் திருவடியில் இட்டுக், கண்களில் கண்ணீர் கசிய உருகி, நாவால் தேவாரம் திருவாசகம் முதலியன பாடிப் போற்றும் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் கம்பஹரேஸ்வரன் உங்களுக்கு அருள்புரிவான்.


11)

"கறையார் கண்டா; நால்வர்க்குக் .. கல்லால் நீழல் அறமுரைத்தாய்;

பிறையோ டரவும் முடிமீது .. பின்னு கின்ற பிஞ்ஞகனே;

இறைவா; ஏற்றுக் கொடியுடையாய்" .. என்று வாழ்த்தி நெக்குருகி

நறையார் மலரால் தொழுவார்தம் .. நடுக்கம் தீர்க்கும் பெருமானே.


"கறை ஆர் கண்டா - "நீலகண்டனே;

நால்வர்க்குக் கல்லால் நீழல் அறம் உரைத்தாய் - சனகாதியர் நால்வருக்குக் கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருளை விளக்கிய தக்ஷிணாமூர்த்தியே;

பிறையோடு அரவும் முடிமீது பின்னுகின்ற பிஞ்ஞகனே - திருமுடிமேல் பிறைச்சந்திரனோடு பாம்பும் பிணைந்து இருக்கும் பிஞ்ஞகனே;

இறைவா ஏற்றுக்கொடி உடையாய்" என்று வாழ்த்தி நெக்குருகி - இறைவனே; இடபக்கொடியை உடையவனே" என்று போற்றி மனம் உருகி;

நறை ஆர் மலரால் தொழுவார்தம் நடுக்கம் தீர்க்கும் பெருமானே - தேன் பொருந்திய பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களுடைய அச்சத்தைத் தீர்ப்பான் கம்பஹரேஸ்வரன்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment