Saturday, March 11, 2023

07.10 – வேட்களம் (திருவேட்களம்)

07.10 – வேட்களம் (திருவேட்களம்)

2015-11-28

வேட்களம் (திருவேட்களம்) (சிதம்பரத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(அறுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");


1)

கள்ள மின்றி நாண்மலர் கட்டி இட்டு வாழ்த்திடும்

உள்ள முள்ள அன்பினர் உய்யு மாறு நல்குவான்

துள்ளு மான்ம ழுப்படை சூல மேந்து கையினான்

வெள்ள மாரும் வேணியான் வேட்க ளத்து நாதனே.


கள்ளம் இன்றி, நாண்மலர் கட்டி இட்டு வாழ்த்திடும் - (நெஞ்சில்) வஞ்சம் இன்றி, அன்று பூத்த புதுமலர்களைத் தொடுத்துத் திருவடியில் இட்டுப் போற்றும்;

உள்ளம் உள்ள அன்பினர் உய்யுமாறு நல்குவான் - மனம் உடைய பக்தர்கள் உய்யும்படி அருள்புரிவான்;

துள்ளு மான் மழுப்படை சூலம் ஏந்து கையினான் - துள்ளுகின்ற மானையும், மழுவாயுதத்தையும், சூலத்தையும் கையில் ஏந்தியவன்;

வெள்ளம் ஆரும் வேணியான் - கங்கை பொருந்திய சடையை உடையவன்;

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


2)

பாதம் ஏத்தும் அன்பர்தம் பாவம் நீக்கு பண்பினன்

காதல் மாது பங்கினன் கண்ணி லங்கு நெற்றியன்

ஓத நஞ்சை உண்டவன் உம்ப ரைப்பு ரந்தவன்

வேதம் ஓது நாவினன் வேட்க ளத்து நாதனே.


பாதம் ஏத்தும் அன்பர்தம் பாவம் நீக்கு பண்பினன் - திருவடியை வழிபடும் பக்தர்களது பாவங்களையெல்லாம் தீர்க்கும் குணம் உடையவன்;

காதல் மாது பங்கினன் - அர்த்தநாரீஸ்வரன்;

கண் இலங்கு நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

ஓத நஞ்சை உண்டவன் உம்பரைப் புரந்தவன் - கடல் விடத்தை உண்டவன், தேவர்களைக் காத்தவன்;

வேதம் ஓது நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


3)

காலை மாலை கைதொழும் காத லாளர் நெஞ்சினன்

ஏல மார்ந்த வார்குழல் ஏழை சேரி டத்தினன்

சூல பாணி வானவர் துன்பம் நீங்கி வாழவே

வேலை நஞ்சை உண்டவன் வேட்க ளத்து நாதனே.


காதலாளர் - அன்பு உடைய அடியவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "காதலாளர் கைதொழு தேத்த இருந்தவூராம்");

ஏலம் ஆர்ந்த வார்குழல் ஏழை சேர் இடத்தினன் - மயிர்ச்சாந்து தடவிய மணமிகுந்த நீண்ட கூந்தலையுடைய உமாதேவியை இடப்பக்கம் உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.32.4 - "ஏலமார் தருகுழ லேழையோடு");

வேலை நஞ்சை உண்டவன் - கடல் விடத்தை உண்டவன்;


4)

ஏழி சைத்த மிழ்த்தொடை ஏற்று கந்து தன்னையே

தோழ னென்று சுந்தரர் சொல்லு மாறு நல்கினான்

ஏழை பங்கன் ஏறமர் ஏந்தல் ஓர்பொ ருப்பன

வேழம் அன்று ரித்தவன் வேட்க ளத்து நாதனே.


ஏழிசைத் தமிழ்த்தொடை ஏற்று உகந்து - ஏழிசை பொருந்திய தமிழ்ப்பாடல்களை விரும்பிக் கேட்டு;

தன்னையே தோழன் என்று சுந்தரர் சொல்லுமாறு நல்கினான் - சுந்தரருக்குத் தன்னைத் தோழன் என்று கொடுத்தவன்;

ஏழை பங்கன் - உமைபங்கன்;

ஏறு அமர் ஏந்தல் - இடபவாகனன்; (ஏந்தல் - 10. பெருமையிற் சிறந்தோன். 11. அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 1.30.9 - "மயானத் தீண்டா நடமாடியவேந்தல்");

ஓர் பொருப்பு அன வேழம் அன்று உரித்தவன் - ஒரு மலை போன்ற யானையோடு முன்பு போரிட்டு அதன் தோலை உரித்தவன்; (பொருப்பு - மலை); (அன – அன்ன - போன்ற);

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


5)

நற்ப தந்தொ ழுந்தவர் நால்வ ருக்க றஞ்சொனான்

எற்பு மாலை பூண்டவன் என்றும் ஆடு தாண்டவன்

பொற்ப தத்தி னைச்சுரர் போற்ற முப்பு ரம்பட

வெற்பு வில்லை ஏந்தினான் வேட்க ளத்து நாதனே.


நற்பதம் தொழும் தவர் நால்வருக்கு அறம் சொனான் - தன் திருவடியை வணங்கிய முனிவர் நால்வருக்கு நான்மறைப் பொருளை விரித்து உரைத்தவன்;

எற்பு மாலை பூண்டவன் - எலும்பு மாலை அணிந்தவன்;

இலக்கணக் குறிப்பு - நஞ்சு - நச்சுப்பாம்பு; செம்பு - செப்புப்பத்திரம், கரும்பு - கருப்பஞ்சாறு, கடம்பு - கடப்பமாலை; இவை போல, என்பு - எற்புடம்பு, எற்புமாலை; (பெரியபுராணம் - மானக்கஞ்சாற நாயனர் புராணம் - 12.12.22 - "கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி");

என்றும் ஆடு தாண்டவன் - அலகிலா ஆடல் உடையவன்;

பொற்பதத்தினைச் சுரர் போற்ற, முப்புரம் பட வெற்பு வில்லை ஏந்தினான் - பொன்னடியைத் தேவர்கள் துதிக்க, (அவர்களுக்கு இரங்கி), முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


6)

மெய்யி லங்கு நீற்றினான் வேத னார்க பாலமோர்

கையில் ஏந்தி ஊரிடும் ஐயம் தேர்க ருத்தினான்

செய்ய பாதம் ஏத்திய தேவர் இன்னல் நீங்கவே

வெய்ய நஞ்சை உண்டவன் வேட்க ளத்து நாதனே.


மெய் இலங்கு நீற்றினான் - திருமேனியில் திருநீறு பூசியவன்; ("மெய்" என்பதை "உண்மை" என்றும் பொருள்கொள்ளலாம். சம்பந்தர் தேவாரம் - 2.66.2 - "உண்மையில் உள்ளது நீறு");

வேதனார் கபாலம் ஓர் கையில் ஏந்தி, ஊர் இடும் ஐயம் தேர் கருத்தினான் - பிரமன் மண்டையோட்டை ஒரு கையில் ஏந்திப், பிச்சை ஏற்கும் கருத்து உடையவன்;

செய்ய பாதம் ஏத்திய தேவர் இன்னல் நீங்கவே - அப்பெருமானது சிவந்த பாதங்களை வணங்கிய தேவர்களுடைய துன்பம் தீரும்படி;

வெய்ய நஞ்சை உண்டவன் - வெம்மை மிக்க, கொடிய விடத்தை உண்டவன்;

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


7)

பண்ம லிந்த பாடலால் பைங்க ழல்ப ணிந்தவர்

மண்மி சைப்பி றந்திடா வண்ணம் நன்மை செய்பவன்

ஒண்ம ழுப்ப டைக்கரன் உண்ப லிக்கு ழல்பவன்

வெண்ம திச்ச டைப்பரன் வேட்க ளத்து நாதனே.


பண் மலிந்த பாடலால் பைங்கழல் பணிந்தவர் - இசை நிறைந்த பாடல்களால் திருவடியை வணங்கிய அடியவர்கள்;

மண்மிசைப் பிறந்திடா வண்ணம் நன்மை செய்பவன் - மீண்டும் பூமியில் பிறவி அடையாதபடி நலம் அருள்பவன்;

ஒண் மழுப்படைக் கரன் - ஒளி திகழும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;

உண் பலிக்கு உழல்பவன் - பிச்சைக்குத் திரிபவன்;

வெண்மதிச் சடைப் பரன் - வெண் பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்த பரமன்;

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


8)

தென்னி லங்கை மன்னவன் சென்னி பத்த டர்த்தவன்

பின்னி சைக்கி ரங்கிய பித்தன் நச்ச ராமதி

வன்னி கொன்றை கூவிளம் மத்தம் ஆறு சூடிய

மின்னி கர்த்த வேணியான் வேட்க ளத்து நாதனே.


