03.07.005 – திருநாவுக்கரசர் துதி - தூற்றும் புற மதத்தர் - (பதிகம்)
2008-04-24
3.7.5 - திருநாவுக்கரசர் துதி
----------------------------------
(10 பாடல்கள்)
(வெண்பா)
1)
தூற்றும் புறமதத்தர் சோர்வடையு மாறன்று
நீற்றறையில் நின்மலனை நெக்குருகிப் - போற்றிஉய்ந்த
சாவுக்கஞ் சாதநம் நாவுக் கரசரைப்
பாவுக்குள் வைத்தேன் பணிந்து.
சைவசமயத்தைப் பழித்த புறச்சமயிகள் தளரும்படி அன்று சுண்ணாம்புக் காளவாயில் சிவனை உருகிப் போற்றி உய்ந்தவரும், சாவிற்கு அஞ்சாதவருமான, திருநாவுக்கரசரைப் பணிந்து பாடிப் பரவுகின்றேன்.
2)
அஞ்செழுத் தோதி அரன்இன் அருளாலே
நஞ்சுசேர் பாற்சோறும் நல்லமுதாய் - உஞ்ச
திருநா வினுக்கரையர் செப்பியதே வாரம்
ஒருநாளும் தப்பா துரை.
உஞ்ச - உய்ந்த என்பதன் போலி. (அப்பர் தேவாரம் - 6.31.8 - "மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக வழியாவ திதுகண்டாய்");
திருநாவினுக்கு அரையர் - திருநாவுக்கரசர்;
சமணர்கள் விடம் கலந்த பாற்சோற்றை உண்பித்தபொழுது திருவைந்தெழுத்தை ஓதிச் சிவன் இன்னருளால் அவ்விடமும் அமுதமாகி உயிர்பிழைத்த திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரத்தை நாள்தோறும் சொல்.
("திருநா வினுக்கரையர் செப்பியதே வாரம் ஒருநாளும் தப்பாது உரை" - "திருநாவுக்கரசர் செப்பியதே, வாரம் ஒருநாளும் தப்பாது உரை" என்று கொண்டால், "அப்பர் சொன்னதையே வாரத்தின் எல்லா நாள்களிலும் சொல்";
இதனை "ஒருநாளும் வாரம் தப்பாமல்" என்று இயைத்து, "என்றும் அன்போடு சொல்" என்றும் பொருள்கொள்ளல் ஆம். வாரம் - அன்பு);
3)
கொல்ல வருமானை கூட மனமாறிச்
செல்லும்தே வாரம் செவிமடுத்(து) - எல்லை
இலாப்புகழார் அப்பர் இருந்தமிழ் பாட
நிலாவினைகள் நெஞ்சே நினை.
புகழார் - 1. புகழ் பொருந்திய / 2. புகழ் உடையவர்; இருந்தமிழ் - பெருமைமிக்க தமிழ்;
திருநாவுக்கரசரைக் கொல்வதற்காகச் சமணர்கள் ஏவிய யானையும் அவர் பாடிய தேவாரப் பதிகத்தைக் கேட்டு மனம் மாறி அவரைப் பணிந்து அகன்று சென்றது. அளவற்ற புகழை உடையவரான அப்பரது பெருமைமிக்க தேவாரப் பதிகங்களைப் பாடினால் வினைகளெல்லாம் அழியும்; நெஞ்சமே, இதனை நினை;
4)
கல்லினைக் கட்டிக் கடலினில் வீசினும்
சொல்லுமெழுத் தஞ்சே துணையாகி - நல்ல
புணையாகக் கல்மேல் கரைசேர் புனிதர்
இணையடியே எம்துணை இன்று.
புணை - தெப்பம்; கரை சேர் புனிதர் - கரை சேர்ந்த புனிதர் - திருநாவுக்கரசர்;
கல்லைக் கட்டி கடலில் தள்ளியபொழுதும் ஓதிய பஞ்சாட்சரமே துணை ஆகி, நல்ல தெப்பம் போல் அந்தக் கல்லின்மேல் வீற்றிருந்து கரையை அடைந்த தூயரான திருநாவுக்கரசரது இரு-திருவடிகள் எமக்குக் காப்பு.
5)
பாம்பால் உயிர்நீத்த பத்தர் மகன்எழத்
தீம்பால் நிகர்க்கின்ற தேவாரம் - தாம்பாடி
வாழ்வித்த அப்பர் மலரடியைப் போற்றவரும்
தாழ்வின்றி என்றுமின்பம் தான்.
தீம் - இனிய; நிகர்த்தல் - ஒத்தல்; தாழ்வு - துன்பம்; குற்றம்; வறுமை;
என்றும் இன்பம்தான் - (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.98.1 - "இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை") ;
பாம்பு தீண்டி இறந்த அப்பூதி அடிகளாரின் மகன் மீண்டும் உயிர்பெற்று எழும்படி, இனிய பாலை ஒக்கும் தேவாரம் பாடி உய்வித்த திருநாவுக்கரசரது மலர்ப்பாதத்தைப் போற்றினால் என்றும் தாழ்வு இன்றி இன்பமே வரும்.
6)
உழவாரம் தாங்கி உளபதிகள் எல்லாம்
அழகாக்கி அன்பின் உருவாய்க் - குழைஓர்
செவியினில் காட்டும் சிவன்புகழ்சொல் அப்பர்
கவின்அடிகள் என்றுமெம் காப்பு.
உழவாரம் - புல் செதுக்கும் கருவி; கவின் - அழகு; அடி - 1. பாதம்; 2. பாடலில் வரும் அடி (ஆகுபெயராய்ப் பாடலைச் சுட்டியது); காப்பு - காவலாயுள்ளது;
உழவாரத்தை ஏந்தி, எங்கும் உள்ள தலங்களையெல்லாம் சீர்ப்படுத்தி, அன்பின் வடிவம் ஆகி, ஒரு காதில் குழைய அணிந்த சிவபெருமானது புகழைப் பாடிய அப்பரது அழகிய பாதங்கள் என்றும் நம் துணை.
7)
பணிவே உருவாய்ப், பரமனுக்குச் செய்யும்
பணியே நினைவாய்நம் பந்தப் - பிணியினைப்
போக்கும் தமிழைப் புனைந்தஅப்பர் காட்டிய
போக்கில் மனமேநீ போ.
பந்தப் பிணி - வினைக்கட்டுத் துன்பம்; போக்குதல் - இல்லாமற் செய்தல்;
புனைதல் - செய்யுள் அமைத்தல்; (பூக்கள் முதலியவற்றைக்) கட்டுதல்;
அப்பர் காட்டிய போக்கில் - திருநாவுக்கரசர் காட்டிய வழியில்; (போக்கு - வழி);
8)
இன்றமிழ் பாடி இருங்கதவின் தாழினை
அன்று விலக்கிய அப்பரை - என்றும்
மனத்தினில் வைத்து மகிழ்ந்தடி போற்ற
எனக்கோர் இடர்உண்டோ இங்கு.
இன்றமிழ் - இன் தமிழ் - இனிய தமிழ் - தேவாரம்;
இரும் கதவின் தாழினை அன்று விலக்கிய - பெரிய கதவின் தாழ்ப்பாளை முன்பு திறக்கச்செய்த; இடர் - துன்பம்;
* திருமறைக்காட்டில் கோயில் கதவு திறக்கப் பாடியதைச் சுட்டியது. (அப்பர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின் நேர்மொழியாள் உமை பங்கரோ");
9)
உடல்தேய்ந்து போனாலும் உள்ள உறுதி
விடல்இன்றி உந்திஅரன் வெற்பை - அடையச்செல்
அப்பரை ஐயாற்றில் அக்கயிலை கண்டவரை
எப்பொழுதும் என்நெஞ்சே எண்ணு.
விடல் இன்றி - விடாமல்; (விடல் - விடுதல் - முற்றும் நீங்குகை);
உந்துதல் - நகர்தல்; (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.358 - "அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்");
அரன் வெற்பு - சிவன் உறையும் மலை - கயிலாய மலை;
10)
தமிழ்வாழச், சைவ சமயம் தழைக்கக்,
குமிழ்போல் கொடுவினை மாய, - அமிழ்தினும்
தித்திக்கும் தேவாரம் செப்பிய அப்பர்சொல்
முத்திக்குச் சேர்க்கும் மொழி.
குமிழ்போல் கொடுவினை மாய - நீர்க்குமிழியைப் போல, ஓதுபவரது கொடிய வினைகள் எல்லாம் உடனே அழிய; (குமிழ் - நீர்க்குமிழி); (மாய்தல் - மறைதல்; அழிதல்);
முத்திக்குச் சேர்க்கும் மொழி - முக்தி தரும் வாக்கு; / முக்தி தரும் என்று சொல்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment