03.04 – சிவன் சிலேடைகள்
2008-11-07
3.4.83 - சிவன் - கப்பல் - சிலேடை
-------------------------------------------------------
நீர்மேல் இருக்கும் நிரம்பப்பேர் ஏறும்ஓர்
ஊர்தி துறைகளில் உள்ளதே - சேர்விடம்
காணலாம் கண்டங்கண் ணீர்வழிஅன் பர்புகழ்தீத்
தூணரன் கப்பல் துணை.
சொற்பொருள்:
நிரம்ப - நிறைய; மிகுதியாக;
பேர் - 1. ஆள்; / 2. பெயர்; பெரிய;
ஏறு - 1. ஏறுதல்; / 2. எருது;
ஓர் - 1. ஒரு / 2. ஒப்பற்ற;
துறை - 1. துறைமுகம்; / 2, வழி;
உள்ளதே = 1. உள்ளது + ஏ (=அசை); / 2. உள்ள + தே (=தெய்வம்);
சேர்விடம் - 1. சேர்வு+இடம் (அடையும் இடம்); / 2. சேர்கின்ற விடம்; (திரண்ட ஆலகால விஷம்)
கண்டங்கண்ணீர் - 1. கண்டங்கள் + நீர்; / 2. கண்டம் + கண்ணீர்; (இலக்கணக் குறிப்பு: "கண்டங்கள் + நீர் = கண்டங்கண்ணீர்" என்று கொள்ளும் பொழுது ணகர ஒற்று விரித்தல் விகாரம்);
துணை - ஒப்பு;
கப்பல்:
நீர்மேல் இருக்கும் - நீரின் மேலே இருக்கும்;
நிரம்பப் பேர் ஏறும் ஓர் ஊர்தி - பல மனிதர்கள் ஏறிக்கொள்ளும் ஒரு வாகனம்;
துறைகளில் உள்ளதே சேர்விடம் - அது அடையுமிடம் துறைகளில் (ports) உள்ளது;
காணலாம் கண்டங்கள் நீர் வழி - நீரில் உள்ள வழி மூலம் (அது செல்லப்) பல கண்டங்களைக் காணலாம்.
சிவன்:
நீர் மேல் இருக்கும் - முடிமீது கங்கையை உடையவன்;
இருக்கும் நிரம்பப் பேர் - பல பெயர்களை உடையவன்; (இருக்கும் - இடைநிலைத் தீவகமாக இப்படி இருமுறை இயைக்கல் ஆம்);
பேர் ஏறும் ஓர் ஊர்தி - பெரிய எருதும் ஒப்பற்ற வாகனம் ஆகும்;
("நீர்மேல் இருக்கும் நிரம்பப்; பேர் ஏறும் ஓர் ஊர்தி" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம். "முடிமேல் மிகுந்த நீர் இருக்கும்; பெரிய எருதும் ஒரு வாகனம்;)
துறைகளில் உள்ள தே - (பராய்த்துறை, ஆவடுதுறை, பெருந்துறை, சோற்றுத்துறை, அன்பிலாலந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, எனப்) பல துறைகளிலும் உறைகின்ற தெய்வம்;
சேர் விடம் காணலாம் கண்டம் - சேர்ந்த விடத்தைக் கழுத்தில் காணலாம்;
கண்ணீர் வழி அன்பர் புகழ் தீத் தூண் அரன் - (உள்ளம் உருகிக்) கண்ணீர் வழிகின்ற பக்தர்கள் புகழ்கின்ற, பெரிய நெருப்புத் தூணாக நின்ற சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment