Tuesday, May 19, 2020

03.08.006 - ஏற்றார் ஏற்றார் - மடக்கு

03.08 – பலவகை

2008-12-06

3.8.6 - ஏற்றார் ஏற்றார் - மடக்கு

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா விளம் காய்)


ஏற்றார் ஏற்றார் எரிக்கும் நஞ்சை இன்னமு தாச்சடையில்

ஆற்றார் ஆற்றார் பணிகள் அயன்மால் அடிமுடி தேடியன்னார்

தோற்றார் தோற்றார் நம்மை மீண்டும் தொழாதவர் தலைவிதியை

மாற்றார் மாற்றார் புரங்கள் எரித்த மதியணி மன்னவரே.


பதம் பிரித்து:

ஏற்றார்; ஏற்றார், எரிக்கும் நஞ்சை இன் அமுதாச்; சடையில்

ஆற்றார்; ஆற்றார் பணிகள், அயன் மால்; அடி முடி தேடி அன்னார்

தோற்றார்; தோற்றார், நம்மை மீண்டும்; தொழாதவர் தலைவிதியை

மாற்றார்; மாற்றார் புரங்கள் எரித்த மதி அணி மன்னவரே.


சொற்பொருள்:

ஏற்றார் - 1. ஏற்றினை ஊர்தியாக உடையவர்; / 2. ஏற்றுக்கொண்டார்;

ஆற்றார் - 1. கங்கை ஆற்றை உடையவர்; / 2. செய்யமாட்டார்;

தோற்றார் - 1. தோல்வி அடைந்தார்; / 2. பிறப்பிக்கமாட்டார்;

மாற்றார் - 1. மாற்றமாட்டார்; / 2. பகைவர்;


ஏற்றார் - இடபவாகனர்; (அப்பர் தேவாரம் - 6.19.8 - "தூவெள்ளை யேற்றான் தன்னை");

ஏற்றார் எரிக்கும் நஞ்சை இன் அமுதாச் - எரிக்கின்ற ஆலகால விடத்தை இனிய அமுதம்போல் ஏற்றவர்; (அமுதா - அமுதாக - கடைக்குறை விகாரம்);

சடையில் ஆற்றார் - கங்காதரர்;

ஆற்றார் பணிகள் அயன் மால்; அடி முடி தேடி அன்னார் தோற்றார் - பிரமனும் விஷ்ணுவும் திருத்தொண்டு செய்ய எண்ணாமல் ஆணவத்தால் அடிமுடி தேடிக் காணாது வருந்தினர்; (அயன் மால் - பிரமனும் விஷ்ணுவும் - உம்மைத்தொகை); (அன்னார் - அவர்கள்; அத்தன்மையோர்);

(அப்பர் தேவாரம் - 5.95 - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - பல பாடல்களில் பிரமனும் விஷ்ணுவும் பக்தியோடு தொண்டுசெய்யாதது சுட்டப்பெறுகின்றது);

தோற்றார் நம்மை மீண்டும் - (அடியவர்களான) நம்மை மீண்டும் பிறக்கச்செய்யமாட்டார்; (தோற்றுதல் - தோன்றச்செய்தல்; பிறப்பித்தல்);

தொழாதவர் தலைவிதியை மாற்றார் - அவரை வழிபடாதவர்களைத் தத்தம் வினைப்பயனை அனுபவிக்குமாறு விடுவார்;

மாற்றார் புரங்கள் எரித்த மதி அணி மன்னவரே - பகைவர்களின் முப்புரங்களை எரித்தவரும் பிறைச்சந்திரனைச் சூடியவருமான சிவபெருமானார்; (மன்னவர் - அரசர்; என்றும் நிலைத்து இருப்பவர்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment