Sunday, April 8, 2018

04.21 – ஆவடுதுறை (திருவாவடுதுறை)

04.21 – ஆவடுதுறை (திருவாவடுதுறை)


2013-11-10

ஆவடுதுறை (திருவாவடுதுறை)

----------------------------------

(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் மா' - அரையடி வாய்பாடு);

(சம்பந்தர் தேவாரம் - 1.79.1 - "அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்")

(சுந்தரர் தேவாரம் - 7.58.1 - "சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்")

(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே")


1)

போயிரு பொன்னடி போற்றிய திங்கள்

.. புன்சடை மீதுபொ லிந்திட வைத்தான்

ஆயிழை யாளொரு பங்கமர் பரமன்

.. அடியிணை பற்றிடும் அன்பருக் கென்றும்

தாயினும் நல்லவன் தந்தையும் ஆவான்

.. தமிழ்மறை பாடிய ஞானசம் பந்தர்க்

காயிரம் பொன்னளித் தருள்புரி அண்ணல்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


புன்சடை - செஞ்சடை;

ஆயிழையாள் - உமையம்மை;

அமர்தல் - விரும்புதல்;

* திருஞானசம்பந்தர் திருவாவடுதுறையில் 'இடரினும் தளரினும்' பதிகம் பாடி ஆயிரம்பொன் பெற்ற வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.


* மாசிலாமணீஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்.


2)

பாலன தாருயிர் கொள்ளவி ரைந்து

.. பாசம தேந்திய கையொடு வந்த

காலனை ஆருயிர் கக்கவு தைத்தான்

.. கங்கையைக் கரந்தசெஞ் சடையினன் ஓர்பால்

வேலன கண்ணியைப் பாகம மர்ந்தான்

.. விடையினைக் காட்டுவெல் கொடியினன் நால்வர்க்

காலதன் கீழ்மறைப் பொருளைவி ரித்தான்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


பதம் பிரித்து:

பாலனது ஆருயிர் கொள்ள விரைந்து

.. பாசம் அது ஏந்திய கையொடு வந்த

காலனை ஆருயிர் கக்க உதைத்தான்;

.. கங்கையைக் கரந்த செஞ்சடையினன்; ஓர் பால்

வேல் அன கண்ணியைப் பாகம் அமர்ந்தான்;

.. விடையினைக் காட்டு வெல் கொடியினன்; நால்வர்க்கு

ஆல் அதன்கீழ் மறைப்பொருளை விரித்தான்;

.. ஆவடுதுறை அமர் மாசிலா மணியே.


பாலனது ஆருயிர் - மார்க்கண்டேயரின் அரிய உயிரை; (ஆர் - அரிய);

காலனை ஆருயிர் கக்க உதைத்தான் - கூற்றுவனை உயிர் கக்குமாறு உதைத்தவன்;

(சம்பந்தர் தேவாரம் - 2.31.4 - "...மறை யோனைத் தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே." - கால - கக்க; கடந்தவன் - கடக்க உதைத்தவன்);

கரத்தல் - ஒளித்தல்;

வேல் அன கண்ணி - வேல் போன்ற கண்ணை உடைய உமையம்மை;

அமர்தல் - விரும்புதல்;

(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.78.2 - "மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே வானோர் வணங்கப் படுவார் தாமே" - மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பிக் கொண்டவர்);

ஆல் - கல்லால மரம்;


3)

நஞ்சினைக் கண்டிரி வானவர் கூட்டம்

.. நல்லடி யிணைதொழ அவ்விடம் உண்டு

மஞ்சினி றத்தொரு மணிதிகழ் கண்டன்

.. மதியணி சடையினன் வரையென வந்த

வெஞ்சினக் கரியுரி போர்த்துழல் வீரன்

.. மென்மலர் உகுநறை விரும்பிய டைந்த

அஞ்சிறை வண்டினம் ஆர்பொழில் சூழ்ந்த

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


நல் அடியிணை - நலம் தரும் இரு திருவடிகள்; (சம்பந்தர் தேவாரம் - 3.16.2 - "ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான்...");

நஞ்சினைக் கண்டு இரி வானவர் கூட்டம் நல் அடியிணை தொழ - ஆலகால விடத்தைக் கண்டு பயந்து ஓடிய தேவர்கள், நலம் தரும் இரு திருவடிகளைப் போற்றி வணங்கவும்; (இரிதல் - அஞ்சி ஓடுதல்);

அவ்விடம் உண்டு மஞ்சின் நிறத்து ஒரு மணி திகழ் கண்டன் - (அவர்களுக்கு இரங்கி,) அந்த விஷத்தை உண்டு, மேகம் போன்ற நிறம் உடைய கரிய மணி திகழும் கண்டம் உடையவன்; (மஞ்சு - மேகம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.53.7 - "பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் ... மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்" - காளமேகம் போன்ற அழகிய நீலகண்டர்);

மதி அணி சடையினன் - சடைமேல் சந்திரனை அணிந்தவன்;

வரை என வந்த வெம் சினக் கரி உரி போர்த்து உழல் வீரன் - மலை போல வந்து எதிர்த்த கொடிய சினம் மிக்க யானையின் தோலைப் போர்த்து உழலும் வீரன்;

மென்மலர் உகு நறை விரும்பி அடைந்த அம் சிறை வண்டினம் ஆர் பொழில் சூழ்ந்த ஆவடுதுறை அமர் மாசிலா மணியே - மென்மையான பூக்கள் சொரியும் தேனை விரும்பி அடைந்த, அழகிய சிறகுகளை உடைய வண்டினங்கள் ரீங்காரம் செய்யும் சோலைகள் சூழ்ந்த திருவாவடுதுறையில் மேவிய மாசிலாமணி.


4)

தணிகையில் மேவிய வேலவன் தாதை

.. தாள்பணி வானவர் தமக்கருள் செய்த

மணிமிட றுடையவன் வஞ்சிம ருங்குல்

.. மாதொரு பங்கினன் வார்சடை மீது

துணிமதி சூடிய சுந்தரன் கையில்

.. சுடர்மழு வாளினன் சுரும்பினம் நாடும்

அணிமலர் மலிபொழில் சூழ்ந்தழ காரும்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


தணிகையில் மேவிய வேலவன் தாதை - திருத்தணிகையில் உறையும் முருகனுக்குத் தந்தை; (அப்பர் தேவாரம் - 6.23.4 - "செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே");

வஞ்சி மருங்குல் மாது - கொடி போன்ற இடை உடைய உமை;

வார்சடை - நீண்ட சடை;

துணிமதி - வினைத்தொகை - பிளவுபட்ட சந்திரன்;

சுரும்பினம் - வண்டினம்;

அணி மலர் மலி பொழில் - அழகிய பூக்கள் நிறைந்த சோலை;


5)

அளியொடு திருப்புகழ் மாலைகள் பாடி

.. அருவியெ னச்சொரி கண்ணினர் மனமே

தளியென மகிழ்ந்துறை சங்கரன் மூலன்

.. தந்தமூ வாயிரம் தமிழையு கந்தான்

வளியெரி மண்புனல் வெளியென ஆகி

.. வருமரன் மாமலர் மதுவினை மாந்தி

அளியிசை பாடெழி லார்பொழில் சூழ்ந்த

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


அளி - அன்பு;

திருப்புகழ் மாலைகள் - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகள்;

அருவி எனச் சொரி கண்ணினர் மனமே - அருவி போல் கண்ணீர் சொரிகின்ற பக்தர்களுடைய மனமே;

தளி என மகிழ்ந்து உறை சங்கரன் - கோயிலாக விரும்பி உறையும் சங்கரன்; (தளி - கோயில்);

மூலன் தந்த மூவாயிரம் தமிழ் - திருமூலர் பாடியருளிய திருமந்திரம்; (தருதல் - நூல் முதலியன இயற்றுதல்);

உகந்தான் - விரும்பியவன்;

வளி எரி மண் புனல் வெளி என ஆகி வரும் அரன் - ஐம்பூதங்கள் ஆய ஹரன்; (வளி - காற்று; எரி - தீ; மண் - நிலம்; புனல் - நீர்; வெளி - ஆகாயம்);

மாமலர் மதுவினை மாந்தி - சிறந்த பூக்களில் மதுவை உண்டு; (மாந்துதல் - உண்ணுதல்; குடித்தல்);

அளி இசை பாடு எழில் ஆர் பொழில் சூழ்ந்த - வண்டுகள் இசை பாடுகின்ற, அழகிய சோலைகளால் சூழப்பட்ட;

* திருமூலர் திருமந்திரம் அருளிய தலம் திருவாவடுதுறை;


6)

தப்பிலாச் சண்டிசெய் தவத்தினைக் குலைத்த

.. தாதையைத் தாளற வீசிடக் கண்டே

அப்பனாம் என்றணைத் தருளிய ஈசர்

.. ஆவினில் அஞ்சுகந் தாடுமெம் ஐயர்

ஒப்பிலா முலையுமை ஒருபுடை அமர்ந்த

.. உத்தமர் உற்றவர் ஒலிமலி அலைசேர்

அப்புலாம் சடைமிசை அரவும ணிந்தார்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


* சண்டேசுர நாயனார்க்கு அருள்செய்த வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க;

* ஒப்பிலா முலையுமை - இத்தலத்து அம்பாள் திருநாமம் - 'ஒப்பிலாமுலையம்மை';

தப்பு இலாச் சண்டி செய் தவத்தினைக் குலைத்த தாதையைத் தாள அற வீசிடக் கண்டே - குற்றமற்ற சண்டேசுரர் செய்த தவத்தினைக் கண்டு சினந்து அதனை அழித்த அவர் தந்தையின் கால்களை அவர் வெட்டியதைக் கண்டு;

"அப்பன் நாம்" என்று அணைத்து அருளிய ஈசர் - "இனி உனக்குத் தந்தை நாம்" என்று கூறி சண்டேசுரரை அணைத்து அருள்புரிந்தவர்;

ஆவினில் அஞ்சு உகந்து ஆடும் எம் ஐயர் - பால், தயிர், நெய், முதலிய பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்படும் எம் தலைவர்;

ஒப்பு இலா முலை உமை ஒரு புடை அமர்ந்த உத்தமர் உற்றவர் - ஒப்பற்ற தனங்களை உடைய உமையை ஒரு பக்கம் விரும்பிய உத்தமர்; துணைவர்;

ஒலி மலி அலைசேர் அப்பு உலாம் சடைமிசை அரவும் அணிந்தார் - ஒலிமிகுந்த அலைகள் சேர்ந்த கங்கை உலவும் சடைமேல் பாம்பையும் அணிந்தவர்; (அப்பு - நீர்);

ஆவடுதுறை அமர் மாசிலா மணியே - திருவாவடுதுறையில் மேவிய மாசிலாமணி.


7)

மருந்தினை வேண்டிய வானவர் கடலை

.. மந்தர மலைகொடு கடையநஞ் செழவும்

பெருந்துயர் கொண்டுமை கோனடி போற்றப்

.. பேரருள் கொண்டமு துண்டுமி டற்றில்

திருந்திய மணியெனச் செய்தவெம் பெருமான்

.. திருப்பெயர் உரைசெயும் நாவினர்க் கென்றும்

அருந்துணை யாய்இடர் தீர்த்தருள் புரியும்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


மருந்து - அமுதம்;

வேண்டுதல் - விரும்புதல்;

மந்தர மலைகொடு - மந்தரமலையால்;

பேரருள் கொண்டு அமுதுண்டு மிடற்றில் - பேரருளால் ஆலகால விடத்தை அமுதாக உண்டு கண்டத்தில்; (மிடற்றில் - கண்டத்தில்); (சம்பந்தர் தேவாரம் - 1.37.4 - "இடியார் கடனஞ் சமுதுண்டு")

திருந்திய - அழகிய; (திருந்துதல் - அழகு பெறுதல்; மேன்மையாதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.2 - "கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை");


8)

நீதியி லாதவன் இலங்கையர் மன்னன்

.. நீள்வரை இடக்கவும் ஒருவிரல் தன்னை

போதினைப் போல்மலை யின்மிசை ஊன்றிப்

.. பொன்முடி பத்தையும் நெரித்தருள் பரமன்

மாதினைப் பங்கினில் மகிழ்ந்தவன் சூலம்

.. மழுவனல் மான்மறி ஏந்திய கையன்

ஆதியும் அந்தமும் ஆகிய அண்ணல்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


நீதி இலாதவன் - ஒழுக்கம் இல்லாதவன்;

நீள் வரை - பெரிய மலை - கயிலைமலை;

போது - பூ; மலர்;

பொன்முடி - தங்கக்கிரீடம் அணிந்த தலை ; அழகிய கிரீடம் அணிந்த தலை;

சூலம் மழு அனல் மான்மறி ஏந்திய கையன் - திரிசூலம், மழுவாள், தீ, மான்கன்று இவற்றையெல்லாம் கையில் தாங்கியிருப்பவன்;


9)

பங்கயப் போதினன் பாற்கடல் தன்னிற்

.. பாம்பணைத் துயில்திரு மாலிவர் நேடப்

பொங்கழ லாகிய புரிசடைப் பெருமான்

.. புதுமலர் புனல்கொடு பொன்னடி போற்றித்

தங்கரம் குவிப்பவர் தமக்கருள் கின்ற

.. சங்கரன் தலைமிசைத் தண்மதி சூடி

அங்கமும் வேதமும் ஓதிய நாவன்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


பங்கயப் போதினன் - தாமரைப்பூவில் உறையும் நான்முகன்;

பாற்கடல் தன்னிற் பாம்பணைத் துயில் திருமால் - பாற்கடலில் நாகப் படுக்கைமேல் பள்ளிகொண்ட விஷ்ணு;

நேட - தேட;

பொங்கு அழல் ஆகிய புரிசடைப் பெருமான் - எல்லையின்றி ஓங்கிய சோதி ஆன, முறுக்கிய சடையை உடைய சிவபெருமான்;

புதுமலர் புனல் கொடு பொன்னடி போற்றி - நாண்மலர்கள், நீர் இவற்றால் ஈசனின் பொன்னடிகளை வழிபட்டு;

தம் கரம் குவிப்பவர் தமக்கு - தம்முடைய கைகளைக் குவிக்கும் அடியவர்களுக்கு;

தலைமிசைத் தண்மதி சூடி - தலையின்மீது குளிர்ந்த சந்திரனை அணிந்தவன்;


10)

பொய்யினைப் பேசிம யக்கிட முயலும்

.. புல்லரு ரைத்திடும் புறனுரை கொள்ளேல்

மெய்யினில் நீற்றினைப் பூசிய அன்பர்

.. வெந்நர கங்களில் வீழ்கிலர் முன்னை

வெய்யவி னைத்தொடர் வீட்டிய ருள்வான்

.. வேணியில் வெண்மதி சூடிய விமலன்

ஐயம கற்றிட ஆலமர் செல்வன்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


புல்லர் - கீழோர்;

கொள்ளேல் - மதிக்க வேண்டா;

மெய்யினில் நீற்றினைப் பூசிய அன்பர் வெந்நரகங்களில் வீழ்கிலர் - உடம்பில் திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்கள் கொடிய நரகங்களில் விழமாட்டார்;

முன்னை வெய்ய வினைத்தொடர் வீட்டி அருள்வான் - முன்னர்ச் செய்த கொடிய பாவங்களை அழித்து அருள்பவன்; (வீட்டுதல் - அழித்தல்);

வேணி - சடை;

ஐயம் அகற்றறிட - சந்தேகங்களைத் தீர்க்க;

ஆல் அமர் செல்வன் - கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;


11)

பெருமணி வடமென அக்கினைப் பூண்டு

.. பிஞ்ஞகன் பெருமைகள் பேசியு கந்து

மருமணி மலர்கொடு வழிபடு வார்க்கு

.. மகிழ்ந்தருள் புரிபவன் மலைமகள் பங்கன்

குருமணி யாயறம் நால்வருக் குரைத்தான்

.. குரைகடல் கக்கிய கொடுவிடம் அங்கே

அருமணி போல்திகழ் திருமிட றுடையான்

.. ஆவடு துறையமர் மாசிலா மணியே.


பெரு மணி வடம் என அக்கினைப் பூண்டு - சிறந்த நவரத்தின மாலைபோல உருத்திராக்க மாலையை அணிந்து; (மணி - ரத்தினம்; அழகு); (அக்கு - உருத்திராக்கம்); (வடம் - சங்கிலி; மணிவடம்);

பிஞ்ஞகன் பெருமைகள் பேசி, உகந்து, மரு மணி மலர்கொடு வழிபடுவார்க்கு - பிஞ்ஞகன் என்ற பேரை உடைய சிவபெருமான் பெருமைகளைப் பேசி மகிழ்ந்து, விரும்பி, வாசம் மிக்க அழகிய பூக்களால் வழிபடும் பக்தர்களுக்கு; (உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்); 9மரு - வாசனை);

மகிழ்ந்து அருள் புரிபவன் மலைமகள் பங்கன் - அர்த்தநாரீஸ்வரனான சிவபெருமான் மகிழ்ந்து அருள்செய்வான்;

குருமணியாய் அறம் நால்வருக்கு உரைத்தான் - சிறந்த குருவாக அமர்ந்து சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசித்தவன்; (குருமணி - குருசிரேஷ்டன்);

குரைகடல் கக்கிய கொடுவிடம் அங்கே அருமணி போல் திகழ் திருமிடறு உடையான் - ஒலிக்கின்ற கடல் உமிழ்ந்த கொடிய நஞ்சு ஓர் அரிய மணிபோலத் திகழ்கின்ற கண்டத்தை உடையவன்;

ஆவடுதுறை அமர் மாசிலா மணியே - திருவாவடுதுறையில் மேவிய மாசிலாமணி.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1) ஆவடுதுறை - திருவாவடுதுறை - கோமுக்தீஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=315

----------- --------------

No comments:

Post a Comment