Saturday, May 23, 2020

03.08.008 - புகல் நீயே - (மடக்கு) (யமகம்)

03.08 – பலவகை

2008-12-29

3.8.8 - புகல் நீயே - (மடக்கு) (யமகம்)

----------------------------------------

(எண்சீர் விருத்தம் - விளம் விளம் மா காய் - அரையடி வாய்பாடு)


ஐங்கணை யாலிடை யூறு செய்தவனை

.. அன்றெரித் துப்பொடி யாகச் செய்தவனை

அங்கியின் வண்ணனை நாக அணியானை

.. அரையினில் ஆடையாத் துகிலை அணியானை

எங்கணும் மாலயன் தேடும் ஒளியானை

.. இறைஞ்சிடும் பத்தருக் கருளை ஒளியானை

அங்கணா உமையொரு பங்கா புகல்நீயே

.. அருள்புரி யாயென நாவே புகல்நீயே.


பதம் பிரித்து:

ஐங்கணையால் இடையூறு செய்தவனை

.. அன்று எரித்துப் பொடியாகச் செய்- தவனை,

அங்கியின் வண்ணனை, நாக அணியானை,

.. அரையினில் ஆடையாத் துகிலை அணியானை,

எங்கணும் மால் அயன் தேடும் ஒளியானை,

.. இறைஞ்சிடும் பத்தருக்கு அருளை ஒளியானை,

"அங்கணா! உமை ஒரு பங்கா! புகல் நீயே!

.. அருள்புரியாய்!" என நாவே புகல் நீயே.


ஐங்கணையால் இடையூறு செய்தவனை அன்று எரித்துப் பொடியாகச் செய்- தவனை - ஐந்து மலர்க்கணைகளை ஏவித் தவத்தைக் கலைக்க முற்பட்ட மன்மதனை அச்சமயத்தில் எரித்துச் சாம்பல் ஆக்கிய தவவடிவினனை; (செய் தவன் - வினைத்தொகை - செய்த தவவடிவினன்);

அங்கியின் வண்ணனை - தீவண்ணனை; (அங்கி - நெருப்பு);

நாக அணியானை - நாகாபரணனை - பாம்பை அணிகலனாக உடையவனை; (அணி - ஆபரணம்);

ரையினில் ஆடையாத் துகிலை ணியானை - அரையில் ஆடையாக நல்ல பூந்துகிலை அணியாதவனை; (தோலை ஆடையாக உடையவனை);

எங்கணும் மால் அயன் தேடும் ஒளியானை - விண்ணிலும் மண்ணிலும் பிரமனும் திருமாலும் தேடிய ஜோதி வடிவினனை; (எங்கணும் - எங்கும்);

றைஞ்சிடும் பத்தருக்கு அருளை ஒளியானை - அன்போடு வழிபடும் பக்தர்களுக்கு மறைத்தல் இன்றி அருள்பவனை; (ஒளித்தல் - மறைத்தல்);

"அங்கணா! உமை ஒரு பங்கா! புகல் நீயே! அருள்புரியய்!" என நாவே புகல் நீயே - "அருட்கண்ணனே! மாதொரு பாகனே! எனக்குப் புகலிடம் நீயே! அருள்வாயாக" என்று என் நாக்கே நீ சொல்வாயாக; (புகல் - பற்றுக்கோடு; அடைக்கலம்); (புகல்தல் - சொல்லுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment