03.04 – சிவன் சிலேடைகள்
2008-10-31
3.4.80 - சிவன் - செங்கல் - சிலேடை
-------------------------------------------------------
மண்ணாதி ஆவதால் தீக்கண் சுடுவதால்
பெண்ணாண் சிரம்தாங்கும் பெற்றியினால் - மண்ணோர்கள்
வீடுபெற வேண்டுவதால் செம்மை மிகுவதால்
காடுநடம் செய்சிவன்செங் கல்.
சொற்பொருள்:
மண் - 1. பூவுலகம்; / 2. ஐம்பூதங்களுள் ஒன்று;
ஆதி - 1. தொடக்கம்; காரணம்; / 2. முதலியன;
நாதி - காப்பாற்றுவோன்;
கண் - 1. இடம்; ஏழாம் வேற்றுமை உருபு; / 2. பார்க்கின்ற கண்;
பெற்றி - இயல்பு; பெருமை;
வீடு - 1. மனை; இல்லம்; / 2. முக்தி; மோட்சம்;
வேண்டுதல் - 1. இன்றியமையாதது ஆதல்; / 2. பிரார்த்தித்தல்; விரும்புதல்;
செம்மை - 1. சிவப்பு நிறம்; / 2. அழகு; பெருமை; தூய்மை;
காடு - சுடுகாடு; (காடுநடம் - வேற்றுமைத்தொகை - காட்டில் நடம்);
செங்கல்:
மண் ஆதி ஆவதால் - செய்வதற்கு மண் மூலப்பொருள் ஆவதால்;
தீக்கண் சுடுவதால் - தீயிடம் (சூளையில்) சுடுவதால்;
பெண் ஆண் சிரம் தாங்கும் பெற்றியினால் - (கட்டுமானப் பணியில்) ஆண் பெண் என இருபாலாரும் தலையில் சுமப்பதால்;
மண்ணோர்கள் வீடு பெற வேண்டுவதால் - மனிதர்கள் வீடு கட்டத் தேவைப்படுவதால்;
செம்மை மிகுவதால் - செந்நிறம் திகழும் பொருள் ஆவதால்;
செங்கல்.
சிவன்:
மண்ணாதி ஆவதால் - மண் முதலிய ஐம்பூதங்களும் ஆவதால்; (--அல்லது-- உலகிற்கு ஆதியாக உள்ளதால்; -- அல்லது -- மண்ணுலக உயிர்களைக் காப்போன் ஆவதால்);
தீக்கண் சுடுவதால் - நெற்றிக்கண் சுட்டெரிப்பதால்;
பெண் ஆண், சிரம் தாங்கும் பெற்றியினால் - (பெண் ஆண் பெற்றி, சிரம் தாங்கும் பெற்றி) - அர்த்தநாரீஸ்வரர் ஆகின்ற தன்மையால், பிரமனது மண்டையோட்டை ஏந்துகின்ற பெருமையினால்;
மண்ணோர்கள் வீடுபெற வேண்டுவதால் - மனிதர்கள் முக்தி பெறப் பிரார்த்திப்பதால்;
செம்மை மிகுவதால் - அழகு / பெருமை / தூய்மை மிகுந்திருப்பதால்;
காடு நடம் செய் சிவன் - சுடுகாட்டில் திருநடம் செய்கிற சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment