Saturday, May 16, 2020

03.04.075 - சிவன் - பலாப்பழம் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-06-30

3.4.75 - சிவன் - பலாப்பழம் - சிலேடை

-------------------------------------------------------

புறத்துமுள்ளும் நிற்கின்ற பொற்பால் பொறையால்

அறக்கனிந்தும் விள்ளற் கரிதாம் - திறத்தினால்

தேனிலும் ஆடித் திளைப்பதால் சேவேறும்

கோனின் பலாப்பழம் கூறு.


சொற்பொருள்:

பொறை - 1. கனம்; / 2. பொறுமை; அருள்;

விள்தல் - 1. கையால் பிளத்தல்; /2. சொல்லுதல்; நீங்குதல்;

திறம் - இயல்பு;

தேன் - இனிய சாறு; பூவிலிருந்து வண்டுகள் மூலமாகப் பெறும் தேன்;

ஆடுதல் - 1. குளித்தல்; / 2. அபிஷேகம் செய்யப்பெறுதல்;


பலாப்பழம்:
புறத்து முள்ளும் நிற்கின்ற பொற்பால் - வெளியே முள் இருக்கும் தன்மையினால்;

பொறையால் - மிகவும் கனமாக இருப்பதால்;

அறக் கனிந்தும் விள்ளற்கு அரிது ஆம் திறத்தினால் - மிகவும் பழுத்தாலும் நம்மால் (கையால்) விள்ள முடியாதபடி இருப்பதால்;

தேனிலும் ஆடித் திளைப்பதால் - இனிய சாற்றில் அதன் சுளைகள் இருப்பதால்; (உண்ணும் முன்) அதன் சுளைகள் தேனில் முழுகுவதால்;

இன் பலாப்பழம் - இனிய பலாப்பழம்;


சிவன்:

புறத்தும் உள்ளும் நிற்கின்ற பொற்பால் - கடவுள் - வெளியிலும் உள்ளும் இருக்கும் தன்மையால்;

பொறையால் - அனைத்தையும் தாங்குவதால்; மிகுந்த அருள் உடைமையால்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.56.9 - "பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.54.6 - "ஏழ்பொழிலும் தாங்கி நின்ற பொறையானை");

அறக் கனிந்தும் விள்ளற்கு அரிய திறத்தால் - (நம் உள்ளம்) பக்தியில் உருகினாலும் அவனது தன்மையைச் சொல்லி விளக்க இயலாமையால், அடியாரை என்றும் நீங்காதிருப்பதால்; ("விள்ளற்கு அரிய திறத்தால்" - இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு நின்றது); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.54.6 - "என்னுள்ளத்து உள்ளே விள்ளாது இருந்தானை");

தேனிலும் ஆடித் திளைப்பதால் - பக்தர்கள் செய்யும் தேன் அபிஷேகத்தைப் பெறுவதால்; (தேனாலும் - உம் - எச்சவும்மை; நீர், நெய், பால், முதலியவற்றாலும் அபிஷேகம்);

சே ஏறும் கோன் - இடபத்தை வாகனமாக உடைய தலைவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment