Saturday, May 16, 2020

03.04.079 - சிவன் - கண்ணாடி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-10-29

3.4.79 - சிவன் - கண்ணாடி - சிலேடை

-------------------------------------------------------

நித்தன்முன் நிற்க முகங்காட்டும் உள்ளநிறம்

அத்தனையும் காட்டிடும் ஆனாலும் - எத்தகைய

வண்ணமின்றிக் காணும் வலமிட மாடுநல்கும்

கண்ணுதலான் கண்ணாடி காண்.


சொற்பொருள்:

நித்தன்முன் - 1. நித்தல் முன்; / 2. நித்தன் முன்; (இலக்கணக் குறிப்பு: "ல்+= ன்ம" என்று புணர்ச்சியில் திரியும்);

நித்தல் - தினமும்;

நித்தன் - அழிவற்றவன்;

முகங்காட்டுதல் - 1. முகத்தைக் காட்டுதல்; / 2. காட்சி கொடுத்தல்;

உள்ளுதல் - இடைவிடாது எண்ணுதல்; தியானித்தல்;

உள்ள - 1. இருக்கின்ற; / 2. தியானித்தால்;

நிறம் - வர்ணம்; இயல்பு; குணம்;

வண்ணம் - நிறம்; குணம்; வடிவு;

வலமிடமாடு - 1. வலம் இடமாடு; / 2. வலமிட மாடு;

மாடு - 1. பக்கம்; / 2. செல்வம்;

வலம் - வலது பக்கம்;

வலமிடுதல் - பிரதட்சிணம் செய்தல்; இடுதல் - செய்தல்; (வட்டமிடுதல், போரிடுதல், இத்யாதி காண்க); (சம்பந்தர் தேவாரம் - 1.122.3 - "இடைமருதினை வலமிட உடனலி விலதுள வினையே" - இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்);

காண் - முன்னிலை அசை;


கண்ணாடி:

நித்தல் முன் நிற்க முகம் காட்டும் - என்றும் எதிரில் நிற்பவருடைய முகத்தைக் காட்டும்;

உள்ள நிறம் அத்தனையும் காட்டிடும் - இருக்கும் நிறங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும்;

ஆனாலும் எத்தகைய வண்ணமின்றிக் காணும் - ஆயினும், அதற்கென்று ஒரு நிறம் இல்லை;

வலம் இடமாடு நல்கும் - வலப்பக்கத்தை இடப்பக்கமாகக் காட்டும்; (mirror image - we see a left-right reversal in the mirror);

கண்ணாடி - முகம் பார்க்கும் கண்ணாடி;


சிவன்:

நித்தன் - அழிவற்றவன்; என்றுமிருப்பவன்;

நித்தல் முன் நிற்க முகம்காட்டும் - தினமும் திரு முன் நின்று தொழும் பக்தருக்குக் காட்சிகொடுப்பான்;

உள்ள நிறம் அத்தனையும் காட்டிடும் - எல்லாக் குணங்களும் உடையவன்; (--அல்லது-- தியானிப்போருக்குத் தன்னை முழுமையாக உணர்த்துவான்);

ஆனாலும் எத்தகைய வண்ணமின்றிக் காணும் - ஆயினும், எவ்வித வடிவும் குணமும் இன்றி இருப்பவன். (திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம் - 38: "நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்"); (அப்பர் தேவாரம் - 5.47.8 - "வண்ணம் இல்லி வடிவுவேறு ஆயவன்" - வண்ணமில்லி - தனக்கென ஒரு நிறம் இல்லாதவன். வடிவு வேறாயவன் - தனக்கென ஒரு வடிவம் இல்லாதவன்);

வலமிட மாடு நல்கும் - வலம்செய்து வணங்குபவர்களுக்குச் செல்வத்தை அளிப்பான்;

கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment