07.03 – குடமூக்கு (கும்பகோணம்)
2015-09-10
குடமூக்கு ( கும்பகோணம் - கும்பேசுவரர் கோயில்)
------------------
(வஞ்சிவிருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
இலக்கணக் குறிப்பு: இப்பதிகத்தில் சந்தம் கருதிச் சில இடங்களில் ஒற்று விரித்தல் விகாரம், விட்டிசைத்தல் முதலியன வரும்; படிப்போர்க்கு எளிமை கருதிப் பாடல்களில் அவ்விடங்களில் சொற்கள் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன; (உதாரணம் - உருவன் னுமைகோனூர் - உருவன் உமைகோனூர்);
1)
களிவா னுலகே பெறவேண்டில்
அளியோ டடைவாய் மடநெஞ்சே
ஒளியார் உருவன் உமைகோனூர்
குளிரார் புனலார் குடமூக்கே.
களி-வானுலகே பெற வேண்டில் - என்றும் இன்புறும் சிவலோகத்தை அடைய விரும்பினால்;
அளியோடு அடைவாய் மடநெஞ்சே - பேதை நெஞ்சே, அன்போடு அடைவாயாக; (அளி - அன்பு);
ஒளி ஆர் உருவன் - ஜோதிஸ்வரூபி;
உமைகோன் ஊர் - உமாபதி உறையும் ஊரான;
குளிர் ஆர் புனல் ஆர் குடமூக்கே - குளிர்ச்சி பொருந்திய நீர்நிலைகள் மிக்க குடமூக்கை (கும்பகோணத்தை);
2)
உலகில் இனியும் பிறவாத
நிலைவேண் டுதியேல் நினைநெஞ்சே
தலைமேல் மதியம் படநாகம்
குலவும் பெருமான் குடமூக்கே.
உலகில் இனியும் பிறவாத நிலை வேண்டுதியேல் நினை நெஞ்சே - இனிப் பிறவிகள் இல்லாத நற்கதி வேண்டுமென்றால், மனமே நினைவாயாக;
தலைமேல் மதியம் படநாகம் குலவும் பெருமான் குடமூக்கு - தன் திருமுடிமீது சந்திரனும் படம் திகழும் நாகப்பாம்பும் நெருங்கி இருக்கும்படி அணிந்த பெருமான் உறையும் குடமூக்கை; ("சந்திரனோடு படும்படி நாகம் குலவுகின்ற திருமுடி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (படம் - பாம்பின் படம்); (படுதல் - உரசுதல்); (குலவுதல் - விளங்குதல்; நெருங்கி உறவாடுதல்; தங்குதல்);
3)
இரவும் பகலும் திருநாமம்
பரவிப் பணிசெய் தடைநெஞ்சே
அரவச் சடையன் வடவாற்கீழ்க்
குரவன் உறையும் குடமூக்கே.
இரவும் பகலும் திருநாமம் பரவிப் பணிசெய்து அடை நெஞ்சே - இராப்பகல் எப்பொழுதும் ஈசன் திருநாமத்தைப் போற்றித் தொண்டுசெய்து அடைவாய் என் நெஞ்சமே;
வடவாற்கீழ்க் குரவன் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் குரு - தட்சிணாமூர்த்தி; (வடவால் - வடவால மரம் - கல்லாலமரம்); (குரவன் - குரு);
(சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");
(அப்பர் தேவாரம் - 4.64.3 - "ஆற்கீழ் இருந்துநன் பொருள்கள் நால்வர்க் கியம்பினர்");
4)
அழலார் வினைகள் அவையெல்லாம்
கழலக் கருதில் அடைநெஞ்சே
மழவெள் விடையன் மணிகண்டன்
குழகன் உறையும் குடமூக்கே.
அழல் ஆர் வினைகள் - சுடுகின்ற தீவினைகள்; (அழல் - உஷ்ணம்; நெருப்பு);
கழல்தல் - நீங்குதல்;
மழ வெள் விடையன் மணிகண்டன் - இளைய வெள்ளை எருதை வாகனமாக உடையவன், நீலகண்டன்;
குழகன் - அழகன்; இளைஞன்;
5)
கழியின் துணையால் நடவாமுன்
கழியன் பொடுநீ அடைநெஞ்சே
மழையார் மிடறன் மழுவாளன்
குழையோர் செவியன் குடமூக்கே.
கழியின் துணையால் நடவாமுன் - கோல் ஊன்றி நடக்கும் காலம் (முதுமை) அடைவதன்முன்னம்; (கழி - கோல்);
கழி அன்பொடு நீ அடை நெஞ்சே - நெஞ்சமே, நீ மிகுந்த அன்போடு அடைவாயாக; (கழி - மிகுந்த);
மழை ஆர் மிடறன் - மேகம் போல் நீலநிறம் திகழும் கண்டத்தை உடையவன்;
மழுவாளன் - மழுவாயுதத்தை ஏந்தியவன்;
குழை ஓர் செவியன் - ஒரு காதில் குழை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;
6)
மிடியும் வினையும் விடவேண்டில்
அடியைத் தொழுதற் கடைநெஞ்சே
துடியும் சுடரும் திகழ்கையன்
கொடிமேல் விடையன் குடமூக்கே.
மிடி - வறுமை; துன்பம்;
துடி - உடுக்கை என்னும் பறை;
சுடர் - தீ;
கொடிமேல் விடையன் - இடபக்கொடி உடையவன்;
7)
கமழ்செந் தமிழால் புகழ்நெஞ்சே
இமவான் மகளுக் கிடமீந்தான்
அமரர்க் கசுரர் இடர்தீரக்
குமரற் றருவான் குடமூக்கே.
கமழ் செந்தமிழால் புகழ் நெஞ்சே - மணக்கின்ற தமிழ்ப்பாமாலைகளான தேவாரம் திருவாசகம் பாடித் துதி நெஞ்சமே;
இமவான் மகளுக்கு இடம் ஈந்தான் - பார்வதிக்கு இடப்பாகத்தைக் கொடுத்தவன்;
அமரர்க்கு அசுரர் இடர் தீர - தேவர்களுக்கு அசுரர்களால் விளைந்த துன்பங்கள் எல்லாம் தீரும்படி;
குமரற் றருவான் குடமூக்கே - குமரனைத் தந்த பெருமான் உறையும் குடமூக்கை; (குமரற்றருவான் = குமரன் + தருவான் = இரண்டாம் வேற்றுமைத் தொகையில் பொருள்தெளிவு கருதி, உயர்திணைப் பெயர்களின் கடைசியில் இருக்கும் 'ன்' என்பது 'ற்' எனத் திரியும்).
இலக்கணக்
குறிப்பு : ஆறுமுக
நாவலரின் இலக்கணச்
சுருக்கத்திலிருந்து:
#101.
உயர்திணைப்
பெயரீற்று லகர ளகரங்கள்,
மாற்கடவுள்,
மக்கட்சுட்டு
என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும்,
லகர
ளகர னகரங்கள், குரிசிற்
கண்டேன், மகட்கொடுத்தான்,
தலைவற்புகழ்ந்தான்
என இரண்டாம் வேற்றுமைத்
தொகையினுந் திரியுமெனக்
கொள்க.)
8)
தரைமேற் பிறவா நிலைவேண்டில்
அரையா அருளென் றடைநெஞ்சே
வரைபேர்த் தவனைச் சிறிதூன்றும்
குரையார் கழலன் குடமூக்கே.
தரைமேற் பிறவா நிலை வேண்டில் - பூமியில் இனியும் பிறப்பு இல்லாத நிலையை விரும்பினால்;
"அரையா! அருள்" என்று அடை நெஞ்சே - "அரசனே அருள்வாயாக" என்று அடைவாய் நெஞ்சமே;
வரை பேர்த்தவனைச் சிறிது ஊன்றும் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்க விரலைச் சற்று ஊன்றிய;
குரை ஆர் கழலன் குடமூக்கே - ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை உடைய சிவபெருமான் உறையும் குடமூக்கை;
9)
நறையார் மலரான் அரிகாணா
இறைவா நரைவெள் ளெருதேறீ
மறைநா வினனே அருளென்பார்
குறைதீர் பரனூர் குடமூக்கே.
"நறை ஆர் மலரான் அரி காணா இறைவா = "மணம் மிக்க தாமரையில் இருக்கும் பிரமனும் திருமாலும் காணாத இறைவனே;
நரைவெள் எருதேறீ - மிக வெண்மையான இடபத்தினை வாகனமாக உடையவனே;
மறை-நாவினனே அருள்" என்பார் குறை தீர் பரன் - , "வேதம் ஓதிய நாவை உடையவனே, அருள்வாயாக" என்று வணங்கும் பக்தர்களுடைய குறைகளைத் தீர்க்கும் பரமன்;
ஊர் குடமூக்கே - அப்பெருமான் உறையும் ஊர் குடமூக்கு;
10)
மணமார் மலரிட் டடிவாழ்த்தார்
உணரார் அவர்சொல் உரைநீங்கும்
அணைவீர் அருள்வான் அடலேற்றன்
குணமெட் டுடையான் குடமூக்கே.
மணம் ஆர் மலர் இட்டு அடி வாழ்த்தார் உணரார் - வாசமிக்க பூக்களைத் தூவி ஈசன் திருவடியை வணங்காதவர்கள் அறியமாட்டார்கள்;
உணரார் அவர் சொல் உரைநீங்கும் - அத்தகைய அறியாதவர்கள் சொல்லும் வார்த்தைகளை மதிக்கவேண்டா; அவற்றை நீங்குங்கள்; (உணரார் - அவிவேகிகள் - Ignorant, foolish, uninformed folk);
அணைவீர் குடமூக்கே - குடமூக்கை அடையுங்கள்; (அணைதல் - சார்தல்);
அருள்வான் அடல் ஏற்றன், குணம் எட்டு உடையான் - வலிய, வெற்றி உடைய இடபத்தை வாகனமாக உடையவனும் எண்குணங்கள் உடையவனுமான சிவபெருமான் அருள்புரிவான்;
(அப்பர் தேவாரம் - 6.16.4 - "எண்குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே" - எண்குணம் - "தன்வயம், தூய உடம்பு, இயற்கை உணர்வு, முற்றுணர்வு. இயல்பாகவே பாசம் இன்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பில் இன்பம்" என்பன);
11)
இனியோர் இடரில் நிலைவேண்டில்
பனியார் மலரால் பணிநெஞ்சே
தனிவெள் விடையன் சடைமீது
குனிவெண் பிறையன் குடமூக்கே
இனி ஓர் இடர் இல் நிலை வேண்டில் - இனி ஒரு துன்பமும் இல்லாத நன்னிலையை அடைய விரும்பினால்;
பனி ஆர் மலரால் பணி நெஞ்சே - குளிர்ச்சி பொருந்திய மலர்களைத் தூவி வணங்கு நெஞ்சமே;
தனி வெள் விடையன் - ஒப்பற்ற வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன்; (தனி - ஒப்பற்ற);
சடைமீது குனி வெண் பிறையன் குடமூக்கே - சடைமீது வளைந்த வெண்பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமான் உறையும் குடமூக்கை; (குனிதல் - வளைதல்);
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment