Friday, March 24, 2023

07.15 – நாலூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்) - அறம் பல நால்வர்க்கு

07.15 – நாலூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)

2015-12-22

நாலூர் மயானம் - (ஞானபரமேஸ்வரர் கோயில் - நாலூர் திருமெய்ஞ்ஞானம்)

(இத்தலம் கும்பகோணம் - குடவாசல் இடையே உள்ளது.)

------------------

(அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் "கூவிளம் கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு; அரையடியுள் வெண்டளை பயிலும்);

(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்");

(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்");


1)

அறம்பல நால்வர்க் கருள ஆலதன் கீழமர்ந் தானும்

புறம்பயம் மேய பிரானும் போற்றிசெய் அன்பர் வினைகள்

அறும்படி இன்னருள் நல்கி அருந்துணை ஆகிடு வானும்

நறும்பொழில் சூழ்ந்தழ காரும் நாலூர் மயானத் தரனே.


அறம் பல நால்வர்க்கு அருள ஆலதன்கீழ் அமர்ந்தானும் - சனகாதியருக்குப் போதிக்கக் கல்லாலின்கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தியும்;

புறம்பயம் மேய பிரானும் - திருப்புறம்பயம் என்ற தலத்தில் உறையும் தலைவனும்;

போற்றிசெய் அன்பர் வினைகள் அறும்படி இன்னருள் நல்கி அருந்துணை ஆகிடுவானும் - துதிக்கும் பக்தர்களின் வினைகள் நீங்குமாறு இனிது அருள்புரிந்து அரிய துணை ஆகின்றவனும்;

நறும் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் நாலூர் மயானத்து அரனே - வாசம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


2)

வெம்புலித் தோலை அரையில் வீக்கிய விண்ணவர் கோனும்

வம்பு திகழ்மல ரோடு மதியணி வார்சடை யானும்

எம்பெரு மானடி போற்றி என்றின் தமிழ்த்தொடை பாடி

நம்பும வர்க்கினி யானும் நாலூர் மயானத் தரனே.


வெம்புலித் தோலை அரையில் வீக்கிய விண்ணவர் கோனும் - கொடிய புலியின் தோலை அரையில் கட்டியவனும், தேவர்கள் தலைவனும்; (வீக்குதல் - கட்டுதல்);

வம்பு திகழ் மலரோடு மதி அணி வார் சடையானும் - மணம் கமழும் பூக்களோடு திங்களையும் அணிந்த நீண்ட சடையை உடையவனும்; (வம்பு - வாசனை);

"எம் பெருமான் அடி போற்றி" என்று இன் தமிழ்த்தொடை பாடி நம்புமவர்க்கு இனியானும் - "எங்கள் பெருமானே நின் திருவடி போற்றி" என்று இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு இனியவனும்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்)

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


3)

தரைமிசைச் சக்கரம் கீறிச் சலந்தர னைத்தடிந் தானும்

வரையினை வில்லென ஏந்தி வல்லரண் மூன்றெரித் தானும்

திரைமலி வானதி தன்னைச் செஞ்சடை யிற்கரந் தானும்

நரைவிடை ஊர்தியி னானும் நாலூர் மயானத் தரனே.


தரைமிசைச் சக்கரம் கீறிச் சலந்தரனைத் தடிந்தானும் - தரைமேல் ஒரு சக்கரத்தைக் காலால் வரைந்து, அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவனும்; (கீறுதல் - To draw lines; வரிகீறுதல்; எழுதுதல்); (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

வரையினை வில் என ஏந்தி வல் அரண் மூன்று எரித்தானும் - மேருமலையை வில்லாக ஏந்தி வலிய முப்புரங்களை எரித்தவனும்; (வரை - மலை);

திரை மலி வானதி தன்னைச் செஞ்சடையிற் கரந்தானும் - அலை மிகுந்த கங்கையைச் செஞ்சடையில் ஒளித்தவனும்; (திரை - அலை); (வானதி - வான் நதி - கங்கை);

நரை விடை ஊர்தியினானும் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனும்; (நரை - வெண்மை);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


4)

முக்கண் உடைய பிரானும் முருகனைப் பெற்றுகந் தானும்

தக்கனைத் தண்டித்த கோனும் தலைமலி மாலையி னானும்

தொக்கடி போற்றிய வானோர் துயர்கெட மேருவில் லேந்தி

நக்கெயில் மூன்றெரித் தானும் நாலூர் மயானத் தரனே.


பிரான் - தலைவன்;

உகத்தல் - மகிழ்தல்;

தலை மலி மாலை - மண்டையோடுகள் கோத்த மாலை;

தொக்கு அடி போற்றிய வானோர் துயர் கெட மேருவில் ஏந்தி, நக்கு எயில் மூன்று எரித்தானும் - ஒன்றாகக் கூடித் திருவடியைத் துதித்த தேவர்களது துன்பம் தீரும்படி மேருமலையை வில்லாக ஏந்தித், தன் சிரிப்பினால் முப்புரங்களையும் எரித்தவனும்; (தொகுதல் - 1. To assemble, collect, accumulate; கூடுதல்); (தொகுதல் - இறந்த கால வினையெச்சத்தில் 'தொக்கு' என்று வரும்; அதேபோல், நகுதல் - நக்கு என்று ஆகும்); (அப்பர் தேவாரம் - 6.5.10 - "தொக்கணா என்றிருவர் தோள்கை கூப்பத் துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி" - தொக்கு - கூடி. "அண்ணால்" என்பது மருவி, "அண்ணா" என வழங்கும்; அஃது இங்கு இடைக்குறையாக வந்தது);


5)

கண்ணி எனமுடி மீது கதிர்மதி யம்புனைந் தானும்

கண்ணிற் கனலுடை யானும் காதலி பங்குடை யானும்

பண்ணிய தீவினை தீரப் பதமலர் போற்றி வணங்கி

நண்ணிய வர்க்கருள் நல்கும் நாலூர் மயானத் தரனே.


கண்ணி என முடிமீது கதிர்-மதியம் புனைந்தானும் - தலையில் அணியும் மாலை போல ஒளி வீசும் சந்திரனை அணிந்தவனும்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

கண்ணிற் கனல் உடையானும் - தீப் பொருந்திய நெற்றிக்கண் உடையவனும்;

காதலி பங்கு டையானும் - உமையை ஒரு பங்காக உடையவனும்;

பண்ணிய தீவினை தீரப் பதமலர் போற்றி வணங்கி நண்ணியவர்க்கு அருள் நல்கும் - செய்த தீவினை தீரவேண்டித் திருவடித்தாமரையைப் போற்றி வணங்கிச் சரணடைந்தவர்களுக்கு அருள் செய்யும்; (நண்ணுதல் - அடைதல்);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


6)

பாலன நீறணிந் தேத்து பாலன் நடுக்குற வந்த

காலனைக் காய்கழ லானும் கனல்மழு வாளுடை யானும்

ஆலிரு நீழல் இடமா அமர்ந்து மறைவிரித் தானும்

நாலிரு தோள்களி னானும் நாலூர் மயானத் தரனே.


பால் அன நீறு அணிந்து ஏத்து பாலன் நடுக்குற வந்த - பால் போன்ற வெண்திருநீற்றை அணிந்து வழிபட்ட சிறுவரான மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரை வந்தடைந்த;

காலனைக் காய் கழலானும் - காலனைச் சினந்து உதைத்த கழல் அணிந்த திருவடியை உடையவனும்; (காய்தல் - அழித்தல்);

கனல் மழுவாள் உடையானும் - ஒளி வீசும் மழுப்படையை உடையவனும்;

ஆல் இரு-நீழல் இடமா அமர்ந்து மறை விரித்தானும் - கல்லால மரத்தின் அகன்ற நீழலே சிறந்த இடமாக விரும்பி அங்கே சனகாதியருக்கு வேதப்பொருளை விளக்கியவனும்; (இருநீழல் - இருமை + நீழல்; இருமை - பெருமை; நீழல் - நிழல் - தானம்); (சம்பந்தர் தேவாரம் - 1.12.2 - "தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்" - வட விய வீதனில் - ஆலமரத்தினது அகன்ற நீழலில்);

நாலிரு தோள்களினானும் - எட்டுப் புயங்கள் உடையவனும்;

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


7)

மேகம் தவழ்கயி லாய வெற்பில் உறைந்தருள் வானும்

ஆகம் தனில்அர வத்தை ஆரம் எனஅணிந் தானும்

பாகம் உமைக்களித் தானும் பாய்புலித் தோலதன் மீது

நாகம் அரைக்கசைத் தானும் நாலூர் மயானத் தரனே.


மேகம் தவழ் கயிலாய வெற்பில் உறைந்தருள்வானும் - மேகம் உலவும் கயிலைமலையில் இருப்பவனும்; (வெற்பு - மலை);

ஆகம்-தனில் அரவத்தை ஆரம் என அணிந்தானும் - திருமேனியில் பாம்பை மாலை போல அணிந்தவனும்; (ஆகம் - மேனி); (ஆரம் - ஹாரம் - மாலை);

பாகம் உமைக்கு அளித்தானும் - உமைக்கு ஒரு பங்கை அளித்தவனும்;

பாய்புலித்தோல் அதன்மீது நாகம் அரைக்கு அசைத்தானும் - பாயும் புலியின் தோல்மேல் பாம்பை அரையில் கட்டியவனும்; ( அசைத்தல் - கட்டுதல்);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


8)

தென்னிலங் கைக்கிறை கத்தத் திருவிரல் ஒன்றிட் டவனும்

பின்னவன் இன்னிசை பாடப் பேரொடு நாள்நல்கி னானும்

சென்னியின் மேற்பிறை யானும் சேவடி வாழ்த்து மவர்க்கு

நன்னிலை தந்தருள் வானும் நாலூர் மயானத் தரனே.


தென் இலங்கைக்கு இறை கத்தத் திருவிரல் ஒன்று இட்டவனும் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணன் கத்துமாறு திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனும்;

பின் வன் இன்னிசை பாடப் பேரொடு நாள் நல்கினானும் - பின்னர், அவன் இனிய இசை பாடி இறைஞ்ச, அவனுக்கு "இராவணன்" (அழுதவன்) என்ற பெயரையும் நீண்ட ஆயுளையும் அருளியவனும்;

சென்னியின்மேல் பிறையானும் - திருமுடிமேல் பிறைச்சந்திரனை அணிந்தவனும்; (சென்னி - தலை);

சேவடி வாழ்த்துமவர்க்கு நன்னிலை தந்தருள்வானும் - சிவந்த திருவடியை வாழ்த்தும் பக்தர்களுக்கு நற்கதி அருள்பவனும்; (நன்னிலை - நற்கதி);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


9)

பங்கயன் பாம்பணை மேலான் பறந்தும் அகழ்ந்தும் அறியாப்

பொங்கழல் வண்ணத்தி னானும் போற்றும் அடியவர் நெஞ்சே

தங்கிட மாஉடை யானும் தனிவிடை ஊர்தியி னானும்

நங்கையொர் பங்குடை யானும் நாலூர் மயானத் தரனே.


பங்கயன் பாம்பு அணை மேலான் பறந்தும் அகழ்ந்தும் அறியாப் - தாமரையில் உறையும் பிரமனும் பாம்பைப் படுக்கையாக உடைய திருமாலும் அன்னமாகிப் பறந்தும் பன்றியாகி அகழ்ந்தும் அறியாத;

பொங்கு அழல் வண்ணத்தினானும் - பொங்கும் தீயின் உரு உடையவனும்; (வண்ணம் - வடிவு);

போற்றும் அடியவர் நெஞ்சே தங்கு இடமா உடையானும் - வழிபடும் பக்தர்கள் மனமே கோயிலாகக் கொண்டவனும்; (தங்கு இடமா - தங்குகின்ற இடமாக);

தனி விடை ஊர்தியினானும் - ஒப்பற்ற இடப வாகனம் உடையவனும்;

நங்கை ஒர் பங்கு உடையானும் - உமையை ஒரு பங்கில் உடையவனும்;

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


10)

தென்சொல் வடசொல் இரண்டும் செப்பும் சிவனைத் தொழாது

புன்சொல் உரைத்துழல் கின்ற புரட்டர்க் கருள்புரி யானும்

புன்சடை மேற்பிறை யானும் போற்றிடு வார்க்கெளி யானும்

நன்செய் புடையணி கின்ற நாலூர் மயானத் தரனே.


தென்சொல் வடசொல் இரண்டும் செப்பும் சிவனைத் தொழாது - தமிழ் சமஸ்கிருதம் என்ற இருமொழிகளிலும் பல நூல்களும் பாமாலைகளும் போற்றுகின்ற சிவபெருமானை வழிபடாமல்;

(சம்பந்தர் தேவாரம் - 1.77.4 – "தம் மலரடி ஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர" - தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சார இருக்கும் அடிகள் ஆவர் என்கின்றது);

(சம்பந்தர் தேவாரம் - 2.92.7 - "தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில்நரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்" - அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசைமொழிகளிலும் அழகிய யாழ்நரம்பை மீட்டித் தங்கள் மனத்து இருள் நீங்கப் பாடித் தொழும் புகலூரில்);

(அப்பர் தேவாரம் - 5.18.3 - "ஆரியம் தமிழோடு இசை ஆனவன்" - வடமொழியும் தமிழும் இசையும் ஆனவன்);

புன்சொல் உரைத்து ழல்கின்ற புரட்டர்க்கு அருள்புரியானும் - பழித்துப் பேசி உழல்கின்ற வஞ்சகர்களுக்கு அருளாதவனும்; (புரட்டர் - மாறாட்டக்காரர் - Deceiver; equivocator; liar);

புன்சடைமேல் பிறையானும் - செஞ்சடைமேல் சந்திரனை அணிந்தவனும்; (புன்சடை - செஞ்சடை);

போற்றிடுவார்க்கு எளியானும் - தொழும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனும்;

நன்செய் புடை ணிகின்ற நாலூர் மயானத்து அரனே - நன்செய் வயல்கள் சூழ்ந்த நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


11)

பன்மணி ஆர்முடி வானோர் பரவிப் பணியும் பரனும்

சொன்மணி ஆர்தமிழ் பாடித் துதித்தவர்க் கன்புடை யானும்

பொன்மணி ஆர்வடம் போலப் புற்றர வம்புனைந் தானும்

நன்மணி கண்டத்தி னானும் நாலூர் மயானத் தரனே.


பன்-மணி ஆர் முடி வானோர் பரவிப் பணியும் பரனும் - பல இரத்தினங்கள் பொருந்திய கிரீடம் அணிந்த தேவர்கள் துதித்து வணங்கும் பரமனும்; (மணி - நவரத்தினங்கள்; அழகு); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

சொல்-மணி ஆர் தமிழ் பாடித் துதித்தவர்க்கு அன்பு உடையானும் - அழகிய சொற்கள் என்ற மணிகள் பொருந்திய தமிழ்ப்பாமாலைகள் பாடித் துதிக்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவனும்;

பொன் மணி ஆர் வடம் போலப் புற்றரவம் புனைந்தானும் - பொன்னும் மணியும் பொருந்திய ஒரு மணிமாலை போலப் புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அணிந்தவனும்; (வடம் - மணிவடம் - String of gems); சரம் - chains of a necklace);

நன் மணிகண்டத்தினானும் - நல்ல நீலமணி போல் திகழும் கண்டத்தை உடையவனும்;

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


பிற்குறிப்புகள்:

1) யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் "கூவிளம் கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு;

  • அரையடியுள் வெண்டளை பயிலும்;

  • 3-ஆம் சீர் 4-ஆம் சீர் இடையே வெண்டளை இருக்கவேண்டியது இல்லை.

  • அரையடியின் ஈற்றுச் சீர் (3,6-ஆம் சீர்கள்) மாச்சீராகவே அமையும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


2) உதாரணம்:

சம்பந்தர் தேவாரம் - 2.67.1 -

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்

விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்

கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்

பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே


3) நாலூர் மயானம் - தேவாரப் பாடல் பெற்ற தலம்.

(இவ்வூரில் இன்னொரு பகுதியில் வேறொரு கோயில் உள்ளது - நாலூர் "பலாசவனநாதர் கோயில்". அது தேவார வைப்புத்தலம்).


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment