07.06 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
2015-11-09
பாண்டிக்கொடுமுடி (இக்காலத்தில் - கொடுமுடி)
--------------------------------
(கட்டளைக் கலித்துறை) (தேவாரத்தில் "திருவிருத்தம்" என்ற அமைப்பு);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்")
1)
காலைப் பிடித்துக் கதறிய தேவரைக் காத்தருள்செய்
நீலத் திருமிடற் றெந்தை நெருப்பு நிறமுடையான்
ஏலக் குழலி உமையை இடப்புறம் ஏற்றுமகிழ்
கோலச் சடையன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
காலைப் பிடித்துக் கதறிய தேவரைக் காத்தருள்செய் நீலத் திருமிடற்று எந்தை - திருவடியைச் சரணடைந்து இறைஞ்சிய தேவர்களைக் காத்து அருள்செய்த, நீலகண்டத்தை உடைய எம் தந்தை;
நெருப்பு நிறம் உடையான் - தீப் போல் செம்மேனி உடையவன்;
ஏலக்குழலி உமையை இடப்புறம் ஏற்று மகிழ் - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமாதேவியை இடப்பாகமாக விரும்பி ஏற்ற;
கோலச் சடையன் - அழகிய சடையை உடையவன்;
உறைவது பாண்டிக் கொடுமுடியே - அப்பெருமான் வீற்றிருந்தருளுவது பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலமாகும். (சம்பந்தர் தேவாரம் - 3.88.1 - "வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே");
2)
தொடுக்கும் மலர்களும் சொல்லும்கொண் டேத்திய தொண்டருக்கு
நடுக்கம் கொடுத்த நமனை உதைத்தருள் நம்பெருமான்
உடுக்கும் மழுவும் உடையவன் என்றும் ஒளித்தலின்றிக்
கொடுக்கும் கரத்தன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
தொடுக்கும் மலர்களும் சொல்லும் - பூமாலைகளும் பாமாலைகளும்;
உடுக்கும் மழுவும் உடையவன் - கையில் உடுக்கையையும் மழுவாயுதத்தையும் ஏந்தியவன்;
ஒளித்தலின்றிக் கொடுக்கும் கரத்தன் - வேண்டும் வரங்களை எல்லாம் கரவாது அளிக்கின்ற வரதஹஸ்தன்;
3)
வானத் தவர்கள் வணங்க இரங்கி மதிலெரித்தான்
கானத் திடைநடம் செய்யும் கருத்தன் கவினுறவே
ஏனத் தெயிறு விளங்கிய மார்பன் இருஞ்சடைமேல்
கூனற் பிறையன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
கானத்திடை நடம் செய்யும் கருத்தன் - சுடுகாட்டில் ஆடுகின்ற கடவுள்; (கருத்தன் - கர்த்தா - தலைவன்; கடவுள்);
கவினுற - அழகுற;
ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு; (2.85.2 - "என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க");
இருஞ்சடைமேல் கூனல் பிறையன் - பெரிய சடையின்மீது வளைந்த பிறைச்சந்திரனை அணிந்தவன்;
4)
தக்கன்செய் வேள்வி தனிற்பக லோன்பல் தகர்த்தபிரான்
அக்கும் அரவும் அரையினிற் பூண்டவன் அந்திவண்ணச்
செக்கர்த் திருமேனி மீதுவெண் ணீற்றன் திருமுடிமேற்
கொக்கின் இறகன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
தக்கன் செய் வேள்விதனில் பகலோன் பல் தகர்த்த பிரான் - தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்தபொழுது, அங்கிருந்த பூடன் (பூஷன்) என்ற ஆதித்தன் ஒருவனது பல்லை உதிர்த்த தலைவன்; (திருமாளிகைத் தேவர் அருளியது - 9.3.6 - "பண்டாய மலரயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசுங்கண் கொண்டாய்" - முற்பட்டவனாகிய பிரமன், தக்கன், அவன் இயற்றிய வேள்வித் தலைவன் இவர்களுடைய தலைகளையும், ஆதித்தியர் பன்னிருவரில் பூஷன் என்பவன் பற்களையும், பகன் என்பவன் கண்களையும் நீக்கினவனே);
அக்கும் அரவும் அரையினிற் பூண்டவன் - எலும்பையும் பாம்பையும் தன் இடுப்பில் அணிந்தவன்;
அந்திவண்ணச் செக்கர்த் திருமேனிமீது வெண்ணீற்றன் - மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனிமேல் வெண்ணீற்றைப் பூசியவன்;
திருமுடிமேல் கொக்கின் இறகன் - கொக்கு வடிவினனான குரண்டாசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன்;
5)
வெல்படை ஆழியை மாலுக் களித்தவன் வேதமெலாம்
சொல்பதி ஆதியும் அந்தமும் அற்றவன் தோடணிந்த
தொல்புக ழாளன் கனல்மழு வாளன் சுரர்பணியும்
கொல்புலித் தோலன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
வெல் படை ஆழியை மாலுக்கு அளித்தவன் - வெற்றி உடைய ஆயுதமான சக்கரத்தைத் திருமாலுக்கு அளித்தவன்;
வேதம் எலாம் சொல் பதி - வேதங்கள் எல்லாம் போற்றும் தலைவன்; எல்லா வேதங்களையும் சொன்ன தலைவன்;
ஆதியும் அந்தமும் அற்றவன் - முதலும் முடிவும் இல்லாதவன்;
தோடு அணிந்த தொல் புகழாளன் - அர்தநாரீஸ்வரன் என்ற பழம்புகழ் உடையவன்;
கனல் மழுவாளன் - ஜொலிக்கின்ற மழுவை ஏந்தியவன்;
சுரர் பணியும் கொல்புலித் தோலன் - தேவர்கள் வணங்கும் ஈசன், புலித்தோலை அணிந்தவன்;
6)
பிணமிட் டெரிக்கும் சுடலை எனுமொரு பேரரங்கிற்
கணம்வட்டம் இட்டு முழவுகள் ஆர்த்திடக் கச்செனவோர்
பணம்கட்டி ஆடும் பரமன் படர்சடைப் பால்மதியன்
குணமெட் டுடையன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
பிணம் இட்டு எரிக்கும் சுடலை எனும் ஒரு பேர் அரங்கில் - பிணங்களை இட்டு எரிக்கும் சுடுகாடு என்ற ஒரு பெரிய மன்றத்தில்;
கணம் வட்டம் இட்டு முழவுகள் ஆர்த்திடக் - பூதகணங்கள் வட்டமாகச் சூழ்ந்து முழாக்களை வாசிக்க;
கச்சு என ஓர் பணம் கட்டி ஆடும் பரமன் - அரையில் கச்சாக ஓர் பாம்பைக் கட்டி, ஆடுகின்ற பரமன்;
படர்சடைப் பால்மதியன் - படரும் சடையும் பால் போன்ற வெண்பிறையை அணிந்தவன்;
குணம் எட்டு உடையன் - எண்குணத்தான்; (அப்பர் தேவாரம் - 4.18.8 - "எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்");
தருமை ஆதீன உரையிலிருந்து: எட்டுக் குணம் :- (குறள். 9. உரை பார்க்க) 1. பிறவின்மை. 2. இறவின்மை. 3. பற்றின்மை. 4. பெயரின்மை. 5. உவமைஇன்மை. 6. ஒருவினையின்மை. 7. குறைவிலறிவுடைமை. 8. குடிநுதல் (கோத்திரம்) இன்மை என்பது பழந்தமிழர் "நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முதுமுதல்வன்" (புறம். 166) உடைய பண்பெட்டும் வழங்கினர்.
1. முற்றறிவு (சருவஞ்ஞத்துவம்). 2. வரம்பிலின்பம் (திருப்தி, பூர்த்தி). 3. இயற்கையுணர்வு (அநாதிபோதம், நிராமயான்மா). 4. தன்வயம் (சுதந்திரம், சுவதந்திரதை). 5. குறைவிலாற்றல் (அலுப்தசக்தி, பேரருளுடைமை). 6. வரம்பிலாற்றல் (அநந்தசக்தி, அளவிலாற்றல்). 7. தூய உடம்பு (விசுத்ததேகம்). 8. இயல்பாகவே பாசங்களில்லாமை (அநாதி முத்தத் தன்மை) என்றலும் உண்டு.
7)
மூத்தவன் என்றும் முதுமை இலாதவன் மூவுலகைக்
காத்தும் படைத்தும் கரந்தும் அருளுமெம் கண்ணுதலென்
றேத்தும் அடியவர் நெஞ்சில் இருப்பவன் எல்லையிலாக்
கூத்தப் பெருமான் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
"மூவுலகைக் காத்தும் படைத்தும் கரந்தும் அருளும் எம் கண்ணுதல்" என்று ஏத்தும் - "எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் கடவுள் எம் நெற்றிக்கண்ணன்" என்று துதிக்கின்ற;
எல்லை இலாக் கூத்தப் பெருமான் - அளவில்லாத ஆடல் புரியும் பெருமான்;
8)
அன்று மலையை அசைத்த அரக்கன் அலறவிரல்
ஒன்றினை ஊன்றிய உத்தமன் நாகமும் ஒண்மதியும்
துன்று சடையன் தொழுத சுரர்தம் துயர்துடைத்த
குன்றச் சிலையன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
அரக்கன் - இராவணன்;
நாகமும் ஒண்மதியும் துன்று சடையன் - பாம்பும் ஒளியுடைய சந்திரனும் நெருங்கி இருக்கும் சடையை உடையவன்;
தொழுத சுரர்தம் துயர் துடைத்த குன்றச் சிலையன் - வணங்கிய தேவர்களது துன்பத்தைத் தீர்த்தவன், மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
9)
அடிமால் அறிதற் கரியவன் உச்சி அயனறியான்
இடிபோல் குரலுடை ஏறொன் றுகந்தவன் இண்டையென
முடிமேல் முளைவெண் மதியினன் கண்ணொரு மூன்றுடையான்
கொடிமேல் விடையன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
அடி மால் அறிதற்கு அரியவன், உச்சி அயன் அறியான் - திருமாலால் அறிய ஒண்ணாத திருவடியும் பிரமனால் அறிய ஒண்ணாத திருமுடியும் உடையவன்;
இடிபோல் குரலுடை ஏறு ஒன்று உகந்தவன் - இடி போன்ற குரலை உடைய இடபத்தை வாகனமாக விரும்பியவன்;
இண்டை என முடிமேல் முளைவெண் மதியினன் - தலையில் அணியும் இண்டைமாலை போல் முளைக்கின்ற வெண்பிறைச்சந்திரனை அணிந்தவன்;
கண் ஒரு மூன்று உடையான் - முக்கண்ணன்;
கொடிமேல் விடையன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;
10)
மறைநெறி தன்னைப் பழிப்பவர் உய்யும் வழியறியார்
கறைதிகழ் கண்டத்தன் காமனைக் காய்ந்தவன் கண்ணுதலான்
நறைமலர் தூவியும் நற்றமிழ் பாடியும் நம்புமவர்
குறைகளை ஈசன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
மறைநெறி - வேதநெறி; வைதிக மார்க்கம்;
கறைதிகழ் கண்டத்தன் காமனைக் காய்ந்தவன் கண்ணுதலான் - நீலகண்டன், மன்மதனை எரித்தவன்; நெற்றிக்கண்ணன்;
நறைமலர் தூவியும் நற்றமிழ் பாடியும் நம்பும் அவர் குறை களை ஈசன் - வாசமலர்களைத் தூவியும், நல்ல தமிழ்ப்பாமாலைகள் பாடியும் விரும்பித் தொழும் பக்தர்களது குறையைத் தீர்க்கும் தலைவன்;
11)
கமழ்மலர் தூவிக் கழல்தொழு மாணியைக் காத்தருளி
நமன்தனை மார்பில் உதைத்தவன் ஆலமர் ஞானகுரு
அமரர் தமைச்சிறை மீட்டருள் செய்த அறுமுகத்துக்
குமரனுக் கத்தன் உறைவது பாண்டிக் கொடுமுடியே.
கமழ்மலர் தூவிக் கழல் தொழு மாணியைக் காத்தருளி - வாசமலர்களைத் தூவித் திருவடியைத் தொழுத மார்க்கண்டேயரைக் காத்து அருளி;
நமன்தனை மார்பில் உதைத்தவன் - இயமனை மார்பில் உதைத்தவன்;
ஆல் அமர் ஞானகுரு - கல்லாலின்கீழ் வீற்றிருந்து போதிக்கும் குரு - தட்சிணாமூர்த்தி;
அமரர்தமைச் சிறைமீட்டு அருள்செய்த அறுமுகத்துக் குமரனுக்கு அத்தன் - தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த ஷண்முகனுக்குத் தந்தை;
உறைவது பாண்டிக் கொடுமுடியே - அப்பெருமான் வீற்றிருந்தருளுவது பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலமாகும்.
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - மகுடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=64
2) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) தலக்குறிப்பு: https://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=806
"திருமுறைத் தலங்கள்" என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:
ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைப்பட்டுச் சிதறியது.
அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியாகவும், நீலம் பொதிகையாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம்.
மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு வீழ்ந்தமையால் இப்பெயர் வந்தது என்பது வரலாறு. அதுவே சிவலிங்கமாக உள்ளது. சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் உள்ளது. அகத்தியர் தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். பாண்டிய மன்னனின் விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் "பாண்டிக் கொடுமுடி" என்றாயிற்று (அங்கவர்த்தனபுரம்). பரத்வாசர், அகத்தியர் வழிபட்ட தலம்.
-------------- --------------
No comments:
Post a Comment