Saturday, March 11, 2023

08.01.148 - சிவன் - நெல் - சிலேடை

08.01 – சிவன் சிலேடைகள்

2015-11-24

08.01.148 - சிவன் - நெல் - சிலேடை

-------------------------------------------------------

நீருண் முடிகாட்டும் நீர்மையுண்டு செய்வளரும்

சீருண்டு சோறீயும் சீர்மையுண்டு - பாருண்டு

பேருவகை கொண்டுரைக்கும் ஏருலா வும்பழனத்

தாரும்நெல் முக்கண் அரன்.


சொற்பொருள்:

நீருண்முடி - 1. நீருள் முடி / 2. நீர் உண் முடி;

(இலக்கணக் குறிப்பு: "ள் + = ண்ம" என்று புணரும்);

முடி - 1. தலை; உச்சி; / 2. நாற்றுமுடி (A small bundle of seedling for transplantation; ஒரு சேரக்கூடிய நாற்றின் முடிப்பு.);

நீர்மை - 1. சௌலப்யம் (Easiness of acquisition or attainment, accessibility, affability); சிறந்த குணம்; / 2. தன்மை;

செய் - 1. செம்மை; / 2. வயல்;

சீர் - இயல்பு; அழகு; பெருமை; புகழ்;

சீர்மை - சிறப்பு; புகழ்;

சோறு - 1. முக்தி; / 2. உணவு;

பாருண்டு பேருவகை கொண்டுரைக்கும் - 1. பேர், உவகைகொண்டு உரைக்கும் பார் உண்டு; / 2. பார் உண்டு, பேருவகைகொண்டு உரைக்கும்;

உரைத்தல் - சொல்லுதல்; புகழ்தல்;

ஏர் - 1. அழகு; / 2. கலப்பை;

பழனம் - 1. திருப்பழனம் என்ற தலம்; / 2. வயல்;

ஆர்தல் - 1. தங்குதல் (To abide, stay); / 2. நிறைதல்' பொருந்துதல்;


நெல்:

நீருள் முடி காட்டும் நீர்மை உண்டு - நீர்வளம் மிக்க இடத்தில் முளைக்கும்; (நீரில் நாற்றுமுடி இருக்கும்);

செய் வளரும் சீர் உண்டு - வயலில் வளரும் இயல்பு / அழகு உண்டு;

சோறு ஈயும் சீர்மை உண்டு - உணவு தரும் சிறப்பு உண்டு;

பார் உண்டு பேர் உவகைகொண்டு உரைக்கும் - உலகோர் அவ்வுணவை உண்டு, பெருமகிழ்ச்சியோடு புகழ்வர்;

ஏர் உலாவும் பழனத்து ஆரும் நெல் - கலப்பைகள் இயங்கும் வயலில் நிறையும்/பொருந்தும் நெல்;


சிவன்:

நீர் உண் முடி காட்டும் - நீரை உண்ட திருமுடி உடையவன் - கங்காதரன்;

நீர்மை உண்டு - சௌலப்பியன் - அன்பர்களால் எளிதில் அடையப்படுபவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.8.1 - "அவனது பெற்றி கண்டும் அவனீர்மை கண்டும் அகநேர்வர் தேவ ரவரே");

செய் வளரும் சீர் உண்டு - செம்மை மிகும் அழகு உண்டு - செம்மேனிப் பெருமான்;

சோறு ஈயும் சீர்மை உண்டு - முக்தி அளிக்கும் சிறப்பு உண்டு;

பார் உண்டு பேர் உவகைகொண்டு உரைக்கும் - "உவகைகொண்டு பேர் உரைக்கும் பார் உண்டு" என்று இயைக்க - மகிழ்வோடு அவன் திருநாமத்தைச் சொல்லும் உலகு உண்டு;

ஏர் உலாவும் பழனத்து ஆரும் முக்கண் அரன் - அழகு திகழும் திருப்பழனம் என்ற தலத்தில் உறைபவன், முக்கண் உடைய ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment