04.08 - மூவலூர் - அண்டத்தார் தொழும்
2013-08-31
மூவலூர் (மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)
----------------------------------
(ஆசிரிய இணைக்குறட்டுறை.
தானா தானன தானன தானன
தானா தானன தானனா)
(சம்பந்தர் தேவாரம் - 1.56.1 - காரார் கொன்றை கலந்த முடியினர்")
1)
அண்டத் தார்தொழும் ஆதிவெண் ணீறணி
முண்டத் தானுறை மூவலூர்
கண்டத் தன்கழல் போற்றிடு காதலர்
பண்டைத் தீவினை பாறுமே.
அண்டத்தார் தொழும் ஆதி - தேவர்கள் தொழும் ஆதிமூர்த்தி;
வெண்ணீறு அணி முண்டத்தான் உறை மூவலூர் - திருநீறு பூசிய நெற்றியை உடைய சிவபெருமான் உறையும் மூவலூரை; (முண்டம் - நெற்றி);
கண்டு அத்தன் கழல் போற்றிடு காதலர் - தரிசித்து, எந்தை அவன் திருவடியைப் போற்றும் அன்பர்களுடைய;
பண்டைத் தீவினை பாறுமே - பழைய தீவினைகள் எல்லாம் அழியும்; (பாறுதல் - அழிதல்);
2)
மதில்கள் மூன்றை எரித்த மலைவில்லி
முதல்வன் மேவிய மூவலூர்
அதனை நண்ணி அரன்கழல் போற்றிடச்
சிதையும் தீவினை திண்ணமே.
மலைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; நண்ணி - அடைந்து; கழல் - கழல் அணிந்த திருவடி; சிதைதல் - அழிதல்;
3)
தீர்த்த மாம்புனல் செஞ்சடைச் சேர்த்தருள்
மூர்த்தி மேவிய மூவலூர்
பூத்தி ரள்கொடு போற்றி இருகரம்
சேர்த்த வர்க்கிடர் தீருமே.
தீர்த்தம் ஆம் புனல் - கங்கை; (அப்பர் தேவாரம் - 4.44.4 - "தீர்த்தமாங் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து);
4)
ஆல நீழல் அமர்ந்தறம் ஓதிய
மூலன் மேவிய மூவலூர்
கோல மாமலர் கொண்டடி போற்றிடச்
சால வும்திருச் சாருமே.
ஆல நீழல் அமர்ந்து அறம் ஓதிய - கல்லால மரத்தின்கீழ் இருந்து மறைப்பொருளை உபதேசித்த; மூலன் - ஆதி; எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணன்; கோல மாமலர் - அழகிய சிறந்த பூக்கள்; சாலவும் திருச் சாரும் - மிகவும் செல்வம் வந்தடையும்;
5)
நேத்தி ரந்திகழ் நெற்றியன் நின்மலன்
மூத்த வன்னுறை மூவலூர்
பூத்த பூவொடு செந்தமிழ் பொன்னடிச்
சாத்து வார்வினை சாயுமே.
நேத்திரம் - கண்; நின்மலன் - நிர்மலன் - மலமற்றவன்; குற்றமற்றவன்; மூத்தவன்னுறை - மூத்தவன் உறை - னகர ஒற்று விரித்தல் விகாரம்; செந்தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன; சாத்துதல் - அணிதல்; சாய்தல் - அழிதல்;
6)
நக்கன் நான்முக னார்சிரம் ஏந்திய
முக்க ணானுறை மூவலூர்ப்
புக்கு நாண்மலர் கொண்டடி போற்றிட
மிக்க நன்மைகள் மேவுமே.
நக்கன் - நக்னன் - திகம்பரன்; நான்முகனார் - பிரமன்; முக்கணான் - முக்கண்ணான் - திரிநேத்திரன்; புக்கு - புகுந்து; மேவுதல் - அடைதல்; பொருந்துதல்;
7)
மன்ன வன்மதி சூடி மகிழ்ந்தவன்
முன்ன வன்னுறை மூவலூர்
சென்னி யால்தொழு வாரவர் தீவினை
வன்னி சேர்விற கன்னதே.
மன்னவன், மதி சூடி மகிழ்ந்தவன், முன்னவன் உறை மூவலூர் - அரசனும், சந்திரனைச் சூடியவனும், முதல்வனுமான சிவன் உறையும் மூவலூரை; (முன்னவன்னுறை - முன்னவன் உறை - னகர ஒற்று விரித்தல் விகாரம்);
சென்னியால் தொழுவார் அவர் தீவினை வன்னி சேர் விறகு அன்னதே - தலையால் வணங்கும் பக்தர்களது தீவினை தீச் சேர்ந்த விறகு போல் சாம்பலாகிவிடும்; (சென்னி - தலை); (வன்னி - தீ); (அப்பர் தேவாரம் - 4.11.3 - "விண்ணுற அடுக்கிய விறகின்" - பாடல் கருத்தைக் காண்க);
8)
பத்து நீள்முடி யானை அடர்த்தருள்
முத்தன் மேவிய மூவலூர்
பத்தி யோடு பரவிடு வார்கட்கு
நித்தல் நன்மை நிகழுமே.
