Saturday, January 6, 2018

04.05 – பறியலூர் (திருப்பறியலூர்)

04.05பறியலூர் (திருப்பறியலூர்)



2013-08-13
பறியலூர் (திருப்பறியலூர்) (இக்கால வழக்கில் 'பரசலூர்')
----------------------------------
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு). (திருநேரிசை அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.38.1 - “கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்”)



1)
திணிந்தநெஞ் சுடைய தக்கன்
.. செய்தவேள் விக்குச் செல்லத்
துணிந்தவா னோரை யெல்லாம்
.. தூய்மைசெய் தான்வெண் திங்கள்
அணிந்தவன் அன்ப ராகி
.. அருந்தமிழ் பாடிப் பாதம்
பணிந்தவர் பாவம் தீர்க்கும்
.. பரமனூர் பறிய லூரே.



திணிந்த நெஞ்சு உடைய தக்கன் - கல்மனம் கொண்ட தக்கன்;
செய்த வேள்விக்குச் செல்லத் துணிந்த வானோரை எல்லாம் தூய்மை செய்தான் - தக்கன் செய்த வேள்விக்குச் சென்ற தேவர்களையெல்லாம் தண்டித்துத் தூய்மை செய்தவன்;
(திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.11 - "காமன் உடல்,உயிர் காலன், … தூய்மைகள் செய்தவா தோணோக்க மாடாமோ." - தக்கன் வேள்வியிலும், பிறவிடங்களிலும் தேவர்கள் ஒறுக்கப்பட்டமையால், குற்றம் நீங்கித் தூயராயினர்);
வெண் திங்கள் அணிந்தவன் - பிறைசூடி;
அன்பர் ஆகி அரும் தமிழ் பாடிப் பாதம் பணிந்தவர் பாவம் தீர்க்கும் பரமன் - அடியவர்கள் ஆகித் தேவரம் முதலிய பாமாலைகளைப் பாடித் திருவடியை வழிபட்டவர்களது தீவினைகளைத் தீர்க்கும் பெருமான்;
ஊர் பறியலூர் - அப்பெர்ருமான் உறையும் ஊர் திருப்பறியலூர் ஆகும்;



2)
ஈடுதான் இல்லான் தன்னை
.. இகழ்ந்ததக் கன்றன் சென்னி
ஆடுதான் ஆகு மாறே
.. அன்றொறுத் தருள்செய் ஐயன்
தோடுமோர் காதன் தாளைத்
.. துணையெனப் பற்றி நின்று
பாடுவார் பாவம் தீர்க்கும்
.. பரமனூர் பறிய லூரே.



ஈடு - இணை; ஒப்பு;
தக்கன்றன் சென்னி ஆடுதான் ஆகுமாறு - அவமதித்த தக்கனுடைய தலை ஆட்டுத்தலை ஆகும்படி;
ஒறுத்தல் - தண்டித்தல்;
தோடும் ஓர் காதன் - ஒரு செவியில் தோடு அணிந்தவன்;



3)
விரவிடாத் தக்கன் செய்த
.. வேள்வியைச் செற்ற மைந்தன்
இரவியின் கண்ணைக் கொண்டான்
.. இந்திரன் தோள்து ணித்தான்
கரவிலாக் கரத்தன் கங்கை
.. கரந்தசெஞ் சடையன் பாடிப்
பரவுவார் பாவம் தீர்க்கும்
.. பரமனூர் பறிய லூரே.



விரவிடா - அன்பு இல்லாத;
செறுதல் - அழித்தல்;
மைந்தன் - வீரன்;
இரவி - சூரியன்;
துணித்தல் - வெட்டுதல்;
கரவு இலாக் கரத்தன் - வஞ்சனையின்றி வாரி வழங்கும் கையினன்;
கங்கை கரந்த செஞ் சடையன் - கங்கையைச் சடையினுள் ஒளித்தவன்; (கரத்தல் - ஒளித்தல்);
பரவுதல் - துதித்தல்;



4)
ஓரிடம் நில்லா தெங்கும்
.. உலவிடும் புரங்கள் சுட்டான்
ஊரிடும் பிச்சை கொள்ள
.. ஒருசிரம் ஏந்தும் கையன்
காரிடம் கொண்ட கண்டன்
.. காய்நுதற் கண்ணன் கானில்
பாரிடம் சூழ ஆடும்
.. பரமனூர் பறிய லூரே.



புரங்கள் சுட்டான் - முப்புரங்களை எரித்தவன்;
ஒரு சிரம் ஏந்தும் கையன் - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தியவன்;
கார் இடம் கொண்ட கண்டன் - நீலகண்டன்;
காய் நுதற் கண்ணன் - எரிக்கும் கண்ணை நெற்றியில் உடையவன்;
கான் - சுடுகாடு;
பாரிடம் - பேய்;



5)
இகலிய புரங்கள் மூன்றை
.. எரிகணை ஒன்றால் எய்தான்
புகலிமன் தமிழைப் பாடிப்
.. போற்றிசெய் தேத்து வார்க்குப்
புகலவன் இகழ்ந்த தக்கன்
.. புரிந்தவவ் வேள்வி தன்னிற்
பகலவன் பல்லு குத்த
.. பரமனூர் பறிய லூரே.



இகலிய புரங்கள் மூன்றை எரிகணை ஒன்றால் எய்தான் - பகைத்த முப்புரங்களை எரிக்கும் கணை ஒன்றால் எய்தவன்; (இகலுதல் - பகைமைகொள்ளுதல்);
புகலிமன் தமிழைப் பாடி - சம்பந்தர் அருளிய தேவாரத்தைப் பாடி;
(புகலி மன் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒரு பெயர்); (மன் - தலைவன்);
புகல் அவன் - அடைக்கலமாக இருப்பவன்;
இகழ்ந்த தக்கன் புரிந்த அவ்வேள்வி தன்னில் - அவமதித்துத் தக்கன் செய்த அந்த வேள்வியில்;
பகலவன் பல் உகுத்த - சூரியனின் பல்லைத் தகர்த்த;
(அப்பர் தேவாரம் - 6.33.10 - "பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்");



6)
பூவையே கணையாக் கொண்டு
.. போர்புரி காமன் ஆகம்
வேவவோர் நெற்றிக் கண்ணை
.. விழித்தவன் அன்ப ருக்குக்
காவலாய்க் கூற்று தைத்த
.. கழலினன் இமவான் பெற்ற
பாவையோர் பங்க மர்ந்த
.. பரமனூர் பறிய லூரே.



பூவையே கணையாக் கொண்டு போர்புரி காமன் ஆகம் - மலர்களையே அம்பாகக் கொண்டு தாக்கும் மன்மதனது உடல்; (ஆகம் - உடல்);
வேவ - வெந்து சாம்பலாக;
அன்பருக்குக் காவல் ஆய்க் கூற்று உதைத்த கழலினன் - மார்க்கண்டேயருக்குப் பாதுகாவல் ஆகி நமனைத் திருவடியால் உதைத்தவன்;
இமவான் பெற்ற பாவை ஓர் பங்கு அமர்ந்த பரமன் - மலையான் மகளை ஒரு பாகமாக விரும்பிய பரமன்;



7)
சாம்பலைச் சாந்த மாகத்
.. தரித்துநன் மலர்கள் தூவி
ஓம்பிடும் பத்தர்க் கென்றும்
.. உறுதுணை யாக நிற்பான்
தேம்புனல் சடையில் தேக்கிச்
.. சேயிழைக் கிடத்தை ஆக்கிப்
பாம்பினை அரையில் வீக்கும்
.. பரமனூர் பறிய லூரே.



சாம்பல் - திருநீறு;
சாந்தம் - சந்தனம்;
தேம் புனல் - இனிய புனல் - கங்கை;
சேயிழை - பெண் - உமையம்மை;
இடத்தை - இடப்பாகத்தை;
வீக்குதல் - கட்டுதல்;



8)
கடலிடை எழுந்த நஞ்சைக்
.. கருமணி ஆக்கும் கண்டன்
அடல்விடை ஒன்றில் ஏறி
.. அரக்கனை அடர்த்துப் பின்னர்ப்
படையொடு நாளும் தந்தான்
.. படவர வோடு திங்கள்
படர்சடை மீது சூடும்
.. பரமனூர் பறிய லூரே.



அடல் விடை ஒன்றில் ஏறி - வலிய எருதின்மேல் ஏறுபவன்;
அரக்கனை அடர்த்து - இராவணனை நசுக்கி; (அடர்த்தல் - நசுக்குதல்);
படை - ஆயுதம் - இங்கே சந்திரஹாஸம் என்ற வாள்;
நாள் - வாழ்நாள்; ஆயுள்;
பட அரவு - படத்தை உடைய நாகப்பாம்பு;



9)
வானிலே றன்னத் தோடு
.. மண்ணகழ் மாலும் காணார்
கானிலா டுங்க ருத்தன்
.. கண்ணுத லான்த னக்கோர்
கோனிலான் குளிர்ந்த கங்கை
.. கொக்கிற கரவம் கொன்றை
பானிலா விளங்கும் சென்னிப்
.. பரமனூர் பறிய லூரே.



பதம் பிரித்து:
வானில் ஏறு அன்னத்தோடு
.. மண் அகழ் மாலும் காணார்;
கானில் ஆடும் கருத்தன்;
.. கண்ணுதலான்; தனக்கு ஓர்
கோன் இலான்; குளிர்ந்த கங்கை,
.. கொக்கிறகு, அரவம், கொன்றை,
பால் நிலா விளங்கும் சென்னிப்
.. பரமனூர் பறிய லூரே.


வானில் ஏறு அன்னத்தோடு மண் அகழ் மாலும் காணார் - அன்னமாகி வானில் உயர்ந்த பிரமன், பன்றியாகி மண்ணை அகழ்ந்த திருமால் இவர்களால் காண ஒண்ணாதவன்;
கானில் ஆடும் கருத்தன் - சுடுகாட்டில் ஆடும் கடவுள்; (கருத்தன் - கர்த்தா - மூலகாரணன்);
தனக்கு ஓர் கோன் இலான் - எல்லார்க்கும் தலைவன்;
(அப்பர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்குங் குடியல்லோம் .... தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன் ..." - தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையன் ஆகிய சங்கரன்);
கொக்கிறகு - கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்;



10)
சத்தியம் பேச மாட்டார்
.. தத்துவம் அறியா அந்த
எத்தரு ரைக்கும் மார்க்கம்
.. இருள்தரும் பேண வேண்டா
நித்தியன் நெற்றிக் கண்ணன்
.. நீறணிந் துருகி ஏத்தும்
பத்தருக் கின்பம் நல்கும்
.. பரமனூர் பறிய லூரே.



அந்த எத்தர் - அவ்வஞ்சகர்கள்; குருட்டு வஞ்சகர்கள்;
அந்த - அத்தகைய;
அந்தம் - குருடு; அஞ்ஞானம்;
எத்தர் - ஏமாற்றுவோர்; வஞ்சகர்;
இருள் - துன்பம்; அறியாமை;



11)
பாலனைக் கொல்வ தற்குப்
.. பரிவிலா தோடி வந்த
காலனைக் காய்ந்த காலன்
.. கையினிற் கபாலன் சூலன்
வேலனைப் பெற்ற ஐயன்
.. மேருவை வளைத்த கையன்
பாலன வெள்ளே றேறும்
.. பரமனூர் பறிய லூரே.



பாலன் - சிறுவன் - மார்க்கண்டேயர்;
பரிவு - இரக்கம்;
வேலன் - முருகன்;
மேருவை வளைத்த கையன் - முப்புரம் எரித்த நாளில் மேருமலையை வில்லாக வளைத்தவன்;
பால் அன விடையில் ஊரும் - பால் போல் வெண்ணிறம் உடையதும் அடியவர்க்குக் காவல் ஆனதும் ஆன இடபத்தின்மேல் ஏறிச்செல்லும்;
பாலனம் - பாதுகாப்பு (Protection, defence);
பால் அன - பால் அன்ன - பால் போன்ற;
பாலன வெள் ஏறு ஏறும் - காக்கும் வெண்ணிற இடபம்; பால் போல் வெண்ணிறத்து எருது;
(அப்பர் தேவாரம் - 4.2.1 -
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
.. அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
----- அண்ணல் அரண் முரண் ஏறு - தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த, பகைவரோடு மாறுபடும் எருது)



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) திருப்பறியல் வீரட்டம் - அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று;
2) திருப்பறியலூர் - வீரட்டேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=510
திருப்பறியலூர் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=192

----------- --------------

No comments:

Post a Comment