07.12 – வலிவலம்
2015-12-11
வலிவலம் (திருவலிவலம்)
------------------
(அறுசீர் விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" - என்ற அமைப்பு -
"தனன தானன தானா தானன தானன தானா")
(சம்பந்தர் தேவாரம் - 2.90.1 - "எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்");
1)
செம்பொன் மேனியன் சீரைத் தினமுரை காழியர் கோனுக்
கம்பொன் ஆயிரம் ஈந்த ஆவடு துறையினன் பொருத
கம்ப மாகரி உரியன் கையினில் அயன்சிரம் ஏந்தி
வம்பு லாம்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.
செம்பொன் மேனியன் சீரைத் - பொன் போன்ற திருமேனி உடையவனது திருப்புகழைத்;
தினம் உரை காழியர் கோனுக்கு - தினமும் பாடிய திருஞான சம்பந்தருக்கு;
அம்பொன் ஆயிரம் ஈந்த ஆவடு துறையினன் - ஆயிரம் பொன் அளித்த ஆவடுதுறை ஈசன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.56.1 - "கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே");
பொருத கம்ப மா கரி உரியன் - போர் செய்த பெரிய யானையின் தோலை அணிந்தவன்;
கையினில் அயன் சிரம் ஏந்தி - கையில் பிரம கபாலத்தை ஏந்தியவன்;
வம்பு உலாம் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம் மானே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;. (மான் - தலைவன்; பெரியோன்);
* திருஞான சம்பந்தருக்கு ஈசன் ஆயிரம் பொன் அளித்ததைப் பெரிய புராணத்திற் காண்க;
2)
சீர்த்த செந்தமிழ் செப்பு திருவுடை நாவினுக் கரசர்
ஆர்த்த கல்புணை ஆகி ஆழ்கடல் நின்றுய்ய அருள்செய்
தீர்த்தன் ஏறமர் செல்வன் திரிபுரம் மூன்றொரு கணையால்
மாய்த்த மாமலை வில்லி வலிவலம் மேயவெம் மானே.
சீர்த்த செந்தமிழ் செப்பு திருவுடை நாவினுக்கு அரசர் - சிறந்த செந்தமிழான தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்க்கு;
ஆர்த்த கல் புணை ஆகி ஆழ்கடல்நின்று உய்ய அருள்செய் தீர்த்தன் - அவரோடு சேர்த்துக் கட்டிய கல்லே தெப்பம் ஆகி, ஆழம் மிக்க கடலிலிருந்து அவர் உய்யும்படி அருள்புரிந்த தூயவன்; (நின்று - A particle used in the ablative sense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச் சொல்);
ஏறு அமர் செல்வன் - இடபவாகனன்;
திரிபுரம் மூன்று ஒரு கணையால் மாய்த்த மாமலை வில்லி - எங்கும் திரிந்த முப்புரங்களையும் ஒரே அம்பால் அழித்த, பெரிய மேருமலையால் ஆன வில்லை ஏந்தியவன்; (திரிபுரம் - வினைத்தொகை - திரிந்த புரங்கள்); (மாய்த்தல் - அழித்தல்);
வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;.
* திருநாவுக்கரசருக்குக் கல்லே தெப்பம் ஆன வரலாற்றைப் பெரிய புராணத்தில் காண்க; (அப்பர் தேவாரம் - 5.72.7 - "கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்");
3)
வேழம் வீழ்ந்திடு மாறு வெகுண்டசி லந்தியைச் செங்கட்
சோழன் ஆக்கிய ஐயன் சுந்தரர் இன்தமிழ் கேட்டுத்
தோழன் என்றருள் செய்தான் தொண்டர்கள் மனத்துறை துணைவன்
மாழை யொண்கண்ணி பங்கன் வலிவலம் மேயவெம் மானே.
வேழம் வீழ்ந்திடுமாறு வெகுண்ட சிலந்தியைச் செங்கட்சோழன் ஆக்கிய ஐயன் - திருவானைக்காவில் யானை இறக்குமாறு அதனோடு போர்செய்த சிலந்தியை மறுபிறப்பில் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தவன்;
சுந்தரர் இன்தமிழ் கேட்டுத் தோழன் என்றருள் செய்தான் - நம்பி ஆரூரின் இனிய பாடல்களைக் கேட்டு அவருக்குத் தன்னைத் தோழன் என்று தந்தவன்;
தொண்டர்கள் மனத்து உறை துணைவன் - அடியவர்கள் நெஞ்சில் உறையும் துணைவன்;
மாழையொண்கண்ணி பங்கன் - மாவடுப் போலும் ஒளியுடைய கண்களையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; (மாழை - மாவடு; அழகு); (சுந்தரர் தேவாரம் - 7.67.3 - "மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே");
வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க;
* சுந்தரருக்குத் தன்னைத் தோழனாகத் தந்த வரலாற்றைப் பெரிய புராணத்தில் காண்க; (பெரியபுராணம் - 12.273 - "புற்றிடங்கொள் மன்னவனார் அருளால் ஓர் வாக்குத் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்");
* மனத்துணை நாதன் - திருவலிவலத்து ஈசன் திருநாமம்;
* மாழையொண்கண்ணி - திருவலிவலத்து இறைவி திருநாமம்;
4)
புயலின் வண்ணமி டற்றன் பொன்னடி போற்றிய மூர்க்கர்
செயலை ஏற்றருள் சீலன் செஞ்சடை மேலிள மதியன்
கயல்கள் பாய்புனல் அருகே கவினுறு சோலைக ளோடு
வயல்கள் சூழ்ந்தழ காரும் வலிவலம் மேயவெம் மானே.
புயலின் வண்ண மிடற்றன் பொன்னடி போற்றிய - மேகம் போல் கரிய கண்டம் உடைய சிவபெருமான் பொன்னடிகளைப் போற்றி வணங்கிய;
மூர்க்கர் செயலை ஏற்று அருள் சீலன் - மூர்க்க நாயனாரின் திருத்தொண்டை ஏற்று அருள்புரிந்த, சீலம் உடையவன்;
செஞ்சடைமேல் இள மதியன் - சிவந்த சடைமீது இளம்பிறையை அணிந்தவன்;
கயல்கள் பாய் புனல் அருகே கவின் உறு சோலைகளோடு வயல்கள் சூழ்ந்து அழகு ஆரும் - கயல்மீன்கள் பாய்கின்ற நீர்நிலைகள் பக்கத்தில் அழகிய சோலைகளோடு வயல்களும் சூழ்ந்து அழகு மிகுகின்ற;
வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
* மூர்க்க நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க;
5)
பாசம் பற்றிய கையால் பணிசெய்த தண்டிகண் காண
நேசம் அற்றபுன் சமணர் நிலைகெட அருள்புரி அண்ணல்
தேசம் மிக்கவன் ஈசன் செஞ்சடை மேற்பிறை சூடி
வாசம் ஆர்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.
பாசம் பற்றிய கையால் பணி செய்த தண்டி கண் காண - கயிற்றைக் கையால் பற்றி நடந்து சென்று திருக்குளப் பணி செய்த, பிறவிக்குருடரான தண்டியடிகள் கண்பார்வை பெறுவதற்கும்; (பாசம் - கயிறு);
நேசம் அற்ற புன் சமணர் நிலைகெட அருள்புரி அண்ணல் - அன்பில்லாத இழிந்த சமணர்கள் அழியவும் அருள்புரிந்த அண்ணல்;
தேசம் மிக்கவன் ஈசன் செஞ்சடை மேற்பிறை சூடி - ஒளி மிகுந்தவன், ஈசன், செஞ்சடைமேல் சந்திரனைச் சூடியவன்;
வாசம் ஆர் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம் மானே - மணம் பொருந்திய சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
* தண்டியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க; அவர் திருத்தொண்டு செய்தது திருவாரூரில்;
6)
அலர்சொல் ஆதர்கள் அஞ்ச அகன்குள நீர்கொடு தீபம்
பலவும் ஏற்றம லர்த்தாள் பணிநமி நந்திக்கி ரங்கும்
தலைவன் நீள்மதி தங்கு சடையினன் வண்டினம் நாடு
மலர்கள் ஆர்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.
அலர் சொல் ஆதர்கள் அஞ்ச - பழித்துப் பேசும் அறிவிலிகளான சமணர்கள் அஞ்சும்படி; (அலர் - பழி; ஆதன் - அறிவிலி;)
அகன் குளநீர்கொடு தீபம் பலவும் ஏற்ற - (திருவாரூரில் உள்ள கமலாலயம் என்ற) பெரிய குளத்து நீரால் பல விளக்குகளை ஏற்றும்படி;
மலர்த்தாள் பணி நமிநந்திக்கு இரங்கும் தலைவன் - திருவடியை வழிபட்ட நமிநந்தி அடிகளுக்கு இரங்கி அருளிய தலைவன்;
நீள்மதி தங்கு சடையினன் - வளரும் பிறையை அணிந்தவன்;
வண்டினம் நாடு மலர்கள் ஆர் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம்மானே - வண்டுகள் விரும்பி அடையும் பூக்கள் மிகுந்த சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
* நமிநந்தியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க; அவர் திருத்தொண்டு செய்தது திருவாரூரில்;
7)
கண்டன் அங்கழல் ஏத்திக் கடலிடை மீனினை விட்டுத்
தொண்டு செய்யதி பத்தர்த் தூயவிண் ணேற்றிய பெருமான்
பண்டு வில்லினில் நாணாப் பாம்பினை ஆர்த்தெயில் எய்தான்
வண்டு லாம்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.
கண்டன் அங்கழல் ஏத்திக் கடலிடை மீனினை விட்டுத் தொண்டு செய் - நீலகண்டனின் / வீரனான சிவபெருமானின் அழகிய கழல் அணிந்த திருவடியை வாழ்த்தித் தினமும் ஒரு மீனைக் கடலில் விட்டு வழிபட்ட; (கண்டன் - நீலகண்டன் - ஏகதேசம் - ஒருபுடைப்பெயர்); (கண்டன் - "வீரன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.74.6 - "கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்" - கண்டன் - வீரன்);
அதிபத்தர்த் தூய விண் ஏற்றிய பெருமான் - மீனவர் தலைவரான அதிபத்தரைத் தூய சிவலோகத்திற்கு ஏற்றி அருளிய பெருமான்;
பண்டு வில்லினில் நாணாப் பாம்பினை ஆர்த்து எயில் எய்தான் - முற்காலத்தில் மேருமலை என்ற வில்லில் வாசுகி என்ற நாகத்தை நாணாகக் கட்டி முப்புரங்களை எய்தவன்;
வண்டு உலாம் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம்மானே - வண்டுகள் உலவும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
* அதிபத்த நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க; அவர் திருத்தொண்டு செய்தது நாகப்பட்டினத்தில்;
இலக்கணக் குறிப்பு: "அதிபத்தர்த் தூய விண் ஏற்றிய பெருமான்" - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணைப் பெயர்களை அடுத்து வல்லொற்று மிகும்.
"நல்ல தமிழ் எழுத வேண்டுமா" - அ.கி.பரந்தாமனார் - "குறிப்பு : பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு."
8)
மாவி லங்கலை எடுத்த வாளரக் கன்தனை நெரித்து
நாவி னாலவன் ஏத்த நாளொடு வாளருள் நம்பன்
சேவி லங்கிய கொடியன் தேன்மலி கொன்றையந் தாரன்
வாவி யிற்கயல் உகளும் வலிவலம் மேயவெம் மானே.
மா விலங்கலை எடுத்த வாள் அரக்கன்தனை நெரித்து - பெரிய மலையான கயிலைமலையைப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணனை நசுக்கி; (விலங்கல் - மலை); (வாள் - கொடுமை); (சம்பந்தர் தேவாரம் - 2.90.8 - "செழுந்தண் மால்வரை எடுத்த");
நாவினால் அவன் ஏத்த நாளொடு வாள் அருள் நம்பன் - பின் அவன் நாக்கைக்கொண்டு போற்றிப் பாடவும் இரங்கி அவனுக்கு நீண்ட ஆயுளும் சந்திரஹாஸம் என்ற வாளும் அருளிய சிவன்;
சே இலங்கிய கொடியன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.91.6 - "விடையார் கொடியன் வேத நாவன்");
தேன்மலி கொன்றையந் தாரன் - தேன் மிகுந்த கொன்றைமாலை அணிந்தவன்;
வாவியிற் கயல் உகளும் வலிவலம் மேய எம்மானே - நீர்நிலைகளில் கயல்மீன்கள் பாயும் திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
9)
பணியின் மேல்துயில் திருமால் பைம்மலர் மேலயன் காணார்
அணியும் ஒண்திரு நீறே அருங்கலம் எனநினை அன்பர்க்கு
அணியன் ஐந்தலை அரவார் அரையினன் களந்தனில் நீல
மணியன் வார்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.
பணியின் மேல் துயில் திருமால் பைம்மலர் மேல் அயன் காணார் - பாம்பின்மேல் துயிலும் திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் (அடியும் முடியும்) காணமாட்டார்;
அணியும் ஒண் திருநீறே அருங்கலம் என நினை அன்பர்க்கு அணியன் - ஈசன் பூசும் / தாம் பூசும் ஒளியுடைய திருநீறே தமக்கு அணிகலன் என்று எண்ணும் அடியவர்களுக்கு அருகில் இருப்பவன்; (அருங்கலம் - ஆபரணம்); (அணியன் - One who is near by; நெருங்கினவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.9.1 - "தம்மடி போற்றியென் பார்கட் கணியரே");
ஐந்தலை அரவு ஆர் அரையினன் - ஐந்து தலை உடைய நாகத்தை அரையில் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
களந்தனில் நீல மணியன் - கண்டத்தில் நீலமணி உடையவன்; (களம் - கண்டம்);
வார் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம்மானே - உயர்ந்த சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
10)
அஞ்செ ழுத்துரை யாமல் அனுதினம் பொய்யுரைத் துழலும்
வஞ்சர் சொல்வழி மதியேல் மாணியைக் காத்துவெங் கூற்றின்
நெஞ்சி லேஉதை காலன் நீறணி மார்பினில் நூலன்
மஞ்சு சேர்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.
அஞ்செழுத்து உரையாமல் அனுதினம் பொய் உரைத்து உழலும் - திருவைந்தெழுத்தைச் சொல்லாமல் தினந்தோறும் பொய்யையே பேசி உழல்கின்ற;
வஞ்சர் சொல் வழி மதியேல் - வஞ்சகர்கள் சொல்லும் நெறியை மதிக்கவேண்டா;
மாணியைக் காத்து வெங் கூற்றின் நெஞ்சிலே உதை காலன் - மார்க்கண்டேயரைக் காத்துக், கொடிய கூற்றுவனின் மார்பில் உதைத்த காலகாலன் (/ காலால் உதைத்தவன்);
நீறு அணி மார்பினில் நூலன் - திருநீறு பூசிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவன்;
மஞ்சு சேர் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம் மானே - மேகம் வந்து பொருந்தும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
11)
அனைத்தும் ஆக்கியொ டுக்கும் ஆண்டவன் ஒருபடை அடைய
நினைத்த பாண்டவன் செய்த நீள்தவம் கண்டும கிழ்ந்து
வனத்தில் வேட்டுவ னாய்ப்போய் வரமருள் பசுபதி அன்பர்
மனத்தில் நின்றருள் நாதன் வலிவலம் மேயவெம் மானே.
அனைத்தும் ஆக்கி ஒடுக்கும் ஆண்டவன் - எல்லாவற்றையும் படைத்து முடிவில் சம்ஹாரம் செய்யும் கடவுள்;
ஒரு படை அடைய நினைத்த பாண்டவன் செய்த நீள் தவம் கண்டு மகிழ்ந்து - ஒப்பற்ற ஆயுதமான பாசுபதாஸ்திரத்தை அடைய விரும்பிய அருச்சுனன் செய்த பெரும்தவத்தைக் கண்டு மகிழ்ந்து;
வனத்தில் வேட்டுவனாய்ப் போய் வரம் அருள் பசுபதி - காட்டில் ஒரு வேடன் கோலத்திற் சென்று அவனுக்கு வரம் அருளிய பசுபதி;
அன்பர் மனத்தில் நின்று அருள் நாதன் - பக்தர்கள் நெஞ்சில் தங்கி அருளும் தலைவன்;
வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;
* மனத்துணை நாதன் - திருவலிவலத்து ஈசன் திருநாமம்;
பிற்குறிப்புகள் :
1) யாப்புக்குறிப்பு :
அறுசீர் விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" - என்ற அமைப்பு -
"தனன தானன தானா தானன தானன தானா"
அடிதோறும் முதற்சீரின் அமைப்பு - தனன என்பது தான என்றும் வரலாம். குறில், குறில் + ஒற்றில் முடியும்;
அடிதோறும் இரண்டாம் சீர் - நேரசையில் தொடங்கும்;
தானன என்ற இடத்தில் தனதன வரலாம்; தானா என்ற இடத்தில் தனனா வரலாம்.
விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்;
2) சம்பந்தர் தேவாரம் - 2.90.4 -
துன்ன ஆடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்னம் ஆருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment