07.11 – தலக்காடு (Talakadu - ತಲಕಾಡು)
2015-12-02
தலக்காடு (Talakadu - ತಲಕಾಡು)
----------------------------------------------------
(13 பாடல்கள்)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")
* தலக்காடு - இத்தலத்தின் விவரங்களைப் பிற்குறிப்பில் காண்க.
1)
அஞ்சியடை சந்திரனை அஞ்சடையில் வைத்தசிவன்
வஞ்சியிடை மனோன்மனி மணவாளன் நஞ்சுண்டு
மஞ்சனைய கண்டத்தன் மணலாரும் தலக்காட்டில்
வஞ்சமின்றி வரமருளும் வைத்தியேச் சுவரனே.
அஞ்சி அடை சந்திரனை அஞ்சடையில் வைத்தசிவன் - ; (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);
வஞ்சியிடை மனோன்மனி மணவாளன் - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமைக்குக் கணவன்; (* மனோன்மனி - இத்தலத்து இறைவி திருநாமம்);
(குறிப்பு : பரவலாகத் தமிழில் "மனோன்மணி" என்றே காணினும் திருமந்திரத்தில் "மனோன்மனி" என்றே வருகின்றது. வடமொழியில் இச்சொல்லின் ஈற்றெழுத்து னி தான். (ணி அன்று). சமஸ்கிருத அகராதியிலும் அப்படியே உள்ளது - मनोन्मनी - manonmanī - A form of Durgā ); (லலிதா சஹஸ்ரநாமத்தில் 207-ஆம் நாமம்: மனோன்மன்யை நம: ); (அபிராமி அந்தாதி உரையில் 5-ஆம் பாடலில் கி.வா.ஜ தரும் விளக்கம்: மனத்தை ஞான நிலைக்கு எழும்புகிறவள் என்பது ஒரு பொருள்.);
நஞ்சு உண்டு மஞ்சு அனைய கண்டத்தன் - விடத்தை உண்டு மேகம் போன்ற கரிய கண்டம் உடையவன்;
மணல் ஆரும் தலக்காட்டில் - மணல் மிகுந்த தலக்காடு என்ற தலத்தில்; (இத்தலம் எங்கும் மணலாக இருக்கக் காணலாம்);
வஞ்சம் இன்றி வரம் அருளும் வைத்தியேச்சுவரனே - வரங்களை வாரி வழங்கும் வைத்தியேஸ்வரன்; (* வைத்யேஸ்வரன் - இத்தலத்து ஈசன் திருநாமம்; பரமேஸ்வரன் என்பது பரமேச்சுவரன் என்று ஆமாப்போல், வைத்யேஸ்வரன் என்பது தமிழில் வைத்தியேச்சுவரன் ஆயிற்று); (சம்பந்தர் தேவாரம் - 1.67.4 - "பரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே.");
2)
இருகண்மேல் நெற்றியிலும் ஒருகண்ணன் வெற்பரையன்
மருகன்மா மதிசூடி வண்புனலில் மலருந்தி
வருபொன்னி வடகரைமேல் மணலாரும் தலக்காடு
மருவும்பத் தரைக்காக்கும் வைத்தியேச் சுவரனே.
இருகண்மேல் நெற்றியிலும் ஒருகண்ணன் - நெற்றிக்கண் உடையவன்;
வெற்பு அரையன் மருகன் - இமவான் மருமகன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");
மா மதிசூடி - அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவன்;
வண் புனலில் மலர் உந்தி வருபொன்னி வடகரைமேல் - வளம் மிக்க நீரில் பூக்களை அடித்துக்கொண்டு வருகின்ற காவிரியாற்றின் வடகரையில்; (வண்மை - ஈகை; வளப்பம்);
மணல் ஆரும் தலக்காடு மருவும் பத்தரைக் காக்கும் வைத்தியேச்சுவரனே - மணல் மிக்க தலக்காட்டில் விரும்பி வணங்கும் பக்தர்களைக் காக்கின்ற வைத்யேஸ்வரன்; (மருவுதல் - கலந்திருத்தல்; கிட்டுதல்); (அப்பர் தேவாரம் - 4.66.7 - "வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்" - );
3)
அரங்கமெனச் சுடுகாட்டில் ஆடுகின்ற ஆரழகன்
தரங்கமலி புனல்தாங்கு சடையன்வேர் வெளித்தெரியும்
மரங்களுயர் பொழில்சூழ்ந்த மணலாரும் தலக்காட்டில்
வரங்களருள் வள்ளலவன் வைத்தியேச் சுவரனே.
அரங்கம் - மன்று;
ஆர் அழகன் - அரிய அழகன்; பேரழகன்;
தரங்கம் மலி புனல் தாங்கு சடையன் - அலைகள் மிக்க கங்கையைத் தாங்கும் சடையினன்; (தரங்கம் - அலை);
வேர் வெளித் தெரியும் மரங்கள் உயர் பொழில் சூழ்ந்த மணல் ஆரும் தலக்காட்டில் - வேர்கள் வெளியே தெரியும்படி உள்ள மரங்கள் உயர்கின்ற சோலை சூழ்ந்த, மணல் மிக்க தலக்காட்டில்;
வரங்கள் அருள் வள்ளல் அவன் வைத்தியேச்சுவரனே - வரங்களை அருள்கின்ற வள்ளல் வைத்யேஸ்வரன்;
4)
மெய்யிலங்கு திருநீற்று வேடத்த ராய்நாளும்
நெய்யிலங்கு விளக்கேற்றும் நேயரிடர் நீக்குமிறை
வையிலங்கு மழுவாளன் மணலாரும் தலக்காட்டில்
மையிலங்கு திருமிடற்றன் வைத்தியேச் சுவரனே.
மெய் இலங்கு திருநீற்று வேடத்தராய் - உடம்பில் திருநீறு பூசிய கோலத்தர் ஆகி;
நாளும் நெய் இலங்கு விளக்கு ஏற்றும் நேயர் இடர் நீக்கும் இறை - தினந்தோறும் எண்ணெய்த்தீபம் ஏற்றி வழிபடும் அன்பர்களுடைய இடர்களைத் தீர்க்கும் இறைவன்;
வை இலங்கு மழுவாளன் - கூர்மையுடைய மழுவை ஏந்தியவன்;
மணல் ஆரும் தலக்காட்டில் - மணல் மிக்க தலக்காட்டில் உறைகின்ற;
மை இலங்கு திருமிடற்றன் - கருமை திகழும் கண்டம் உடையவன் - நீலகண்டன்;
வைத்தியேச்சுவரனே - வைத்யேஸ்வரன்;
5)
தலைமலிந்த மாலையினன் தண்மதியை நனைக்கின்ற
அலைமலிந்த நதிச்சடையன் அடிமறவார் அன்பென்னும்
வலைதன்னிற் படுமிறைவன் மணலாரும் தலக்காட்டில்
மலைமகளோ டுறைகின்ற வைத்தியேச் சுவரனே.
தலைமலிந்த மாலையினன் - தலைக்குத் தலைமாலை அணிந்தவன்;
தண்மதியை நனைக்கின்ற அலைமலிந்த நதிச்சடையன் - குளிர்ந்த திங்களை நனைக்கின்ற அலை மிக்க கங்கையைச் சடையில் அணிந்தவன்;
அடி மறவார் அன்பு என்னும் வலைதன்னில் படும் இறைவன் - திருவடியை மறவாத அன்பர்களின் பக்திவலையில் சிக்குபவன்; (திருவாசகம் - திருவண்டப் பகுதி - அடி 42 - "பத்தி வலையிற் படுவோன் காண்க" - பத்தியாகிய வலையில் அகப்படுவோன் - "வலை" என்றது ஏகதேச உருவகமாகலின், அதனுள் அகப்படுகின்ற மான் ஆகின்றவன் என உரைக்க);
6)
தேனாரும் மலர்தூவித் தெண்டனிட்டார் வினைதீர்ப்பான்
ஊனாரும் தலையேந்தி உண்பலிதேர் மாதேவன்
வானோர்கள் தம்பெருமான் மணலாரும் தலக்காட்டில்
மானோர்கை ஏந்தியவன் வைத்தியேச் சுவரனே.
தேன் ஆரும் மலர் தூவித் தெண்டனிட்டார் வினை தீர்ப்பான் - தேன் பொருந்திய பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்களின் வினைகளைத் தீர்ப்பவன்;
ஊன் ஆரும் தலை ஏந்தி உண்பலி தேர் மாதேவன் - ஊன் பொருந்திய பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்கும் மகாதேவன்;
மான் ஓர் கை ஏந்தியவன் - ஒரு கையில் மானை ஏந்தியவன்;
7)
நேசமலி நெஞ்சத்தால் நினைந்தேத்தும் அடியார்தம்
பாசவினை நீக்கியருள் பரமேட்டி படர்சடைமேல்
வாசமலர்க் கொன்றையினான் மணலாரும் தலக்காடே
வாசமென மகிழண்ணல் வைத்தியேச் சுவரனே.
நேசம் மலி நெஞ்சத்தால் நினைந்தேத்தும் அடியார்தம் பாசவினை நீக்கியருள் பரமேட்டி - அன்பு மிகுந்த நெஞ்சோடு தியானித்துத் துதிக்கும் பக்தர்களது பாசத்தையும் வினையையும் தீர்த்தருளும் பரமன்; (பாசவினை - பாசமும் வினையும்; வினைப்பாசம் என்றும் கூட்டலாம்); (சம்பந்தர் தேவாரம் - 1.93.4 - "வாச மலர்தூவப் பாச வினைபோமே"); (பரமேட்டி - பரம்பொருள்; மேலான இடத்தில் உள்ளவன்);
படர்சடைமேல் வாசமலர்க் கொன்றையினான் - படர்ந்த சடையில் மணம் மிகுந்த கொன்றைமலரைச் சூடியவன்;
தலக்காடே வாசம் என மகிழ் அண்ணல் - தலக்காடே உறைவிடம் என்று விரும்பி உறைகின்ற பெருமான்; (வாசம் - இருப்பிடம்); (மகிழ்தல் - விரும்புதல்);
8)
முன்னிலங்கை அரக்கர்கோன் முடிபத்தை நெரித்தவன்சீர்
பன்னியங்கை குவித்தேத்தும் பத்தரிடர் பாற்றுமரன்
வன்னியங்கை ஏந்தியவன் மணலாரும் தலக்காட்டில்
மன்னியமுக் கட்பரமன் வைத்தியேச் சுவரனே.
முன் இலங்கை அரக்கர் கோன் முடி பத்தை நெரித்தவன் சீர் - முன்னம், இலங்கையில் அரக்கர்கள் அரசனாக ஆண்ட இராவணனின் பத்துத் தலைகளையும் நசுக்கிய பெருமானுடைய புகழை;
பன்னி அங்கை குவித்து ஏத்தும் பத்தர் இடர் பாற்றும் அரன் - பாடிக் கைகூப்பிப் போற்றும் பக்தர்களுடைய இடர்களைத் தீர்க்கும் ஹரன்; (பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);
வன்னி அங்கை ஏந்தியவன் - கையில் தீயை ஏந்தியவன்; (வன்னி - நெருப்பு);
மணல் ஆரும் தலக்காட்டில் மன்னிய முக்கட் பரமன் வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில் நிலைத்து உறையும் முக்கண்ணன், பரமன், வைத்யேஸ்வரன்;
9)
அடிமுடியைத் தேடியமால் அயனறியா அழலுருவன்
கடிமலர்கள் கொண்டுதொழும் அடியவரைக் காக்குமிறை
வடியுடைமூ விலைவேலன் மணலாரும் தலக்காட்டில்
வடிவுடையா ளோடுறையும் வைத்தியேச் சுவரனே.
அடிமுடியைத் தேடிய மால் அயன் அறியா அழல் உருவன் - அடிமுடி தேடிய திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத சோதி வடிவினன்;
கடிமலர்கள்கொண்டு தொழும் அடியவரைக் காக்கும் இறை - வாசமலர்களால் வழிபாடு செய்யும் பக்தர்களைக் காக்கும் கடவுள்;
வடியுடை மூவிலை வேலன் - கூர்மை பொருந்திய திரிசூலம் ஏந்தியவன்; (வடி - கூர்மை);
வடிவு உடையாளோடு உறையும் - அழகிய உமையம்மையோடு உறைகின்ற; (வடிவு - அழகு);
10)
தீதைத்தம் அகம்கரந்த தெண்ணருரை மதியேன்மின்
போதைக்கை யால்தூவிப் பொன்னடியைப் போற்றிடில்நம்
வாதைக்கு மருந்தாவான் மணலாரும் தலக்காட்டில்
மாதைத்தன் இடம்மகிழ்ந்த வைத்தியேச் சுவரனே.
தீதைத் தம் அகம் கரந்த தெண்ணர் உரை மதியேன்மின் - தீமையைத் தங்கள் மனத்தில் மறைத்துவைத்த அறிவிலிகள் சொல்லும் பேச்சை மதிக்கவேண்டா; (தெண்ணர் - அறிவிலி);
போதைக் கையால் தூவிப் பொன்னடியைப் போற்றிடில் - பூக்களைக் கைகளால் தூவிப் பொன் போன்ற திருவடியை வணங்கினால்; (போது - பூ);
நம் வாதைக்கு மருந்து ஆவான் - நம் வினைத்துன்பத்தைத் தீர்க்கும் மருந்து ஆவான்; (வாதை - துன்பம்; வேதனை செய்யும் நோய்);
மணல் ஆரும் தலக்காட்டில் - மணல் மிகுந்த தலக்காட்டில்;
மாதைத் தன் இடம் மகிழ்ந்த வைத்தியேச்சுவரனே - உமையைத் தன் இடப்பாகத்தில் விரும்பி ஏற்ற வைத்யேஸ்வரன்;
11)
கணங்களிசை ஆர்க்கவிடு காட்டினடம் ஆடியவன்
அணங்கொருபால் ஆகியவன் அரவூரும் அவிர்சடைமேல்
மணங்கமழும் கொன்றையினான் மணலாரும் தலக்காட்டில்
வணங்குமவர்க் கருளிறைவன் வைத்தியேச் சுவரனே.
கணங்கள் இசை ஆர்க்க, இடுகாட்டில் நடம் ஆடியவன் - பூதகணங்கள் இசை ஒலிக்கச் சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;
அணங்கு ஒருபால் ஆகியவன் - தன் திருமேனியில் ஒரு பக்கம் பெண் உருவம் உடையவன்;
அரவு ஊரும் அவிர் சடைமேல் மணம் கமழும் கொன்றையினான் - பாம்பு ஊர்கின்ற, பிரகாசிக்கும் சடையின்மேல் வாசம் கமழும் கொன்றையை அணிந்தவன்; (அவிர்தல் - பிரகாசித்தல்);
மணல் ஆரும் தலக்காட்டில் வணங்கும் அவர்க்கு அருள் இறைவன் வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில், வழிபடும் பக்தர்களுக்கு அருளும் இறைவன் வைத்யேஸ்வரன்;
12)
முந்தெயில்கள் செந்தழலில் வெந்தழியக் கணைதொட்டான்
கந்தமலர் உறைஅயனும் கரியவனும் இந்திரனும்
வந்தனைசெய் மணிகண்டன் மணலாரும் தலக்காட்டில்
வந்தடைந்தார்க் கருள்புரியும் வைத்தியேச் சுவரனே.
முந்து எயில்கள் செந்தழலில் வெந்து அழியக் கணை தொட்டான் - முன்பு முப்புரங்களும் தீயில் வெந்து அழியுமாறு ஒரு கணையை ஏவியவன்;
கந்த மலர் உறை அயனும் கரியவனும் இந்திரனும் வந்தனைசெய் மணிகண்டன் - தாமரையில் உறையும் பிரமனும் கரிய திருமாலும் இந்திரனும் தொழுது போற்றுகின்ற நீலகண்டன்;
மணல் ஆரும் தலக்காட்டில் வந்து அடைந்தார்க்கு அருள்புரியும் வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில், வந்து திருவடியிற் சரணடைந்த பக்தர்களுக்கு அருள்புரியும் வைத்யேஸ்வரன்;
13)
துதியன்பர் தமக்கென்றும் தொலையாத நிதியானான்
பதியென்று தேவரெலாம் பணிபரமன் பாம்போடு
மதியொன்று வார்சடையன் மணலாரும் தலக்காட்டில்
வதிகின்ற மாமருந்து வைத்தியேச் சுவரனே.
துதி அன்பர் தமக்கு என்றும் தொலையாத நிதி ஆனான் - துதிக்கின்ற அடியவர்களுக்கு எந்நாளும் அழியாத சேமநிதியும் அருள்நிதியும் ஆனவன்;
பதி என்று தேவர் எலாம் பணி பரமன் - தலைவன் என்று எல்லாத் தேவர்களும் பணிகின்ற பரமன்;
பாம்போடு மதி ஒன்று வார் சடையன் - பாம்போடு சந்திரன் ஒன்றாக இருக்கின்ற நீள்சடை உடையவன்;
மணல் ஆரும் தலக்காட்டில் வதிகின்ற மா மருந்து வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில் உறைகின்ற பேரமுதம் வைத்யேஸ்வரன்; (வதிதல் - தங்குதல் - To dwell, abide); (மருந்து - அமுதம்);
பிற்குறிப்புகள்:
1. தலக்காடு (Talakadu - ತಲಕಾಡು) - மைசூரிலிருந்து கிழக்கே 50 கிமீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ள தலம்.
தலக்காட்டில் உள்ள கோயில்களுள் தலையாயது - "வைத்யேஸ்வரர் கோயில்".
2. கோயில் தகவல்கள்:
தலக்காடு - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=1621
Talakadu - Karnataka Govt site - info: https://mysore.nic.in/en/tourist-place/talkad/
வி. சுப்பிரமணியன்
--- ---
No comments:
Post a Comment