Monday, April 16, 2018

04.23 - நெல்வேலி - அறைகின்ற கடலுமிழ்ந்த

04.23 - நெல்வேலி - அறைகின்ற கடலுமிழ்ந்த

2013-11-22

நெல்வேலி (திருநெல்வேலி)

----------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

அறைகின்ற கடலுமிழ்ந்த ஆலாலம் அமுதுண்டு

கறைகொண்ட மிடற்றானைக் காந்திமதி காதலனை

நிறைநெஞ்சர் வந்திக்க நெல்வேலித் தடங்கோயில்

உறைகின்ற உத்தமனை ஓதவினைத் தீதறுமே.


* காந்திமதி - இத்தலத்து அம்பிகை திருநாமம்.

அறைதல் - ஒலித்தல்; அலைமோதுதல்;

ஆலாலம் - ஆலகால விடம்;

அமுதுண்டு - அமுதாக உண்டு; (சம்பந்தர் தேவாரம் - 2.20.2 - "கடலேறிய நஞ்சமுதுண்டவனே");

மிடறு - கண்டம்;

காதலன் - கணவன்; அன்புள்ளவன்;

நிறைநெஞ்சர் - மனநிறைவுற்ற அடியார்கள்;

தடங்கோயில் - பெரிய கோயில்; (தடம் - பெருமை);

ஓதுதல் - பாடுதல்;

வினைத்தீது - வினைக்குற்றம்; வினைக்கேடு;

அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்;


2)

மதனாகம் எரித்துப்பின் மனைவிக்குப் பரிந்தானைக்

கதநாகக் கச்சையனைக் காந்திமதி காதலனை

நிதமன்பர் திரண்டேத்தும் நெல்வேலித் தடங்கோயில்

மதமத்தம் சூடிறையை வாழ்த்தவினை மாய்ந்தறுமே.


மதன் ஆகம் எரித்துப் பின் மனைவிக்குப் பரிந்தானை - மன்மதனின் உடலை நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கிப், பிறகு அவன் மனைவி இரதிக்கு இரங்கி அருள்புரிந்தவனை; (இலக்கணக் குறிப்பு: "மதன்" என்ற சொல்லை முதனிலைத் தீவகமாகக் கொண்டு, "மதன் ஆகம் எரித்துப் பின் மதன் மனைவிக்குப் பரிந்தானை" என்று இயைத்துக்கொள்க);

கதநாகக் கச்சையனை - கோபிக்கின்ற நாகத்தை அரையில் கச்சையாக அணிந்தவனை;

நிதம் - தினமும்;

மத-மத்தம் சூடு இறையை - வாசனையையுடைய ஊமத்தை மலரை அணியும் இறைவனை;

மாய்தல் - அழிதல்;


3)

ஓடுமொரு கலனாக உண்பலிதேர்ந் துழல்வானைக்

காடுமிடம் ஆனவனைக் காந்திமதி காதலனை

நீடுயர்ந்த கோபுரஞ்சூழ் நெல்வேலித் தடங்கோயில்

நாடுகின்ற நாடகனை நாடவினை நலிந்தறுமே.


ஓடு - பிரமனின் மண்டையோடு;

உண்பலி - பிச்சை;

காடு - சுடுகாடு;

நீடுயர்ந்த - மிக உயர்ந்த;

நாடகன் - கூத்தன்;

நலிந்தறுதல் - அழிந்து கெடும்; (நலிதல் - அழிதல்); (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.24.1 - "மன்னே என வல்வினை மாய்ந்தறுமே");


4)

அடுகின்ற புலியதன்தோல் ஆடையனை அமரர்க்காக்

கடுநஞ்சம் ஆர்ந்தானைக் காந்திமதி காதலனை

நெடுவீதி சூழ்ந்தழகார் நெல்வேலித் தடங்கோயிற்

சுடுநீறு பூசிதனைத் தொழுதேத்தப் பழுதிலையே.


அடுகின்ற புலியதன்தோல் ஆடையனை - கொல்லும் புலியின் தோலை ஆடையாக அணீந்தவனை; (அடுதல் - கொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.46.4 - "கொல்புலித்தோல் ஆடையான்");

அமரர்க்காக் கடு நஞ்சம் ஆர்ந்தானை - தேவர்களுக்காகக் கொடிய விடத்தை உண்டவனை; (ஆர்தல் - உண்ணுதல்);

சுடுநீறு பூசிதனை - திருநீறு பூசியவனை;

பழுது இலையே - குற்றம் இல்லை; தீங்கு இல்லை;


5)

சலமுலவு சடையானைத் தனிவெள்ளை விடையானைக்

கலவமயில் அன்னநடைக் காந்திமதி காதலனை

நிலவுதொடு கோபுரஞ்சூழ் நெல்வேலித் தடங்கோயில்

தலைமகனை முக்கண்ணன் தனைநினைய வினையறுமே


சலம் உலவு சடையானை - கங்கை உலாவுகின்ற சடையை உடையவனை; (சலம் - ஜலம் - கங்கை);

தனி வெள்ளை விடையானை - ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை; (தனி - ஒப்பற்ற);

கலவமயில் அன்னநடைக் காந்திமதி காதலனை - தோகையுடைய மயிலின் சாயலும் அன்னத்தின் நடையும் உடைய காந்திமதி அம்மையின் கணவனை;

நிலவு தொடு கோபுரம் சூழ் - திங்களைத் தீண்டுமளவு உயர்ந்த கோபுரங்கள் சூழ்ந்த;

தலைமகனை முக்கண்ணன்தனை - தலைவனை, முக்கண்ணனை; (தலைமகன் - தலைவன்);

நினைய இருவினை அறுமே - சிந்தித்தால் இருவினைக் கட்டு நீங்கும்;


6)

அத்தியுரி போர்த்தவனை அலைகடலில் அன்றெழுந்த

கைத்தவிடம் உண்டானைக் காந்திமதி காதலனை

நித்தமடி யார்திரளும் நெல்வேலித் தடங்கோயில்

மத்தமணி உத்தமனை வாழ்த்தவினை மாய்ந்தறுமே.


அத்தி உரி - யானைத்தோல்;

கைத்த விடம் - கசப்புடைய நஞ்சு;

நித்தம் - நாள்தோறும்;

மத்தம் அணி உத்தமன் - ஊமத்தமலரைச் சூடிய உத்தமன்;


7)

பெற்றமிவர் பெற்றியனைப் பிறைசூடும் பெருமானைக்

கற்றவருக் கினியவனைக் காந்திமதி காதலனை

நெற்றிவிழி உடையானை நெல்வேலித் தடங்கோயில்

உற்றவனை நற்றவனைப் பற்றவினை பற்றறுமே.


பெற்றம் இவர் பெற்றியனை - இடபத்தின்மேல் செல்லும் பெருமை உடையவன்; (இவர்தல் - ஏறிச் செலுத்துதல்);

உற்றவன் - நண்பன்; சுற்றத்தான்;

நற்றவன் - நல்ல தவ வடிவினன்;


8)

இருபதுதோள் உடையானை இருவரைக்கீழ் அடர்த்தானைக்

கருவிடமார் மிடற்றானைக் காந்திமதி காதலனை

நிருபமனை மதில்சூழ்ந்த நெல்வேலித் தடங்கோயிற்

குருபரனை இருகரங்கள் கொண்டுதொழ வினையறுமே.


இருவரை - பெரியமலை - கயிலைமலை; (திருமாளிகைத்தேவர் - திருவிசைப்பா - 9.1.10 - "வல்லரக்கன் அரட்டு இருவரைக்கீழ் அடர்த்த பொன்னம்பலத்தரசே");

கருவிடம் ஆர் மிடற்றானை - நீலகண்டனை; (கரு-விடம் - கரிய நஞ்சு); (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்); (மிடறு - கண்டம்);

நிருபமன் - ஒப்பில்லாதவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.124.2 - "நிருபமன் மிழலையை நினைய வலவரே");

குருபரன் - குருசிரேட்டன்;


9)

சேண்பறந்த நான்முகனும் திருமகட்கு நாயகனும்

காண்பரிய தாணுவினைக் காந்திமதி காதலனை

நீண்மதில்கள் புடைசூழ்ந்த நெல்வேலித் தடங்கோயிற்

கேண்மையனை அடிபோற்றக் கேடில்லா நிலைதானே.


சேண் - ஆகாயம்;

திருமகட்கு நாயகன் - திருமால்;

காண்பு அரிய தாணு - (அடிமுடி) காண இயலாத (ஒளித்)தூண்;

நீண்மதில்கள் - நீள் மதில்கள் - நீண்ட மதில்;

கேண்மையன் - நட்பு உடையவன்; அருள் உடையவன்; (கேண்மை - நட்பு; கண்ணோட்டம்);

(திருவாசகம் - கீர்த்தித் திருவகவல் - 8.4 - அடி 120 - "தோழா போற்றி துணைவா போற்றி");

(சுந்தரர் தேவாரம் - 7.24.2 - "மழபாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே");


10)

விருப்பமொடு நீறணியா வெற்றுரையர் சொல்விடுமின்

கருப்புவிலி தனையெரித்த காந்திமதி காதலனை

நெருப்புமிழும் நேத்திரனை நெல்வேலித் தடங்கோயில்

இருப்பவனை இருபொழுதும் எண்ணவினை நண்ணாவே.


விருப்பமொடு நீறு அணியா - திருநீறு பூச மாட்டாத;

வெற்றுரையர் - பொருளற்ற பேச்சுப் பேசுகின்றவர்கள்;

சொல் விடுமின் - சொற்களை மதிக்கவேண்டா;

கருப்புவிலி தனையெரித்த காந்திமதி காதலனை நெருப்புமிழும் நேத்திரனை - "கருப்புவிலி தனையெரித்த நெருப்புமிழும் நேத்திரனைக் காந்திமதி காதலனை" என்று கூட்டிப் பொருள்கொள்க; (கருப்புவிலி - கருப்புவில்லி - கரும்பை வில்லாக ஏந்தும் காமன்; நேத்திரம் - கண்);

நண்ணா - அடையா;


11)

சீலமணி மாணியிடம் சென்றிடர்செய் காலனுயிர்

காலவுதை கழலானைக் காந்திமதி காதலனை

நீலமணி மிடற்றானை நெல்வேலித் தடங்கோயில்

ஆலமணி சடையானை அடையவினை அடையாவே.


சீலமணி மாணி - சீல மணி மாணி / சீலம் அணி மாணி - சீலம் மிக்க மணி போன்ற மார்க்கண்டேயர் / சீலத்தை அணியாக உடைய மார்க்கண்டேயர்;

காலன் உயிர் கால உதை கழலானை - எமனை உயிர் கக்குமாறு உதைத்த திருவடியினானை;

நீல மணி மிடற்றானை - நீலமணி போன்ற கண்டத்தை உடையவனை;

ஆலம் அணி சடையானை - கங்கையைச் சடையில் அணிந்தவனை; (ஆலம் - நீர்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

2 comments:

  1. மதனாகம் எரித்துப்பின் மனைவிக்குப் பரிந்தானைக்
    இதில் மனைவிக்கு பரிந்தானை என்பதில் தன்னுடைய மனைவிக்குப் பரிந்தானை என்றும் பொருள் கொள்ள வாய்ப்பு இருக்கின்றதே....

    ReplyDelete
    Replies
    1. நல்ல வினா. இங்கே, "மதன்" என்ற சொல்லை முதனிலைத் தீவகமாகக் கொண்டு, "மதன் ஆகம் எரித்துப் பின் மதன் மனைவிக்குப் பரிந்தானை" என்று இயைத்துக்கொள்க;

      Delete