Tuesday, March 7, 2023

07.08 – நெடுங்களம்

07.08 – நெடுங்களம்

2015-11-20

திருநெடுங்களம்

-------------------------

(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் மா" - அரையடி வாய்பாடு).

(சம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு")

(சுந்தரர் தேவாரம் - 7.58.1 - "சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்")

(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே")


1)

நார்மலி நெஞ்சொடு நற்றமிழ் பாடி

.. நாள்தொறும் தொழுமடி யாரிடர் தீர்ப்பான்

கூர்மலி நுனைதிகழ் மூவிலை வேலன்

.. கொல்புலித் தோலினை அரையினில் வீக்கி

ஏர்மலி கொன்றையந் தாரணி மார்பன்

.. இளமதிச் சடையினன் அடியொடு முடியை

நீர்மிசைத் துயிலரி நான்முகன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


நார்மலி நெஞ்சொடு நற்றமிழ் பாடி நாள்தொறும் தொழும் அடியார் இடர் தீர்ப்பான் - அன்பு நிறைந்த நெஞ்சோடு தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பான்; (நார் - அன்பு); (மலிதல் - மிகுதல்; நிறைதல்);

கூர் மலி நுனை திகழ் மூவிலை வேலன் - கூமையான நுனியையுடைய திரிசூலத்தை ஏந்தியவன்; (நுனை - நுனி; முனை); (மூவிலை வேல் - திரிசூலம்);

கொல்புலித் தோலினை அரையினில் வீக்கி - கொல்லும் புலியின் தோலை அரையில் கட்டியவன்; (வீக்குதல் - கட்டுதல்); (சுந்தரர் தேவாரம் - 7.6.1 - "பாய்பு லித்தோல் அரையில் வீக்கி");

ஏர் மலி கொன்றையந் தார் அணி மார்பன் - அழகிய கொன்றைமாலையை மார்பில் அணிந்தவன்; (ஏர் - அழகு); (தார் - ஒருவகை மாலை);

இளமதிச் சடையினன் - இளம் பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்தவன்;

அடியொடு முடியை நீர்மிசைத் துயில் அரி நான்முகன் நேட - அடியையும் முடியையும் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும் பிரமனும் தேடும்படி; (நீர் - கடல்; இங்கே பாற்கடலைக் குறித்தது); (சம்பந்தர் தேவாரம் - 1.106.9 - "நீரின் மிசைத்துயின்றோன்"); (நேடுதல் - தேடுதல்);

நீள் எரி ஆயவன் நெடுங்களத்து அரனே - எல்லையின்றி நீண்ட ஜோதி ஆனவன், திருநெடுங்களத்தில் உறையும் ஹரன்; (எரி - தீ; ஜோதி);


2)

தூமலர் பலகொடு மாலைகள் கட்டித்

.. துணையடி போற்றிசெய் தொண்டர்கள் மீண்டும்

பூமியிற் பிறப்படை யாவணம் அருள்வான்

.. புன்சடை யாய்உனை அன்றியொர் புகலிங்

கியாமிலம் என்றடை தேவருக் கிரங்கி

.. அருவிடம் உண்டவன் அடியொடு முடியை

நேமியைத் தரியரி நான்முகன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


தூமலர் பலகொடு மாலைகள் கட்டித் துணையடி போற்றிசெய் தொண்டர்கள் மீண்டும் பூமியில் பிறப்பு அடையாவணம் அருள்வான் - சிறந்த பல பூக்களால் மாலை தொடுத்து இரு திருவடிகளை வழிபடும் பக்தர்கள் இனி மண்ணுலகில் பிறவி அடையாதபடி அருள்செய்வான்;

"புன்சடையாய், உனை அன்றி ர் புகல் இங்கு யாம் இலம்" என்று அடை தேவருக்கு இரங்கி அருவிடம் உண்டவன் - "செஞ்சடையானே, உன்னைத் தவிர வேறு புகலிடம் எமக்கு இல்லை" என்று சரணடைந்த தேவர்களுக்கு இரங்கி அரிய நஞ்சை உண்டவன்; (புகலிங்கியாமிலம் - புகல் இங்கு யாம் இலம்; இலக்கணக் குறிப்பு - இங்கு + யாம் - இங்கியாம்; குற்றியலிகரம்);

அடியொடு முடியை நேமியைத் தரி ரி நான்முகன் நேட - அடியையும் முடியையும் சக்கராயுதத்தை ஏந்தும் திருமாலும் பிரமனும் தேடும்படி; (நேமி - சக்கரம்);

நீள் எரி ஆயவன் நெடுங்களத்து அரனே - எல்லையின்றி நீண்ட ஜோதி ஆனவன், திருநெடுங்களத்தில் உறையும் ஹரன்;


3)

கோலநன் மலர்களை அடியிணைச் சாத்திக்

.. கும்பிடும் அன்பருக் கின்னருள் புரிவான்

பாலன நீற்றினை மேனியிற் பூசிப்

.. பணிந்தெழு பாலன தாருயிர் காத்துக்

காலனைக் காய்ந்தவன் கமழ்சடை தன்னிற்

.. கங்கையைக் கரந்தவன் கழலொடு முடியை

நீலநி றத்தரி நான்முகன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


கோல நன் மலர்களை அடியிணைச் சாத்தி - அழகிய சிறந்த பூக்களை இரு திருவடிகளில் இட்டு; (சாத்துதல் - அணிதல்);

பால் அன நீற்றினை மேனியில் பூசி - பால் போன்ற வெண்திருநீற்றை உடலில் பூசிக்கொண்டு;

பணிந்தெழு பாலனது ஆருயிர் காத்துக் காலனைக் காய்ந்தவன் - வணங்கிய மறைச்சிறுவரான மார்க்கண்டேயருடைய அரிய உயிரைக் காத்துக், கூற்றுவனைச் சினந்து உதைத்தவன்;

கமழ்சடை தன்னிற் கங்கையைக் கரந்தவன் - மணம் கமழும் சடையில் கங்கையை ஒளித்தவன்;

நீல நிறத்து அரி - கரிய நிறம் உடைய திருமால்;


4)

சலமலர் தமிழ்கொடு தாளிணை போற்றித்

.. தலைவணங் கடியவர் தமக்கரண் ஆகி

அலமரல் தீர்ப்பவன் அரையினில் நாணா

.. அரவினை ஆர்த்தவன் ஆயிழை கூறன்

வலமலி மால்விடை ஊர்தியின் மீது

.. வருமிறை மலரடி தன்னொடு முடியை

நிலமகழ் மாதவன் நான்முகன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


சலமலர் தமிழ்கொடு தாளிணை போற்றித் - நீர் (சலம்), பூக்கள், தமிழ்ப்பாமாலை இவற்றால் திருவடியை வழிபாடு செய்து; (சலமலர் = நீரில் பூக்கும் மலர்கள் - தாமரை முதலியன என்றும் பொருள்கொள்ளலாம்); (திருநாவுக்கரசர் அப்பர் தேவாரம் - 4.1.6 - "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்");

தலைவணங்கு அடியவர் தமக்கு அரண் ஆகி அலமரல் தீர்ப்பவன் - தலையால் வணங்கும் பக்தர்களுக்குப் பாதுகாவல் ஆகி, அவர்கள் துன்பத்தைத் தீர்ப்பவன்; (அலமரல் - கலக்கம்; துக்கம்);

அரையினில் நாணா அரவினை ஆர்த்தவன் - பாம்பை அரைக்கச்சாகக் கட்டியவன்;

ஆயிழை கூறன் - உமைபங்கன்;

வலமலி மால்விடை ஊர்தியின் மீது வரும் இறை - வலிய, வெற்றி மிக்க பெரிய இடப வாகனத்தின்மேல் வரும் இறைவன்; (வலம் - வலிமை; வெற்றி); (மால் - பெரிய);

நிலம் அகழ் மாதவன் - நிலத்தை அகழ்ந்த திருமால்;


5)

கடிமலர் தூவியும் பாடியும் போற்றிக்

.. கரைமனத் தடியவர் வாழ்வினில் என்றும்

மிடியொடு துயரிலை எனும்நிலை ஈவான்

.. விண்ணவர் செய்தஅத் தேர்மிசை ஏறி

நொடியினில் முப்புரம் படநகை செய்தான்

.. நூல்திகழ் மார்பினன் அடியொடு முடியை

நெடியவன் தாமரை மேலயன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


கடிமலர் - வாசம் கமழ் பூக்கள்;

கரைமனத்து அடியவர் - உருகும் மனத்தை உடைய பக்தர்கள்;

மிடி - வறுமை; துன்பம்;

நொடியினில் முப்புரம் பட நகை செய்தான் - முப்புரங்களும் ஒரு நொடிப்பொழுதளவில் அழியும்படி சிரித்தவன்;

நெடியவன் - நெடியோன் - திருமால்;

அயன் - பிரமன்;


6)

மூண்டெழும் அன்பொடு நால்வரின் தமிழால்

.. முக்கணன் இருங்கழல் போற்றிடு பத்தர்

வேண்டிய வரங்களை நல்கிடும் நம்பன்

.. வேதமும் அங்கமும் ஓதிய நாவன்

பாண்டியன் பிரம்படி பட்டவன் எயில்கள்

.. படக்கணை தொட்டவன் வாமனன் ஆகி

நீண்டவன் தாமரை மேலயன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


நால்வர் இன் தமிழால் - சமயக்குரவர் நால்வர் பாடியருளிய இனிய தமிழான தேவாரம், திருவாசகம் இவற்றால்;

இருங்கழல் - பெருமைமிக்க, கழல் அணிந்த திருவடி; (இருமை - பெருமை); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - 8.4 - அடி 129-130 - "என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி");

எயில்கள் படக் கணை தொட்டவன் - முப்புரங்கள் அழிய ஒரு கணையைத் தொடுத்தவன்;


7)

நறத்திகழ் நாண்மலர் தூவிநன் னாமம்

.. நாவினில் தரித்திடும் அடியவர் வினைகள்

அறத்திரு ஆகிட அருள்புரி ஐயன்

.. ஆரழல் போல்திகழ் திருவுடம் பினிலோர்

புறத்தினில் பெண்மையை உடையவன் திங்கள்

.. புற்றர வம்பொலி சடையினன் கரிய

நிறத்தரி தாமரை மேலயன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


நறத் திகழ் நாண்மலர் தூவி நன்னாமம் நாவினில் தரித்திடும் - வாசனை திகழும் புதுமலர்களைத் திருவடியில் தூவித், திருவைந்தெழுத்தை நாக்கில் தரிக்கின்ற; (நற - நறா / நறவு / நறவம் - தேன்; வாசனை); (சுந்தரர் தேவாரம் - 7.97.2 - "நறவிரி கொன்றையினான்");

அடியவர் வினைகள் அறத், திரு ஆகிட அருள்புரி ஐயன் - பக்தர்களுடைய பழவினைகள் நீங்கவும் அவர்களுக்குத் திரு மலியவும் அருளும் தலைவன்;

ஆரழல் போல் திகழ் திருவுடம்பினில் ஓர் புறத்தினில் பெண்மையை உடையவன் - தீப் போல் திகழும் திருமேனியில் ஒரு பக்கம் (இடப்பக்கம்) உமையை உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.1.5 - "ஒருமை பெண்மையுடையன்");

புற்றரவம் - புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு;

கரிய நிறத்து அரி - திருமால்;


8)

அன்றலர் மலர்களை அடியிணைத் தூவும்

.. அடியவர் அருவினை தீர்த்தருள் அண்ணல்

குன்றினைப் பேர்த்தவன் ஐயிரு வாய்கள்

.. கூக்குர லிட்டழ ஒருவிரல் ஊன்றி

மன்றினில் நடம்புரி மன்னவன் முன்னர்

.. மாவலி யிடம்குறள் வடிவொடு சென்று

நின்றவன் தாமரை மேலயன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


அன்று அலர் மலர்களை அடியிணைத் தூவும் - அன்று பூத்த புதுப்பூக்களை இரு திருவடிகளில் தூவுகின்ற;

குன்றினைப் பேர்த்தவன் ஐயிரு வாய்கள் கூக்குரலிட்டு அழ ஒருவிரல் ஊன்றி - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனது பத்து வாய்களும் கத்தி அழும்படி திருவடி விரல் ஒன்றை ஊன்றியவன்;

மன்றினில் நடம்புரி மன்னவன் - அம்பலத்தில் ஆடும் நடராஜன்;

முன்னர் மாவலியிடம் குறள் வடிவொடு சென்று நின்றவன் - முன்பு மகாபலியிடம் குறுகிய வடிவம் உடைய வாமனனாகிச் சென்று மூவடி மண் யாசித்து நின்ற திருமால்;


9)

பூத்தொடை செந்தமிழ்ப் பாத்தொடை கொண்டு

.. பொன்னடி போற்றிடும் அடியவர் தம்மைக்

காத்தருள் கண்ணுதல் கங்கையைச் சடையிற்

.. கரந்தவன் காமனைக் காய்ந்தவன் மூப்பில்

மூத்தவன் நான்மறைப் பொருள்தனை நாலு

.. முனிவருக் குரைத்தவன் முளரிநி கர்த்த

நேத்திர னோடயன் அடிமுடி நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


பூத்தொடை செந்தமிழ்ப் பாத்தொடை கொண்டு பொன்னடி போற்றிடும் அடியவர்தம்மைக் காத்தருள் கண்ணுதல் - பூமாலை பாமாலை இவற்றால் பொற்பாதத்தைப் போற்றும் அடியாரைக் காத்து அருளும் நெற்றிக்கண்ணன்; (தொடை - மாலை);

கங்கையைச் சடையில் கரந்தவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்;

காமனைக் காய்ந்தவன் - மன்மதனைக் கோபித்து எரித்தவன்;

மூப்பு இல் மூத்தவன் - என்றும் இளமையோடு இருக்கும் மூத்தவன்;

நான்மறைப் பொருள்தனை நாலு முனிவருக்கு உரைத்தவன் - நால்வேதப் பொருளைச் சனகாதியர் நால்வருக்கு விளக்கியவன் - தட்சிணாமூர்த்தி;

முளரி நிகர்த்த நேத்திரனோடு அயன் - தாமரை போன்ற கண் உடைய திருமாலும் பிரமனும்; (முளரி - தாமரை); (திருவிளையாடற் புராணம் - மதுரைக் காண்டம் - மாணிக்கம் விற்ற படலம் - "முள்ளரை முளரிக் கண்ணன் மோகினி அணங்காய் ஓட");


10)

தத்துவம் ஒன்றறி யாதவர் நாளும்

.. தவமெனப் பொய்தனை உரைத்துழல் புல்லர்

கத்திடும் சொற்களைப் பொருளெனக் கருதேல்

.. கைதொழும் அன்பரைக் காப்பவன் முடிமேல்

மத்தமும் மதியமும் வைத்தவன் நீல

.. மணிமிட றுடையவன் பாம்பணை மீது

நித்திரை செய்யரி நான்முகன் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


புல்லர் - கீழோர்;

பொருளெனக் கருதேல் - மதிக்கவேண்டா;

முடிமேல் மத்தமும் மதியமும் வைத்தவன் - திருமுடிமேல் ஊமத்த மலரையும் சந்திரனையும் அணிந்தவன்;

நீலமணி மிடறு உடையவன் - நீலகண்டன்;

பாம்பு அணை மீது நித்திரை செய் அரி நான்முகன் நேட - பாம்பைப் படுக்கையாகக் கொண்டு அதன்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் தேட;


11)

தூயநன் மலர்பல தொடுத்தடி இட்டுத்

.. தொழுதுளம் உருகிடும் தொண்டர்கள் தமக்குத்

தாயினும் நல்லவன் தாள்பணி மதியைத்

.. தலைமிசைத் தாங்கிய சங்கரன் கையில்

தீயனும் சடையிடைப் புனலனும் ஆனான்

.. சேவடி முடிதனைத் திருமகள் தனக்கு

நேயனும் மலருறை பிரமனும் நேட

.. நீளெரி ஆயவன் நெடுங்களத் தரனே.


தாயினும் நல்லவன் - தாயைவிட நல்லவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.123.5 – "தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்");

கையில் தீயனும் சடையிடைப் புனலனும் ஆனான் - கையில் தீயையும் சடையில் கங்கையையும் தாங்கியவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.1.7 - "சடைமுயங்கு புனலன் அனலன்");

திருமகள் தனக்கு நேயனும் மலருறை பிரமனும் நேட - லக்ஷ்மிக்கு அன்புடைய திருமாலும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தேட; (நேயம் - அன்பு);


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

இப்பதிகம் பாடப்பெற்ற ஆண்டின் (2015-11-25) கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு, எல்லாப் பாடல்களிலும் ஈசனது ஜோதி வடிவம் போற்றப்பெறுகின்றது.

-------------- --------------


No comments:

Post a Comment