தென் இலங்கை மன்னவன் சென்னி பத்து அடர்த்தவன் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணனது பத்துத்தலைகளையும் நசுக்கியவன்;

பின் இசைக்கு இரங்கிய பித்தன் - பிறகு, இராவணன் இசையோடு பாடி வணங்கக் கேட்டு, அவனுக்கு இரங்கி அருள்செய்தவன், பித்தன் என்னும் பெயரும் உடைய சிவபெருமான்;

நச்சு அரா - விஷப்பாம்பு;

கூவிளம் - வில்வம்;

மத்தம் - ஊமத்தமலர்;

ஆறு - கங்கை;

மின் நிகர்த்த வேணியான் - மின்னல் போன்ற செஞ்சடை; (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே");


9)

நாகம் மேல்து யின்றமால் நான்மு கத்தன் நேடழல்

பாகம் ஏழை ஆயினான் பாலும் நெய்யும் ஆடினான்

ஆகம் மீது நீறணி அண்ணல் ஆர்ந்த நஞ்சினால்

மேகம் ஆர்மி டற்றினன் வேட்க ளத்து நாதனே.


நாகம் மேல் துயின்ற மால் நான்முகத்தன் நேடு அழல் - பாம்பின்மேல் துயிலும் திருமாலும் நான்முகனும் தேடிய சோதி;

பாகம் ஏழை ஆயினான் - உமையை ஒரு பாகமாக உடையவன்;

பாலும் நெய்யும் ஆடினான் - பால், நெய் முதலியவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

ஆகம் மீது நீறு அணி அண்ணல் - திருமேனி மீது திருநீற்றை அணியும் பெருமான்;

ஆர்ந்த நஞ்சினால் மேகம் ஆர் மிடற்றினன் - உண்ட விடத்தால் மேகம் போல் கருமை திகழும் நீலகண்டம் உடையவன்;

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


இலக்கணக் குறிப்பு: நாகம் - நாகத்தின்மேல், ஆகம் - ஆகத்தின்மீது, என்பன போல் மகர ஒற்றில் முடியும் சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கும்பொழுது 'அத்து', 'இன்' சாரியைகள் பொதுவாக வரும். இப்பாடலில் சந்தம் கருதி, 'நாகம் மேல்', 'ஆகம் மீது' என 'அத்து''ச் சாரியை இன்றி வந்தது. (ஓர் உதாரணம் - வில்லி பாரதம் - பதினெட்டாம் போர்ச் சருக்கம் - "ஆரவார முரசக் கொடி உயர்த்தவனது ஆகமீது அணி மணிக் கவசம் அற்று விழ,");


10)

மூடர் ஈச னைத்தொழா மூங்கர் சொல்ம தித்திடேல்

தோட ணிந்த காதினன் சுற்றி நின்று பல்கணம்

பாட நட்டம் ஆடினான் பார்த்த னுக்க ருள்செய

வேட னாய டைந்தவன் வேட்க ளத்து நாதனே.


மூடர், ஈசனைத் தொழா மூங்கர் சொல் மதித்திடேல் - சிவபெருமானைத் தொழாத அறிவிலிகளும், அவன் நாமத்தையும் புகழையும் சொல்லாத ஊமைகளும் சொல்லும் பேச்சை மதிக்கவேண்டா;

தோடு அணிந்த காதினன் - ஒரு காதில் தோடு அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

சுற்றி நின்று பல்கணம் பாட நட்டம் ஆடினான் - பல பூதகணங்கள் சுற்றும் நின்று இசைபாடத், திருநடம் செய்பவன்;

பார்த்தனுக்கு அருள்செய வேடனாய் அடைந்தவன் - அருச்சுனனுக்குப் பாசுபதம் அருள்செய்ய, ஒரு வேடன் கோலத்தில் வந்தவன்; (* திருவேட்களத் தலபுராணத்தில் காண்க);

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


11)

கந்தம் நாறு போதினால் காத லோடு போற்றினால்

வந்து வாதை செய்வினை மாயு மாறு நல்குவான்

தந்தை யோடு தாயுமாய்த் தாங்கும் ஈசன் மார்பினில்

வெந்த நீறு பூசினான் வேட்க ளத்து நாதனே.


கந்தம் நாறு போதினால் காதலோடு போற்றினால் - மணம் கமழும் பூக்களால் அன்போடு வழிபட்டால்;

வந்து வாதை செய் வினை மாயுமாறு நல்குவான் - துன்பம் தருகின்ற வினைகளெல்லாம் அழியும்படி அருள்புரிவான்;

தந்தையோடு தாயுமாய்த் தாங்கும் ஈசன் - அடியவர்களுக்குத் தந்தையும் தாயும் ஆகி அவர்களைக் காக்கும் கடவுள்; (சம்பந்தர் தேவாரம் - 2.15.4 - "தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே ஆயநல் லன்பர்க் கணியானே");

மார்பினில் வெந்த நீறு பூசினான் - திருமார்பில் திருநீற்றைப் பூசியவன்;

வேட்களத்து நாதனே - திருவேட்களத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனான சிவபெருமான்;


பிற்குறிப்பு :

யாப்புக் குறிப்பு:

  • அறுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4 சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5 சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6 சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment