Monday, March 6, 2023

07.07 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்)

07.07 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்)

2015-11-12

மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்)

----------------------------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1)

பொங்கரவும் வானத்திற் பொலிகின்ற சந்திரனும்

தங்குசடை அதனிடையே தண்புனலைக் கரந்தசிவன்

மங்கையொரு பங்குடைய மாதேவன் மகிழுமிடம்

வங்கமலி கடலலைகள் வந்தெறியும் மறைக்காடே.


பொங்கு அரவும் - சீறுகின்ற பாம்பும்;

வானத்திற் பொலிகின்ற சந்திரனும் - வானத்தில் விளங்கும் பிறைமதியும்; (சம்பந்தர் தேவாரம் - 1.25.8 - "வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்");

தங்கு சடை அதனிடையே தண்புனலைக் கரந்த சிவன் - இருக்கின்ற சடையில் குளிர்ச்சி பொருந்திய கங்கையை ஒளித்த சிவன்;

மங்கை ஒரு பங்குடைய மாதேவன் மகிழும் இடம் - உமையை ஒரு பாகமாக உடைய மகாதேவன் மகிழ்ந்து உறையும் தலம்;

வங்கம் மலி கடல் அலைகள் வந்து எறியும் மறைக்காடே - மரக்கலங்கள் நிறைந்த கடலின் அலைகள் வந்து மோதுகின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


2)

வெண்திரையார் கடலிலெழு விடமுண்ட மிடறுடையான்

பெண்திகழும் பாகத்தன் பீடுடைய வெள்ளேற்றன்

தண்திரையார் கங்கையடை சடையுடையான் தங்குமிடம்

வண்திரைகள் ஆர்ப்பரித்து வந்தெறியும் மறைக்காடே.


வெண் திரை ஆர் கடலில் எழு விடம் உண்ட மிடறு உடையான் - வெண்மையான அலைகள் பொருந்திய பாற்கடலில் எழுந்த விடத்தை உண்ட கண்டத்தை உடையவன்;

பெண் திகழும் பாகத்தன் - மாதொருபங்கன்;

பீடு உடைய வெள் ஏற்றன் - பெருமை/புகழ் உடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

தண் திரை ஆர் கங்கை அடை சடை உடையான் தங்கும் இடம் - குளிர்ந்த அலைகள் பொருந்திய கங்கையை அடைத்த சடையை உடையவன் உறைகின்ற தலம்;

வண் திரைகள் ஆர்ப்பரித்து வந்து எறியும் மறைக்காடே - வளம் மிக்க அலைகள் ஆரவாரம் செய்து வந்து மோதுகின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


3)

கூரியலும் மழுவாளன் கொல்புலித்தோல் ஆடையினான்

காரியலும் கண்டத்தன் கதிர்மதியத் துண்டத்தன்

நாரியொரு பங்குடைய நம்பெருமான் நயக்குமிடம்

வாரிதியின் வண்திரைகள் வந்தெறியும் மறைக்காடே.


கூர் இயலும் மழுவாளன் - கூர்மையான மழுவை ஏந்தியவன்;

கொல் புலித்தோல் ஆடையினான் - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;

கார் இயலும் கண்டத்தன் - நீலகண்டன்;

கதிர் மதியத் துண்டத்தன் - கதிர் வீசும் பிறைச்சந்திரனை அணிந்தவன்;

நாரி ஒரு பங்கு உடைய நம் பெருமான் நயக்கும் இடம் - அர்தநாரீஸ்வரனான நம் பெருமான் விரும்பி உறையும் தலம்;

வாரிதியின் வண் திரைகள் வந்து எறியும் மறைக்காடே - கடலின் வளம் மிக்க அலைகள் வந்து மோதுகின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


4)

பூக்களொடு புற்றரவும் பொலிசடையிற் கங்கைதனைத்

தேக்கியவன் சேவமரும் சிவபெருமான் சேருமிடம்

வாக்கினுக்கு மன்னவனார் மனமுருகித் தமிழ்பாடி

மாக்கதவம் திறப்பித்து வழிபட்ட மறைக்காடே.


பூக்களொடு புற்றரவும் பொலி சடையில் கங்கைதனைத் தேக்கியவன் - பூக்களும் புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பும் விளங்கும் சடையில் கங்கைநதியை அடைத்தவன்;

சே அமரும் சிவபெருமான் சேரும் இடம் - இடப வாகனத்தை விரும்பும் சிவபெருமான் உறையும் தலம்;

வாக்கினுக்கு மன்னவனார் மனம் உருகித் தமிழ் பாடி - வாக்கின் மன்னவராம் திருநாவுக்கரசர் மனம் உருகித் தேவாரம் பாடி;

மாக் கதவம் திறப்பித்து வழிபட்ட மறைக்காடே - பெரிய கோபுரவாயிற் கதவுகளைத் திறக்கச்செய்து வழிபாடு செய்த திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்; (அப்பர் தேவாரம் - 5.10.7 - "இந்த மாக்கதவம் பிணி நீக்குமே"); (* திருநாவுக்கரசர் பதிகம் பாடிக் கதவு திறந்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);


5)

பிறைக்கண்ணி முடிமீது பிறங்கஅயல் கூவிளம்பொன்

நிறக்கொன்றை அணிந்தபிரான் நீங்காது நின்றவிடம்

கறைக்கண்டன் புகழ்பாடிக் கசிவாக்கின் மன்னவனார்

மறைக்கதவம் திறப்பித்து வழிபட்ட மறைக்காடே.


பிறைக்கண்ணி முடிமீது பிறங்க அயல் - பிறைச்சந்திரன் கண்ணிமாலை போல் திருமுடிமேல் விளங்க, அதன் அருகே;

கூவிளம் பொன் நிறக் கொன்றை அணிந்த பிரான் நீங்காது நின்ற இடம் - வில்வத்தையும் பொன்னிறம் உடைய கொன்றை மலரையும் அணிந்த கடவுள் நீங்காமல் உறைகின்ற தலம்;

கறைக்கண்டன் புகழ் பாடிக் கசி வாக்கின் மன்னவனார் - நீலகண்டன் புகழைப் பாடி மனம் கசிந்த திருநாவுக்கரசர்;

மறைக்கதவம் திறப்பித்து வழிபட்ட மறைக்காடே - வேதங்களால் காப்பிடப்பட்ட கதவுகளை ஈசன் அருளால் திறக்கச்செய்து ஈசனை வழிபட்ட திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


6)

தேன்கமழ்பூ இட்டமறைச் சிறுவர்க்காக் கூற்றுதைத்த

கோன்கரிய குழலுமையோர் கூறுடையான் உறையுமிடம்

ஊன்கசியத் தமிழ்பாடி உழவாரப் படையாளி

வான்கதவம் திறப்பித்து வழிபட்ட மறைக்காடே.


தேன்கமழ் பூ இட்ட மறைச்சிறுவர்க்காக் கூற்று உதைத்த கோன் - வாசமலர்களைத் தூவி வணங்கிய மார்க்கண்டேயருக்காக நமனை உதைத்த தலவைன்;

கரிய குழல் உமை ஓர் கூறு உடையான் உறையும் இடம் - கரிய கூந்தலை உடைய உமாதேவியை ஒரு கூறாக உடைய பெருமான் உறையும் தலம்;

ஊன் கசியத் தமிழ் பாடி உழவாரப் படையாளி - உழவாரப் படையைத் தாங்கும் திருநாவுக்கரசர் ஊனே உருகும்படி தேவாரம் பாடி;

வான் கதவம் திறப்பித்து வழிபட்ட மறைக்காடே - பெரிய கோபுரவாயிற் கதவுகளை ஈசன் அருளால் திறக்கச்செய்து வழிபாடு செய்த திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


7)

தேன்மலியும் கொன்றைமலர் திகழ்முடிமேல் வாளரவும்

வான்மதியும் வைத்தருளும் வார்சடையன் தாவுகின்ற

மான்மறியைக் கரத்தேந்தும் மணிகண்டன் மகிழுமிடம்

வான்பொழில்கள் புடைசூழ்ந்த வளமிக்க மறைக்காடே.


வாள் அரவு - கொடிய பாம்பு;

வான்மதி - வால் மதி (வெண்திங்கள்) / வான் மதி (வானில் செல்லும் திங்கள்);

வார்சடையன் - நீண்ட சடையை உடையவன்;

மான்மறி - மான் கன்று;

வான் பொழில்கள் - அழகிய சோலைகள்; பெரிய சோலைகள்;

புடை சூழ்ந்த - நாற்புறமும் சுற்றி இருக்கின்ற;


8)

இரக்கஅயன் சிரந்தன்னை ஏந்தியுழல் இறைகங்கை

கரக்கவல்ல கமழ்சடையன் கயிலையைப்பேர்ப் பேனென்ற

அரக்கனையன் றடர்த்திசைகேட் டருள்செய்தான் அமருமிடம்

மரக்கலங்கள் மலிகின்ற மாகடல்சூழ் மறைக்காடே.


இரக்க அயன் சிரம்தன்னை ஏந்தி உழல் இறை - பிச்சைக்குப் பிரமனது மண்டையோட்டை ஏந்தித் திரிகின்ற இறைவன்;

கங்கை கரக்க வல்ல கமழ் சடையன் - கங்கையை ஒளிக்க வல்ல, கமழ்கின்ற சடையை உடையவன்;

கயிலையைப் பேர்ப்பேன் என்ற அரக்கனை அன்று அடர்த்து இசை கேட்டு அருள்செய்தான் அமரும் இடம் - "கயிலைமலையைப் பேர்ப்பேன்" என்று அதனைப் பெயர்க்க முயன்ற இராவணனை அச்சமயத்தில் நசுக்கிப், பின் அவன் இசைபாடித் துதிக்கக் கேட்டு அவனுக்கு இரங்கிய சிவபெருமான் விரும்பி உறையும் தலம்;

மரக்கலங்கள் மலிகின்ற மாகடல்சூழ் மறைக்காடே - படகுகளும் கப்பல்களும் நிறைந்த பெரிய கடல் சூழ்ந்த திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


9)

காவரியும் நான்முகனும் காண்பரிய கனலுருவன்

தேவரிடர் தீரவரைச் சிலையேந்தி ஒருகணையால்

மூவரணம் பொடிசெய்த முக்கண்ணன் உறையுமிடம்

மாவரவம் செய்தலைகள் வந்தெறியும் மறைக்காடே.


கா அரியும் நான்முகனும் காண்பு அரிய கனல் உருவன் - காக்கும் தொழில் செய்யும் திருமாலாலும் பிரமனாலும் அடியும் முடியும் காண ஒண்ணாத சோதி வடிவன்;

தேவர் இடர் தீர வரைச் சிலை ஏந்தி - தேவர்கள் துன்பம் தீரும்படி, மேருமலையை வில்லாக ஏந்தி;

ஒரு கணையால் மூ அரணம் பொடிசெய்த முக்கண்ணன் உறையும் இடம் - ஓர் அம்பால் முப்புரங்களை அழித்த முக்கண்ணனான சிவபெருமான் உறையும் தலம்;

மா அரவம் செய்து அலைகள் வந்து எறியும் மறைக்காடே - பெரிய ஒலி செய்து அலைகள் வந்து மோதுகின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


10)

பணங்கொடுத்தும் மறைநெறியைப் பழித்துரைத்தும் ஆள்சேர்க்கும்

குணம்படைத்தார் கூற்றுகளைக் கொள்ளேன்மின் கூற்றுதைத்தான்

கணங்களிசை பாடநடம் ஆடுமரன் கருதுமிடம்

வணங்கியவர் வேண்டுகின்ற வரமருளும் மறைக்காடே.


கூற்றுகளைக் கொள்ளேன்மின் - பேச்சை மதிக்க வேண்டா.

கூற்று உதைத்தான் - காலனை உதைத்தவன்;

கணங்கள் இசை பாட நடம் ஆடும் அரன் கருதும் இடம் - பூதகணங்கள் இசை பாடத், திருநடம் செய்யும் சிவபெருமான் விரும்பி உறையும் தலம்;

வணங்கியவர் வேண்டுகின்ற வரம் அருளும் மறைக்காடே - வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அருளும் திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்; (அப்பர் தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்");


11)

நஞ்சுமணி மலர்தூவி நாவினிலே காக்குமெழுத்

தஞ்சுமணி மார்க்கண்டர்க் கருள்புரிந்த அருந்துணைவன்

நஞ்சுமணி போல்திகழும் நன்மிடற்றன் நயக்குமிடம்

மஞ்சுமணி கோபுரத்தை வந்தணவு மறைக்காடே.


நஞ்சு மணிமலர் தூவி - உள்ளம் நைந்து, அழகிய பூக்களைத் தூவி; (நஞ்சு - நைந்து என்பதன் போலி; நைதல் - மனம் குழைதல்);

நாவினிலே காக்கும் எழுத்து அஞ்சும் அணி மார்க்கண்டர்க்கு அருள்புரிந்த அரும் துணைவன் - இரட்சிக்கும் திருவைந்தெழுத்தை நாக்கில் அணிந்த மார்க்கண்டேயருக்கு அருள்செய்த அரிய துணைவன்;

நஞ்சு மணிபோல் திகழும் நன் மிடற்றன் நயக்கும் இடம் - ஆலகால விஷம் ஒரு கரிய மணி போல விளங்கும் நல்ல கண்டத்தை உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம்;

மஞ்சு மணி கோபுரத்தை வந்து அணவு மறைக்காடே - மேகங்கள் வந்து அழகிய கோபுரத்தை அணுகுகின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


வி. சுப்பிரமணியன்

--- ---


No comments:

Post a Comment