Saturday, March 4, 2023

07.05 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

07.05 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

2015-11-09

பாண்டிக்கொடுமுடி (இக்காலத்தில் - கொடுமுடி)

--------------------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(யாப்புக் குறிப்பைக் கீழே காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")


1)

அஞ்சுதல் அற்றிட அடைமனமே

வெஞ்சின மறலியை வீட்டியவன்

நஞ்சினை மணிசெய்த நம்பெருமான்

குஞ்சிவெண் பிறையினன் கொடுமுடியே.


அஞ்சுதல் அற்றிட அடை மனமே - மனமே, அச்சம் நீங்க அடைவாயாக;

வெஞ்சின மறலியை வீட்டியவன் - கொடிய கோபம் உடைய கூற்றுவனை அழித்தவன்; (மறலி - நமன்; இயமன்); (வீட்டுதல் - அழித்தல்; கொல்லுதல்);

நஞ்சினை மணி செய்த நம் பெருமான் - ஆலகாலத்தைக் கண்டத்தில் நீலமணி ஆக்கிய நம் பெருமான்;

குஞ்சி வெண்பிறையினன் கொடுமுடியே - உச்சியில் வெண்பிறையைச் சூடியவன் உறையும் கொடுமுடியை; (குஞ்சி - உச்சிமயிர்; தலை);


2)

மிக்குள பண்டைய வினையகல

அக்கரன் அடிதொழ அடைமனமே

செக்கரஞ் சடையினன் திருமுடிமேல்

கொக்கிற கணிந்தவன் கொடுமுடியே.


மிக்கு உள பண்டைய வினை அகல - மிகுந்திருக்கும் பழைய வினைகள் நீங்க; (மிகுதல் - அதிகமாதல்; மிகுதல் = எஞ்சுதல் என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன் (God, as the indestructible One); ("அக்கினை அணிந்த அரன்" என்று உருபும் பயனும் உடன்தொக்கதொகை என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம். அக்கு = எலும்பு );

செக்கர் அம் சடையினன் - சிவந்த, அழகிய சடையை உடையவன்; (செக்கர் - சிவப்பு);

திருமுடிமேல் கொக்கிறகு அணிந்தவன் - கொக்கு வடிவினனான குரண்டாசுரனை அழித்த அடையாளம்;


3)

களிமிகு வாழ்வினைக் கருதிடில்நீ

அளிகொடு கழல்தொழ அடைமனமே

அளியறை கொன்றையை அணிசடையில்

குளிர்நதி அடையரன் கொடுமுடியே.


களி - இன்பம்;

கருதிடில் - விரும்பினால்;

அளிகொடு - அன்போடு; (அளி - அன்பு);

அளி அறை கொன்றையை அணி சடையில் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றைமலரை அணிந்த சடையில்;

குளிர்நதி அடை அரன் கொடுமுடியே - குளிர்ந்த கங்கையை அடைத்த சிவன் உறையும் கொடுமுடியை;


4)

இன்றெவர் எம்துணை எனவெருவேல்

துன்றிய மலர்கொடு தொழுமனமே

வென்றிகொள் விடையினன் விரிசடையன்

கொன்றையந் தாரினன் கொடுமுடியே.


இன்று எவர் எம் துணை என வெருவேல் - இன்று யார் நமக்குத் துணை என்று அஞ்சாதே; (வெருவுதல் - அஞ்சுதல்);

துன்றிய மலர்கொடு தொழு மனமே - நெருங்கத் தொடுத்த மலர்களால் வணங்கு மனமே; (துன்றுதல் - நெருங்குதல்); (சுந்தரர் தேவாரம் - 7.83.2 - "இருபொழுதும் துன்று மலரிட்டுச்");

வென்றிகொள் விடையினன் விரிசடையன் - வெற்றியை உடைய இடப வாகனன், விரிந்த சடையை உடையவன்;

கொன்றை அம் தாரினன் கொடுமுடியே - அழகிய கொன்றைமாலையை அணிந்த சிவன் உறையும் கொடுமுடியை;


5)

நஞ்சுரம் பிணியற நண்ணுநெஞ்சே

அஞ்சர மதனுடல் அறவிழித்தான்

வெஞ்சரம் மூவெயில் வேவவெய்தான்

குஞ்சரம் உரித்தவன் கொடுமுடியே.


நம் சுரம் பிணி அற நண்ணு நெஞ்சே - நம் நோய்கள், பிணிகள் நீங்க, மனமே அடைவாயாக;

அம் சர மதன் உடல் அற விழித்தான் - அழகிய பூங்கணை ஏவும் மன்மதனின் அழகிய உடல் அழிய நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;

வெம் சரம் மூஎயில் வேவ எய்தான் - முப்புரங்களும் எரிந்து அழியும்படி தீக்கணையை ஏவியவன்;

குஞ்சரம் உரித்தவன் கொடுமுடியே - எதிர்த்த யானையின் தோலை உரித்தவன், சிவன் உறையும் கொடுமுடியை;


6)

வல்வினை மாய்ந்திட வாழ்த்துநெஞ்சே

வெல்விடைக் கொடியினன் வில்லெனவோர்

கல்வளை கையினன் கருணையினால்

கொல்விடம் உண்டவன் கொடுமுடியே.


வல்வினை மாய்ந்திட வாழ்த்து நெஞ்சே - வலிய வினைகள் அழிய, மனமே வாழ்த்துவாயாக;

வெல் விடைக் கொடியினன் - வெல்லும் இடபக்கொடி உடையவன்;

வில் என ஓர் கல் வளை கையினன் - (முப்புரம் எரித்த சமயத்தில்) வில் என்று ஒரு மலையை வளைத்த திருக்கரம் உடையவன்; (கல் - மலை)

கருணையினால் கொல் விடம் உண்டவன் கொடுமுடியே - மிகுந்த கருணையோடு ஆலகால விஷத்தை உண்ட சிவன் உறையும் கொடுமுடியை;


7)

ஆவிகொள் அந்தகன் அடைவதன்முன்

பூவினை அடியிடப் புகுமனமே

ஆவினில் அஞ்சுகந் தாடுமரன்

கூவிள மாலையன் கொடுமுடியே.


ஆவிகொள் அந்தகன் அடைவதன்முன் - நம் உயிரைக் கொள்ள யமன் வந்துசேர்வதன் முன்னமே;

பூவினை அடி இடப் புகு மனமே - மனமே, பூக்களை ஈசன் திருவடியில் இட்டு வழிபடுவதற்குச் சேர்வாயாக;

ஆவினில் அஞ்சு உகந்து ஆடும் அரன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் விரும்பும் ஹரன்;

கூவிள மாலையன் கொடுமுடியே - வில்வமாலை அணியும் சிவன் உறையும் கொடுமுடியை;

(அப்பர் தேவாரம் - 6.3.1 - "வெறிவிரவு கூவிளநல் தொங்கலானை" - நறுமணம் கமழும் வில்வமாலை அணிந்தவனை)


8)

பார்மிசை இன்புறப் பணிமனமே

தேர்விடத் திருமலை அசைத்தவற்குப்

பேர்வர ஓர்விரல் ஊன்றியவன்

கூர்மழு வாளினன் கொடுமுடியே.


பார்மிசை இன்புறப் பணி மனமே - மனமே, இவ்வுலகில் இன்புற்று வாழ வணங்கு;

தேர் விடத் திருமலை அசைத்தவற்குப் - தன் இரதத்தைச் செலுத்துவதற்காகக் கயிலைமலையைப் பேர்க்க எண்ணி அசைத்தவனுக்கு;

பேர் வர ஓர் விரல் ஊன்றியவன் - இராவணன் (அழுதவன்) என்று பெயர் வரும்படி ஒரு பாதவிரலை ஊன்றிய பெருமான்;

கூர் மழு வாளினன் கொடுமுடியே - கூர்மை உடைய மழுவாயுதத்தை ஏந்திய சிவன் உறையும் கொடுமுடியை;


(சந்தக் குறிப்பு: 3-ஆம் சீரில் "அசைத்தவற்கு" என்று வருவதை ஒத்த பிரயோகம் -

சம்பந்தர் தேவாரம் - 1.113.8 - "இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங் ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம்);


9)

மிடியொடு வினைகெட நினைமனமே

அடிமுடி அன்றரி அயனறியா

வடிவினன் வண்டமர் வார்குழலாள்

கொடியிடை பங்கினன் கொடுமுடியே.


மிடியொடு வினை கெட நினை மனமே - மனமே, துன்பமும் வறுமையும் வினைகளும் அழிய, நினைவாயாக;

அடி முடி அன்று அரி அயன் அறியா வடிவினன் - தம்முள் மாறுபட்ட விஷ்ணுவும் பிரமனும் முன்பு தேடி அடியும் முடியும் அறியாத சோதி வடிவினன்; (அன்று - அந்நாள்); (அன்றுதல் - பகைத்தல்);

வண்டு அமர் வார் குழலாள் கொடி இடை பங்கினன் கொடுமுடியே - வண்டுகள் விரும்பும் நீண்ட கூந்தலை உடையவளும் கொடி போன்ற இடையை உடையவளுமான உமாதேவியை ஒரு பங்கில் உடைய சிவன் உறையும் கொடுமுடியை;


10)

மாற்றிவம் எனமறை நெறியையிகழ்

கூற்றுரை கொள்கையர் மொழிமதியேல்

ஆற்றினை அணிசடை அண்ணலடல்

கூற்றுதை கோனிடம் கொடுமுடியே.


மாற்றி வம் என - (உங்கள் நம்பிக்கை, வழிபாட்டு முறை, பழக்கவழக்கங்கள், கொள்கைகள், முதலியனவற்றை) "மாற்றி வாருங்கள்" என்று;

மறைநெறியை இகழ் கூற்று உரை கொள்கையர் மொழி மதியேல் - வேதநெறியைப் பழிக்கின்ற சொற்களைப் பேசும் கொள்கையை உடையவர்களது வார்த்தைகளை மதிக்கவேண்டா;

ஆற்றினை அணி சடை அண்ணல் - கங்கையைச் சடையில் அணிந்த பெருமான்;

அடல் கூற்று உதை கோன் இடம் கொடுமுடியே - வலிய காலனை உதைத்து அழித்த தலைவனான சிவபெருமான் உறையும் தலம் கொடுமுடி ஆகும்; ("அப்பெருமானை வழிபட்டு நலம் பெறுங்கள்" என்பது குறிப்பு);


11)

அமைதியை உற்றிட அடைமனமே

உமையொரு கூறென உடையபிரான்

இமையவர் வந்தடி இணைபரவக்

குமைவிடம் உண்டவன் கொடுமுடியே.


அமைதியை உற்றிட அடை மனமே - மனமே, நிம்மதியைப் பெற்றிட அடைவாயாக;

உமை ஒரு கூறு என உடைய பிரான் - உமாதேவியை ஒரு பங்காக உடைய தலைவன்;

இமையவர் வந்து அடியிணை பரவக் - தேவர்கள் வந்து இரு திருவடிகளைப் போற்றவும்;

குமை விடம் உண்டவன் கொடுமுடியே - கொல்லும் விஷத்தை உண்டு காத்த சிவன் உறையும் கொடுமுடியை;.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ('விளம் விளம் விளங்காய்');

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா/தானதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.1 -

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்

பொன்றிட வுதைசெய்த புனிதனகர்

வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்

சென்றடி வீழ்தரு சிவபுரமே.

3) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - மகுடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=64

4) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) தலக்குறிப்பு: https://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=806

"திருமுறைத் தலங்கள்" என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:

ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைப்பட்டுச் சிதறியது.

அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியாகவும், நீலம் பொதிகையாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம்.

மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு வீழ்ந்தமையால் இப்பெயர் வந்தது என்பது வரலாறு. அதுவே சிவலிங்கமாக உள்ளது. சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் உள்ளது. அகத்தியர் தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். பாண்டிய மன்னனின் விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் "பாண்டிக் கொடுமுடி" என்றாயிற்று (அங்கவர்த்தனபுரம்). பரத்வாசர், அகத்தியர் வழிபட்ட தலம்.

-------------- --------------


No comments:

Post a Comment