Saturday, May 16, 2020

03.04.078 - சிவன் - கல்லூரி மாணவர் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-09-11

3.4.78 - சிவன் - கல்லூரி மாணவர் - சிலேடை

-------------------------------------------------------

பைந்தமிழ்ப் பாமாலை ஓதுவார் பாடுவார்,

அந்தமட வாரிட நாடுவார் - கந்தமலி

சென்னியர் செல்வர் தெருவினிலூர் காணவுமை

தன்னிறைகல் லூரிமைந் தர்.


சொற்பொருள்:

பா - பாட்டு;

பாமாலை - 1. பாடலை மாலைநேரத்தில்; / 2. பாமாலையை;

ஓதுதல் - 1. படித்தல்; / 2. பாடுதல்;

ஓதுவார் - கோயிலில் பாடுபவர்;

அந்தம் - அழகு;

இடம் - இருக்கும் இடம்;

இடுதல் - கொடுத்தல்; பிச்சையிடுதல்;

இடநாடுவார் - 1. இடம் நாடுவார்; 2. / இட நாடுவார்;

நாடுதல் - 1. சென்று அடைதல்; தேடுதல்; / 2: விரும்புதல்;

கந்தம் - வாசனை;

செல்வர் - போவார்; செல்வம் உடையவர்;

இறை - கணவன்;

மைந்தன் - 1. மாணாக்கன்; இளைஞன்; / 2. வீரன்;


கல்லூரி மாணவர்:

பைந்தமிழ்ப்பா மாலை ஓதுவார்; பாடுவார்;

அந்த மடவார் இட(ம்) நாடுவார்; - கந்த(ம்) மலி

சென்னியர்; செல்வர் தெருவினில் ஊர் காண; உமை-

தன் இறை, கல்லூரி-மைந்தர்.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


(பாடத்தில் உள்ள) தமிழ்ச்செய்யுளை மாலைநேரத்தில் படிப்பார்; (சினிமாப்) பாடல்களைப் பாடுவார்; அழகிய பெண்கள் இருக்கும் இடத்தை நாடிப்போய் நிற்பார்கள்; தலையில் வாசனை மிக்க எண்ணெய் பூசிக்கொள்வார்கள்; ஊரில் பலரும் காணத் தெருவில் போவார்கள்; கல்லூரி இளைஞர்கள் / மாணாக்கர்கள்;


சிவன்:

பைந்தமிழ்ப் பாமாலை ஓதுவார் பாடுவார்;

அந்த மடவார் இட நாடுவார்; - கந்த(ம்) மலி

சென்னியர்; செல்வர் தெருவினில் ஊர் காண; உமை-

தன் இறை, கல்லூரி-மைந்தர்.


தேவாரம், திருவாசகம் போன்ற பைந்தமிழ்ப் பாமாலைகளை ஓதுவார்கள் பாடுவார்கள்; சிவபெருமானார் பல பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று, அழகிய பெண்கள் இடும் பிச்சையை விரும்புவார்; மணம் கழும் சடைமுடியர்; திரு உடையவர்; ஊரில் பக்தர்கள் எல்லாரும் தரிசிப்பதற்காக வீதியுலா வருவார்; உமைக்குக் கணவர்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment