Saturday, March 11, 2023

07.09 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்)

07.09 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்)

2015-11-25

மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்)

----------------------------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்) (திருவிராகம் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்")


1)

கள்வடியும் மாமலர்கள் இட்டுருகும் அன்பர்

உள்விரவி நின்றுவினை ஓட்டிநலம் ஈவான்

நள்ளிரவில் நட்டமிடு நாதனுமை கேள்வன்

வெள்விடையன் மேவுமிடம் வேதவனம் ஆமே.


கள் வடியும் மாமலர்கள் இட்டு ருகும் அன்பர் உள் விரவி நின்று, வினை ஓட்டி, நலம் ஈவான் - தேன் ஒழுகும் சிறந்த பூக்களைத் தூவி உருகி வழிபடும் அடியவர்கள் நெஞ்சில் கலந்து உறைந்து, அவர்களது வினைகளைத் தீர்த்து, நன்மை செய்பவன்; (உள் - உள்ளே; மனம்); (விரவுதல் - கலத்தல்; பொருந்துதல்);

நள்ளிரவில் நட்டம் இடு நாதன் - நள்ளிருளில் திருநடம் செய்யும் தலைவன்;

மை கேள்வன் - உமாபதி;

வெள்விடையன் மேவும் இடம் வேதவனம் ஆம் - வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் திருமறைக்காடு ஆகும்;


2)

பாதமலர் நாளுநினை பத்தரிடர் தீர்ப்பான்

சீதமலி கங்கைநதி செஞ்சடையில் ஏற்றான்

ஓதவிடம் உண்டமணி கண்டனுமை பங்கன்

வேதமுரை நாவனிடம் வேதவனம் ஆமே.


பாதமலர் நாளும் நினை பத்தர் இடர் தீர்ப்பான் - தன் திருவடித்தாமரையைத் தினந்தோறும் எண்ணி வழிபடும் பக்தர்களது துன்பங்களைத் தீர்ப்பவன்;

சீதம் மலி கங்கைநதி செஞ்சடையில் ஏற்றான் - குளிர்ச்சி மிக்க கங்கையாற்றைச் சிவந்த சடையில் ஏற்றவன்;

ஓத விடம் உண்ட மணிகண்டன் - கடல் நஞ்சை உண்ட நீலகண்டன்; (ஓதம் - கடல்);

உமைபங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;

வேதம் உரை நாவன் - வேதநாவன் - வேதங்களைப் பாடி அருளியவன்;

இடம் வேதவனம் ஆமே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு ஆகும்;


3)

எவ்வுருவில் ஏத்திடினும் அவ்வுருவம் ஏற்றே

இவ்வுலக அவ்வுலக இன்பமருள் எந்தை

நவ்விதரி ஈசவருள் என்றசுரர் உய்ய

வெவ்விடம ருந்தியிடம் வேதவனம் ஆமே.


எவ்வுருவில் ஏத்திடினும் அவ்வுருவம் ஏற்றே - அன்பர்கள் பெருமானை எந்த வடிவத்தில் வழிபடுகின்றார்களோ அந்த வடிவத்தை ஏற்று;

இவ்வுலக அவ்வுலக இன்பம் அருள் எந்தை - அவர்களுக்கு இகபர சுகத்தை அருளும் எம் தந்தை;

"நவ்வி தரி ஈச, அருள்" என்ற சுரர் உய்ய வெவ்விடம் அருந்தி - "மான்கன்றை ஏந்திய ஈசனே, அருளாய்" என்று தொழுத தேவர்கள் உய்யும்படி கொடிய விடத்தை அருந்தியவன்; (நவ்வி - மான்; மான்குட்டி); (அருந்தி - அருந்தியவன்);

இடம் வேதவனம் ஆமே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு ஆகும்;


4)

காலையொடு மாலைதொழு காதலுடை யார்தம்

மேலைவினை வீட்டியுயர் விண்ணுலகம் ஏற்றும்

வேலையினன் அம்பவள மேனியனி ரங்கி

வேலைவிடம் உண்ணியிடம் வேதவனம் ஆமே.


காலையொடு மாலை தொழு காதல் உடையார்தம் - காலையும் மாலையும் வணங்கும் அன்பு உடைய அடியவர்களுடைய;

மேலைவினை வீட்டி உயர் விண்ணுலகம் ஏற்றும் வேலையினன் - பழவினைகளைத் தீர்த்து, அவர்களைச் சிவலோகத்திற்கு ஏற்றும் தொழிலினன்; (வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்); (வேலை - தொழில்); (சம்பந்தர் தேவாரம் - 2.31.1 - "கூடுமடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவன்" - கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே" - உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில்);

அம் பவள மேனியன் - அழகிய பவளம் போன்ற செம்மேனி உடையவன்;

இரங்கி வேலை விடம் உண்ணி - இரங்கிக் கடல் நஞ்சை உண்டவன்; (வேலை - கடல்); (உண்ணி - உண்டவன்); (அப்பர் தேவாரம் - 4.8.1 - "அவனுமொர் ஐயம் உண்ணி" - எம்பெருமான் பிச்சை எடுத்து உண்பவன்);


5)

தொண்டரிடர் நீக்குமிறை தூயமதி சூடி

எண்டிசையும் ஏத்துமரன் ஈரிருவர் கேட்கப்

பண்டறமு ரைத்தகுரு பாந்தளணி கோனூர்

வெண்டிரைகள் ஆர்த்தடையும் வேதவனம் ஆமே.


தொண்டர் இடர் நீக்கும் இறை - அடியவர்களது இடர்களைப் போக்கும் இறைவன்;

தூயமதி சூடி - வெண்பிறையை அணிந்தவன்;

எண் திசையும் ஏத்தும் அரன் - எட்டுத் திக்குகளில் வாழ்வோரும் போற்றும் ஹரன்;

ஈரிருவர் கேட்கப் பண்டு அறம் உரைத்த குரு - சனகாதியர் நால்வர் கேட்க, முன்பு நான்மறை அறங்களை உபதேசித்த குரு;

பாந்தள் அணி கோன் ஊர் - பாம்பை அணியும் தலைவனான சிவபெருமான் உறையும் ஊர்;

வெண் திரைகள் ஆர்த்து அடையும் வேதவனம் ஆம் - வெண்ணிறத்து அலைகள் ஒலிசெய்து அடையும் திருமறைக்காடு ஆகும்;


6)

உன்னுமடி யார்வினையை ஓட்டியருள் உம்பன்

சென்னிமிசை நாகமதி சேரவணி செல்வன்

முன்னரணம் மூன்றுமெரி மூழ்கநகை செய்தான்

மின்னலிடை பங்கனிடம் வேதவனம் ஆமே.


உன்னும் அடியார் வினையை ஓட்டி அருள் உம்பன் - தியானிக்கும் பக்தர்களுடைய வினைகளை நீக்கியருளும் வானவன்;

சென்னிமிசை நாகம் மதி சேர அணி செல்வன் - திருமுடிமேல் பாம்பும் திங்களும் ஒன்றாக இருக்கும்படி அணியும் செல்வன்;

முன் அரணம் மூன்றும் எரி மூழ்க நகை செய்தான் - முன்பு முப்புரங்களும் தீயில் மூழ்கி அழியச் சிரித்தவன்;

மின்னல் இடை பங்கன் இடம் வேதவனம் ஆம் - மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமையை ஒரு பங்கில் உடைய சிவபெருமான் உறையும் இடம் திருமறைக்காடு ஆகும்; (மின்னல் இடை - ஆகுபெயராகி உமையைக் குறித்தது); (சம்பந்தர் தேவாரம் - 3.97.2 - "சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய" - குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு);


7)

தாழடியர் வேண்டியன தந்தருளும் வள்ளல்

ஆழமிகு வேலைவிடம் ஆர்ந்தருளும் அண்டன்

ஏழையொரு பங்கினனெ திர்த்தமலை போன்ற

வேழமுரி வீரனிடம் வேதவனம் ஆமே.


தாழ் அடியர் வேண்டியன தந்தது அளும் வள்ளல் - பணியும் அன்பர்கள் வேண்டும் வரம் எல்லாம் தரும் வள்ளல்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.23.1 - "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்");

ஆழம் மிகு வேலை விடம் ஆர்ந்து அருளும் அண்டன் - ஆழம் மிக்க கடலில் தோன்றிய நஞ்சை உண்டு அருளிய கடவுள்; (ஆர்தல் - உண்ணுதல்); (அண்டன் - God, as Lord of the universe; கடவுள்);

ஏழை ஒரு பங்கினன் - மாதொரு பாகன்; அர்த்தநாரீஸ்வரன்;

எதிர்த்த மலை போன்ற வேழம் உரி வீரன் இடம் வேதவனம் ஆம் - போர்செய்து எதிர்த்த மலை போன்ற யானையின் தோலை உரித்த வீரனான சிவபெருமான் உறையும் தலம் திருமறைக்காடு ஆகும்;


8)

ஆருமடி ஏத்தினருள் அண்ணல்மலை பேர்த்தான்

ஏருடைய பத்துமுடி இற்றுவிட ஊன்றிக்

கூருடைய வாளுமொரு பேருமருள் எம்மான்

மேருமலை வில்லியிடம் வேதவனம் ஆமே.


ஆரும் அடி ஏத்தின் அருள் அண்ணல் - எத்தகையவர் ஆயினும் தன்னை வழிபட்டால் அவர்களுக்கும் அருளும் பெருமான்;

மலை பேர்த்தான் ஏர் உடைய பத்து முடி இற்றுவிட ஊன்றிக் - அப்பெருமானது கயிலைமலையைப் பேர்த்த இலங்கை மன்னனுடைய அழகிய கிரீடம் அணிந்த பத்துத்தலைகளையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கி;

கூர் உடைய வாளும் ஒரு பேரும் அருள் எம்மான் - (பின் அவன் அழுது பாடி வணங்கவும்) அவனுக்கு ஒரு கூரான வாளையும் இராவணன் என்ற பெயரையும் அருள்செய்த எம் தலைவன்;

மேருமலை வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

இடம் வேதவனம் ஆமே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு ஆகும்;


9)

பன்றியுரு வாகியரி பாரகழ வானில்

அன்றயனும் ஏறிமுடி நேடவழல் ஆனான்

ஒன்றியம னத்தடியர் உள்ளுறையும் ஈசன்

வென்றிவிடை ஏறியிடம் வேதவனம் ஆமே.


பன்றி உரு ஆகி அரி பார் அகழ, வானில் அன்று அயனும் ஏறி முடி நேட, அழல் ஆனான் - முன்பு, பன்றி உருக்கொண்டு திருமால் நிலத்தை அகழ்ந்து (அடியைத்) தேடப், பிரமன் (அன்னமாகி) வானில் ஏறி முடியைத் தேடச், சோதிவடிவாகி நின்ற பெருமான்;

ஒன்றிய மனத்து அடியர் உள் உறையும் ஈசன் - மனம் ஒன்றி வழிபடும் பக்தர்கள் நெஞ்சில் உறையும் ஈசன்;

வென்றி விடை ஏறி - வெற்றியை உடைய இடபத்தை வாகனமாக உடையவன்; (வென்றி - வெற்றி);

இடம் வேதவனம் ஆமே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு ஆகும்;


10)

சிந்தையினில் வஞ்சமலி தெண்ணருரை கொள்ளேல்

வந்தனைசெய் மாணியுயிர் வாழவொரு தாளால்

அந்தகனை மார்பிலுதை மைந்தனழ காக

வெந்தபொடி பூசியிடம் வேதவனம் ஆமே.


சிந்தையினில் வஞ்சம் மலி தெண்ணர் உரை கொள்ளேல் - உள்ளத்தில் வஞ்சனை மிகுந்த அறிவிலிகள் சொல்லும் வார்த்தைகளை மதிக்கவேண்டா;

வந்தனைசெய் மாணியுயிர் வாழ - வழிபாடு செய்த மார்க்கண்டேயர் உயிரோடு வாழுமாறு;

ஒரு தாளால் அந்தகனை மார்பில் உதை மைந்தன் - ஒரு பாதத்தால் காலனை மார்பில் உதைத்த வீரன்;

அழகாக வெந்த பொடி பூசி இடம் வேதவனம் ஆம் - அழகு பொலியத் திருநீற்றைப் பூசிய சிவபெருமான் உறையும் தலம் திருமறைக்காடு; (சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "சுந்தர மாவது நீறு");


11)
செல்வமணி நீறெனநி னைந்தொழுகு சீலர்

சொல்லுமணி கண்டனழி வில்லியெயில் எய்யக்

கல்லுமணி வில்லெனவ ளைத்தவனெ ருக்கு

வில்வமணி ஈசனிடம் வேதவனம் ஆமே.


செல்வம் அணி நீறு என நினைந்து ஒழுகு சீலர் சொல்லும் - செல்வம் ஆவது அணியும் திருநீறு என்று எண்ணி வாழும் சீலம் உடையவர்கள் புகழ்கின்ற; (சம்பந்தர் தேவாரம் - 2.66.6 - "அருத்தம தாவது நீறு" - ஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது);

மணிகண்டன் அழிவில்லி - நீலகண்டன், அழிவற்றவன்;

எயில் எய்யக் கல்லும் அணி வில் என வளைத்தவன் - முப்புரங்கள்மேல் கணைதொடுக்க மலையையும் அழகிய வில் என்று வளைத்தவன்; (எயில் - கோட்டை); (கல் - மலை);

எருக்கு வில்வம் அணி ஈசன் இடம் வேதவனம் ஆம் - முடிமேல் எருக்கமலரும் வில்வமும் அணியும் ஈசன் உறையும் தலம் திருமறைக்காடு ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 2.85.9 - "சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்");


வி. சுப்பிரமணியன்

--- ---


No comments:

Post a Comment