Saturday, January 6, 2018

04.07 - நனிபள்ளி (புஞ்சை) - கொம்பனாள் திருமேனியில்

04.07 - நனிபள்ளி (புஞ்சை) - கொம்பனாள் திருமேனியில்

2013-08-30

நனிபள்ளி (இக்கால வழக்கில் - புஞ்சை)

----------------------------------

(சந்தக் கலித்துறை - தான தானன தானன தானன தானன)

(சம்பந்தர் தேவாரம் - 2.10.1 - “சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை")


1)

கொம்ப னாள்திரு மேனியில் கூறு விரும்பினாய்

அம்பி னாலரண் மூன்றையும் ஆரழல் கூட்டினாய்

நம்ப னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

செம்பொ னேஎனத் தீவினை தீர்வது திண்ணமே.


கொம்பு அனாள் திரு மேனியில் கூறு விரும்பினாய் - "உமையை ஒரு பாகமாக விரும்பியவனே; (கொம்பு அனாள் - பூங்கொம்பு அன்னவள்); (விரும்பினாய் - விரும்பியவனே);

அம்பினால் அரண் மூன்றையும் ஆர் அழல் கூட்டினாய் - ஒரு கணையால் முப்புரங்களையும் தீப்புகச் செய்தவனே;

நம்பனே - விரும்பத்தக்கவனே;

நடனே - திருநடம் செய்பவனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் செம்பொனே எனத் - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய சிறந்த பொன் போன்றவனே" என்று போற்றி வழிபட்டால்; (செம்பொன் - சிறந்த பொன்);

தீவினை தீர்வது திண்ணமே - தீவினையெல்லாம் தீர்வது நிச்சயம்;


2)

போத னேபுன லார்புரி புன்சடை யாய்குழைக்

காத னேநுதல் மேலொரு கண்ணினைக் காட்டிடும்

நாத னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

வேத னேஎன வெவ்வினை ஆயின வீடுமே.


போதனே - ஞானவடிவினனே;

புனல் ஆர் புரி-புன்-சடையாய் - கங்கையைச் சுருண்ட செஞ்சடையில் அணிந்தவனே; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); (புன்மை - புகர் நிறம் - tawny color);

குழைக்-காதனே - காதில் குழையை அணிந்தவனே;

நுதல்மேல் ஒரு கண்ணினைக் காட்டிடும் நாதனே - நெற்றிக்கண் உடைய தலைவனே; (நுதல் - நெற்றி);

நடனே - திருநடம் செய்பவனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் வேதனே என - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய வேதனே; (வேதன் - வேதப்பொருள் ஆனவன்; வேதம் ஓதியவன்);

வெவ்வினை ஆயின வீடுமே - கொடிய வினை அழியும்; (வீடுதல் - கெடுதல்);


3)

புகலி யாரழு போதினில் வந்தருள் புண்ணியா

இகலி யார்எயில் மூன்றை நொடியில் எரித்திடும்

நகையி னாய்நட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

பகவ னேஎனப் பண்டை வினைப்பகை பாறுமே.


புகலியார் அழு போதினில் வந்து அருள் புண்ணியா - "சம்பந்தர் அழுதபொழுது வந்து அருளிய புண்ணியனே; (புகலியார் - புகலியில் அவதரித்த திருஞானசம்பந்தர்);

இகலியார் எயில் மூன்றை நொடியில் எரித்திடும் நகையினாய் - பகைவர்களது முப்புரங்களையும் ஒருநொடி அளவில் சிரித்து எரித்தவனே; (இகலியார் - பகைவர்கள்); (எயில் - கோட்டை); (நொடி - ஒருநொடிப் பொழுது); (நகை - சிரிப்பு);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் பகவனே எனப் பண்டை வினைப்பகை பாறுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய பகவானே" என்று போற்றி வழிபட்டால்;

பண்டை வினைப்பகை பாறுமே - பழவினையெல்லாம் அழியும்; (பண்டை - பழைய); (பாறுதல் - அழிதல்);


4)

புற்ற ராவொடு போழ்மதி யம்புனை கின்றவெம்

கொற்ற வாகுயில் போல்மொழி மாதொரு கூறனே

நற்ற வாநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

உற்ற வாஎன உள்ள வினைத்தொடர் ஓயுமே.


புற்றராவொடு போழ்-மதியம் புனைகின்ற எம் கொற்றவா - "புற்றில் வாழும் பாம்பையும் துண்டப் பிறையையும் அணியும் எம் தலைவனே; (புற்றரா - புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு); (போழ்தல் - பிளத்தல்); (கொற்றவன் - அரசன்);

குயில் போல் மொழி மாது ஒரு கூறனே - இனிய மொழியுடைய உமையை ஒரு கூறாக உடையவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.106.8 - "குயிலினேர்மொழிக் கொடியிடை");

நற்றவா - நல்ல தவ-வடிவினனே;

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் உற்றவா என உள்ள வினைத்தொடர் ஓயுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய உறுதுணையே" என்று உள்ளத்தில் எண்ணிப் போற்றி வழிபட்டால், பழவினையெல்லாம் அழியும்; (உற்றவன் - உறுதுணையாக இருப்பவன்); (என்னுதல் - என்றுசொல்லுதல்); (உள்ள வினைத்தொடர் - இருக்கும் பழவினைகள் எல்லாம்;

உள்ளுதல் - எண்ணுதல் / தியானித்தல் என்ற பொருளிலும் கொள்ளலாம்); (ஓய்தல் - அழிதல்); (* நற்றுணையப்பர் - திருநனிபள்ளி ஈசன் திருநாமம்);


5)

முக்க ணாமுடி மேல்முளை வெண்பிறை சூடினாய்

அக்க ராஅர னேஅர வம்மரை ஆர்த்துழல்

நக்க னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

சொக்க னேஎனத் தொல்வினை போய்ச்சுகம் எய்துமே.


முக்கணா, முடி மேல் முளை வெண்பிறை சூடினாய் - "முக்கண்ணனே, தலைமேல் வெண்பிறைச்சந்திரனை அணிந்தவனே; (சூடினாய் - சூடியவனே);

அக்கரா அரனே - அழிவற்றவனே, ஹரனே; (அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்);

அரவம் அரை ஆர்த்து உழல் நக்கனே - இடுப்பில் ஒரு பாம்பை அரைநாணாகக் கட்டித் திரியும், திகம்பரனே; (அரவம்மரை - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் சொக்கனே எனத் தொல்வினை போய்ச் சுகம் எய்துமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய அழகனே" என்று போற்றி வழிபட்டால், பழவினையெல்லாம் அழிந்து இன்பம் வந்தடையும்; (சொக்கன் - பேரழகு உடையவன்);


6)

சிந்தி யாதடி யாரிடம் சென்றவன் கூற்றினைச்

சிந்து மாறுதை செய்துயிர் காத்தருள் சேவகா

நந்தி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

எந்தை யேஎன வல்லவர்க் கிங்கிடர் இல்லையே.


சிந்தியாது அடியாரிடம் சென்ற வன்-கூற்றினைச் சிந்துமாறு உதை-செய்து உயிர் காத்தருள் சேவகா - "சற்றும் எண்ணாமல் மார்க்கண்டேயரிடம் போன கொடிய வலிய நமனை அழியும்படி உதைத்து மார்க்கண்டேயரது உயிரைக் காத்த வீரனே; (சிந்தியாது - எண்ணிப்பாராமல்); (வன் கூற்று - கொடிய கூற்றுவன்); (சிந்துதல் - அழிதல்); (சேவகன் - வீரன்);

நந்தியே - சிவனே; (நந்தி - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - இன்பவடிவினன்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் எந்தையே என வல்லவர்க்கு இங்கு இடர் இல்லையே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய எம் தந்தையே" என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு இடர் எதுவும் இல்லை;


7)

ஓதி னாய்மறை ஒண்டொடி வண்டமர் ஓதியாள்

பாதி யாய்படர் செஞ்சடை மேற்பணி சூடினாய்

நாதி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

ஆதி யேஎன வல்லவர்க் கல்லலொன் றில்லையே.


ஓதினாய் மறை - "வேதம் ஓதியவனே;

ஒண்டொடி வண்டு அமர் ஓதியாள் பாதியாய் - ஒளி வீசும் வளையல் அணிந்தவளும் வண்டுகள் விரும்பும் கூந்தலை உடையவளுமான உமையை ஒரு பாதியாக உடையவனே; (ஒண்டொடி - ஒண்தொடி - பெண்); (அமர்தல் - விரும்புதல்); (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை");

படர் செஞ்சடைமேல் பணி சூடினாய் - படரும் செஞ்சடையின்மேல் பாம்பை அணிந்தவனே; (பணி - நாகப்பாம்பு);

நாதியே - காப்பாற்றுபவனே; (நாதி - உறவினன்; காப்பாற்றுபவன்; தலைவன்); (அப்பர் தேவாரம் - 6.20.1 - "அயனோடு மாலுங் காணா நாதியை");

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் ஆதியே என வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய ஆதிமூர்த்தியே" என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை; (ஒன்று இல்லை - ஒன்றும் இல்லை; உம்மை தொக்கது); (அப்பர் தேவாரம் - 5.67.1 - "வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லலொன் றில்லையே");


8)

மல்லி னால்மலை பேர்த்தவன் வாயொரு பத்தழ

மெல்ல வேவிரல் ஒன்றினை வெற்பதன் மேலிடு

நல்ல னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

வல்ல னேஎன வல்வினை ஆயின மாயுமே.


மல்லினால் மலை பேர்த்தவன் வாயொரு பத்தழ"தன் பலத்தால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துவய்களும் அழும்படி; (மல் - வலிமை);

மெல்லவே விரல் ஒன்றினை வெற்பு அதன்மேல் இடு நல்லனே - சிறிதளவே திருப்பாத விரல் ஒன்றை மலைமேல் ஊன்றிய நல்லவனே; (மெல்ல - மெதுவாக); (வெற்பு - மலை); (நல்லன் - நல்லவன்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் வல்லனே என வல்வினை ஆயின மாயுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய சர்வவல்லமை உடையவனே" என்று போற்றி வழிபட்டால் வலிய வினையெல்லாம் அழியும்; (வல்லன் - வல்லவன்);


9)

பூவி னானொடு மாலடி போற்றிட ஓங்கினாய்

சேவி னாய்சிவை பங்குடை யாய்மறை செப்பிய

நாவி னாய்நட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

மேவி னாய்என வெவ்வினை ஆயின வீடுமே.


பூவினானொடு மால் அடி போற்றிட ஓங்கினாய் - "தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும் உன் திருவடியை வழிபடுமாறு ஜோதியாகி உயர்ந்தவனே;

சேவினாய் - இடப வாகனனே; (சே - எருது);

சிவை பங்கு உடையாய் - உமையை ஒரு பங்காக உடையவனே; (சிவை - பார்வதி);

மறை செப்பிய நாவினாய் - வேதங்களைப் பாடியருளியவனே;

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் மேவினாய் என வெவ்வினை ஆயின வீடுமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளியவனே" என்று போற்றி வழிபட்டால் கொடிய வினையெல்லாம் அழியும்;


10)

மான மேதரு நீறணி யார்மதி கேடர்கள்

ஈன மேஅவர் சொல்வழி என்றறி மின்களே

ஞான னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

தேன னேஎனத் தீவினை தீர்வது திண்ணமே.


மானமே தரு நீறு அணியார் மதி கேடர்கள் - "உயர்வைத் தரும் திருநீற்றைப் பூசாதவர்கள் குணமற்றவர்கள்; (மானம் - பெருமை); (சம்பந்தர் தேவாரம் - 2.66.4 - "அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு");

ஈனமே அவர் சொல்வழி என்று அறிமின்களே - அவர்கள் சொல்லும் மார்க்கம் இழிவு என்று அறியுங்கள்; (ஈனம் - இழிவு); (அறிமின்கள் - அறியுங்கள்);

ஞானனே நடனே - ஞானவடிவினனே, கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் தேனனே எனத் தீவினை தீர்வது திண்ணமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய தேன் ஒத்தவனே" என்று போற்றி வழிபட்டால் பாவமெல்லாம் அழிவது உறுதி; (தேனன் - தேன் போலும் இனியன்); (அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய மைந்தனைத் தேனனைத்");


11)

குஞ்சி மேற்குர வத்தொடு கூவிளம் சூடினாய்

அஞ்ச லென்றம ரர்க்கருள் செய்தமி டற்றினில்

நஞ்ச னேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்

மஞ்ச னேமணி யேஎன நல்லன மல்குமே.


குஞ்சிமேல் குரவத்தொடு கூவிளம் சூடினாய் - "தலைமேல் குராமலரும் வில்வமும் சூடியவனே; (குஞ்சி - ஆண்கள் தலைமயிர்; தலை); (குரவம் - குராமலர்); (கூவிளம் - வில்வம்); (5.23.9 - " குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே");

அஞ்சல் என்று அமரர்க்கு அருள் செய்த மிடற்றினில் நஞ்சனே - தேவர்களுக்கு அபயம் அளித்த நீலகண்டனே; (மிடறு - கண்டம்);

நடனே - கூத்தனே;

வயல் சூழ் நனிபள்ளியுள் மஞ்சனே மணியே என நல்லன மல்குமே - வயல் சூழ்ந்த திருநனிபள்ளியுள் எழுந்தருளிய வீரனே, மணியே" என்று போற்றி வழிபட்டால் நலம் பெருகும்; (மஞ்சன் - மைந்தன் - வீரன்; இளைஞன்); (அப்பர் தேவாரம் - 4.57.1 - "மஞ்சனே மணியும் ஆனாய்" - மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ. போலி எனலும் ஆம்.); (மல்குதல் - பெருகுதல்; நிறைதல்);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

சந்தக் கலித்துறை - தான தானன தானன தானன தானன - என்ற சந்தம்.

மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் - என்ற அமைப்பு.

கட்டளை அடிகள்.

அடி ஈற்றைத் தவிர மற்ற சீர்கள் நெடிலில் முடியா. (குறில் / குறில்+ஒற்று)

அடிகளில் 2, 3, 4, 5 சீர்களிடையே வெண்டளை பயிலும்.

தானன வரும் இடத்தில் தான (மாச்சீர்) வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

தானன (விளச்சீர்) வரும் இடத்தில் ஒரோவழி தானான (மாங்காய்ச்சீர்) வரலாம்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment