04.06 - காழி (சீகாழி) - பிறையணி சடையினானை
2013-08-21
காழி (இக்கால வழக்கில் - சீர்காழி)
----------------------------------
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு). (திருநேரிசை அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.56.1 - மாயிரு ஞால மெல்லாம்)
1)
பிறையணி சடையி னானைப் .. பெண்ணொரு பாகத் தானை
நறைமலி கொன்றை யானை .. நன்னிலம் மன்னி னானை
அறைகடல் தனிலெ ழுந்த .. அருவிடம் அமுது செய்த
கறைமிடற் றானை என்றும் .. காழியிற் காண லாமே.
பிறையணி சடையினானை - சடைமேற் சந்திரனைச் சூடியவனை;
பெண் ஒரு பாகத்தானை - உமைபங்கனை;
நறை மலி கொன்றையானை - மணம் மிக்க கொன்றையை அணிந்தவனை; (நறை - தேன்);
நன்னிலம் மன்னினானை - நன்னிலம் என்ற தலத்தில் எழுந்தருளியவனை;
அறை-கடல்தனில் எழுந்த அரு-விடம் அமுதுசெய்த கறைமிடற்றானை - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய கொடிய நஞ்சை உண்ட நீலகண்டனை;
என்றும் காழியில் காணல் ஆம் - அப்பெருமான் சீகாழியில் நீங்காது உறைகின்றான்; (காழி - சீகாழி - சீர்காழி); (ஏ - ஈற்றசை);
2)
நீர்மலி சடையி னானை .. நெடுங்களம் மேவி னானை
ஓர்விடை ஊர்தி யானை .. உம்பருக் கிரங்கி அன்று
தேர்மிசை நின்று மூன்று .. திரிபுரம் செற்ற தேவைக்
கார்மிடற் றானை என்றும் .. காழியிற் காண லாமே.
நீர்மலி சடையினானை - சடையில் கங்கையைத் தரித்தவனை;
நெடுங்களம் - ஒரு தலத்தின் பெயர்;
உம்பர் - தேவர்;
மூன்று திரிபுரம் - திரிந்த புரங்கள் மூன்று;
செற்ற தேவை - அழித்த கடவுளை;
கார் மிடறு - நீலகண்டம்;
3)
ஒண்ணுதல் மங்கை தன்னை .. ஒருபுறம் காட்டி னானை
எண்ணுதல் செய்யும் அன்பர் .. இருவினை நீக்கு வானைத்
தண்ணதி சூடி னானைச் .. சக்கரப் பள்ளி யானைக்
கண்ணுத லானை என்றும் .. காழியிற் காண லாமே.
ஒண்ணுதல் - ஒள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றி;
எண்ணுதல் - தியானித்தல்;
தண் நதி - குளிர்ந்த கங்கை;
சக்கரப்பள்ளி - ஒரு தலத்தின் பெயர்;
கண்ணுதலான் - கண் நுதலான் - நெற்றிக்கண்ணன்;
4)
சினவிடை ஊர்தி யானைச் .. சேய்ஞலூர் மேவி னானை
அனநடை உடைய மங்கைக் .. கன்பனை இன்பன் தன்னைப்
புனல்விழு சடையி னானைப் .. பொடியணி மேனி யானைக்
கனல்மழு வானை என்றும் .. காழியிற் காண லாமே.
சினவிடை ஊர்தியானை - சினக்கின்ற இடபத்தை வாகனமாக உடையவனை;
சேய்ஞலூர் - ஒரு தலத்தின் பெயர்;
அனநடை உடைய மங்கைக்கு அன்பனை - அன்னநடை உடைய உமைக்கு அன்பனை;
பொடி - திருநீறு;
கனல்மழுவான் - கனலும் மழுவும் ஏந்தியவன்; (அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவன் என்றும் கொள்ளலாம்);
5)
மாய்ந்தவர் சேரும் காட்டில் .. மாநடம் ஆடு வானைத்
தேய்ந்தவெண் திங்கள் சூடிச் .. சிவபுரம் மேவி னானைத்
தோய்ந்தவன் பகத்தர் அஞ்சத் .. துரத்திய கூற்றைக் காலாற்
காய்ந்தவன் தன்னை என்றும் .. காழியிற் காண லாமே.
மாய்ந்தவர் சேரும் காடு - சுடுகாடு;
சிவபுரம் - ஒரு தலத்தின் பெயர்;
தோய்ந்த அன்பு அகத்தர் - அன்பு தோய்ந்த அகத்தர் - பக்தியில் தோய்ந்த உள்ளத்தை உடைய மார்க்கண்டேயர்;
அஞ்சத் துரத்திய கூற்றைக் காலால் காய்ந்தவன் தன்னை - மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரைக் கொல்ல நெருங்கிய நமனைக் காலால் உதைத்தவனை; (காய்தல் - கோபித்தல்); (அப்பர் தேவாரம் - 6.33.8 - "காலனைக் காலாற் காய்ந்த கடவுள்");
6)
பாட்டினால் தன்னை நாளும் .. பரவுவார் வினையை எல்லாம்
வீட்டினான் தன்னை மேரு .. வில்லினில் நாகம் நாணாப்
பூட்டினான் தன்னை நீறு .. பூசியை நெற்றி யிற்கண்
காட்டினான் தன்னை என்றும் .. காழியிற் காண லாமே.
வீட்டுதல் - அழித்தல்;
நாணா - நாணாக;
நீறு பூசியை - திருநீற்றைப் பூசிய மேனியினானை;
7)
மட்டலர் ஒன்றை எய்த .. மன்மதன் ஆகம் நீறாச்
சுட்டவன் தன்னைத் தூய .. சோதியைத் தாளில் பூக்கள்
இட்டுவான் ஏத்து கின்ற .. ஈசனை அரையில் நாகம்
கட்டுவான் தன்னை என்றும் .. காழியிற் காண லாமே.
மட்டு அலர் - வாசமலர்;
ஆகம் - உடல்;
நீறா - நீறாக – சாம்பலாக;
தாளில் பூக்கள் இட்டு வான் ஏத்துகின்ற ஈசனை - தேவர்களால் திருவடியில் பூக்கள் தூவித் துதிக்கப்பெறுகின்ற ஈசனை; (வான் - வானுலகு; தேவர்கள்);
அரையில் நாகம் கட்டுவான் தன்னை - அரைநாணாக நாகப்பாம்பைக் கட்டியவனை;
8)
அளியிலா அரக்கர் கோனை .. அடர்த்திசை கேட்டு வாளும்
அளிபெரு மானை முக்கண் .. அண்ணலை ஆதி யானைப்
பிளிறுதல் செய்து வந்த .. பெருங்கரு மலைநி கர்த்த
களிறுரித் தானை என்றும் .. காழியிற் காண லாமே.
அளி - அன்பு;
அரக்கர் கோன் - இராவணன்;
அடர்த்து - நசுக்கி;
இசை கேட்டு வாளும் அளி பெருமானை - இராவணன் பாடிய இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு (வாழ்நாளும், பெயரும்,) வாளும் கொடுத்த பெருமானை; (வாளும் - உம் - எச்சவும்மை);
ஆதியான் - முதல்வன்; ஆதிப்பிரான்;
பிளிறுதல் செய்து வந்த பெரும்-கரு-மலை நிகர்த்த களிறு உரித்தானை - பிளிறிக்கொண்டு வந்த பெரிய கரிய மலை போன்ற யானையின் தோலை உரித்தவனை;
9)
பூத்திரள் கொண்டு போற்றாப் .. போதனும் மாலும் காணாத்
தீத்திரள் ஆயி னானைத் .. திருமலி ஆனைக் காவில்
நீர்த்திரள் ஆயி னானை .. நினைந்தடி போற்று வாரைக்
காத்தருள் வானை என்றும் .. காழியிற் காண லாமே.
பூத்திரள் கொண்டு போற்றாப் - பல மலர்களால் வழிபாடு செய்யாத;
போதனும் மாலும் காணாத் தீத்திரள் ஆயினானை - பிரமனாலும் திருமாலாலும் காண ஒண்ணாத ஜோதி ஆனவனை; (போதன் - பூவின்மேல் இருக்கும் பிரமன்; போது - பூ); (தீத்திரள் - ஜோதி);
(அப்பர் தேவாரம் - 5.95.1 - "புக்கணைந்து புரிந்தலர் இட்டிலர் ... சுடரொளி வண்ணனை மிக்குக் காணலுற்றார் அங்கிருவரே");
திரு மலி ஆனைக்காவில் நீர்த்திரள் ஆயினானை - திரு மிக்க திருவானைக்கா என்ற தலத்தில் நீர்த்திரள் வடிவினனை; (அப்பர் தேவாரம் - 6.63.1 - "தென் ஆனைக்காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே");
10)
மாசும றைத்த நெஞ்சர் .. மறைவழி பழித்து ழல்வார்
பேசுபு றன்கள் பேணேல் .. பிறைமதி சூடி னானை
வீசுதென் றல்சேர் வீழி .. மிழலையில் தமிழ்க்கி ரங்கிக்
காசுதந் தானை என்றும் .. காழியிற் காண லாமே.
மாசு மறைத்த நெஞ்சர் - அழுக்கால் மறைக்கப்பட்ட நெஞ்சத்தை உடையவர்கள்; (மாசு - குற்றம்; அழுக்கு; தீமை);
மறைவழி பழித்து உழல்வார் - வேதநெறியைப் பழித்துத் திரிகின்றவர்கள்; (உழலுதல் - அலைதல்);
பேசு புறன்கள் பேணேல் - அவர்கள் சொல்லும் புறனுரைகளை நீங்கள் மதிக்கவேண்டா;
வீழிமிழலையில் தமிழ்க்கு இரங்கிக் காசு தந்தானை - திருவீழிமிழலையில் திருஞான சம்பந்தர்க்கும் திருநாவுக்கரசர்க்கும் படிக்காசு நல்கியவனை;
11)
அயிலுறு சூலத் தானை .. அடிதொழும் அன்பர் கட்கு
வெயிலினில் நிழலொப் பானை .. வேட்கையில் நீரொப் பானை
மயிலையின் னம்பர் ஆரூர் .. மன்னிய மணியை ஓங்கு
கயிலையு ளானை என்றும் .. காழியிற் காண லாமே.
அயில் உறு சூலத்தானை - கூர்மையான சூலத்தை ஏந்தியவனை;
வேட்கை - தாகம்;
மயிலை இன்னம்பர் ஆரூர் மன்னிய மணியை - மயிலாப்பூர்/மயிலாடுதுறை, இன்னம்பர் (இன்னம்பூர்), திருவாரூர் என்ற தலங்களில் உறையும் மாணிக்கம் போன்றவனை; (மயிலை - இப்பெயர் திருமுறையில் சில பதிகங்களில் மயிலாப்பூருக்கும் சில பதிகங்களில் மயிலாடுதுறைக்கும் வருவதைக் காணலாம்);
ஓங்கு கயிலை உளானை - உயர்ந்த கயிலையில் உள்ளவனை;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment