Saturday, February 17, 2018

04.10 - பூவாளூர் - கானாறு கணையெய்த

04.10 - பூவாளூர் - கானாறு கணையெய்த

2013-09-04

பூவாளூர் (இத்தலம் லால்குடி அருகே உள்ளது)

----------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை")


1)

கானாறு கணையெய்த காமனுடல் பொடிசெய்தாய்,

வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்துகந்தாய்,

ஊனாறு சிரமேந்தீ, உன்னடியேற் கருள்புரியாய்,

பூநாறு பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


கான் நாறு கணை எய்த காமன் உடல் பொடி செய்தாய் - மணம் வீசும் மலர்க்கணையை எய்த மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கியவனே; (கான் - வாசனை); (நாறுதல் - மணம் வீசுதல்);

வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்து உகந்தாய் - கங்கையையும் பிறைச்சந்திரனையும் நீண்ட சடையில் சூடி மகிழ்ந்தவனே; (வானாறு - கங்கை); (வார்தல் - நீள்தல்); (ஏந்தீ - ஏந்தியே - ஏந்தியவனே);

ஊன் நாறு சிரம் ஏந்தீ; உன் அடியேற்கு அருள்புரியாய் - புலால் நாற்றம் வீசும் பிரமன் தலையை ஏந்தியவனே; உன் பக்தனான எனக்கு அருள்புரிவாயாக;

பூ நாறு பொழில் ஆரும் பூவாளுர் மேயவனே - பூக்கள் மணம் வீசும் சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளிய பெருமானே.


2)

நற்றவனே, நாளுமுனை நம்பியடி பணிவார்கட்(கு)

உற்றவனே, ஊர்விடையொன்(று) உகந்தேறும் கொற்றவனே,

சொற்றமிழால் துணையடியே துதிப்பேற்கும் அருள்புரியாய்,

புற்றரவா, பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


நம்புதல் - விரும்புதல்; உற்றவன் - உற்ற துணையாக இருப்பவன்; கொற்றவன் - அரசன்; சொற்றமிழ் - சொல்+தமிழ்; துணையடி - இரு-திருவடிகள்; துதிப்பேற்கும் - துதிக்கின்ற அடியேனுக்கும்; புற்றரவா - புற்றில் வாழும் தன்மை உடைய அரவத்தை அணிந்தவனே;


3)

பண்ணியலும் பாடலுக்கு மிழலைதனில் படியருள்வாய்,

தண்ணியலும் சந்திரனைச் சடைவைத்தாய், அடிபரவில்

பண்ணியவல் வினைதீர்ப்பாய், பணிந்தேற்குப் பரிந்தருளாய்,

புண்ணியனே, பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


* அடி-1 - திருவீழிமிழலையில் சம்பந்தருக்கும் அப்பருக்கும் தினமும் படிக்காசு அருளியதைச் சுட்டியது.

பண் இயலும் பாடல் - தேவாரம்; படி - படிக்காசு; தண் - குளிர்ச்சி; பரவில் - பரவினால்; துதித்தால்; பணிந்தேற்கு - பணிந்து தொழும் எனக்கு; பரிதல் - இரங்குதல்;


4)

முன்னிடையாய் முடிவானாய், மூவாத முக்கண்ணா,

மின்னிடையாள் பங்கினனே, வெள்விடையாய், மழுப்படையாய்,

என்னுடையாய், என்றுன்னை ஏத்தலல்லால் மற்றறியேன்,

புன்சடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


"முன் இடை ஆய் முடிவு ஆனாய் - "முதலும் நடுவும் ஆகி முடிவும் ஆனவனே;

மூவாத முக்கண்ணா - என்றும் இளமையோடு இருக்கும் முக்கண்ணனே;

மின் இடையாள் பங்கினனே - மின்னற்கொடி போல் நுண்ணிய இடையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்தவனே;

வெள் விடையாய் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே;

மழுப்படையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;

என் உடையாய்" என்று உன்னை ஏத்தல் அல்லால் மற்று அறியேன் - என் சுவாமியே" என்று உன்னைத் துதித்தல் அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன்;

புன்சடையாய்; பொழில் ஆரும் பூவாளுர் மேயவனே - செஞ்சடை உடையவனே; சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே. (அருள்புரிவாயாக).


5)

துரிசடையா நெஞ்சத்தார் துதிசெய்து மகிழ்கின்ற

பரிசுடையாய், பாரிடங்கள் முழவார்க்கப் பல்பிணங்கள்

எரிசுடலை யிடையாடீ, இணையடியை மறவேனே,

புரிசடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


துரிசு - குற்றம்; பரிசு - குணம்; பெருமை; பாரிடம் - பூதம்; முழவு ஆர்க்க - முழவுகளை ஒலிக்க; பல்பிணங்கள் எரி சுடலையிடை ஆடீ - பல பிணங்கள் எரியும் சுடலையில் ஆடுபவனே; புரி-சடையாய் - சுருண்ட சடையை உடையவனே;


6)

கற்சிலையைக் கையேந்திக் கணையொன்றால் புரமெரித்த

அற்புதனே, தொழுமிரதிக் கருள்புரிந்தாய், உன்னிரண்டு

நற்பதமே நாடிவந்தேன், நரைவிடையாய், நஞ்சுண்ணும்

பொற்புடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


கற்சிலை - கல்+சிலை - மேருமலையாகிய வில்; தொழும் இரதிக்கு அருள்புரிந்தாய் - தொழுத இரதிக்கு இரங்கி மன்மதனுக்கு உயிர்கொடுத்தவனே; (இரதிக்கு அருள்புரிந்த வரலாற்றைப் பூவாளூர்த் தலபுராணத்திற் காண்க). நரை - வெண்மை; பொற்பு - தன்மை;


7)

நதியணியும் நாதாஉன் நாமத்தை மறவேனே,

துதியடியார்க்(கு) அணியாகித் துயர்துடைப்பாய், இரதிக்குப்

பதியவனை உயிர்ப்பித்த பரிவுடையாய், பழையவனே,

புதியவனே, பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


அணி - அருகே; சமீபத்தில்; துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்; இரதிக்குப் பதி - மன்மதன்;


8)

வலியதனைக் கருதிவந்து மலையெடுத்த வாளரக்கன்

மெலியவொரு விரலூன்றி மிகவுமருள் புரிந்தவனே,

கலியடையா வாறென்னைக் காத்தருளாய், கண்ணுதலே,

புலியதளாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


வலி அதனை - தன் வலிமையை; வாள் அரக்கன் - கொடிய இராவணன்; (வாள் - கொடுமை); மெலிதல் - வருந்துதல்; கலி - துன்பம்; கண்ணுதலே - நெற்றிக்கண்ணனே; புலி-அதளாய் - புலித்தோலை அணிந்தவனே; (அதள் - தோல்);


9)

கருவ(ம்)மலி நெஞ்சினராய்க் கழலுச்சி காணமுயல்

இருவரறி தற்கரிய எரியானாய், இருள்கொண்ட

ஒருமிடறு திகழ்வோனே, உனைப்பரவும் எனக்கருளாய்,

பொருவிடையாய், பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


கருவம் மலி நெஞ்சினராய்க் கழல் உச்சி காண முயல் இருவர் - ஆணவத்தோடு அடியும் முடியும் தேடிய திருமாலும் பிரமனும்; (கருவம் - கர்வம், செருக்கு); (அப்பர் தேவாரம் - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - 5.95.6 - "தருக்கினாற் சென்று தாழ்சடை அண்ணலை நெருக்கிக் காணலுற்றார் அங்கு இருவரே"); ஒரு மிடறு - ஒப்பற்ற கண்டம்; பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பொரு-விடை - போர்செய்ய வல்ல இடபம்;


10)

நள்ளார்கள் அரனடியை; நாக்கொண்டு பொய்யல்லால்

விள்ளார்கள்; அவர்பிதற்றும் வெற்றுரையைப் பொருளாகக்

கொள்ளார்கள் நன்மதியோர்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்

புள்ளார்பூம் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.


நள்ளார்கள் - விரும்பமாட்டார்கள்; (நள்ளுதல் - நட்டல் - விரும்புதல்); நாக்கொண்டு - நாக்கால்; பொய் அல்லால் - பொய்யைத் தவிர வேறு ஒன்றும்; விள்ளார்கள் - சொல்லமாட்டார்கள்; (விள்ளுதல் - சொல்லுதல்); கொள்ளார்கள் - மதிக்கமாட்டார்கள்;

கொள்ளார்கள் நன்மதியோர் கும்பிடுவார் வினைதீர்ப்பான் - "....கொள்ளார்கள் நன்மதியோர்; நன்மதியோர் அரனடியைக் கும்பிடுவார்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்...." என்றும் இடைநிலைத்-தீவகமாக இயைத்தும் பொருள்கொள்ளலாம்;

புள் ஆர் பூம்பொழில் - பறவைகள் ஒலிக்கும் சோலைகள்;


11)

நாகமணி மார்பினனே, நயந்துண்ட நஞ்சதனால்

மேகமணி கண்டத்தாய், வெற்பரையன் மங்கையொரு

பாகமணி ஆகத்தாய், பணிவார்க்குப் பரிவாய்,முப்

போகமணி வயல்சூழ்ந்த பூவாளுர் மேயவனே.


பதம் பிரித்து:

நாகம் அணி மார்பினனே; நயந்து உண்ட நஞ்சு அதனால்

மேகம் அணி கண்டத்தாய்; வெற்பு அரையன் மங்கை ஒரு

பாகம் அணி ஆகத்தாய்; பணிவார்க்குப் பரிவாய்; முப்

போகம் அணி வயல் சூழ்ந்த பூவாளுர் மேயவனே.


நாகம் அணி மார்பினனே - பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவனே;

நயந்து உண்ட நஞ்சு அதனால் மேகம் அணி கண்டத்தாய் - விரும்பி உண்ட விடத்தால் கழுத்தில் மேகம்போல் கருமையை (/ மேகம் போல் அழகிய) அணிந்தவனே; (மேகமணி - 1. மேகம் அணி; 2. மேக மணி); (மணி - அழகிய);

வெற்பு அரையன் மங்கை ஒரு பாகம் அணி ஆகத்தாய் - மலைமகளை ஒரு பாகமாகக் கொண்ட திருமேனி உடையவனே;

பணிவார்க்குப் பரிவாய் - பணிகின்ற பக்தர்களுக்கு இரங்குபவனே;

முப்-போகம் அணி வயல் சூழ்ந்த பூவாளுர் மேயவனே - வருடத்திற்கு மூன்று போகம் விளைச்சல் திகழும் செழுமையான வயல்கள் சூழ்ந்த பூவாளுர் என்ற தலத்தில் எழுந்தருளியவனே; (முப்போகமணி வயல் - முப்போகம் அணி வயல் / முப்போக மணி வயல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment