Saturday, March 4, 2023

07.04 – அகத்தியான்பள்ளி

07.04 – அகத்தியான்பள்ளி

2015-09-10

அகத்தியான்பள்ளி

------------------

(எண்சீர் விருத்தம் - "தான தானன தனதன தனன" என்ற அரையடி அமைப்பு;

யாப்புக் குறிப்பைக் கீழ்க் காண்க)

(சுந்தரர் தேவாரம் - 7.68.1 - "செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்")


1)

என்பும் ஏனவெண் கொம்பும ணிந்தோர்

.. ஏற தேறிய இறையவன் வாச

அம்பை ஏவிய மன்மதன் தன்னை

.. ஆகம் அற்றிடக் காய்நுதற் கண்ணன்

தென்பு லத்துவன் கூற்றையு தைத்துச்

.. சிறுவர் ஆருயிர் காத்தருள் செய்தான்

அன்பி னால்தொழும் அடியவர்க் கினியன்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


என்பும் ஏன-வெண்-கொம்பும் அணிந்து ஓர் ஏறது ஏறிய இறையவன் - எலும்பும் பன்றியின் வெண்கொம்பும் அணிந்த, இடபவாகனம் உடைய இறைவன்; (என்பு - எலும்பு); (ஏனம் - பன்றி);

வாச அம்பை ஏவிய மன்மதன்தன்னை ஆகம் அற்றிடக் காய்-நுதற்-கண்ணன் - மலரம்பை எய்த காமனை உடம்பு இல்லாதவன் ஆகும்படி கோபித்து எரித்த நெற்றிக்கண்ணன்;

தென்புலத்து வன்-கூற்றை தைத்துச், சிறுவர் ஆருயிர் காத்தருள் செய்தான் - தென்திசையினன் ஆன கொடிய கூற்றுவனை உதைத்து, மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்தவன்;

அன்பினால் தொழும் அடியவர்க்கு இனியன் - அன்போடு தொழும் பக்தர்களுக்கு இனிமை பயப்பவன்;

அகத்தியான்பள்ளி மேவிய அரனே - அகத்தியான்பள்ளியில் எழுந்தருளிய ஹரன்;

2)

நேத்தி ரந்திகழ் நெற்றியன் முடிமேல்

.. நிலவு சூடிய நின்மலன் மாலை

சாத்து தாடகைக் கணிபனந் தாளில்

.. சாய்ந்த அன்பினன் தாழ்சடை அண்ணல்

பார்த்தி ருந்தடி பரவிடு பத்தர்

.. பாவம் ஆயின தீர்த்தருள் பண்பன்

ஆர்த்து வண்திரை மோதிடு கரைமேல்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


மாலை சாத்து தாடகைக்கு அணி பனந்தாளில் சாய்ந்த அன்பினன் - தாடகை என்ற பக்தைக்காக அழகிய திருப்பனந்தாளில் தன் தலையைச் சாய்த்து அவள் இட்ட மாலையை ஏற்றுக்கொண்ட ஈசன்; (இவ்வரலாற்றைத் திருப்பனந்தாள் தலவரலாற்றிற் காண்க);

பார்த்திருந்து அடி பரவிடு பத்தர் பாவம் ஆயின தீர்த்தருள் பண்பன் - தன்னைத் தரிசித்தும் தியானித்தும் திருவடியைத் துதிக்கும் பக்தர்களது பாவங்களையெல்லாம் தீர்த்து அருள்பவன்; (பார்த்தல் - கண்ணால் நோக்குதல்; தேடுதல்; கருதுதல்); (அப்பர் தேவாரம் - 4.23.6 - "பார்த்திருந் தடிய னேனான் பரவுவன் பாடி யாடி");

ஆர்த்து வண் திரை மோதிடு கரைமேல் அகத்தியான்பள்ளி - ஒலித்து, வளம் மிக்க அலைகள் மோதுகின்ற கடற்கரையில் உள்ள அகத்தியான்பள்ளி;


3)

கார்ப்பு மிக்கவன் னஞ்சினை உண்டு

.. கண்டம் இட்டவன் ஓட்டினை ஏந்தி

ஊர்ப்ப லிக்குழல் கின்றவன் இடப

.. ஊர்தி யன்கொடி இடையினை உடைய

பார்ப்ப திக்கொரு பாகம ளித்த

.. பண்பன் நீர்மலி சடைமிசை மதியன்

ஆர்ப்ப ரித்தலை சேர்கரை அயலே

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


கார்ப்பு மிக்க வன் நஞ்சினை உண்டு கண்டம் இட்டவன் - கரிய காரம் மிக்க கொடிய விடத்தை உண்டு கண்டத்தில் வைத்தவன்; (கார்ப்பு - காரம்; கார்த்தல் - கறுப்பாதல்; உறைத்தல்);

ஓட்டினை ஏந்தி ஊர்ப்பலிக்கு உழல்கின்றவன் - பிரமன் மண்டையோட்டை ஏந்தி ஊரார் இடும் பிச்சைக்குத் திரிபவன்; (ஊர்ப்பலிக்கு - பல ஊர்களில் பிச்சைக்கு; ஊரிலுள்ளோர் இடும் பிச்சைக்கு);

பார்ப்பதி - பார்வதி;

நீர் மலி சடைமிசை மதியன் - கங்கை தங்கும் சடைமேல் சந்திரனை அணிந்தவன்;

ஆர்ப்பரித்து அலை சேர் கரை அயலே - ஆரவாரம் செய்து அலைகள் சேர்கின்ற கரையின் பக்கத்தில் உள்ள;


4)

தரையிற் சக்கரம் ஒன்றினைக் கீறிச்

.. சலந்த ரன்றனைச் செற்றவன் மேரு

வரையை வில்லெனக் கையினில் ஏந்தி

.. வாளி யாஅரி கால்எரி கொண்டு

விரவ லார்புர மூன்றெரி செய்த

.. வீரன் வெண்பொடி மேனியன் அரையில்

அரவக் கச்சினன் அலைமலி கின்ற

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


தரையிற் சக்கரம் ஒன்றினைக் கீறிச் சலந்தரன்தனைச் செற்றவன் - நிலத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவன்;

வரையை - மலையை;

வாளியா அரி கால் எரி கொண்டு - அம்பாக விஷ்ணு வாயு அக்னி இவர்களைக் கொண்டு; (வாள் - அம்பு); (கால் - வாயு);

விரவலார் புரம் மூன்று எரி செய்த - பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த;

அரையில் அரவக் கச்சினன் - அரையில் பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;


5)

நச்சி மண்ணிலிங் கத்தினைச் செய்து

.. நம்ப னைத்தொழக் கண்டுசி தைத்த

எச்ச தத்தனின் கால்களை மழுவால்

.. எறிந்த சண்டியை மகனென ஏற்றான்

நிச்ச லும்தமிழ் மாலைகள் பாடி

.. நினையும் அன்பருக் கரணென ஆகி

அச்சம் தீர்த்தருள் செய்பவன் அலையார்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


* சண்டேசுர நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.

நச்சி மண் இலிங்கத்தினைச் செய்து நம்பனைத் தொழக் கண்டு - (தன் மகனான விசாரசருமன்) விரும்பி ஆற்றுமணலில் இலிங்கம் செய்து பாலால் அபிஷேகம் செய்து ஈசனை வழிபடுவதைப் பார்த்து; (நச்சுதல் - விரும்புதல்);

சிதைத்த எச்சதத்தனின் கால்களை மழுவால் எறிந்த சண்டியை மகன் என ஏற்றான் - (கோபித்து) அப்பூசையைக் (காலால் உதைத்து) அழித்த (தந்தை) எச்சதத்தன் கால்களை ஒரு கோலே மழு ஆகக் கொண்டு வெட்டிய சண்டீசனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்ட பெருமான்; (சிதைத்தல் - குலைத்தல்; கெடுத்தல்); (எறிதல் - வெட்டுதல்);

நிச்சலும் - நித்தலும் - தினந்தோறும்;

அரண் - காவல்;

அலை ஆர் - அலைகள் பொருந்திய;


6)

மல்லின் ஆர்புயம் எட்டுடை ஈசன்

.. வார ணத்துரி மூடிய மைந்தன்

அல்லில் ஆடிடு கழலினன் அங்கம்

.. ஆறு நான்மறை ஆகிய அண்ணல்

சொல்லிற் சிந்தையிற் செய்கையில் என்றும்

.. தூய வன்றனை இருத்திய அன்பர்

அல்லல் நீக்கிய ருள்பவன் அலையார்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


மல்லின் ஆர் புயம் எட்டு உடை ஈசன் - வலிமை மிக்க எண்தோள்கள் உடைய பெருமான்;

வாரணத்து உரி மூடிய மைந்தன் - யானைத்தோலைப் போர்த்த வீரன்;

அல்லில் ஆடிடு கழலினன் - நள்ளிருளில் நட்டம் ஆடும் திருவடியை உடையவன்;

அங்கம் ஆறு நான்மறை ஆகிய அண்ணல் - நால்வேதமும் ஆறங்கமும் ஆனவன்; (அப்பர் தேவாரம் - 6.1.6 - "அருமறையோ டாறங்க மாயி னானைச்");

சொல்லில் சிந்தையில் செய்கையில் என்றும் தூயவன்தனை இருத்திய அன்பர் அல்லல் நீக்கி அருள்பவன் - மனம் வாக்கு காயம் என்ற மூன்றாலும் ஈசன் பணியே செய்யும் பக்தர்களுக்கு அவர்களுடைய அல்லகளை நீக்கி அருள்வான் சிவபெருமான்;


7)

வேலை நஞ்சினைக் கண்டுந டுங்கி

.. விண்ணு ளார்தொழ உண்டருள் செய்த

நீல மாமிட றுடையவன் எந்தை

.. நெற்றி மேலொரு கண்ணுடை நிமலன்

ஏல வார்குழல் மாதினை ஓர்பால்

.. ஏற்ற வன்முனி நால்வர்கள் வேண்ட

ஆல மர்ந்தறம் சொன்னவன் அலையார்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


வேலை நஞ்சு - கடலில் எழுந்த விடம்;

விண்ணுளார் - தேவர்கள்;

நீல மா மிடறு - அழகிய நீலகண்டம்;

ஏல வார் குழல் மாதை இடப்பால் ஏற்றவன் - வாசனைச்சாந்து பூசிய, நீண்ட கூந்தலை உடைய உமையை இடப்பக்கம் ஏற்றவன்;

ஆல் அமர்ந்து அறம் சொன்னவன் - கல்லால மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;


8)

மலையை ஆட்டிய வாளரக் கன்தன்

.. வாய்கள் பத்தும ரற்றிட ஊன்று

தலைவன் தன்னிகர் அற்றவன் தேய்ந்து

.. தாளில் வீழ்ந்துவ ணங்கிய மதியைத்

தலையின் மேல்திகழ் வித்தவன் நீறு

.. தாங்கு மார்பினன் கலமலி கடலின்

அலைகள் வந்தெறி கரையதன் அயலே

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


வாள் அரக்கன்தன் வாய்கள் பத்தும் அரற்றிட - கொடிய அரக்கனான இராவணனின் பத்து வாய்களும் அழுது புலம்புமாறு; (அரற்றுதல் - புலம்புதல்);

தன்னிகர் அற்றவன் - ஒப்பற்றவன்;

கலம் மலி கடலின் அலைகள் வந்து எறி கரை அதன் அயலே - மரக்கலங்கள் (படகுகள், கப்பல்கள்,,,) மிகுந்த கடலில் அலைகள் வந்து மோதுகின்ற கரையின் அருகே;


9)

நார ணன்பிர மன்மிக நேடி

.. நாணி ஏத்திட அழலென நின்ற

பூர ணன்புனல் சூடிய புனிதன்

.. புவனம் ஏழையும் ஆக்கியொ டுக்கும்

கார ணன்குழைக் காதினன் காலைக்

.. கதிர்நி றத்தினன் கற்றவர் கருதும்

ஆர ணப்பொருள் ஆனவன் அலையார்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


நாரணன் பிரமன் மிக நேடி நாணி ஏத்திட - விஷ்ணுவும் பிரமனும் மிகவும் தேடி, வாடி, வெட்கி, வாழ்த்தும்படி;

அழல் என நின்ற பூரணன் - சோதி உருவில் ஓங்கியவன்; முழுமுதற்பொருள்;

புனல் சூடிய புனிதன் - கங்காதரன்;

புவனம் ஏழையும் ஆக்கி ஒடுக்கும் காரணன் - ஏழு உலகங்களையும் தோற்றுவித்து முடிவில் ஒடுக்குபவன்; முதற்காரணன்; (காரணன் - மூலமானவன் - One who is the First Cause, as the Supreme Being);

குழைக் காதினன் - காதில் குழையை அணிந்தவன்;

காலைக்கதிர் நிறத்தினன் - உதிக்கின்ற சூரியனைப் போல் செம்மேனியன்;

ஆரணப்பொருள் ஆனவன் - வேதப்பொருளாகி விளங்குபவன்; (ஆரணம் - வேதம்);


10)

துணிந்து பொய்யுரை அற்பர்கள் சொல்லும்

.. சொற்க ளைச்சிறி தும்மதி யேன்மின்

தணிந்த சிந்தைய ராய்மலர் தூவித்

.. தண்ட மிழ்த்தொடை பாடிம லர்த்தாள்

பணிந்து போற்றிடு வார்துயர் நீக்கும்

.. பரமன் ஏறமர் கொடியினன் நாகம்

அணிந்த செஞ்சடை வேதியன் அலையார்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


துணிந்து பொய் உரை அற்பர்கள் சொல்லும் சொற்களைச் சிறிதும் மதியேன்மின் - அஞ்சாமல் பொய்பேசும் கீழோர் சொல்லும் வார்த்தைகளைக் கொஞ்சமும் மதிக்க வேண்டா; (மதியேன்மின் - மதியாதீர்கள்);

தணிந்த சிந்தையராய் மலர் தூவித், தண் தமிழ்த்தொடை பாடி, மலர்த்தாள் பணிந்து போற்றிடுவார் துயர் நீக்கும் பரமன் - மனத்தை அடக்கி, மலர்களைத் தூவிக், குளிர்ந்த தமிழ்ப்பாமாலைகள் பாடி, மலர் போன்ற திருவடிகளை வணங்கும் பக்தர்களது துயரத்தைப் போக்கும் பரமன்;

ஏறு அமர் கொடியினன் - இடபக்கொடி உடையவன்;

நாகம் அணிந்த செஞ்சடை வேதியன் - பாம்பை அணிந்தவன்; செஞ்சடை உடையவன்; வேதியன்; (சி.கே.சுப்பிரமணிய முதலியார் பெரியபுராண உரையில், "நீற்றால்நிறை வாகிய மேனியுடன்" என்று தொடங்கும் பாடலுக்குத் தரும் விளக்கத்திலிருந்து: வேதியன் - வேதத்தைச் சொன்னவன் - வேதத்தின் பொருளாவான். வேதத்தில் விளங்குபவன் என்றபடி. வேதித்தல் - வேறுபடுத்துதல் என்று கொண்டு உரைத்தலுமாம்);


11)

நக்க னேகரி காட்டிடை ஆடும்

.. நாத னேவிடை ஏறிய நம்பா

சொக்க னேஅருள் என்றடி வாழ்த்தும்

.. தொண்ட ருக்குயர் வானம ளிப்பான்

செக்கர் வானன மேனிவெண் ணீற்றன்

.. தேவ தேவன்அ ணங்கொரு பங்கன்

அக்கின் ஆரம ணிந்தவன் அலையார்

.. அகத்தி யான்பள்ளி மேவிய அரனே.


"நக்கனே, கரிகாட்டிடை ஆடும் நாதனே, விடை ஏறிய நம்பா - "நிர்வாணியே, சுடுகாட்டில் ஆடும் தலைவனே, இடப வாகனம் உடையவனே, விரும்பத்தக்கவனே;

சொக்கனே அருள்" என்று அடி வாழ்த்தும் தொண்டருக்கு உயர் வானம் அளிப்பான் - அழகனே அருளாய்" என்று அடிதொழும் பக்தர்களுக்கு உயர்ந்த வானம் (சிவலோகம்) அளிப்பான்;

(சம்பந்தர் தேவாரம் - 1.67.1 - "நாதாவெனவும் நக்காவெனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே");

செக்கர் வான் அன மேனி வெண்ணீற்றன் - செவ்வானம் போன்ற செம்மேனியில் வெண் திருநீறு பூசியவன்;

அணங்கு ஒரு பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;

அக்கின் ஆரம் அணிந்தவன் - எலும்பு மாலை அணிந்தவன்; (அக்கு - எலும்பு); (ஆரம் - மாலை);


பிற்குறிப்புகள்:

1. யாப்புக் குறிப்பு:

எண்சீர் விருத்தம் - "தான தானன தனதன தனன" என்ற அரையடி அமைப்பு;

தான – தனன என்றும் வரும்; தனதன – தானன என்றும் வரும்; தனன – தனனா, தான, தானா என்றும் வரும்;

அரையடியில்:

  • முதற்சீர் குறிலில் முடியும் மாச்சீர்.

  • இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும் விளச்சீர்.

  • மூன்றாம் சீர் விளச்சீர்.

  • நாலாம் சீர் மாச்சீர்.

  • விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.


2. அகத்தியான்பள்ளி - இது வேதாரண்யத்திற்குத் தெற்கே உள்ள தலம்; இக்கால வழக்கில் அகஸ்தியான்பள்ளி/அகஸ்தியம்பள்ளி.

3. கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=1041


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment