Friday, March 24, 2023

07.13 – கன்றாப்பூர் - அல்லொடு பகலும்

07.13 – கன்றாப்பூர்

2015-12-12

கன்றாப்பூர் (திருக்கன்றாப்பூர்) (இக்காலத்தில் "கோயில் கண்ணாப்பூர்")

------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.46.2 - "மனமெனுந் தோணி பற்றி")


1)

அல்லொடு பகலும் போற்றும் அன்புடை மாணி தன்னைக்

கொல்லவந் தடைந்த கூற்றைக் குமைத்தவர் தேவர் எங்கள்

அல்லலை நீக்காய் என்ன அருவிடம் தன்னை உண்ட

நல்லவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


* நடுதறியப்பர் - திருக்கன்றாப்பூர்த் தலத்து இறைவன் திருநாமம்;


அல்லொடு பகலும் போற்றும் அன்பு உடை மாணிதன்னைக் கொல்ல வந்து அடைந்த கூற்றைக் குமைத்தவர் - இரவும் பகலும் வழிபடும் பக்தரான மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த எமனை அழித்தவர்; (மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்");

தேவர் "எங்கள் அல்லலை நீக்காய்" என்ன, அருவிடம் தன்னை உண்ட நல்லவர் - தேவர்கள், "எம் துன்பத்தை நீக்கி அருளாய்" என்று வேண்டக், கொடிய விடத்தை உண்ட நல்லவர்; (நல்லவன் - நலத்தைச் செய்பவன்); (சுந்தரர் தேவாரம் - 7.61.7 - "நண்ணி னார்க்கென்றும் நல்லவன் தன்னை");

கன்றாப்பூரில் நடுதறியப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


2)

ஆதியும் நடுவும் ஆகி அந்தமும் ஆன ஐயர்

பாதியிற் பெண்ணை வைத்துப் பாய்புனல் சடையில் வைத்தார்

நீதியர் செய்ய பாதம் நினைந்தெழும் நேயர் கட்கு

நாதியர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


ஆதியும் நடுவும் ஆகி அந்தமும் ஆன ஐயர் - முதலும் நடுவும் இறுதியும் ஆன தலைவர்; (ஐயர் - தலைவர்);

பாதியிற் பெண்ணை வைத்துப் பாய்புனல் சடையில் வைத்தார் - திருமேனியில் ஒரு பாதியில் உமையை வைத்துக், கங்கையைச் சடையில் வைத்தவர்;

நீதியர் - நீதி வடிவானவர்;

செய்ய பாதம் நினைந்தெழும் நேயர்கட்கு நாதியர் - சேவடியைத் தியானித்து எழும் பக்தர்களுக்கு உறவினர்; (செய்ய - சிவந்த); (நாதி - உறவினன்; காப்பாற்றுவோன்); (சம்பந்தர் தேவாரம் - 1.38.4 - "நெஞ்சொன்றி நினைந்தெழுவார்மேல் துஞ்சும் பிணியா யினதானே"); (சுந்தரர் தேவாரம் - 7.97.1 - "எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான்");

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


3)

வேதனார் தலையை ஏந்தி வீதியிற் பலிக்கு ழல்வார்

மாதுமை பங்கர் ஆகி வார்குழை தோட ணிந்த

காதனார் காத லாகிக் கைதொழு வாரைக் காக்கும்

நாதனார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


* மாதுமை - திருக்கன்றாப்பூர்த் தலத்து இறைவி திருநாமம்;


வேதனார் தலையை ஏந்தி - வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் சிவபெருமானார்; அவர் (பிரமனது) மண்டையோட்டைக் கையில் ஏந்தி; (வேதனார் - என்ற சொல்லை இப்பாடலில் இருவிதமாகவும் பொருள்கொள்ளல் ஆம் - 1. சிவபெருமான்; 2. பிரமன்); (சம்பந்தர் தேவாரம் - 3.29.6 - "வேதனார் வெண்மழு வேந்தினார்");

வீதியில் பலிக்கு உழல்வார் - தெருவில் பிச்சைக்குத் திரிபவர்;

மாதுமை பங்கர் ஆகி வார் குழை தோடு அணிந்த காதனார் - உமையொரு பாகர் ஆகி, நீண்ட குழையும் தோடும் அணிந்த காதுகள் உடையவர்;

காதலாகிக் கைதொழுவாரைக் காக்கும் நாதனார் - பக்தியோடு கைகூப்பி வணங்கும் அடியவர்களைக் காக்கும் தலைவர்;

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


4)

அடித்தலம் மறவா அன்பர் அகத்துறை கின்ற ஈசர்

முடித்திரை தங்க வைத்த முக்கணர் பூதம் பாட

வெடித்திடு துடியை ஏந்தி விரிசடை புரள வீசி

நடித்தவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


அடித்தலம் மறவா அன்பர் அகத்து உறைகின்ற ஈசர் - திருவடியை மறவாமல் தொழும் அடியவர்கள் மனத்தில் குடிகொள்கின்ற ஈசர்;

முடித் திரை தங்க வைத்த முக்கணர் - திருமுடியில் அலைமிக்க கங்கையைத் தங்க வைத்த முக்கண்ணர்; (திரை - அலை; நதி; - கங்கை);

பூதம் பாட, வெடித்திடு துடியை ஏந்தி, விரிசடை புரள வீசி நடித்தவர் - பூதகணங்கள் இசை பாட, வெடி போல் ஒலிக்கின்ற உடுக்கினைக் கையில் ஏந்தி, விரிந்த சடை புரளும்படி ஆடியவர்; (துடி - உடுக்கு); (நடித்தல் - ஆடுதல்); (அப்பர் தேவாரம் - 4.10.9 - "வெறியுறு விரிசடை புரள வீசிஓர்" - நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


(இலக்கணக் குறிப்பு : முடித்திரை - ஏழாம்வேற்றுமைத்தொகை - முடியின்கண் திரை;

ஏழாம் வேற்றுமைத்தொகையில் வரும் வலி மிகும்; உதாரணம்: காட்டிடைச்சென்றான்; குடிப்பிறந்தார்;)


5)

அக்கணி ஆர மாப்பூண் அழகனார் அவம தித்த

தக்கனைத் தலைய ரிந்த தலைவனார் தஞ்சம் என்று

புக்கவர் தமக்கி ரங்கிப் புரமவை மூன்றும் வேவ

நக்கவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


அக்கு அணி ஆரமாப் பூண் அழகனார் - எலும்பை அழகிய மாலையாகப் பூண்ட அழகர்; (அணி ஆரம் - அழகிய ஹாரம்; "அணிகின்ற ஹாரம்" என்று வினைத்தொகையாகவும் கொள்ளல் ஆம்);

அவமதித்த தக்கனைத் தலை அரிந்த தலைவனார் - இகழ்ந்த தக்கன் வேள்வியை அழித்து அவன் தலையை அறுத்தவர்; (அரிதல் - அறுத்தல்);

தஞ்சம் என்று புக்கவர் தமக்கு இரங்கிப் புரம் அவை மூன்றும் வேவ நக்கவர் - அடைக்கலம் புகுந்த வானவர்க்கு இரங்கி முப்புரங்களும் வெந்து அழியச் சிரித்தவர்;

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


6)

பாடினார் மறைகள் எல்லாம் படர்சடை மீது திங்கள்

சூடினார் குறட்பூ தங்கள் சூழ்ந்திசை ஆர்க்க நட்டம்

ஆடினார் அறமு ரைக்க அன்றுகல் லால நீழல்

நாடினார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


பாடினார் மறைகள் எல்லாம் - வேதங்களைப் பாடியவர்;

படர்சடை மீது திங்கள் சூடினார் - படரும் சடைமேல் சந்திரனை அணிந்தவர்;

குறட்பூதங்கள் சூழ்ந்து இசை ஆர்க்க நட்டம் ஆடினார் - குள்ள பூதங்கள் சுற்றி நின்று இசை ஒலிக்க திருநடம் செய்தவர்;

அறம் உரைக்க அன்று கல்லால நீழல் நாடினார் - முன்னம் சனகாதியருக்கு மறைப்பொருள் விரிக்கக் கல்லால மரத்தின்கீழ் இருந்தவர்;

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


7)

கச்சதா அரவம் கட்டிக் கையிலோர் கபாலம் ஏந்திப்

பிச்சைதான் கொள்ளும் பித்தர் பிள்ளைவெண் மதியம் மத்தம்

உச்சிமேற் சூடும் அத்தர் ஊர்தியா இடபம் தன்னை

நச்சினார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


கச்சதா அரவம் கட்டிக் - அரையில் கச்சாக ஒரு பாம்பைக் கட்டியவர்; (கச்சதா - கச்சதாக - கச்சுஅது ஆக);

பிள்ளை வெண் மதியம் மத்தம் உச்சிமேற் சூடும் அத்தர் - இள வெண்திங்களையும் ஊமத்த மலரையும் முடிமேல் அணிந்த தந்தையார்;

ஊர்தியா இடபம் தன்னை நச்சினார் - வாகனமாக இடபத்தை விரும்பியவர்; (ஊர்தியா - ஊர்தியாக - கடைக்குறை விகாரம்); (நச்சுதல் - விரும்புதல்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


8)

தொல்கயி லாயம் தன்னைத் தூக்கிய துட்டன் ஆண்மை

அல்கிட ஊன்றிப் பின்னர் அவற்கொரு வாளும் ஈந்தார்

பல்கணக் கூத்தர் பாதம் பணிசுரர்க் கமுதம் தன்னை

நல்கினார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


தொல் கயிலாயம் தன்னைத் தூக்கிய துட்டன் ஆண்மை அல்கிட ஊன்றிப் - தொன்மையான கயிலைமலையைப் பெயர்த்த துஷ்டனான இராவணனது வலிமையும் ஆணவமும் அழியும்படி திருப்பாத விரலை ஊன்றி; (ஆண்மை - வலிமை; அகங்காரம்); (அல்குதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.29.8 - "அரக்க னாண்மை யழிய வரைதன்னால் நெருக்க வூன்றும் விரலான்");

பின்னர் அவற்கு ஒரு வாளும் ஈந்தார் - பிறகு (அவன் அழுது தொழக் கண்டு இரங்கி) அவனுக்கு (நீண்ட ஆயுளையும்) ஒப்பற்ற சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவர்; (அவற்கு - அவன்+கு - அவனுக்கு); (ஒரு - ஒப்பற்ற);

பல்கணக் கூத்தர் - பல கணங்கள் சூழ ஆடும் கூத்தர்; (அப்பர் தேவாரம் - 6.56.4 - "பல்கணக் கூத்தப் பிரானே போற்றி" - பல்கணம் - பூத கணங்களே அன்றிப், பதினெண்கணங்களும் என்க. கணக் கூத்து, கணங்களின் இடையிற் செய்யப்படும் கூத்து);

பாதம் பணி சுரர்க்கு அமுதம் தன்னை நல்கினார் - திருவடியைப் பணிந்த தேவர்களுக்கு அமுதத்தை அளித்தவர்; (சுரர் - தேவர்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


9)

கஞ்சனும் அரியும் நேடிக் காணொணாச் சோதி ஆனார்

அஞ்சனக் கண்ணி பங்கர் அடியவர் மீது பாய்ந்த

வெஞ்சினக் காலன் தன்னை வீட்டினார் மிடறு தன்னில்

நஞ்சனார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


கஞ்சனும் அரியும் நேடிக் காணொணாச் சோதி ஆனார் - பிரமனாம் திருமாலாலும் அடிமுடி தேடிக் காண இயலாத ஜோதி ஆனவர்; (கஞ்சன் - பிரமன் - Brahmā, who was born in a lotus); (நேடுதல் - தேடுதல்);

அஞ்சனக் கண்ணி பங்கர் - மை தீட்டிய கண்களை உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவர்; (அஞ்சனம் - கண்ணிடு மை); (அஞ்சனக்கண்ணி - அஞ்சனாட்சி); (சம்பந்தர் தேவாரம் - 3.9.3 - "அஞ்சனக் கண்ணுமை பங்கினர்");

அடியவர் மீது பாய்ந்த வெஞ்சினக் காலன் தன்னை வீட்டினார் - மார்க்கண்டேயர் மீது பாய்ந்த கொடிய கோபம் உடைய கூற்றுவனை உதைத்து அழித்தவர்; (வீட்டுதல் - அழித்தல்);

மிடறு தன்னில் நஞ்சனார் - கண்டத்தில் நஞ்சை அணிந்தவர் - நீலகண்டர்; (அப்பர் தேவாரம் - 6.17.10 - "விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்" - கடல் நஞ்சுண்டவர்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


10)

பிட்டராய்த் திரிவார் பேசும் பேச்சினில் உண்மை இல்லை

விட்டுநீர் விலகும் செக்கர் மேனியில் திருவெண் ணீற்றர்

இட்டமாய்த் தொழுவார்க் கின்பம் ஈபவர் ஈமக் காட்டில்

நட்டனார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


பிட்டராய்த் திரிவார் பேசும் பேச்சினில் உண்மை இல்லை - வேதநெறியை (வைதிகமார்க்கத்தை)ப் பழித்துப் பேசித் திரிபவர்கள் பேச்சில் உண்மை இல்லை; (பிட்டர் - பிரஷ்டர்);

விட்டு நீர் விலகும் - அவர்கள் பேச்சை மதியாமல் நீங்குங்கள்;

செக்கர் மேனியில் திருவெண்ணீற்றர் - செம்மேனியில் வெள்ளிய திருநீற்றைப் பூசியவர்; (செக்கர் - சிவப்பு);

இட்டமாய்த் தொழுவார்க்கு இன்பம் ஈபவர் - அன்போடு தொழும் அடியவர்க்கு இன்பர் அளிப்பவர்;

ஈமக் காட்டில் நட்டனார் - சுடுகாட்டில் திருநடம் செய்பவர்; (அப்பர் தேவாரம் - 6.29.5 - "ஈமக் காட்டில் ஓரிபல விடநட்ட மாடி னானைத்");

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


11)

கயந்திகழ் முடியில் திங்கட் கண்ணியர் மல்லார் எட்டுப்

புயந்திகழ் புராணர் பாடிப் போற்றிடும் அன்பர் தங்கள்

பயந்தவிர் கால காலர் பாவைநல் லாளைப் பாகம்

நயந்தவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


கயம் திகழ் முடியில் திங்கட் கண்ணியர் - கங்கை தங்கிய திருமுடிமேல் திங்களைக் கண்ணிமாலையாக அணிந்தவர்; (கயம் - நீர்நிலை); (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

மல் ஆர் எட்டுப் புயம் திகழ் புராணர் - வலிய எண்தோள்கள் உடையவர், மிகவும் பழையவர்;

பாடிப் போற்றிடும் அன்பர்-தங்கள் பயம் தவிர் காலகாலர் - பாடி வணங்கும் அடியவர்களது அச்சத்தைத் தீர்ப்பவர், காலனுக்கே காலன் ஆனவர்;

பாவை நல்லாளைப் பாகம் நயந்தவர் - பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவர்; (சுந்தரர் தேவாரம் - 7.17.9 - "பாவைநல் லாள்தனக்கும் வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய்")

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment