03.04 – சிவன் சிலேடைகள்
2008-09-04
3.4.77 - விநாயகன் - சிவன் - சிலேடை - 2
-------------------------------------------------------
இருநாலு கையன் பிறைஎயிறு தாங்கி
பெருமா உரியன் பெரிதும் - அருள்வான்
அறுகால் மகிழ்மலரால் அன்பாய்த்தாள் போற்ற
மறுவில்சீர் ஈசன் மகன்.
சொற்பொருள்:
இரு - 1. இரண்டு; / 2. பெரிய;
நாலு - 1. நான்கு; / 2. தொங்குகின்ற; (நாலுதல் - தொங்குதல்);
எயிறு - யானை பன்றிகளின் தந்தம்;
பிறைஎயிறு - 1. பிறைச்சந்திரனும் (பன்றியின்) கொம்பும்; / பிறையைப் போன்ற தந்தம்; ("ஐந்து கரத்தனை ... இந்து இளம்பிறை போலும் எயிற்றனை");
தாங்குதல் - 1. சுமத்தல்; அணிதல்; / 2. கையினில் பிடித்துக்கொள்ளுதல்;
தாங்கி - 1. அணிந்தவன்; / 2. கையினில் பிடிப்பவன்;
பெருமா - யானை;
உரி - தோல்;
உரியன் - 1. தோலை அணிந்தவன்; / 2. எல்லாம் உரியவன் - உடையவன்;
அறுகால் - 1. வண்டு; / 2. அறுகம் புல்லால்;
மகிழ் மலர் - 1. விரும்புகின்ற மலர்; / 2. மகிழம்பூ;
மறு இல் சீர் - குற்றமற்ற புகழ்;
மகன் - 1. புத்திரன்; / 2. ஆண்; வீரன்;
விநாயகன்:
இரு நாலு கையன்; பிறை எயிறு தாங்கி;
பெருமா; உரியன்; பெரிதும் அருள்வான்,
அறுகால், மகிழ் மலரால் அன்பாய்த் தாள் போற்ற;
மறு இல் சீர் ஈசன் மகன்.
பெரிய, தொங்குகின்ற துதிக்கையை உடையவன்; பிறையைப் போன்ற தந்தத்தைத் தன் கையில் ஏந்தியவன்; யானை வடிவினன்; அனைத்தும் உடையவன் (சுவாமி); அறுகம் புல்லால், மகிழ மலரால் பக்தியோடு திருவடியைப் போற்றுபவர்க்குப் பேரருள்புரிவான்; குற்றமற்ற புகழை உடைய சிவபெருமானுக்குப் புத்திரன்;
சிவன்:
இரு நாலு கையன்; பிறை எயிறு தாங்கி;
பெருமா உரியன்; பெரிதும் அருள்வான்,
அறுகால் மகிழ் மலரால் அன்பாய்த் தாள் போற்ற;
மறு இல் சீர் ஈசன் மகன்.
எட்டுக் கைகளை உடையவன்; பிறைச்சந்திரனையும் (பன்றியின்) கொம்பையும் அணிந்தவன்; யானையின் தோலைப் போர்த்தவன்; வண்டுகள் விரும்புகின்ற (தேன் நிறைந்த) மலர்களால் பக்தியோடு திருவடியைப் போற்றுபவர்க்குப் பேரருள்புரிவான்; குற்றமற்ற புகழை உடைய சிவபெருமான் வீரன்; (அப்பர் தேவாரம் - 4.9.2 - "எண்தோள் வீசிநின்று ஆடும் பிரான்");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment