Monday, April 16, 2018

04.26 – நறையூர்ச் சித்தீச்சரம் (திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்)



04.26நறையூர்ச் சித்தீச்சரம் (திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்)



2013-11-28
நறையூர்ச் சித்தீச்சரம் (இக்கால வழக்கில் 'திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்')
----------------------------------
(இப்பதிகத்தில் 12 பாடல்கள்)
(வஞ்சித்துறை; முதல் 4 பாடல்கள் "மா விளம்" என்ற அமைப்பு; அடுத்த 8 பாடல்கள் "விளம் மா" என்ற அமைப்பு )
(சம்பந்தர் தேவாரம் - திருவிருக்குக்குறள் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்")
(சம்பந்தர் தேவாரம் - திருவிருக்குக்குறள் - 3.40.1 - "கல்லால் நீழல் அல்லாத் தேவை");



1)
கறையார் கண்டனை
நறையூர் நம்பனை
இறைவா என்றிடக்
குறைபோய் இன்பமே.



கறை ஆர் கண்டன் - நீலகண்டன்;
நம்பன் - சிவன்; (விரும்பத் தக்கவன்);



2)
மறையார் நாவனை
நறையூர் நம்பனை
உறவா எண்ணிட
மறவார் வாழ்வரே.



மறை ஆர் நாவன் - வேதம் பாடும் திருநாவினை உடையவன்;
உறவா - உறவாக; (கடைக்குறை விகாரம்);
மறவார் - மறத்தல் இல்லாதவர்கள்;
வாழ்வர் - இன்புற்று வாழ்வார்கள்; (வாழ்தல் - செழித்திருத்தல்; 4. மகிழ்தல்);
(சுந்தரர் தேவாரம் - 7.70.6 - "குறைவிலா நிறைவே குணக்குன்றே ... உறவிலேன் உனையன்றி மற்று ... ஆர் எனக்குற வமரர்கள் ஏறே" - எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர்);



3)
பிறைசூ டெந்தையை
நறையூர் நம்பனை
முறையால் ஏத்திடப்
பறையும் பாவமே.



பிறைசூடு எந்தையை - பிறைச்சந்திரனை அணிந்த எம் தந்தையை;
முறையால் ஏத்திட - முறைப்படி வாழ்த்தி வழிபட; (சம்பந்தர் தேவாரம் - 1.67.7 - "பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்...");
பறைதல் - அழிதல்;



4)
சிறையார் வண்டறை
நறையூர் நம்பனைப்
பொறையாய் காவென
நிறைவே நேருமே.



சிறை ஆர் வண்டு அறை - சிறகுகள் பொருந்திய வண்டுகள் ரீங்காரம் செய்யும்;
பொறையாய் - அருளுடையவனே; பொறுப்பவனே; (பொறை - அருள்; பொறுமை); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.56.9 - "பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி" - விடத்தை உண்ட தவறாத அருள் வடிவே);
நிறைவு - மிகுதி; திருப்தி; மகிழ்ச்சி; மாட்சிமை;
நேர்தல் - நிகழ்தல் (To happen, occur);



5)
வம்பவிழ் மலரார்
அம்பொழில் நறையூர்
நம்பனை நவில்வார்
வெம்பிணி விடுமே.



வம்பு அவிழ் மலர் ஆர் - வாசனையோடு மலர்கின்ற பூக்கள் நிறைந்த; மணம் கமழும் மலர்கள் நிறைந்த; (வம்பு - வாசனை); (அவிழ்தல் - மலர்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);
(அப்பர் தேவாரம் - 6.74.4 - "...வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை ..." - மணங்கமழும் மலர்களை கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனை);
அம் பொழில் - அழகிய சோலை;
நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று - விரும்பத்தக்கவன்;
நவில்தல் - சொல்லுதல்; பாடுதல்; விரும்புதல்;
வெம் பிணி - கொடிய பிணி;



6)
கொண்டலின் நிறமார்
கண்டனை நறையூர்
அண்டனை அடைவார்க்
கெண்டிசைப் புகழே.



கொண்டலின் நிறம் ஆர் கண்டனை - மேகத்தின் நிறம் பொருந்திய கண்டம் உடையவனை; (கொண்டல் - மேகம்); (ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்);
அண்டன் - கடவுள் (God, as Lord of the universe);
எண் திசைப் புகழ் - எட்டுத்திக்கிலும் புகழ்; (எண் + திசை = எண்டிசை);


7)
சுரும்பறை நறையூர்த்
தரும்பரன் அடியை
விரும்பிய அடியார்
பெரும்பிணி இலரே.



சுரும்பு அறை நறையூர் - வண்டுகள் ஒலிக்கின்ற நறையூரில் ;
தரும் பரன் - (வேண்டியதெல்லாம் ) தருகின்ற மேலானவன்;
பெரும் பிணி - பெரிய பிணி - பிறவிநோய்;



8)
அரக்கனை இறையே
நெரித்தருள் நறையூர்க்
கருத்தனைத் தொழுவார்
வருத்தமொன் றிலரே.



அரக்கனை இறையே நெரித்தருள் - இராவணனைக் சிறிதளவே நசுக்கிய;
கருத்தன் - கர்த்தா - கடவுள் (God, as Creator);



9)
அரியயன் அறியா
எரியினை நறையூர்ப்
பெரியனைத் தொழுவார்
அரிவினை அறுமே.



அரி அயன் அறியா எரியினை - திருமால் பிரமன் இவர்களால் அறியப்படாத சோதியை;
பெரியன் - பெரியவன் - மகாதேவன்;
அரி வினை - அரிக்கின்ற வினை - வருத்துகின்ற வினை; (அப்பர் தேவாரம் - 5.1.3 - 'அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்...');



10)
வழியறி கிலர்சொல்
மொழிவிடும் நறையூர்
மழுவனைத் தொழுவார்
பழவினை அறுமே.



வழி அறிகிலர் சொல் மொழி விடும் - நல்ல மார்க்கத்தை அறியாதவர்கள் சொல்லும் சொற்களை மதிக்கவேண்டா; (விடும் - விடுங்கள்; நீங்குங்கள்);
மழுவன் - மழுப்படையை உடையவன்;
பழவினை அறுமே - பழைய வினைகள் அழியும்;



11)
காவணி நறையூர்ச்
சேவமர் பெருமான்
சேவடி தொழுவார்
தீவினை அறுமே.



கா அணி நறையூர்ச் - சோலைகள் திகழும் நறையூரில் உறைகின்ற;
சே அமர் பெருமான் - இடப வாகனன்;



12)
சுத்தனை நறையூர்ச்
சித்தனைச் சிவனைப்
பத்திசெய் தடைதல்
உய்த்திடும் உயர்வே.



* நறையூர்ச் சித்தீச்சரத்து ஈசன் திருநாமம் - சித்தநாதர்;
சுத்தன் - தூயவன்;
சித்தன் - சித்துருவானவன் ; சித்தத்திலிருப்பவன்; அட்டமாசித்திகளை அருள்பவன்;
(அப்பர் தேவாரம் - 5.2.5 - "பித்தனைப் ...வெண்மதி சூடியைச் சித்தனை...");
(சுந்தரர் தேவாரம் - 7.52.1 -"முத்தா முத்தி தரவல்ல ..... சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே" - சித்திகளை எல்லாம் உடையவனே);
உய்த்தல் - கொடுத்தல்; செலுத்துதல்; (சம்பந்தர் தேவாரம் - 3.49.1 - "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது");



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) நறையூர்ச் சித்தீச்சரம் (திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்) - இத்தலம் கும்பகோணம் - குடவாசல் வழியில் நாச்சியார் கோவில் என்ற ஊரை ஒட்டி உள்ளது.
2) நறையூர்ச் சித்தீச்சரம் (திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்) - தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=368



----------- --------------


No comments:

Post a Comment