04.12 - பாற்றுறை - சுழியினார் கங்கையை
2013-09-25
பாற்றுறை (கல்லணை அருகே உள்ள பனையபுரம்)
----------------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம்)
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும்")
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
1)
சுழியினார் கங்கையைச் சூடும் வேணியார்,
விழியினால் மன்மதன் வேவ நோக்கினார்,
பழியிலார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
அழிவிலார் அடியடை அன்பர்க் கின்பமே.
சுழியின் ஆர் கங்கையைச் சூடும் வேணியார் - நீர்ச்சுழிகள் மிக்க கங்கையைச் சூடிய சடையர்; (இன் - அசை); (வேணி - சடை);
விழியினால் மன்மதன் வேவ நோக்கினார் - நெற்றிக்கண்ணால் காமனை எரித்தவர்;
பழி இலார் - பழியற்றவர்;
கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை - கொள்ளிடத்தின் பக்கத்தில் திருப்பாற்றுறையில் உறைகின்ற; (பாங்கர் - பக்கம்);
அழிவு இலார் அடி அடை அன்பர்க்கு இன்பமே - என்றும் இருப்பவரான பெருமானாரது திருவடியைச் சரண்புகுந்த அன்பர்களுக்கு என்றும் இன்பமே;
2)
திங்களைச் சூடிய தேவ தேவனை,
அங்கையில் அழலனை, ஆகத் துமையொரு
பங்கனைக், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைத்
தங்கிய சம்புவைச் சார இன்பமே.
அங்கையில் அழலனை - கையில் தீயை ஏந்தியவனை;
ஆகத்து உமையொரு பங்கனைக் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவனை; (ஆகம் - மேனி);
தங்குதல் - நிலைத்து உறைதல்; சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்; சார்தல் - பொருந்துதல்;
இலக்கணக் குறிப்பு : "பாற்றுறைத் தங்கிய" - (பாற்றுறையின்கண் தங்கிய) - ஏழாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலி மிகும்.
3)
விடையனை, நான்மறை விரித்த ஆலனைப்,
புடையினில் பெண்ணனைப், பொலியும் கூர்மழுப்
படையனைக், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைச்
சடையனை அடிதொழச் சாரும் இன்பமே.
விரித்தல் - உபதேசித்தல்; விளக்கிச்சொல்லுதல்; ஆலன் - கல்லால மரத்தின்கீழ் இருப்பவன்; (சுந்தரர் தேவாரம் - 7.85.9 - "ஆலன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே"); புடை - பக்கம்; படை - ஆயுதம்;
4)
வடியினார் சூலமும் மழுவும் ஏந்தினார்,
கொடியனார் இடுபலி கொண்டு ழன்றிடு
படிறனார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைக்
குடியினார் அடிதொழக் கூடும் இன்பமே.
வடியின் ஆர் சூலமும் மழுவும் ஏந்தினார் - கூர்மை மிக்க சூலத்தையும் மழுவையும் ஏந்தியவர்; (வடி - கூர்மை);
கொடி அனார் இடு-பலி கொண்டு உழன்றிடு படிறனார் - கொடி போன்ற பெண்கள் இடும் பிச்சையை ஏற்றுத் திரிகின்ற பொய்யர்; (அனார் - அன்னவர்); (பலி - பிச்சை); (சம்பந்தர் தேவாரம் - 1.110.3 - "இடுபலி கொண்டுழல்வான்"); (படிறன் - பொய்யன்; வஞ்சகன்);
குடியினார் - வாழ்விடமாக உடையவர்;
5)
அம்புலி கூவிளம் அரவு சூடியைக்,
கொம்பனை யாளொரு கூறு நாடியைப்,
பைம்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நம்பனை அடிதொழ நாளும் இன்பமே.
கூவிளம் - வில்வம்; சூடி - சூடியவன்; கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்ற பார்வதி; நாடி - நாடியவன் - விரும்பியவன்; (ஆடுபவன் - ஆடி, சூடுபவன் - சூடி, பாடுபவன் - பாடி, என்பன போல், நாடுபவன் - நாடி); நம்பன் - சிவபெருமான் திருநாமம் - விரும்பத் தக்கவன்;
6)
குரவனார், சடைமிசைக் கோலத் திங்களார்,
அரவனார், ஆதியும் அந்தம் ஆகிய
பரமனார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
பரவினார் பழவினை பறையும் திண்ணமே.
குரவனார் - குரு / அரசன்; கோலத் திங்களார் - அழகிய பிறைச்சந்திரனை உடையவர்; அரவனார் - பாம்பை அணிந்தவர்; பரவினார் - துதிப்பவர்கள்; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); பறைதல் - அழிதல்;
7)
சூடினார் கொன்றையைச், சுடலை தன்னிலே
ஆடினார், அன்பருக்(கு) அன்பர், நான்மறை
பாடினார், கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நாடினார் பழவினை நலியும் திண்ணமே.
நாடினார் - நாடியவர்கள்; நலிதல் - அழிதல்;
8)
மதியிலாத் தசமுகன் வாட ஊன்றினார்
துதியறா நாவுடைத் தொண்டர் நெஞ்செனும்
பதியினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மதியினார் அடிதொழ மல்கும் இன்பமே.
மதி இலாத் தசமுகன் - அறிவற்ற இராவணன்; துதி அறா நாவுடைத் தொண்டர் நெஞ்சு எனும் பதியினார் - எப்பொழுதும் நாவால் துதிக்கின்ற தொண்டர்களது நெஞ்சம் என்ற கோயிலில் உறைபவர்; (பதி - உறைவிடம்; கோயில்); மதியினார் - பிறை சூடியவர்; (அப்பர் தேவாரம் - 4.37.6 - "நெய்த்தான மேய கூனிள மதியினானைக் கூடுமா றறிகிலேனே"); மல்குதல் - மிகுதல்; நிறைதல்;
9)
பூவினான் மாலிவர் போற்று சோதியான்
ஏவினால் மூவெயில் எய்த சேவகன்
பாவினால் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேவினான் அடிதொழ வினைகள் வீடுமே.
பூவினான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்; மால் - திருமால்; ஏ - அம்பு; மூ-எயில் - மூன்று மதில்கள்; சேவகன் - வீரன்; பாவினால் - பாமாலைகளைப் பாடி; மேவுதல் - உறைதல்; வீடுதல் - நீங்குதல்;
10)
பேய்மனப் பிட்டர்கள் பேசும் பொய்விடும்;
ஆய்மல ரால்தொழும் அன்பர்க்(கு) அன்பினன்,
பாய்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேயவன் அடிதொழ வினைகள் வீடுமே.
பிட்டர் - பிரட்டர் (பிரஷ்டர்) - நெறியிலிருந்து வழுவினவர்; ஆய்மலரால் தொழும் - ஆய்ந்தெடுத்த சிறந்த பூக்களால் வழிபடும்; மேயவன் - உறைபவன்;
11)
துணிமதி சூடியைச், சூல பாணியை,
அணியுமை பங்கனை, அரையில் நாணெனப்
பணியசை, கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மணியினை அடிதொழ மல்கும் இன்பமே.
துணி-மதி சூடியைச் - ; பிறைச்சந்திரனைச் சூடியவனை; (துணி - துண்டம்);
சூல பாணியை - சூலாயுதத்தை ஏந்தியவனை;
அணி-உமை பங்கனை - அழகிய உமையை ஒரு பங்கில் உடையவனை;
அரையில் நாண் எனப் பணி அசை - அரையில் அரைநாணாக நாகப்பாம்பைக் கட்டிய; (பணி - நாகம்); (அசைத்தல் - கட்டுதல்);
கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை மணியினை - கொள்ளிடக் கரையில் உள்ள திருப்பாற்றுறையில் உறைகின்ற மணி போன்றவனை;
அடிதொழ மல்கும் இன்பமே - வணங்கினால் இன்பம் பெருகும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment