08.02.184 – கச்சி ஏகம்பம் - கொற்றத்தினை அத்தத்தினை - (வண்ணம்)
2007-05-01
08.02.184 - கொற்றத்தினை அத்தத்தினை - (கச்சி ஏகம்பம்)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன .. தனதான )
(முத்தைத்தரு பத்தித் திருநகை - திருப்புகழ்)
கொற்றத்தினை அத்தத் தினைமிக
.. .. .. இச்சித்துல கத்திற் பலபல
.. .. குற்றத்தினை மிக்குச் செயவரு .. வினைகூடக்
.. கொட்டத்தொடு சுற்றிப் பெரியவர்
.. .. .. திட்டத்திரி துட்டச் சிறுமதி
.. .. கொச்சைத்தனம் அற்றுத் திருவடி .. தொழுவேனோ
புற்றுப்பணி சுற்றித் திகழ்தர
.. .. .. அச்சைத்தரு மற்பற் புலியுரி
.. .. பொற்பட்டென நச்சித் தரிதிரு .. உடையானே
.. பொய்த்தத்துவ மட்டர்க் கவ(ம்)மலி
.. .. .. பிட்டர்க்கறி வற்றுப் புறனுரை
.. .. பொக்கத்தின ருக்குப் பழவினை .. களையானே
பற்றற்றுள பத்தர்க் கருளிடு
.. .. .. பக்கத்தின தட்பத் திரையடை
.. .. பட்டுச்சடை நிற்கப் பனிமதி .. புனைவோனே
.. பக்கத்தினில் வெற்புக் கிறைமகள்
.. .. .. வைத்துக்கலை பற்றிச் சுரரடி
.. .. பற்றிப்புகழ் செப்பக் கடல்விடம் .. அணிவோனே
பெற்றக்கொடி கட்டித் திகழ்தளி
.. .. .. பெற்றுத்திரு வுற்றுப் பொலிதரு
.. .. பெற்றிப்புரி கச்சிப் பதிதனில் .. உறைவோனே
.. பிட்டுக்கென அற்றைத் தினமடி
.. .. .. பட்டுத்தரு மிக்குத் தனமது
.. .. பெற்றுத்தரு பெட்பைப் புவிமொழி .. பெருமானே.
பதம் பிரித்து:
கொற்றத்தினை அத்தத்தினை மிக
.. .. .. இச்சித்து, உலகத்திற் பலபல
.. .. குற்றத்தினை மிக்குச் செய, அருவினை கூடக்,
.. கொட்டத்தொடு சுற்றிப், பெரியவர்
.. .. .. திட்டத் திரி துட்டச் சிறுமதி,
.. .. கொச்சைத்தனம் அற்றுத், திருவடி தொழுவேனோ;
புற்றுப்-பணி சுற்றித் திகழ்தர,
.. .. .. அச்சைத் தரு மற்-பற்-புலியுரி
.. .. பொற்பட்டு என நச்சித் தரி-திரு உடையானே;
.. பொய்த்-தத்துவ மட்டர்க்கு, அவ(ம்) மலி
.. .. .. பிட்டர்க்கு, அறிவு அற்றுப் புறன் உரை
.. .. பொக்கத்தினருக்குப் பழவினை களையானே;
பற்றற்று உள பத்தர்க்கு அருளிடு
.. .. .. பக்கத்தின; தட்பத்-திரை அடை-
.. .. பட்டுச் சடை நிற்கப், பனி-மதி புனைவோனே;
.. பக்கத்தினில் வெற்புக்கு இறை-மகள்
.. .. .. வைத்துக், கலை பற்றிச், சுரர் அடி
.. .. பற்றிப் புகழ் செப்பக் கடல்-விடம் அணிவோனே;
பெற்றக்-கொடி கட்டித் திகழ்-தளி
.. .. .. பெற்றுத், திருவுற்றுப் பொலிதரு
.. .. பெற்றிப்-புரி கச்சிப்-பதிதனில் உறைவோனே;
.. பிட்டுக்கு என அற்றைத்-தினம் அடி
.. .. .. பட்டுத், தருமிக்குத் தனமது
.. .. பெற்றுத்தரு பெட்பைப் புவி மொழி பெருமானே.
கொற்றத்தினை அத்தத்தினை மிக இச்சித்து, உலகத்திற் பலபல குற்றத்தினை மிக்குச் செய, அருவினை கூடக் - வெற்றியையும் பொருளையும் மிகவும் விரும்பி, உலகில் பற்பல குற்றங்களை மிகுந்து செய்ய, அதனால் வருகின்ற அரிய வினைகள் பெருக; (கொற்றம் - வெற்றி); (அத்தம் - அர்த்தம் - பொருள்); (இச்சித்தல் - விரும்புதல்); (செய வருவினை = 1. செய்ய அருவினை; 2. செய்ய வரு வினை);
கொட்டத்தொடு சுற்றிப், பெரியவர் திட்டத் திரி துட்டச் சிறுமதி, கொச்சைத்தனம் அற்றுத், திருவடி தொழுவேனோ - ஆணவத்தோடு சுற்றி, ஆன்றோர்கள் பழிக்கும்படி அலைகின்ற, கொடிய சிற்றறிவும் இழிவும் நீங்கி, உன் திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக; (கொட்டம் - செருக்கு; ஆணவம்); (திரிதல் - சுற்றுதல்; கெடுதல்); (துட்டம் - துஷ்டம் - தீமை; கொடுமை); (சிறுமை - அற்பத்தனம்; குற்றம்); (மதி - அறிவு); (கொச்சை - இழிவு);
புற்றுப்-பணி சுற்றித் திகழ்தர, அச்சைத் தரு மற்-பற்-புலியுரி பொற்பட்டு என நச்சித் தரி-திரு உடையானே - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பு சுற்றி இருக்க, அச்சத்தைத் தரும் வலிய பற்களையுடைய புலியின் தோலைச் சிறந்த பட்டாடை போல விரும்பி அணிந்த திரு உடையவனே; (பணி - பாம்பு); (தருதல் - ஒரு துணைவினை); (அச்சு - அச்சம்); (மல் - வலிமை); (மற்பற்புலி - மல் பல் புலி - வலிய பல்லை உடைய புலி); (பொற்பட்டு - அழகிய பட்டு; "பொற்றுகில்" என்று இலக்கியங்களில் வருவதை ஒத்த பிரயோகம்); (குலோத்துங்க சோழனுலா - 218. "நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள்"); (நச்சுதல் - விரும்புதல்); (தரித்தல் - அணிதல்; உடுத்தல்);
பொய்த்-தத்துவ மட்டர்க்கு, அவ(ம்) மலி பிட்டர்க்கு, அறிவு அற்றுப் புறன் உரை பொக்கத்தினருக்குப் பழவினை களையானே - பொருளற்ற பொய்த்தத்துவங்களைப் போற்றும் மூடர்களுக்கு, நெறிக்குப் புறம்பான வீணர்களுக்கு, அறிவின்றிப் பழிமொழிகளைப் பேசும் வஞ்சகர்களுக்கு, அவர்களது பழைய வினையைத் தீர்த்தல் செய்யாதவனே; (மட்டன் - மூடன்); (அவம் - பயனின்மை; கேடு); (பிட்டன் - பிரஷ்டன் - நெறியிலிருந்து வழுவியவன்); (பொக்கம் - குற்றம்; வஞ்சகம்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");
பற்றற்று உள பத்தர்க்கு அருளிடு பக்கத்தின – பற்றற்று இருக்கும் பக்தர்களுக்கு அருளும் அன்புடையவனே; (பக்கம் - பக்ஷம் - அன்பு);
தட்பத்-திரை அடைபட்டுச் சடை நிற்கப், பனி-மதி புனைவோனே - குளிர்ந்த கங்கையைத் தடுத்து நிறுத்திய சடையில் குளிர்ந்த திங்களை அணிந்தவனே; (தட்பம் - குளிர்ச்சி); (திரை - அலை; நதி); (பனி - குளிர்ச்சி);
பக்கத்தினில் வெற்புக்கு இறை-மகள் வைத்துக், கலை பற்றிச் - திருமேனியில் இடப்பக்கத்தில் இமவான் மகளைப் பாகமாக வைத்து, மானை ஏந்தி; (இறை - அரசன்); (கலை - மான்);
சுரர் அடி பற்றிப் புகழ் செப்பக் கடல்-விடம் அணிவோனே - தேவர்கள் திருவடியைப் பற்றித் துதிக்கப், பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவனே; ( சுரர் - தேவர்);
பெற்றக்-கொடி கட்டித் திகழ்-தளி பெற்றுத், திருவுற்றுப் பொலிதரு பெற்றிப்-புரி கச்சிப்-பதிதனில் உறைவோனே - இடபக்கொடி கட்டப்பெற்று விளங்குகின்ற கோயில்கள் பல இருக்கப்பெற்றுச், செல்வமும் சிறப்பும் பொலியும் பெருமையுடைய ஊரான காஞ்சிபுரத்தில் கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியவனே; (பெற்றம் - எருது); (தளி - கோயில்); (திரு - சிறப்பு; நன்மை; செல்வம்); (பொலிதல் - விளங்குதல்); (பெற்றி - பெருமை); (புரி - நகரம்; ஊர்); (பதி - தலம்);
பிட்டுக்கு என அற்றைத்-தினம் அடிபட்டுத், தருமிக்குத் தனமது பெற்றுத் தரு பெட்பைப் புவி மொழி பெருமானே - முன்பு (மதுரையில்) பிட்டு உண்ண விரும்பிப் பிரம்படி பட்டுத், தருமிக்கு (ஒரு பாடல் தந்து) பாண்டிய மன்னனிடமிருந்து பொன்னைப் பெற்றுத் தந்த அன்பையும் பெருமையையும் உலகம் சொல்லித் துதிக்கின்ற பெருமானே; (தருமி - மதுரையில் வாழ்ந்த சிவபக்தர்; திருவிளையாடற் புராணத்தில் காண்க); (தனம் - செல்வம்; பொன்); (பெட்பு - அன்பு; பெருமை; தன்மை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------