04.22 – துருத்தி (குத்தாலம்)
2013-11-16
துருத்தி (திருத்துருத்தி - இக்கால வழக்கில் 'குத்தாலம்'. இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")
(கண்டராதித்தர் - திருவிசைப்பா - 9.20.7 - 'இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற')
1)
ஓலை யாலன் றடிமை ஆனார் உடற்பிணி தீர்த்தவனே
பாலை யாழைப் பாடித் தேனைப் பரிசென வண்டடையும்
சோலை சூழ்ந்த துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
வேலை சூழ்ந்த உலகிற் பிறவா விதம்வினை தீர்த்தருளே.
ஓலையால் அன்று அடிமை ஆனார் - சுந்தரமூர்த்திநாயனார்;
பாலையாழ் - பாலைப்பண் - ஒரு பண்ணின் பெயர்;
(சம்பந்தர் தேவாரம் - 1.108.10 - "மாலையில் வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.");
துருத்திப் பெருமான் - திருத்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே;
வேலை - கடல்;
* சுந்தரர் இத்தலத் திருக்குளத்தில் மூழ்கி உடற்பிணி நீங்கியதை அவர் பதிகத்திலும் பெரியபுராணத்திலும் காண்க.
(சுந்தரர் தேவாரம் - 7.74.1 - "மின்னுமா மேகங்கள் ... என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை"
பெரிய புராணம் - ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - 12.29.299 -
மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்னணைந்து வேதமெலாந்
தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும் புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர் திருமேனி யாயினார். )
2)
நெற்றிக் கண்ணாய் நிலவ ணிந்தாய் நீரை அடைத்தருளும்
கற்றைச் சடையாய் காவென் றிமையோர் கதற இரங்கிவிடம்
துற்ற கண்டா துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
சுற்றும் உலகிற் பிறவா வண்ணம் தொல்வினை தீர்த்தருளே.
நெற்றிக் கண்ணாய் - நெற்றியில் கண்ணுடையவனே;
நிலவு அணிந்தாய் - பிறைசூடியவனே;
நீரை அடைத்தருளும் கற்றைச் சடையாய் - கங்காதரனே; ஜடாதாரியே;
"கா" என்று இமையோர் கதற இரங்கி விடம் துற்ற கண்டா - "காவாய்" என்று தேவர்கள் கதறித் தொழவும், அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்ட கண்டனே; (துற்றுதல் - உண்ணுதல்);
துருத்திப் பெருமான் - திருத்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானே;
தொழும் அடியேன் இனியும் சுற்றும் உலகிற் பிறவா வண்ணம் தொல்வினை தீர்த்தருளே - உன்னை வணங்கும் நான் இனி இவ்வுலகில் பிறப்பு எய்தாதபடி பழவினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (சுற்றும் உலகு - தன்னையும் சூரியனையும் சுற்றுகின்ற பூமி); (தொல்வினை - பழவினை);
3)
மடல விழ்ந்த மலர்கள் தூவி வானவர் வந்திறைஞ்சக்
கடலு மிழ்ந்த கடுவி டத்தைக் களத்தினில் வைத்தவனே
சுடலை ஆடும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
உடலை எய்தி உழலா வண்ணம் ஊழ்வினை தீர்த்தருளே.
மடல் அவிழ்ந்த மலர்கள் தூவி வானவர் வந்து இறைஞ்ச - வானவர் வந்து மடல் அவிழ்ந்த மலர்கள் தூவி இறைஞ்ச; (அவிழ்தல் = மலர்தல்);
களம் - கண்டம்; கழுத்து;
சுடலை - சுடுகாடு;
ஊழ்வினை - பழவினை; (சுந்தரர் தேவாரம் - 7.76.1 - "பொருவனார் புரிநூலர் ...வாஞ்சியத் துறையும் ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே");
4)
சீலத் தொண்டர் பால டைந்த சினமலி காலனுயிர்
கால மார்பில் காலால் உதைத்துக் காத்தவனே கரத்திற்
சூலம் ஏந்தும் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
ஞாலம் எய்தி நலியா வண்ணம் நன்மை புரிந்தருளே.
சீலத் தொண்டர் - மார்க்கண்டேயர்;
பால் - ஏழாம் வேற்றுமை உருபு;
சினம் மலி காலன் உயிர் கால - கோபம் மிக்க கூற்றுவன் தன் உயிரைக் கக்க; (காலுதல் - கக்குதல்);
ஞாலம் - உலகம்;
நன்மை புரிந்தருளே - நன்மையை விரும்பியருள்வாயாக; நன்மை செய்தருள்வாயாக; (புரிதல் - விரும்புதல்; செய்தல்);
5)
பணியும் இமையோர் பரவ அவர்க்குப் பரிந்து மருந்தளித்த
மணிகண் டத்தாய் மங்கை பங்கா மாசுணம் ஊர்முடிமேல்
துணிவெண் பிறையாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேன்பிறவிப்
பிணியும் நோயும் இன்றி மகிழப் பெருவினை தீர்த்தருளே.
மருந்து - அமுதம்;
மாசுணம் - பாம்பு;
ஊர்முடிமேல் - ஊர்கின்ற திருமுடிமீது;
துணி வெண் பிறையாய் - பிளவுபட்ட வெண்பிறைச்சந்திரனைச் சூடியவனே;
பெருவினை - (அப்பர் தேவாரம் - 5.5.7 - "கோணிக் கொண்டையர் ...அண் ணாமலை கைதொழப் பேணி நின்ற பெருவினை போகுமே.");
6)
சுடலைப் பொடியைப் பூசீ கணங்கள் சூழ நடம்புரிவாய்
இடபக் கொடியாய் இண்டை போல இளமதி ஏறுகின்ற
சுடர்பொற் சடையாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனுலகில்
இடர்கட் கிடமாய் இளையா வண்ணம் இருவினை தீர்த்தருளே.
பூசீ - பூசியவனே;
புரிவாய் - புரிபவனே;
இடபக் கொடி - எருதுச் சின்னம் பொறித்த கொடி;
இண்டை - தலையில் அணியும் ஒருவித மாலை; (அப்பர் தேவாரம் - 4.85.8 - "...வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே");
சுடர்பொற் சடையாய் - ஒளிவீசும் பொன் போன்ற சடையை உடையவனே; (சுடர்தல் - ஒளிவிடுதல்);
இடர்கட்கு இடமாய் இளையா வண்ணம் - இடர்களே அடைந்து வருந்தாதபடி;
7)
ஓடோர் கையில் உடைய வள்ளால் ஒள்ளெரி சேர்கணையால்
கூடார் புரங்கள் கொளுத்தும் மைந்தா குளிர்புனல் பாய்சடையாய்
தோடோர் செவியாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
வாடா வண்ணம் வலிய வினைகள் மாய மகிழ்ந்தருளே.
ஓடு - பிரமனின் மண்டையோடு;
வள்ளால் - வள்ளல் என்பதன் விளி - வள்ளலே;
ஒள் எரி - ஒளி வீசும் தீ;
கூடார் - பகைவர்;
மைந்தன் - வீரன்;
தோடு ஓர் செவியாய் - ஒரு காதில் தோடு அணிந்தவனே - அர்த்தநாரீஸ்வரனே;
8)
தோளார் வலியால் மலையை அசைத்த துட்டனை அன்றடர்த்தாய்
வாளார் கண்ணி பங்கு மகிழ்ந்தாய் மாதவர் போற்றுகின்ற
தோளா முத்தே துருத்திப் பெருமான் தொழுமடி யேனுலகில்
மீளா வண்ணம் வினைகள் தீர்த்து மெய்ந்நெறிச் சேர்த்தருளே.
தோள் ஆர் வலி - புஜபலம்; (தோள் - புஜம்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (வலி - வலிமை; பலம்);
துட்டன் - துஷ்டன் - இங்கே இராவணன்; (அப்பர் தேவாரம் - 4.78.10 - "வெட்டன வுடையன் ஆகி வீரத்தால் மலையெ டுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்துச்" - .... தீயவனாகிய இராவணனின் செருக்கை அடக்கி);
அடர்த்தாய் - நசுக்கியவனே;
வாள் ஆர் கண்ணி - ஒளி பொருந்திய கண்ணை உடைய உமையம்மை;
தோளா முத்தே - துளைக்கப்படாத முத்தைப் போன்றவனே;
9)
கண்ணிற் றீயாய் கரிய மாலும் கடிமலர் மேலவனும்
நண்ணற் கரிய சோதி யாகி நடுவி லுயர்ந்தவனே
சுண்ண நீற்றாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
மண்ணிற் பிறவி எய்தா வண்ணம் வல்வினை தீர்த்தருளே.
கண்ணிற் றீயாய் - கண்ணில் தீயாய் - நெற்றிக்கண்ணனே;
கடிமலர் - வாசம் மிகுந்த தாமரை;
நண்ணற்கு அரிய - அடைய இயலாத;
சுண்ணநீறு - கலவைச் சந்தனம்போலக் கொள்ளப்படும் திருநீறு;
10)
மாயம் பேசி வலையை விரிக்கும் வஞ்சகர் சொல்விடுமின்
தூய மதியாய் துருத்திப் பெருமான் தொழுமடி யேனினியும்
காயம் எய்திக் கலங்கா வண்ணம் கடுவினை தீர்த்தருளாய்
தோயச் சடையாய் என்னும் அன்பர் துயர்களை வான்சிவனே.
மாயம் பேசி வலையை விரிக்கும் வஞ்சகர் சொல் விடுமின் - பொய்யுரைத்து வலை விரிக்கின்ற வஞ்சகர்களது பேச்சை மதிக்கவேண்டா; (மாயம் - பொய்; அஞ்ஞானம்);
காயம் - உடல்; புண்;
கடுவினை - கொடிய வினை;
தோயம் - நீர்; (சம்பந்தர் தேவாரம் - 1.48.11 - "சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபு ரத்தலைவன்" - தோயடைந்த - நீர் நிறைந்த. தோயம் என்பது தோய் என ஈறு குறைந்தது);
அன்பர் - பக்தர்;
11)
கடிய விடையன் கலைசேர் கையன் கார்மலி மாமிடறன்
கொடிய பாம்பு குளிர்வெண் திங்கள் கொன்றை அணிந்தபரன்
துடியை ஏந்தி துருத்திப் பெருமான் துணையடி ஏத்துகின்ற
அடியர் தங்கள் மிடியை நீக்கி அருள்புரி சங்கரனே.
கடிய விடையன் - விரைந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவன்;
கலைசேர் கையன் - கையில் மானை ஏந்தியவன்;
கார் மலி மா மிடறன் - கருமை திகழும் அழகிய கண்டன்;
கொடிய பாம்பு - கோளரவம்;
குளிர்வெண் திங்கள் - குளிர்ச்சி பொருந்திய வெண் பிறைச்சந்திரன்;
துடியை ஏந்தி - உடுக்கையை ஏந்தியவன்;
துணையடி - இருதிருவடிகள்; துணையாக இருந்து காக்கின்ற திருவடி;
அடியர் - அடியவர்; பக்தர்கள்;
மிடி - துன்பம்; தரித்திரம்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு.
அடி ஈற்றுச்சீர் பெரும்பாலும் கூவிளங்காய்.
5-6 சீர்களிடையே வெண்டளை பயிலும். 5-ஆம் சீர் மாச்சீராக வரின், 6-ஆம் சீர் தனா என்ற சந்தத்தில் தொடங்கும்.
(சம்பந்தர் தேவாரம் - 1.63.1 - "எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகலனா")
( கண்டராதித்தர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.20.5 -
களிவான் உலகிற் கங்கை நங்கை காதல னேஅருளென்
றொளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடி யார்க்கருளும்
தெளிவா ரமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ.);
2) திருத்துருத்தி - குத்தாலம் - சொன்னவாறு அறிவார் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=213
திருத்துருத்தி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=149
----------- --------------
No comments:
Post a Comment