பத்து நீள்-முடியானை அடர்த்து-அருள் முத்தன் மேவிய மூவலூர் - பத்துப் பெரிய கிரீடம் அணிந்த தலைகளையுடைய இராவணனை நசுக்கியருளிய முத்தனான சிவன் உறையும் மூவலூரை; (அடர்த்தல் - நசுக்குதல்); (முத்தன் - அநாதிமுத்தன், இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன்);
பத்தியோடு பரவிடுவார்கட்கு நித்தல் நன்மை நிகழுமே - பக்தியோடு துதிப்பவர்களுக்கு எந்நாளும் நன்மையே. (நிகழ்தல் - சம்பவித்தல்; விளங்குதல்);
9)
நெடிய மாலொடு நான்முகன் நேடிய
முடிவி லானுறை மூவலூர்
கடியு லாமலர் தூவிக் கரைபவர்
செடிய வல்வினை தீருமே.
நேடுதல் - தேடுதல்; முடிவு இலான் - முடிவற்றவன்; (ஆதி அந்தம் இல்லாச் சோதி); கடி உலாம் மலர் - வாசனை கமழும் பூக்கள்; கரைதல் - உள்ளம் உருகுதல்; செடிய - துன்பம் தருவனவாகிய; வல்வினை - கொடிய வினை; (சம்பந்தர் தேவாரம் - 3.3.7 - "அடியவர் தொழுதெழ அமரரேத்தச் செடிய வல்வினை பல தீர்ப்பவனே");
10)
சிந்தி யார்பகர் புன்னெறி செல்லன்மின்
முந்தி னானுறை மூவலூர்
சந்த மார்தமிழ் சாத்திட வல்வினை
சிந்து மேவரும் செல்வமே.
சிந்தியார் பகர் புன்னெறி செல்லன்மின் - எண்ணாதவர்கள் சொல்கின்ற புன்மார்க்கங்களில் போகவேண்டா; (பகர்தல் - சொல்லுதல்; விற்றல்); (சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்");
முந்தினான் உறை மூவலூர் - எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவனான சிவன் உறையும் மூவலூரை;
சந்தம் ஆர் தமிழ் சாத்திட வல்வினை சிந்துமே, வரும் செல்வமே - செந்தமிழ்ப் பாமாலைகளால் துதித்தால் வலிய வினை அழிந்து திரு வந்தடையும்; (சிந்துதல் - அழிதல்);
11)
பூட்டி னான்சரம் மூன்று புரமெரி
மூட்டி னானுறை மூவலூர்
பாட்டி னால்பர விப்பணி வார்வினை
வீட்டு வான்நம் விடையனே.
பூட்டினான் சரம்; மூன்று புரம் எரி மூட்டினான் உறை மூவலூர் - வில்லில் அம்பைக் கோத்து முப்புரங்கள் தீப்பற்றி அழிய எய்த பெருமான் உறையும் மூவலூரை; (பூட்டினான், மூட்டினான் - பூட்டியவன், மூட்டியவன்);
பாட்டினால் பரவிப் பணிவார் வினை வீட்டுவான் நம் விடையனே - பாடல்களால் போற்றிப் பணியும் அன்பர்களது வினையை அழிப்பான் இடபவாகனனான நம் பெருமான்; (வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்); (விடை - எருது);
பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :
ஆசிரிய இணைக்குறட்டுறை என்று கருதலாம். 1, 3-ஆம் அடிகள் - அளவடி; 2, 4-ஆம் அடிகள் - சிந்தடி.
அடி 1 & 3: தான தானன தானன தானன ( = மா கூவிளம் கூவிளம் கூவிளம்).
அடி 2 & 4: தான தானன தானனா ( = மா கூவிளம் கூவிளம்).
அடி நேரசையில் தொடங்கினால், 11 / 8 எழுத்துகள். அடி நிரையசையில் தொடங்கினால் 12 / 9 எழுத்துகள்.
அடிதோறும் 2-ஆம் சீர் நேரசையில் தொடங்கும்.
2, 3, 4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
அடிதோறும் ஈற்றுச்சீரைத் தவிர மற்ற சீர்களில் விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரலாம். அப்படி அங்கு மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரும்.
இவ்வமைப்பு உள்ள சம்பந்தர் தேவாரப் பதிகங்கள்: 1.54 - 1.58 & 1.135.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment