04.20 - கருக்குடி (மருதாநல்லூர்) - இரக்கம் இலாத வல்
2013-11-10
கருக்குடி ("மருதாநல்லூர்" - இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது)
----------------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா விளம் - வாய்பாடு) (அந்தாதி)
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும்")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
முற்குறிப்புகள்: 1. அந்தாதித்தொடை அமைய மண்டலித்து வரும் 11 பாடல்கள். முதற் பாடல் "இரக்கமிலாத" என்று தொடங்கிப் 11-ஆம் பாடல் "மகிழ்ந்திரங்குமே" என்று நிறைவுறுகின்றது.)
2. பொதுவாக இந்த வாய்பாட்டில் அடிதோறும் 4-ஆம் சீர் நேரசையில் தொடங்கும். ஆனால் இப்பதிகத்தில் அக்கட்டுப்பாடு இல்லை; சில அடிகளில் 4-ஆம் சீர் நிரையசையிலும் தொடங்கும்;
3. திருக்கருக்குடியில் இராமன் ஈசனை வழிபாடு செய்தது - தலபுராணச் செய்தி;
1)
இரக்கமி லாதவல் இலங்கை மன்னனின்
சிரக்குலை செற்றவன் சீதை கோன்பணி
கருக்குடிக் கண்ணுதல் கழலைக் கைதொழக்
கருக்கெடும் பழவினை கவலை இல்லையே.
சிரக்குலை - குலை போல இருந்த பத்துத் தலைகள்; சீதைகோன் - இராமன்;
இரக்கமற்ற கொடிய அரக்கனான இராவணனது குலைபோன்ற பத்துத் தலைகளையும் அழித்தவனும், சீதை கணவனுமான இராமன் வழிபட்ட, திருக்கருக்குடியில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணனின் திருவடியைக் கைதொழுதால், நம் பழைய வினைகளின் கரு அழியும்; கவலைகள் தீரும்.
2)
இல்லையும் பொருளையும் எண்ணல் நெஞ்சமே
வல்லரக் கன்முடி பத்தும் மண்விழ
வில்லெடுத் தான்பணி வியன்க ருக்குடி
நல்லனை நண்ணிடில் நமக்கு நன்மையே.
இல் - மனைவி; குடும்ப வாழ்க்கை; எண்ணல் - எண்ணாதே; (அல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); அரக்கன் - இங்கே இராவணன்; வியன் - பெருமை; சிறப்பு; நல்லன் - நல்லவன்;
நெஞ்சே, நீ குடும்ப வாழ்க்கையையும் பணத்தையுமே எப்பொழுதும் எண்ணாதே. கொடிய அரக்கனான இராவணனது பத்துத் தலைகளும் மண்ணில் விழும்படி வில்லை ஏந்திய இராமன் வழிபட்ட சிறப்புடைய திருக்கருக்குடியில் மேவிய நல்லவனை அடைந்தால் நமக்கு நன்மை விளையும்.
3)
நன்மையி லான்முடி நாலும் ஆறறு
வின்மையை உடையவன் வேண்டித் தாள்தொழு
நின்மலன் பூம்பொழில் நிறைக ருக்குடி
சொன்மல ரால்தொழத் தொலையும் வினைகளே.
நாலும் ஆறு - நாலும் ஆறும் - பத்து; (ஆறும் என்பதில் உம் தொக்கது); வின்மை - வில்வன்மை; (அப்பர் தேவாரம் - 4.66.10 - "வின்மையாற் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்"); சொன்மலர் - சொல்மலர் - பாமாலை;
நன்மை இல்லாத இராவணனது தலைகள் பத்தையும் அறுத்த வில்வன்மை உடைய இராமன் வணங்கிப் போற்றிய, பூஞ்சோலைகள் நிறைந்த திருக்கருக்குடியில் மேவிய நின்மலனான சிவபெருமானைப் பாமாலைகளால் தொழுதால் வினைகள் நீங்கும்.
4)
வினைக்கடல் பெருக்கிய வெவ்வ ரக்கர்கோன்
தனைக்குடல் தலைவிழச் சமரில் வென்றவன்
நினைத்தடி தொழுபொழில் நிறைக ருக்குடி
மனத்திடை வைத்திட மல்கும் இன்பமே.
வெவ்வரக்கர்கோன் - கொடிய அரக்கர்கள் தலைவன் - இராவணன்; சமர் - போர்;
கடல்போலத் தீவினையைப் பெருக்கிய கொடிய அரக்கர் தலைவனான இராவணனைக், குடலும் தலையும் அறுந்துவிழும்படி யுத்தத்தில் வென்ற இராமன் நினைத்துச் சிவபெருமான் திருவடியைத் தொழுத, சோலைகள் நிறைந்த திருக்கருக்குடியை மனத்தில் வைத்தால் இன்பம் பெருகும்.
5)
இன்பமென் றனுதினம் இடர்செய் தசமுகன்
தன்புயம் சிரம்படத் தனுவைத் தாங்கினான்
அன்புகொண் டேத்திய அணிக ருக்குடி
என்பணி ஈசனை எண்ணு நெஞ்சமே.
இடர் செய்தல் - பிறருக்குத் துன்பம் கொடுத்தல்; தசமுகன் - பத்துதலையுடைய இராவணன்; தனு - வில்; உடல்; தாங்குதல் - ஏந்துதல்; சுமத்தல்;
தனக்கு இன்பம் அளிக்கும் செயல் என்று தினமும் பிறருக்குத் துன்பம் விளைத்தவனான இராவணனுடைய புஜங்களும் சிரங்களும் அழியும்படி (பூமியில் மனிதஉடலைத் தாங்கி அவதாரம் செய்து) வில்லேந்திய இராமன் பக்தியோடு பணிந்த அழகிய திருக்கருக்குடியில் மேவிய, எலும்பை அணிந்த ஈசனை, நெஞ்சே நீ எண்ணுவாயாக.
6)
நெஞ்சினில் வஞ்சகம் நிறைஅ ரக்கனார்
குஞ்சிபத் தறுத்தவன் கும்பிட் டேத்திய
மஞ்சனைப் பூம்பொழில் மலிக ருக்குடிச்
செஞ்சடைச் செல்வனைச் செப்பல் செல்வமே.
அரக்கனார் - இராவணன். ஆர், இழித்தற்பொருளில் வந்தது. (அப்பர் தேவாரம் - 5.79.10 - "அரக்கனார் தலை பத்தும் அழிதர"); குஞ்சி - தலை; மஞ்சன் - மைந்தன் - வீரன்; செப்பல் - செப்புதல் - புகழ்தல்;
நெஞ்சத்தில் வஞ்சம் நிறைந்த இராவணனுடைய தலைகள் பத்தையும் அறுத்த இராமன் வணங்கிப் போற்றிய வீரனைப், பூஞ்சோலைகள் நிறைந்த திருக்கருக்குடியில் எழுந்தருளியிருக்கும் செஞ்சடை உடைய செல்வனைப் புகழ்ந்து பேசுதலே செல்வம். ( சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "சிற்றம்பலமேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே");
7)
செல்வனைச் சேவமர் தேவ தேவனை
வில்வளை இராகவன் விரும்பி ஏத்திய
வல்லனை வளவயல் மலிக ருக்குடி
நல்லனைத் தொழல்நலம் நண்ணும் வழியதே.
சே அமர் தேவதேவனை - இடப வாகனம் உடைய மஹாதேவனை; வில் வளை இராகவன் விரும்பி ஏத்திய வல்லனை - வில்லை வளைத்த (= வில்வன்மை மிகுந்த) இராமன் அன்போடு துதித்த வல்லமை உடையவனை; வளவயல் மலி கருக்குடி நல்லனைத் தொழல் நலம் நண்ணும் வழியதே - திருக்கருக்குடியில் உறைகின்ற நல்லவனான சிவபெருமானைத் தொழுவது நமக்கு நலங்கள் கிட்டும் வழியாகும்;
8)
வழிபடு மலைபெயர் மடையன் இருபது
விழிபுனல் சொரிந்திட விரலை ஊன்றினார்
அழிவிலர் இராமனுக் கருள்க ருக்குடிச்
சுழிநதி முடியரைச் சொல்ல உய்தியே.
எல்லாரும் வழிபடும் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவில்லாத இராவணனது இருபது கண்களும் நீர் சொரியும்படி (அவன் அழுமாறு) திருப்பாத விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவர்; அழிவற்றவர்; இராமனுக்கு அருள்புரிந்தவர்; திருக்கருக்குடியில் எழுந்தருளியிருக்கும், சுழிகளை உடைய கங்கையைத் தலையில் தாங்கிய சிவபெருமானாரைப் புகழ்ந்து பேசினால் உய்தி கிட்டும்.
9)
உய்ந்திட வேண்டிடில் உன்னு நெஞ்சமே,
முந்தயன் மாலிவர் முயல எல்லையில்
செந்தழல் ஆயவன் திருக்க ருக்குடிச்
சுந்தரன் இளம்பிறை சூடும் ஈசனே.
உன்னு - நினை; முந்து அயன் மால் இவர் முயல - முன்பு பிரமனும் திருமாலும் அடிமுடியைத் தேட; எல்லை இல் செந்தழல் ஆயவன் - எல்லையின்றி நீண்ட ஒளித்தூண் ஆனவன்;
நெஞ்சே, உய்யவேண்டும் என்றால், முன்பு திருமால் பிரமன் இவர்களால் தேடிக் காண ஒண்ணாதபடி எல்லையின்றி ஓங்கிய ஜோதியைத், திருக்கருக்குடியில் உறையும் அழகனை, மதி சூடிய ஈசனை, நீ எண்ணு;
10)
ஈசனை இகழ்ந்துதம் இழிந்த நெறிதனை
வாசலில் வந்துரை வஞ்சர் சொல்விடும்
மாசற இன்புற வான்க ருக்குடித்
தேசனை விடையனைச் சிந்தை செய்ம்மினே.
ஈசனை இகழ்ந்து, தம் இழிந்த நெறிதனை வாசலில் வந்து உரை வஞ்சர் சொல் விடும் - சிவனையும் வேதநெறியையும் இகழ்ந்து, தங்களது புன்னெறியை வீட்டுவாசலில் வந்து சொல்கின்ற வஞ்சகர்களின் சொற்களை நீங்குங்கள்; மாசு அற, இன்பு உற - நம் மலங்கள் / வினைக்குற்றங்கள் நீங்கவும், இன்பம் அடையவும்; வான் கருக்குடித் தேசனை விடையனைச் சிந்தை செய்ம்மினே - அழகிய திருக்கருக்குடியில் உறைகின்ற ஒளிவடிவினனும் இடப-வாகனனுமான சிவபெருமானை மனத்தால் எண்ணுங்கள்;
11)
செய்கிற செயல்களில் சிவனுக் கன்பினைப்
பெய்தவன் அன்பரைப் பேணி நாள்தொறும்
கைதொழு தேத்திடக் கவின்க ருக்குடி
மைதவழ் மிடற்றினன் மகிழ்ந்தி ரங்குமே.
செய்கிற செயல்களில் சிவனுக்கு அன்பினைப் பெய்து - செய்யும் எல்லாச் செயல்களிலும் சிவனுக்கு அன்பினைச் சொரிந்து; (பெய்து - இட்டு; சொரிந்து); அவன் அன்பரைப் பேணி - அப்பெருமானுக்கு அன்பு உடையவர்களைப் போற்றி; நாள்தொறும் கைதொழுது ஏத்திடக் - தினந்தோறும் கைகளால் தொழுது வணங்கினால்; கவின் கருக்குடி மை தவழ் மிடற்றினன் மகிழ்ந்து இரங்குமே - அழகிய திருக்கருக்குடியில் வீற்றிருக்கும் நீலகண்டன் மகிழ்ந்து இரங்கியருள்வான்; (கவின் - அழகு; மை - கருமை; மிடறு - கண்டம்; இரங்கும் - இரங்குவான்; செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment