04.11 - ஆக்கூர் - வையம் வந்து வணங்கும்
2013-09-21
ஆக்கூர் (இத்தலம் திருக்கடவூர் அருகே உள்ளது)
----------------------------------
(12 பாடல்கள்)
(கலிவிருத்தம்; திருக்குறுந்தொகை அமைப்பு)
1)
வையம் வந்து வணங்கும் வரதனோர்
கையில் வெள்ளைக் கபாலம் தனையேந்தி
ஐயம் தேரும் அணியாரும் ஆக்கூரில்
தையல் பங்கினன் தான்தோன்றி அப்பனே.
வையம் வந்து வணங்கும் வரதன் - உலகினர் வந்து வணங்குகின்ற வரதன் (வரம் அருள்பவன்);
ஓர் கையில் வெள்ளைக் கபாலம்-தனை ஏந்தி ஐயம் தேரும் - ஒரு கையில் வெள்ளை மண்டையோட்டை ஏந்திப் பிச்சையேற்பவன்; ("தேரும் - கொள்வான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்; செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);
அணி ஆரும் ஆக்கூரில் - அழகிய ஆக்கூரில் உறைகின்ற;
தையல் பங்கினன் - உமைபங்கன்; (தையல் - பெண்);
தான்தோன்றி அப்பனே - தான்தோன்றி-அப்பன் என்ற திருநாமம் உடைய பெருமான்; (* இத்தலத்து ஈசன் திருநாமம்);
2)
எங்கும் என்றும் இருப்பவன், அன்பர்க்குப்
பொங்கும் இன்பம் அருளிப் புரப்பவன்,
அங்கம் பூணும் அணியாரும் ஆக்கூரில்
சங்கம் ஆர்கரன், தான்தோன்றி அப்பனே.
அங்கம் - எலும்பு; பூணும் - அணிபவன்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); சங்கம் ஆர் கரன் - வளையல் பொருந்திய கையினன் - அர்த்தநாரீஸ்வரன்;
3)
கண்ணி ரண்டும் கசியக் கரம்கூப்பி
எண்ணி நிற்கும் அடியார்க்(கு) இடர்நீக்கி
அண்ணி நிற்கும் அணியாரும் ஆக்கூரில்
தண்ண திச்சடைத் தான்தோன்றி அப்பனே.
அண்ணி நிற்கும் - அடுத்திருப்பான்; (அண்ணுதல் - கிட்டுதல்); தண்ணதிச்சடை - தண் நதிச் சடை - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கிய;
4)
அஞ்சி உம்பர் அடிதொழக் கண்டத்தில்
நஞ்ச டைத்தவன், நன்னீர் நதியடை
அஞ்ச டைப்பரன், அணியாரும் ஆக்கூரில்
தஞ்ச ளிப்பவன், தான்தோன்றி அப்பனே.
உம்பர் - தேவர்; அஞ்சடைப்பரன் - அம் சடைப் பரன் - அழகிய சடையை உடைய மேலானவன்; தஞ்சு - தஞ்சம்;
5)
இலையே என்னா(து) இரப்பவர்க்(கு) ஈபவன்,
சிலையால் மூவெயில் தீயெழச் செற்றவன்,
அலையார் சென்னி, அணியாரும் ஆக்கூரில்
தலையாய் நின்றவன், தான்தோன்றி அப்பனே.
இலை - இல்லை; சிலை - வில்; மூ-எயில் - முப்புரம்; அலை ஆர் சென்னி - கங்காதரன்; (சென்னி - சென்னியினன் என்ற பொருளில்); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - தழல் போலுந் திருமேனீ - "திருமேனி" என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது); தலை - தலைவன்;
6)
விமலன் மாவடு வைக்கண மங்கலக்
கமரில் வந்து கடித்தவன், இன்னமு(து)
அமரர்க்(கு) ஈந்தான், அணியாரும் ஆக்கூரில்
தமருக்(கு) உற்றவன், தான்தோன்றி அப்பனே.
விமலன் - மலமற்றவன்; மாவடுவைக் கணமங்கலக் கமரில் வந்து கடித்தவன் - அரிவாட்டாய நாயனார்க்கு அருளியதைச் சுட்டியது; (கணமங்கலம் - அரிவாட்டாய நாயனார் வாழ்ந்த ஊர்); கமர் - நிலத்தில் இருக்கும் வெடிப்பு ; இன்-அமுது அமரர்க்கு ஈந்தான் - இனிய அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தவன்; தமர் - அடியவர்கள்; உற்றவன் - சுற்றத்தான்; (அப்பர் தேவாரம் - 6.85.6 - "உற்றவன்காண் உறவெல்லாம் ஆவான் தான்காண்");
7)
மங்கை பங்கனே, கங்கை முடியனே,
எங்கள் நாதனே, என்றடி யார்தொழும்
அங்கைத் தீயன், அணியாரும் ஆக்கூரில்
சங்க டங்களை தான்தோன்றி அப்பனே.
அங்கைத் தீயன் - கையில் தீயை ஏந்தியவன்; சங்கடம் களை - வருத்தத்தைப் போக்கும்;
8)
கருவ(ம்) மிக்குக் கயிலையைப் பேர்த்தவன்
வெருவப் பாத விரல்வைத்(து) அடர்த்துவாள்
அருளும் அண்ணல், அணியாரும் ஆக்கூரில்
தருக ரத்தினன் தான்தோன்றி அப்பனே.
கருவம் - கர்வம் - செருக்கு; ஆணவம்; மிக்கு - மிகுந்து; வெருவ - அஞ்சும்படி; பாத விரல் வைத்து அடர்த்து - திருப்பாத விரல் ஒன்றைச் சற்று ஊன்றி அவனை நசுக்கி; வாள் அருளும் அண்ணல் - இராவணனுக்குச் சந்திரஹாசம் என்ற வாளை அருளிய பெருமான்; தரு கரத்தினன் - கொடுக்கின்ற கையை உடையவன்; (வரத-ஹஸ்தன்);
9)
செங்கண் மாலொடு செந்தா மரையானும்
எங்கும் நேடிய எல்லையில் சோதியன்,
அங்கண் அண்ணல், அணியாரும் ஆக்கூரில்
தங்கு கின்றவன், தான்தோன்றி அப்பனே.
செங்கண் மாலொடு செந்தாமரையானும் - சிவந்த கண் உடைய திருமாலும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும்; எங்கும் நேடிய - வானிற் பறந்தும் மண்ணை அகழ்ந்தும் தேடிய; எல்லை இல் சோதியன் - அளவற்ற ஜோதி வடிவின்; அங்கண் அண்ணல் - அருள்நோக்கு உடைய பெருமான்; தங்குகின்றவன் - நீங்காது உறைகின்றவன்;
10)
கடையர் கட்டிய கட்டுரை கொள்ளன்மின்,
சடையில் வெண்பிறை சூடிதன் தாளிணை
அடைய வல்லார்க்(கு), அணியாரும் ஆக்கூரில்
தடைகள் தீர்ப்பவன், தான்தோன்றி அப்பனே.
கடையர் - கீழோர்; இழிந்தோர்; கட்டிய கட்டுரை - புனைந்து கூறும் பொய்ம்மொழிகள்; கொள்ளன்மின் - ஏற்றுக் கொள்ளாதீர்கள்; மதிக்கவேண்டா; "தன் தாளிணை அடைய வல்லார்க்குத் தடைகள் தீர்ப்பவன் அணி ஆரும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனே" என்று இயைக்க.
11)
ஈந்து வந்த சிறப்புலி ஏத்திய
பாந்தள் வேணியன், பாற்கடல் நஞ்சினை
ஆர்ந்த கண்டன், அணியாரும் ஆக்கூரில்
சார்ந்த வர்க்கருள் தான்தோன்றி அப்பனே.
ஈந்து உவந்த சிறப்புலி - கொடுத்து மகிழ்ந்த சிறப்புலி நாயனார்; ("ஈந்து வந்த" என்று கொண்டு, "எப்பொழுதும் ஈதலைச் செய்த சிறப்புலி" என்றும் பொருள் கொள்ளலாம்); (சிறப்புலி நாயனார் ஆக்கூரில் வாழ்ந்தவர்); (சுந்தரர் தேவாரம் - 7.39.6 - "சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்"); பாந்தள் - பாம்பு; வேணி - சடை; ஆர்தல் - உண்ணுதல்; சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; பொருந்தியிருத்தல்;
12)
சலமு லாவிய தாழ்சடைச் சங்கரன்,
அலகில் சீரன், அருந்தமிழ் பாடித்தேன்
அலரிட் டார்கட்(கு) அணியாரும் ஆக்கூரில்
சலமி லாதவன், தான்தோன்றி அப்பனே.
சலம் உலாவிய தாழ்சடைச் சங்கரன் - கங்கை உலாவுகின்ற தாழும் சடையை உடைய சங்கரன்; (சலம் - ஜலம் - நீர்); அலகு இல் சீரன் - அளவில்லாத புகழ் உடையவன்; அரும் தமிழ் பாடித் தேன் அலர் இட்டார்கட்கு - அரிய தமிழான தேவாரம் திருவாசகம் முதலியன பாடித் தேன் பொருந்திய மலர் தூவும் அடியவர்களுக்கு; சலம் இலாதவன் - வஞ்சம் இன்றி அருள்பவன்; (சலம் - வஞ்சனை; பட்சபாதம்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்"); அணி அரும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனே - அழகிய ஆக்கூரில் உறைகின்ற, தான்தோன்றி அப்பன் என்ற திருநாமம் உடைய சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment